யூட் ரட்ணசிங்கம்

யூட் ரட்ணசிங்கம்

தமிழ் மொழியின் சுடுகாட்டில் தமிழ்க் கலாச்சார வீரநடைபோடும் ஆங்கிலத்தின் அடிமைகள். : யூட் ரட்ணசிங்கம்

Convocation_UoJ1956ம் ஆண்டு பண்டாரநாயக்கா தனிச் சிங்களச் சட்டத்தை கொண்டு வந்தபோது அது தமிழ் மொழியை இரண்டாம் தர மொழியாக தள்ளிவிடுகிறது என்று கோஷமிட்டு ஆக்ரோஷமான அரசியலை முன்னெடுத்தார்கள் அன்றைய தமிழ் அரசியல் வாதிகள்.

அவர்களின் அன்றைய அகிம்சைப் போராட்டமே இறுதியில் ஆயுதப் போராட்டத்துக்கு வழி அமைத்தது.

தமிழீழ ஆயுதப் போராட்டத்தின் பல தொடக்கப் புள்ளிகளில் மிக முக்கியமான புள்ளிகளில் ஒன்றுதான் யாழ்ப்பாணப்  பல்கலைக் கழகம்.

விடுதலைப்போர் நடைபெற்ற நாடுகளிலெல்லாம் அந்த போராட்டங்களின் பின்புலத்தில் அந்தந்த நாட்டு பல்கலைக் கழகங்கள் பங்கு பற்றிய வரலாற்றுத் தொடர்ச்சியில் யாழ்ப்பாண பல்கலைக் கழகமும் ஒன்று.

இது கல்விசார் வரலாற்றுத் தொடர்ச்சியை மட்டுமல்ல தமிழ் ஆயுதப் போராட்ட வரலாற்றையும் வடுக்களையும் கடந்த மே 18 வரை காவி நின்றது.

குறிப்பாக தமிழுக்காக உயிர் கொடுக்க வேண்டும் என்ற இளைஞர்களை உசுப்பேத்தும்  அரசியல் உருவாக்கத்தின் ஒரு புள்ளியும் கூட இந்த யாழ் பல்கலைக்கழகம்.

Convocation_UoJஇந்த யாழ் பல்கலைக்கழகத்தின் 26வது பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்ததான செய்தியும் புகைப்படங்களும்  அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்தன.

அந்த புகைப்படங்களைப் பார்த்த போது வீணடிக்கப்பட்ட அந்த உயிர்களான முத்துக்குமாரும் முருகதாசும் என் கண்முன்னேவந்து போனார்கள்.

இரண்டு இலட்சம் அப்பாவி உயிர்களை காவுகொண்ட அந்த கொடூரமான போரின் துவக்கப் புள்ளிகளில் ஒன்றான இந்த யாழ் பல்கலைக் கழகம் தனது 26வது பட்டமளிப்பு விழாவில் தமிழிலும் எழுதுவதற்கு தயங்குகிறது.

ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதோ அதில் புலமை பெறுவதோ தவறில்லை. ஆங்கிலம் சர்வதேச அங்கீகாரம் பெற்ற மொழி என்பதும் அனைவரும் அறிவர். பல்கலைக் கழகங்களில் அம்மொழியின் அவசியம் தவிர்க்க முடியாதது மட்டுமல்ல மிக அவசியமானதும் கூட.

ஆனால் தன் தாய் மொழியை பேசுவதும் பயன்படுத்துவதும் தரம் கெட்ட செயல் என்று கருதும் ஒரேயொரு இனம் அது ஈழத் தமிழினமாகத்தான் இருக்க முடியும்.

குறிப்பாக தமிழர்களின் துறைசார் அறிவுஜீவிகள் என்று கருதக்கூடியவர்களே தாய்மொழியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக்கொள்கிறார்கள். இவர்கள்தான்  தமிழினத்தின் மூளைகளாம்.

அண்மையில் இலண்டனில் தமிழர் தகவல் நடுவத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தமிழர்களின் எதிர்காலம் பற்றிய ஓர் கருத்தரங்கிற்கு ஈழத்திலிருந்து ஓய்வுபெற்ற 4 துறைசார் அறிவுஜீவிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள்.

ஆங்கிலமே அங்கு ஆட்சி மொழியாக இருந்தது. வந்தவர்களோ ஈழத்தமிழர்கள். ஆங்கிலத்தில் விளாசித்தள்ளினார்கள்.

அம்பாறை மாவட்ட MP பியசேன அளித்த செவ்வியில் தமிழ்த்  தேசியக்  கூட்டமைப்பு கூடுகின்ற போது ஆங்கிலத்தில் பேசி ஓர் முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

சுயமாக நமக்கென்று எதுவுமே இல்லாத காரணத்தால் அயல்நாட்டிலிருந்து அபகரித்துக்கொண்ட அடையாளங்களும் கலாச்சாரமும் வரலாறுகளும்தான் இன்றுவரை நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கின்ற தெய்வங்கள்.

அரச ஆட்சி தொட்டு பின் வந்த அந்நிய ஆட்சி வரை அடிமை வாழ்வு. இந்த அடிமைத் தனத்திலே சுகம் கண்ட இனங்களில் ஈழத் தமிழ் இனமும் ஒன்று. அந்த அடிமை வாழ்விலிருந்து மீளமுடியாது மிச்ச சொச்சங்களையும் காவி வருகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

18வது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டபோது அம்பாறை மாவட்ட TNA MP  பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்தார்.

இலண்டனில் இருந்து இயங்கும் GTV தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிறேம்  சிவகுரு பியசேன அரசிற்கு ஆதரவாக வாக்களித்த சம்பவத்தை ஒரு மரபணுப் பிரச்சனை என்று கண்டு பிடித்திருந்தார்.

தமிழ் மொழியை பயன்படுத்த தயங்குகின்ற ஈழத் தமிழர்களுக்கும் ஏதும் மரபணுப் பிரச்சனை இருக்குமோ?

நயவஞ்சக அரசியலின் நாயகர்கள்! : யூட் ரட்ணசிங்கம்.

Sambanthan_R_TNA MPMavai_Senathirajah TNA MPSuresh_Premachandran_TNA MPஅறிக்கைப் புரட்சி நடாத்திக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் சம்பந்தமான பல செய்திகள் அண்மையில் வெளிவந்த போதும் குறிப்பாக இரு வேறு செய்திகள் விவாதத்தை ஏற்படுத்தி இருந்தன.

1) த. தே கூட்டமைப்பின் வேட்பாளரும் வவுனியா நகரசபைத் தலைவருமான திரு நாதன் வவுனியா நகரை சுத்தம் செய்யும் தொழிலாளரை வெளியில போங்கடா சக்கிலிய நாயளே என்று திட்டியதான  செய்தி தேசம் நெற்றில் வெளியாகி இருந்தது.

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

த தே கூட்டமைப்பு இது சம்பந்தமான எந்தக் கருத்தையும் கூறாது மௌனம் காத்தது.

அறிஞர்களற்ற ஜாதியை வைத்து மக்களை ஏமாற்றி அரசியல் செய்யும் கட்சி த.தே.கூட்டமைப்பு – பா உ பியசேன

2) 18வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக த தே கூட்டமைப்பின் பா உறுப்பினர் பியசேன வாக்களித்தார் என்ற செய்தி வெளிவந்தவுடனேயே பியசேன மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக பிரேமச்சந்திரன் அறிக்கை விட்டார்.

முதலாவது செய்தி பற்றி அறிவதற்காக வவுனியாவிலுள்ள சில நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். யார் இந்த நாதன் என்று அறிய வேண்டும் என்பது எனது ஆவல்.

இவரது சொந்த இடம் யாழ்ப்பாணம். 1975ம் ஆண்டு காலப்பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தராக வவுனியா வந்துள்ளார். பின் பதவி உயர்வு பெற்று பொலிஸ் அதிகாரியாக இருந்துள்ளார். இந்த பொறுப்பான பதவியில் இருந்தபோது சில குடும்பங்களின் அமைதி குலைந்து போனதற்கு காரணமானவராக இருந்துள்ளார்.

போலிஸ் தலைமை இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தற்காலிகமாக வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

தென் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு செல்ல மறுத்து தொழிலை இழந்துள்ளார்.

1977ம் ஆண்டு தமிழர்கள் மீது இனப்படுகொலை நடந்தபோது  வவுனியா நகரம் அரச படைகளால் எரியூட்டப்பட்டது. அதன்பின் அன்றைய அரசால் உருவாக்கப்பட்ட சன்சோனிக் கமிசனில் ஓர் முக்கியமான சாட்சியாக இருந்துள்ளார்.

இவர் அன்று தொட்டு தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர். TNA மும்மூர்திகளில் ஒருவரான சேனாதிராஜாவுக்கு மிக நெருங்கிய நண்பர். இதுதான் இவரது அரசியல் பின்புலம்.

பின் வவுனியா நகரசபை பற்றி வினவியபோது, புளட் வவனியா நகரசபையை கட்டுப்படுத்திய காலப்பகுதியில் அமைப்பின் ஒரு பகுதியினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டபோதும் புளட்டில் சிலர் குறிப்பாக லிங்கநாதன் போன்றோர் வவுனியா நகரின் அபிவிருத்திக்காக அரிய பாடுபட்டார்கள் என்றும் அவர்களால் திருத்தி அமைக்கப்பட்ட புங்காவும் நூல் நிலையமும் முன் உதாரணங்கள் என்றார்கள்.

நாதன் பதவியேற்ற பின்பு குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு எந்த நகர்புற அபிவிருத்திகளும் நடக்கவில்லை என்றும் சில குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் தெரிவித்தார்கள்.

அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வவுனியா MP யாக இருந்த காலத்தைப்போல் இப்போது வவுனியா நகரசபை இருப்பதாக வேறுசிலர் கூறுகிறார்கள்.

வவுனியாவுக்கு இவர்களால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என்றும் தவறுகள் நடக்கின்ற போது வவுனியாவினுடைய பெயர் முன் நிறுத்தப்பட்டு அத்தனை விமர்சனங்களும் பழிகளும் அவதூறுகளும் வவனியா மீது போய்ச் சேருவதாக இன்னுமொரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள்.

இவ்வளவு பாரதூரமான குற்றச்சாட்டுகள் இவர்மீது வந்தும் TNA இதுவரை மௌனம் காப்பது ஏன்?

எந்த செய்தி வந்தாலும் உடனடியாக இரண்டு மூன்று தலைமுறை பின் சென்று ஆய்வு செய்யும் தேசம்நெற் ஆசிரியர்குழு இந்த விடயத்தில் அசட்டையாக இருந்ததின் காரணம் என்னவோ?

மேலும் இரண்டாவது செய்தியின் பிண்ணணியில் பியசேன கூறும் குற்றச்சாட்டுகளில் ஒன்று இந்த TNA MPக்கள் எவராவது இதுவரை அம்பாறை மாவட்டத்திற்கு வந்து மக்களின் குறைகளை கேட்டறியவில்லை என்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் மனிதப் படுகொலை நடந்த பின்பு உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இருந்து மக்கள் தம்மாலான உதவிகளை அந்த மக்களுக்கு வழங்கி வந்த வேளையிலும் கூப்பிடு தொலைவில் நிற்கதியாக நின்ற வன்னி மக்களை ஏறெடுத்தும் பார்க்காத இந்த TNA எவ்வாறு அம்பாறை மக்களின் குறைகளைத் தீர்க்கப் போகிறது? 

“அரசு அனுமதி மறுக்கிறது அங்கே செல்வதற்கு” என்று அடிக்கடி அறிக்கை விட்டுக்கொண்டார்கள்

அண்மையில் இவர்கள் வன்னிக்குச் சென்று அந்த மக்களை பார்வையிட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தன. இந்திய அரசியல்வாதிகள் போல் நெற்றியிலே திருநீறும் மடிப்புக் குலையாத வெள்ளை உடையுமாக சென்று வந்துள்ளார்கள்.

எதை அந்த மக்களுக்கு கொடுத்தாலும் உடனே படம் எடுத்து பத்திரிகைகளுக்கு கொடுத்து விடுகிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை அம்பாறைக்கு வந்து மக்களின் குறைகளைக் காணுங்கள் என்று கேட்கும் MP பியசேனக்கு தமிழரசுக் கட்சியின் நயவஞ்சக அரசியலைப் புரிந்துகொள்ளும் வல்லமை இல்லை என்றே தெரிகிறது.

‘அண்ணன் எப்போ சாவான் திண்ணையைப் பிடிக்கலாம்’ என்று காத்துக்கிடக்கும் பிரேமச்சந்திரனுக்கு, பியசேனக்கு எதிராக அறிக்கை விட காட்டிய ஆர்வமும் அவசரமும் வவுனியா நகரத் தொழிலாளர்களை ‘வெளியிலே போங்கடா சக்கிலிய நாய்களே’ என்ற நாதனுக்கு எதிராக அறிக்கைவிடவோ அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ முடியவில்லை. இன்றுவரை மௌனம் காக்கும் அந்த நயவஞ்சக தமிழ் அரசியலின் வயது அரை நூற்றாண்டைத் தாண்டிவிட்டது.

அண்மையில் தமிழ்தேசிய ஆவணச் சுவடிகளில் பதிவாகியுள்ள 1984ம் ஆண்டு வெளியான புதியபாதை பத்திரிகையில் ஓர் துணுக்கைப் படித்தேன். தேசம்நெற் வாசகர்களும் MPபியசேனவும் படிக்கவேண்டும் என்பதற்காக இதைத் தருகிறேன். 

Puthiyapathai_June1984

(நன்றி tamilarangam.net)

மேலே கொடுக்கப்பட்டுள்ள புதியபாதையின் செய்தியைப் படித்தீர்களானால் அவர்களின் ‘மக்கள்’ யார் என்பது புரியும்.

1977 ம் ஆண்டு தேர்தல் முடிந்ததும் திரு தொண்டமான் இப்படிப்பட்ட காரணங்களைக் கூறியே அன்று TULFல் இருந்து பிரிந்து JR அரசுடன் சேர்ந்து கொண்டார். அன்றய தொண்டமானிலிருந்து இன்றய பியசேன வரை ஒரே குற்றச்சாட்டு

ஈழத்தமிழரின் அடிப்படைச் சிந்தனையில் மாற்றம் ஏற்படாதவரை அவர்களின் அரசியலில் என்றுமே நேர்மை இருக்கப்போவதில்லை.
 
முப்படைகளையும் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை முள்ளிவாய்க்காலில் முடித்தது அவர்களின் நயவஞ்சக அரசியலே என்பதை தமிழ் அறியாவிட்டாலும் உலகறியும். 

விதி என்பது பொதுவானது. இதற்கென்றோ இவர்களுக்கென்றோ உருவாவதல்ல. இந்தப் பொது விதிக்குள் சடப்பொருள் மட்டுமல்ல சாதாரண வாழ்வும் அகப்படும் என்பதை இந்த TNA இன்னுமா உணரவில்லை?

வவுனியா நகரசபை தொடர்பான முன்னைய பதிவுகள்:

ததேகூ கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா நகரசபை தொடர்ந்தும் ஸ்தம்பிதம் – தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளே காரணமா? : விஸ்வா & த ஜெயபாலன்

”ஈழம்(தமிழ்) என்ற அடையாளத்தை இல்லாமல் பண்ணவே முயற்சிக்கிறார்கள். ” ஜி ரீ லிங்கநாதன் வவுனியா நகரசபை உறுப்பினர். – நேர்காணல் : ரி சோதிலிங்கம்

”வெளியே போங்கடா சக்கிளிய நாயலே” வவுனியா நகரசபைத் தலைவரின் கூற்றும் இன்னமும் வீச்சுடன் இருக்கும் சாதிய மனோநிலையும்

ரிஎன்ஏ யின் வவுனியா நகரசபையின் தலைமை மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டு – எட்டு நகரசபை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அறிக்கை

மாற்றுச் சிந்தனைக்கு வழிவிடுமா துருப்பிடித்த தமிழ்த் தேசியம். : யூட் ரட்ணசிங்கம்

Mahinda Rajaparksa and Sarath Fonsekaமீண்டுமொரு ஜனாதிபதித் தேர்தல், தமிழ்பேசும் மக்கள் தம் வாக்குமூலம் பேசவேண்டிய நேரம், எதிர்த்தரப்பிலே இரண்டு இனவாத அரசியலின் பிரதிநிதிகள். இவர்கள் தமிழ்பேசும் மக்களின் அரசியல் எதிரிகள் மட்டுமல்ல மக்களைக் கொன்று குவித்த இரு கொலைகாரர்கள்.

சிங்களத் தேசிய இனவாதத்துக்கும் தமிழ்த் தேசிய இனவாதத்துக்கும் இடையில் நடந்த கொடூரமான போரில் செத்து மடிந்தன ஏதுமறியா அப்பாவி உயிர்கள். அதை முன்னின்று நடாத்தியவர்களும் வேடிக்கை பார்த்தவர்களுமே இன்று களமாட காத்திருக்கின்ற காவல் தெய்வங்கள். ஜனநாயகம் தத்தெடுத்த தவப்புதல்வர்கள். இவர்கள் ஜனாதிபதியாக வேண்டுமென்று களம் இறங்கியிருக்கிறார்கள்.

1) இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
2) இராணுவத் தளபதி சரத் பொன்சேகா

இவர்கள் இருவரையும் தராசிலே போட்டால் தராசின் முள் எந்தப் பக்கமும் சாயாது. (பகுத்தறிவு இல்லாவிட்டாலும் அந்தமுள் தன் பண்பிலிருந்து மாறாது) களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவில்லாது நிலை தடுமாறி நிற்கிறார்கள்.

போர்க்களத்திலே சந்தித்த பெரும் சவால்களையெல்லாம் முறியடித்து வெற்றி கொண்டவர் என்ற வீராப்புடன் சரத் பொன்சேகாவும், போர் சூழ்ந்த வேளையில் எத்தனையோ அரசியல் சவால்களையெல்லாம் எதிர் கொண்டு இந்தப் போரை வென்று முடித்தவர் என்று உரிமை கோரும் மகிந்தாவும் சிங்கள மக்கள் மத்தியில் பிரபல்யமானவர்களாகக் காணப்படுகிறார்கள். பெரும்பான்மை இனத்தின் வாக்குகள் இரண்டாக பிரிந்து போகும் நிலை இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்ற வேளை வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் மீண்டுமொருமுறை களத்திற்காக காத்து நிற்கின்றன.

தமிழ் பேசும் மக்களின் வாக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒன்றாக்கப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது வாக்கெடுப்புக்கு போகவேண்டிய நிலை ஏற்படும் என்று அரசியல் ஆய்வாளர் கூறுகின்றனர். (அதாவது 50% க்கு குறைவான வாக்குகளைப் பெற்றால் எந்த ஒரு நபரும் ஜனாதிபதியாக முடியாது. ஜனாதிபதியாக வேண்டுமாயின் 50%க்கு அதிகமான வாக்குகள் பெறவேண்டும்)

களநிலை இப்படியிருக்க தமிழ் பேசும் மக்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ் பேசும் மக்களுக்கு இன்று ஓர் தலைமை இல்லை. இருக்கின்ற அத்தனை அரசியல் கட்சிகளும் ஏதோ ஒரு கூறு மக்களையும் பிரதேசத்தையும் பிரதிநிதித்துவப் படுத்திக்கொண்டு நிற்கிறார்கள்.

தமிழ் பேசும் மக்கள் ஒரு பிரதிநிதியை நிறுத்தி வாக்குகளை ஓரிடத்தில் குவிப்பார்களேயானால் வரப்போகும் ஜனாதிபதித் தேர்தல் இரண்டாம் சுற்றுக்கு போகவேண்டிய நிலையை உருவாக்கும். அப்படியான நிலை உருவாகுமேயானால் அது சிங்கள பெரும்பான்மை மக்களுக்கும் அதன் அரசியல் தலைவர்களுக்கும் ஏன் உலகத்திற்குமே ஓர் செய்தியைச் சொல்லும்.

அந்த வேளையில் தமிழ் பேசும் மக்கள் தமது தரப்பின் அரசியல் கோஷங்களை முன் வைக்கக் கூடிய களநிலையைத் தோற்றுவிக்கும். ஓர் நிரந்தரமான தீர்வை நோக்கிய பேச்சை உருவாக்கக்கூடிய அரசியல் சூழலை உருவாக்கக்கூடும்.

இந்த அரசியல் சூழலை ஏற்படுத்துவதற்கான அரசியல் முன்னெடுப்பை மேற்கொள்ளும் அரசியல் திராணி தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உண்டா? சம்பந்தனுக்கு தமிழ் பேசும் மக்களை ஒரு புள்ளியில் ஒன்று சேர்க்கும் அரசியல் திறனும் நேர்மையும் இருக்கிறதா? அப்படி இல்லையென்றால் எதற்காக மீண்டும் மீண்டும் அதே குட்டையில் ஊறிய மட்டைகளை களத்திற்கு எடுத்து வருகிறார்கள்?

ஏன் இந்த தமிழ் அரசியல் சற்று வேறுபட்ட கோணத்தில் சிந்திக்கக் கூடாது? சம்பந்தனால் இதை செய்ய முடியாது என்று கண்டுகொண்டால் ஓர் மாற்று அரசியல் திட்டத்தை வகுப்பதுதானே ஓர் முஸ்லீம் பிரதிநிதியை நிறுத்தி அவரை ஆதரியுங்கள் என்று கேட்கலாம். ஓர் மலையக வேட்பாளரை கொண்டுவந்து நிறுத்தலாம். புலிகளுக்கு வக்காலத்து வாங்கியிருந்தாலும்கூட இன்றுவரை தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவை ஆதரிக்கலாம் அல்லது புலிகளை ஆதரிக்காத சிங்கள இடதுசாரியான சிறிதுங்க ஜெயசூரியவை ஆதரிக்கலாம்.  அதன்மூலம் அவர் கையைப் பலப்படுத்தலாம், சிங்கள மக்களின் முற்போக்கானவர்களின் ஆதரவை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள இது உதவலாம்.

எதற்காக மீண்டுமொருமுறை தமிழர் வாழ்வை பாழ்படுத்துகின்ற அரசியல் முன்னெடுப்புகளை செய்கிறார்கள்? தமிழர் வாழ்வில்  எத்தனை தடவைகள் இப்படியான வாய்ப்புகள் கிடைத்தன? தமிழர் வாழ்வை தமதாக்கிக் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் தம் மக்களின் வாழ்வை வளப்படுத்த இப்படியான வாய்ப்புகளை பயன்படுத்தினார்களா?

தழிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த காலம் முதல் அதன் வரலாறு காணாத அழிவு வரையில் தமிழ் பேசும் மக்கள் தங்கள் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பல சந்தர்ப்பங்கள் கிடைத்தன. புலிகளின் தலைமை தலைவரின் சுயநலபோக்கினால் இப்படிக் கிடைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் குழப்பியடிப்பதிலும் வெளிநாட்டு சக்திகள் மத்தியில் நம்பிக்கையீனத்தை உருவாக்குவதிலும் குறியாக இருந்தார்களே தவிர கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்தி போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதையும் மக்களின் உரிமையை வென்றெடுக்கும் அரசியல் ஸ்திரத்தையும் கொண்டிருக்கவில்லை.

தற்போது நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை இன்றிருக்கும் நிலையிலிருந்து ஒருபடி மேலே கொண்டுசெல்ல இந்தத் தேர்தல் உதவுமா என்று பார்ப்பதும் அப்படி இருக்குமாயின் அதற்கான முயற்சிகளைச் செய்யத் தவறுவது தனது சுயநலம் கருதி பிரபாகரன் போராட்டத்தைச் சிதைத்தற்கு ஒப்பாகும்.

ஆகவே தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை குறைந்தபட்சம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு இந்தத் தேர்தலைப் பயன்படுத்தலாமா? அப்படியாயின் அது எவ்வாறு என்பதை சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.

தமக்குக் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் தவறவிட்டு தவறவிட்டு பழியை எதிரியின் மீது சுமத்துவதால் என்ன பயன்?

சர்வதேசம் இன்று இலங்கையின் அரசியலை உன்னிப்பாக அவதானித்து வருகின்ற வேளை ஜனாதிபதித் தேர்தல் இரண்டாவது சுற்றுக்கு தள்ளப்படுமேயானால் தமிழ் பேசும் மக்களின் அரசியல் கோஷத்தை முன்வைக்கும் மிகப்பெரிய வாய்ப்பாக இது அமைந்துவிடக்கூடும்.

உலகம் முழுவதும் மாவீரர்தினம் கொண்டாடி மகிழ்வதைவிட உருப்படியான அரசியல் முன்னெடுப்புக்களை செய்வதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும்.

இன்று தமிழ் மக்களுக்கு 13வது திருத்தச்சட்டத்தை விட அதிகமானவற்றைத் தருவதாக முன்னுக்குப்பின் முரணாக பேசுகின்ற நேரம், தேர்தலின் வெற்றி யாருக்கு என்று தெரியாது இடைநடுவில் நின்றுபோகுமேயானால் அதன்பின் ஏற்படும் பேச்சுவார்த்தை மேசையில் பதின்மூன்று என்ன பதினைந்தே தருவோம் என்று கூறுகின்ற நிலையை உருவாக்கும் காலம் சிலவேளைகளில் உருவாகிவிடும்.

அந்த நிலையை ஏற்படுத்தக் கூடிய அரசியல் நகர்வுகளை உடனடியாக தொடங்க வேண்டிய காலத்தில் இன்று நாம் உள்ளோம். 35 ஆண்டு காலம் புஜத்தை நம்பி அரசியல் செய்த நாம் இனியாவது புத்திசாலித்தனமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு அந்த மக்களுக்கு ஓர் நிம்மதியான தூக்கத்தை கொடுக்கக் கூடிய ஓர் நிரந்தரத் தீர்வை நோக்கி செயல்படுவோம்.

இந்த தேர்தலைத் தவறவிட்டால் மீண்டும் 6 ஆண்டு காலம் காத்திருக்க வேண்டி வரும். ஏற்கனவே 60 ஆண்டு காலம் இப்படியே காத்திருந்து காத்திருந்து கழிந்தது.

கடந்த 60 ஆண்டு காலம் அகிம்சைவாதிகளும் ஆயுததாரிகளும் வைக்கோல் போரிலே படுத்திருக்கும் நன்றியுள்ள மிருகம் போல் நடந்து கொண்டார்கள். அதே அரசியலை அழியவிடாது பாதுகாப்பதிலேயே கண்ணும் கருத்துமாக சிலர் இப்போதும் செயல்படுகிறார்கள்.

செயல்படுவது ஒன்றும் தப்பில்லை, இவர்களால் உருப்படியான எதையாவது தமிழ் பேசும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதுதான் அன்றும் இன்றும் இவர்கள் முன் விடைதேடி விரிந்து கிடக்கும் வினா.
 
தனிமனிதனில்  அரசியலைப் பார்ப்பதும் பின் தனி மனிதனை பழிவாங்கும் அரசியலை முன்னெடுப்பதுமாக தமிழ் அரசியல் நகர்ந்தது கடந்த காலங்களில். இப்போதும் இராணுவத் தளபதியைக் கொண்டுவந்து மகிந்தாவை பழிவாங்க வேண்டுமென்று பேச்சுத் தொடங்கிவிட்டது.

சரத்பொன்சேகா ஜனாதிபதியானால் அரசாட்சி இராணுவ மயப்படுத்தப்பட்டு முழுநாடே புத்தமயமாகும் என்று தெரிந்தும் கூட ஒரு தனி மனிதனை பழிவாங்கும் அரசியலுக்காக அலுவல் பார்க்கிறார்கள்.

“எய்தவன் இருக்க அம்பை நோவான் ஏன்” என்று அதற்கும் ஒரு விளக்கம். இம்முறையும் தமிழர் வாழ்வு சுடு சட்டியிலே இருந்து துள்ளி அடுப்பிலே வீழ்ந்த கதையாகவே முடியும். 

உருப்படுமா இந்த யாழ் இனவாதச் சிந்தனை? : யூட் ரட்ணசிங்கம்

Palmyra_Treeyarl_instrumentதமிழரசுக் கட்சியிலிருந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தொட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதன் இராணுவப் பிரிவான விடுதலைப் புலிகள் வரை அத்தனையும் யாழ் இனவாதச் சிந்தனையின் பிரதிபலிப்பாகவே இருந்திருக்கிறது. கடந்த 60 ஆண்டுகாலம் சிங்கள இனவாத அரசில் சிக்குண்டு தமிழ்பேசும் மக்கள் என்ன என்ன கொடுமைகளை அனுபவித்தார்களோ அதேயளவு கொடுமைகளையும் வெட்டியோட்டங்களையும் யாழ் இனவாதச் சிந்தனையில் சிக்குண்ட மற்றைய மாவட்டத்து மக்களும் அனுபவித்தார்கள் என்பதை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துக் கூறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு அண்மைக் காலமாக நடந்து வருகின்ற சம்பவங்கள் எம்மை தள்ளியிருக்கின்றன.

வீரகேசரி, டான் ரிவி  என்று யாழ் இனவாதச் சிந்தனைக்கு வக்காலத்து வாங்கும் ஊடகங்கள் குடாநாட்டுச் செய்திகள் யாழ் செய்திகள் என்று special attention கொடுத்து மற்றைய மாவட்ட மக்களை குறிப்பாக கிழக்கு மாகாண மக்களை கடுப்பேத்தும் வேலையைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள்.

டான் ரிவி  வக்காலத்து வாங்குவதென்றால் வாங்கட்டும் அதன்பின் பார்வைகள் போர்வைகள் நேர்காணல் ஓற்றுமை சமத்துவம் என்று தமிழ் பேசும் மக்களுக்கு காதில பூவைக்கிற வேலையை விட்டிருஙகோ. இது 21ம் நூற்றாண்டு குடாநாட்டிலிருந்து வந்து மற்ற மாவட்டங்களின் மீது சவாரி விடுகின்ற நோக்கம் இருந்தால் ஒன்றுக்குப் பலமுறை சிந்தித்து விட்டு வாருங்கள்.
 
கைகழுவிய தண்ணீரை புகையிலையில் தெளித்து சிங்கள மக்களுக்கு புகையிலை வியாபாரம் செய்த காலம் இல்லை இது. சிங்கள மக்களுக்குச் செய்த புகையிலை வியாபாரம் கடைசியில புதுமாத்தளனில கொண்டுவந்து விட்டுது. திரும்பவும் டான் ரிவி  வீரகேசரி போன்ற வடிகட்டிய யாழ்ப்பாணத்து இனவாதச் சிந்தனையின் பிரதிநிதிகள் வெளிக்கிட்டிற்றினம் புகையில வியாபாரத்துக்கு.

மற்றைய மாவட்ட மக்களையும் அவர்களின் தனித்துவங்களையும் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு வாய்ப்பில்லைத்தானே. நீங்கள் கிணற்றுத் தவளைகள்போல் நான்கு வேலிகளையும் கிடுகுகளால் அடைத்து நடுவிலே ஒரு சிறிய ஓட்டையைப் போட்டு அதனூடாக பக்கத்து வீட்டையும் உலகையும் பார்ப்பவர்கள் உங்களுக்கு எங்கே உண்மையான உலகம் தெரியப் போகிறது?

முஸ்லீம் மக்களுடன் வியாபாரத்தில் ஈடுகொடுக்க முடியாத யாழ் சமூகம் ஆயுதப் பலத்தோடு இருந்த புலிகளைப் பயன்படுத்தி அவர்களை அந்தப் பிரதேசத்திலிருந்து விரட்டியடித்து அத்தனை வியாபார ஸ்தாபனங்களையும் தமதாக்கிக் கொண்டதைப் பார்த்தோம் தானே. அதற்கு கொடுக்கப்பட்ட விளக்கம் காட்டிக்கொடுப்பு என்றது. காட்டிக்கொடுப்புதான் அவர்களின் வெளியேற்றத்துக்கு காரணம் என்றால் யாழ்ப்பாணத் தமிழரின் முதல் துரோகி யாழ்ப்பாணத் தமிழன் துரையப்பாதானே (இதை நான் சொல்லவில்லை சொல்லியவர்கள் யார் என்பது கொன்றவர்கள் யார் என்பதும் யாவரும் அறிந்ததே.)

Eelam_and_Panaiயாழ்ப்பாணத்திலிலுந்து வந்து வன்னியில் பாராளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கத்தை வன்னி மக்கள் பாடசாலை கட்டித்தரும்படி கேட்க நீங்கள் படித்தால் யாழ்ப்பாண மக்கள் என்ன மாடா மேய்ப்பது என்று வன்னி மக்களைக் கேட்டதும், இராசதுரையை ஓரம்கட்டி அமிர்தலிங்கத்தை தலைவனாக்கியதும், காசிஆனந்தனை ஒதுக்கி புதுவை ரத்தினதுரையை ஆஸ்தான கவிஞன் ஆக்கியதும் பாலசிங்கத்தைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தை கலாச்சார நகரமாக்க முயன்றதும் புலிகள் யாழ் முரியை அறிமுகம் செய்ததும் அதன்பின் வந்த அத்தனை புலிகளின் அடையாளச் சின்னங்களிலும் யாழ் கருவியையும் பனை மரத்தையும் இழுத்து வந்து இருத்தியதும் யாழ்ப்பாண இனவாத சிந்தனையின் வெளிப்பாடே. இது இலங்கை அரசின் திட்டமிட்ட பௌத்த சிங்கள மயமாக்கும் செயல்பாட்டிற்கு ஒப்பானது.

கடந்த 60 ஆண்டு காலத்தில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட கசப்பான அனுபவங்களை தமிழ்பேசும் மக்களின் மனங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கிவிட முடியாத நிலை இருக்கின்றதோ அதே நிலைதான் யாழ் இனவாத சிந்தனையில் சிக்கித்தவித்த மற்றைய மாவட்டத்து மக்களின் மனங்களிலும் நினைவுகள் நிரந்தரமாக இடம் பிடித்துக் கொண்டன.

கொழும்பு ஆட்சியாளர் தமது இனவாத அரசியலை மாற்றாதவரை தமிழ்பேசும் மக்களின் மனங்களை வெல்லமுடியாது என்ற யதார்த்த நிலையை நம்புகின்ற அதே மனங்கள் யாழ் சிந்தனை என்ற யாழ் இனவாத சிந்தனையை கைவிடாதவரை மற்றைய மாவட்ட மக்களின் மனங்களை வெல்வது என்பது முடியாத காரியம் என்பதையும் நம்ப வேண்டும். 

அதுவரை தமிழ் பேசும் மக்களின் பிரதேசம் என்பது மூன்று ஆட்சி அதிகார அலகுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். கிழக்கு மாகாண அதிகார அலகு யாழ்ப்பாண அதிகார அலகு (ஆனையிறவுக்கப்பால்) வடமாகாண அதிகார அலகு மட்டுமே யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையிலிருந்து மற்றைய மாவட்டத்து மக்களைக் காப்பாற்றும் சிறந்த அரசியல் பொறிமுறையாக இருக்கும். அதுவே மற்றைய மாவட்ட மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகும்.

யாழ்ப்பாணத்து தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதை அவர்கள் அந்த மண்ணிலிருந்து கொண்டு செய்யட்டும். யாழ்ப்பாண இனவாதச் சிந்தனையின் பாதுகாப்பு அரணாக  மற்றய மாவட்டங்களையும்  மக்களையும் பயன்படுத்தி பலிக்கடா ஆக்கப்படுவதை இனி ஒருபோதும் அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. (குறிப்பாக வன்னி மக்கள்) வைப்போம் இந்த சிந்தனைக்கு முற்றுப்புள்ளி.

கனிமொழி பெற்றது பரிசா இல்லை பணமா?: யூட் ரட்ணசிங்கம்

Rajapaksa_and_Indian_Delegationசென்ற மாதம் சிறீலங்கா சென்றிருந்த தமிழ்நாட்டு சில அரசியல் கட்சிகளின் குழு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை சந்தித்தபோது ஜனாதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தவேளை ஜனாதிபதியும் நன்றிக் கடனாகவும் நினைவுச் சின்னமாகவும் ஏதோ பெட்டியொன்றை அந்தக் குழுவில் சென்ற கலைஞர் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் கொடுத்ததை அத்தனை தொலைக்காட்சிகளும் தொடர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன.

பெற்றுக்கொண்ட பெட்டிக்குள் பணப்பொதிகள் இருந்தன என்று ஈழத்தமிழர் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. சிறீலங்கா அரசத்தலைவரிடம் பணம்பெற்று தமிழீழப் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்ற கோணத்திலேயே புலத்திலும் தமிழ்நாட்டு புலிசார் அரசியல் மட்டத்திலும் இது ஏதோ முதன்முறையாக நடைபெற்ற சம்பவம்போல் மாறி மாறி பிரச்சாரம் செய்கிறார்கள்.

இந்த அரசியல்வாதிகளை ராணுவத்தளபதி சரத்பொன்சேகா அரசியல் கோமாளிகள் என்று அழைத்தது மிகவும் பொருத்தமானது என்று வேறுசிலர் தொலைபேசியில் அழைத்து தொலைக்காட்சியில் பேசுகிறார்கள்.

இந்தத் தமிழர்கள் கூறுவதுபோல் பணத்தைப் பெற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போராட்டத்தை காட்டிக்கொடுத்தது உண்மையென்றால் தமிழர் வரலாற்றில் பணம் பரிமாறப்பட்டது இதுவா முதல்தடவை? இவர்களா முதல் துரோகிகள்?

80 காலப்பகுதியில் JR ஜெயவர்தனாவினுடைய முதல் ஜனாதிபதி காலப்பகுதி முடிந்து இரண்டாவது ஜனாதிபதித் தேர்தல் வந்தபோது அவரை எதிர்த்து திரு கொபேகடுவ ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தலில் JRன் வெற்றிவாய்ப்பு மிக அரிதாகவே காணப்பட்டது. அன்றய காலத்தில் தமிழ் மக்களுக்கெதிராக மிக மோசமான அரச அடக்குமுறைகள் JR ரால் கட்டவிழ்த்து விடப்பட்ட நேரம் தமிழ் மக்களின் வாக்கே தேர்தல் முடிவை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.

தமிழ் மக்களின் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். அவரின் ஆலோசனையின்படியே தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை அறிய காத்திருந்தார்கள். தேர்தலும் அண்மித்தது திடீரென அவரும் அவர் பாரியாரும் லிபியாவுக்கு விடுமுறையைக் களிப்பதற்காக சென்றுவிட்டார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் வந்தன.

தமிழ் மக்களுக்கு எதுவுமே சொல்லப்படவில்லை தேர்தலும் வந்தது தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்று தெரியாது அங்கலாய்த்தார்கள். தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட வேண்டிய JR வெற்றிபெற்று மீண்டும் ஜனாதிபதியானார். அன்றைய எதிர்க்கட்சித் தலைவரும் TULFன் தலைவருமான அமிர்தலிங்கத்தையும் அவர் பாரியாரையும் விடுமுறையில் லிபியாவுக்கு உல்லாசப் பயணம் அனுப்பி வைத்தவர் அன்றய JR என்று அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. அவர்களின் லிபியப் பயணமே JR ஐ மீண்டும் ஜனாதிபதியாக்க உதவியது என்று அன்றய அரசியல் விமர்சகர்கள் தமது விசனத்தை தெரிவித்தார்கள்.

திரு அமிர் அவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவருடைய வரலாற்றுத் தவறுகளில் இதுவும் முதன்மையானதாகப் பேசப்பட்டது.

அதன்பின் 2004 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தமிழ் மக்களின் வாக்கே தீர்மான சக்தியாக இருந்தது. UNP வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருந்ததாக அன்றய கணிப்புகள் தெரிவித்தன. தமிழ் மக்களின் தலைவனாக மேதகு வே. பிரபாகரன் இருந்தார். இம்முறை அவர் தமிழ் மக்களை வாக்களிக்கவிடாது தடுத்ததன் மூலம் ரணில் தோற்கடிக்கப்பட்டு மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானார். மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்குப் பின்னால் தேசியத் தலைவர் இருந்ததாக செய்திகள் வந்தன. மகிந்தவிடம் விடுதலைப் புலிகள் 100 கோடி ரூபாய் பணம் பெற்ற அரசியல் அசிங்கத்தை பத்திரிகைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தன.

மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களிலிருந்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடைகாண்க!
கொடுக்கப்பட்டுள்ள நேரம் மிகக் குறுகியது என்பதை கவனத்தில் கொள்க. தவறும் பட்சத்தில் மேலுமொரு துரோகி தமிழ் மண்ணில் உருவாகிவிடுவார்.

மகிந்தவிடம் கனிமொழி பணம் பெற்றது காட்டிக்கொடுப்பென்றால் இதே மகிந்தவிடம் 100 கோடி பணம் பெற்று அவரை ஜனாதிபதியாக்கியதை எதற்குள் அடக்குவது?

மகிந்தவிடம் முதன்முதல் பணப்பெட்டி பெற்றது கனிமொழியா ? ——

கனிமொழியும் அந்தக் குழுவினரும் துரோகிகள் என்றால் 100 கோடி வாங்கியவர்கள் ? ——-

நிற்க! இனி அடுத்த குற்றச்சாட்டான அரசியல் கோமாளிகள் என்ற வாதம் உண்மைதானா என்பதைப் பார்ப்போம். அந்த உண்மைநிலையை அறிய நமது வரலாற்றில் பின்நோக்கிப் பயணிப்போம்.

ஈழத்திலேயிருந்த விடுதலைப் போராட்டத்தை படகுகளிலேற்றி இந்தியக்கரைக்கு இழுத்துச் சென்றவர்கள் ஈழப் போராளிகளே.

போனவர்கள் அங்கே தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வீட்டுவாசல்களில் மண்டியிட்டுக் கிடந்தார்கள். அன்று முதலமைச்சராக இருந்த M G ராமச்சந்திரனிடம் 2 கோடி ரூபாய் பணத்தை பெற்றதன் மூலம் போராட்டத்தை விற்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை ஈழப்போராட்டத்தின் பங்குதாரர்களாக இழுத்துவந்தவர்கள் முன்னாள் தேசியத்தலைவர் மேதகு திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவர் LTTE அமைப்புமே.

இரண்டு கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டபோது மற்றய இயக்கங்களை மிகவிரைவில் அழித்துவிடலாம் என்ற வெறி பணம்கொடுத்து ஈழப்போராட்டத்தை இவர்கள் தமதாக்கிக் கொள்கிறார்கள் என்ற அரசியல் யதார்த்தத்தை அவர்களின் கண்களிலிருந்து மறைத்தது.

கொடுக்கப்பட்ட கோடி MGR ன் சொந்தப் பணமா? இல்லை MGRக்கு மூன்றாம் தரப்பால் கொடுக்கப்பட்ட பணமா என்பதை யாரறிவார்?

இவ்வாறான புலிகளின் வரறாற்றுத் தவறுகளையெல்லாம் மூடிமறைத்து விட்டு இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை சுண்டுவிரல் காட்டி அரசியல் கோமாளிகள் என்கிறார்கள்.

point_the_fingerஅடுத்தவர்முன் சுண்டு விரலைக் காட்டுகின்ற போது மூன்று விரல்கள் காட்டுபவரை காட்டுகின்றன என்ற யதார்த்தத்தை புலிச் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.

தமிழ்நாட்டு மண்ணில் 17 அப்பாவி இந்தியத் தமிழர்கள் ஈழத் தமிழருக்காக தம்மைத்தாமே எரித்து தம்முயிரை தியாகம் செய்தபோது தொப்புள்கொடி உறவென்றார்கள்.

அப்பாவி இளைஞர்களை உசுப்பேத்தி மூளையைச் சலவை செய்து முத்துகுமார்களை உருவாக்கிக் கொடுத்தபோது இந்த அரசியல் கோமாளிகள் ஈழப்போராட்டத்தின் நம்பிக்கை நாயகர்களாக வர்ணிக்கப்பட்டார்கள்.

வீர வரலாற்றோடு ஆரம்பித்த ஈழப்போராட்டத்தை இறுதியில் ஐநாவின் முன் பெற்றோல் ஊற்றி தன்னைத்தானே எரித்துக்கொள்ளுகின்ற கொடூரமான தமிழ்நாட்டு அரசியலாக மாற்றியவர்கள், ஒட்டுமொத்த விடுதலைக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தை இறுதியில் தானத் தலைவனைப் போற்றிப் புகழும் ஈனப் போராட்டமாக மாற்றி தமிழ்நாட்டின் தரம்கெட்ட அரசியலாக மாற்றியவர்களும் இவர்களே.

Pirabaharan_MGRMGRமுன் கைகூப்பி ஓர் பண்ணை அடிமையைப்போல் நின்ற பிரபாகரனின் புகைப்படத்தை ஏதோ வரலாற்றுப் பதிவுபோல் அடிக்கடி காட்டிப் பெருமைப்படும் இந்த புலிச்சமூகம் இன்று தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அரசியல் கோமாளிகளென்று வாய்கூசாது அழைக்கிறது.

ஈழப்போராட்டத்துக்கு இவர்கள் செய்த துரோகத்தையும் எதிர்காலம் இல்லாது ஏற்படுத்திய இடைவெளியையும் மூடி மறைப்பதற்காக தொடர்ந்தும் வேறு யார்மீதும் பழியைப் போட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.

எமது போராட்டத்தை ஆரம்பம் தொட்டே அழித்துவிட வேண்டுமென்ற கபட நோக்கம்கொண்ட சக்திகள் இவர்களின் பலவீனத்தை பற்றிக்கொண்டன. பணத்துக்காக இவர்கள் எதுவும் செய்யக் கூடியவர்கள் என்பதை கண்டுகொண்டார்கள். இலங்கை இராணுவத்துக்கெதிராக போரிட இந்தியாவிடமும் பின் இந்திய இராணுவத்துக்கெதிராக போரிட இலங்கையிடமும் பணம் பெற்றவர்கள். இந்திய ராணுவத்தை வெளியேற்ற முன்னாள் ஜனாதிபதி பிறேமதாஸவுடன் மிக இலகுவாக பேரம்பேசி அலுவலை முடிந்த்தார்கள்.

இதைப் பார்த்திருந்த இன்னோர் சக்தி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியை முடித்துக்கட்ட இவர்களது பலவீனத்தை பயன்படுத்தியது. இதன் விளைவு ஓரு கல்லில் இரண்டு மாங்காய் என்ற பலனை எதிரிக்குக் கொடுத்தது.

1) ஈழத் தமிழருக்கும் இந்தியாவுக்குமிடையில் நிரந்தரமான இடைவெளியை ஏற்படுத்தியது.
2) புலிகள் உயிருடன் உள்ளவரை இந்தியாவோடு உறவாட முடியாத நிலையை உருவாக்கி தொடர்ந்தும் இந்தியாவினுடைய எதிர் சக்திகளுடனேயே உறவாட வேண்டிய நிற்பந்தத்தை உருவாக்கியது.

இப்படியாக நமது எரிந்த வீட்டுக்குள் எத்தனை பேர்தான் இலாபம் பெற்றார்கள். (தமிழர்களைத் தவிர)

மேற்குறிப்பிட்டது போல் பல வரலாற்று உண்மைகளிருக்க கலைஞர் கருணாநிதியும் அவர் மகள் கனிமொழியும் போராட்டத்தை காட்டிக்கொடுத்து விட்டார்கள் என்று புதுக்கதை விடுகிறார்கள்.

தொடர்ந்தும் தமிழர் தமது கற்கால சிந்தனையிலிருந்து சிந்திப்பார்களேயானால் மீண்டுமொருமுறை தமிழன் வாழ்வு வெள்ளான் முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லப்படுவதை யாராலும் தடுக்க முடியாத நிலை தோன்றும்.

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சீன இராணுவத் தளபதி SUN TSU (இவர் சரத் பொன்சேகா போன்று போர்க்களத்தில் பல வெற்றிகளைக் கண்டவர்)ன் போரியல் பற்றிய குறிப்பிலிருந்து பெறப்பட்டு 21ம் நூற்றாண்டில் வாழும் ஈழத்தமிழர்கட்கு பொருத்தமானதாக இருப்பதை அவதானித்து அதை இங்கே தருகிறேன்:

“know your enemy, know yourself and you can fight a hundred battles without disaster.”

தமிழர் தமது பலத்தை மிகைப்படுத்திப் பேசி மார்தட்டுவதைவிட தமது உண்மையான பலவீனத்தை கண்டறிவதே அவர்களின் பாதுகாப்பிற்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் வளம்சேர்க்கும். தமது பலத்தை கண்டறியாதவரை 21ம் நூற்றாண்டிலும் புராணங்களும் புளுகுகளுமே தமிழர் வாழ்வாகவும் வழிகாட்டியாகவும் இருக்கும்.

புராணங்களையும் புளுகுகளையும் நம்பி அரசியல் செய்யும் உலகத் தமிழ்த் தலைவர்கள் ஈழத்தமிழரின் போராட்ட நாயகர்களாக வர்ணிக்கப்பட்டு தொடர்ந்தும் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவார்கள். அன்று MGR இல் தொடங்கி இன்று சீமானில் வந்து நிற்கிறது. நாளை எந்தப் பூமான் வருவானோ தெரியாது ஈழத்தை வென்று தர.

பின் குறிப்பு:

அரசியல் கோமாளிகள்: இதை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மரபணு சொற்சேற்க்கை என்னும் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கண்டுபிடித்து முன்மொழிந்தார். அதனால் இது மிகவும் வீரியம் கூடிய சொற்றொடராகக் கருதப்படுகிறது. பின் இது புலம்பெயர் புலிச் சமூகத்தால் வழிமொழியப்பட்டு இப்போது இவர்களின் பாவனையில் உள்ளது.

விடுதலைப்புலிகளுடன் இவர் பல ஆண்டுகள் போரிட்டு இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டதே இச் சொற்றொடராகும். இதன் மூலம் இவர் போரில் மட்டுமல்ல தமிழர் வாழ்விலும் நிரந்தரமான இடத்தைப் பிடித்துக்கொண்டார். இச் சொற்றொடர் புலிச் சமூகத்தின் இன்பத்துக்குரியதும் புலிசார் ஊடகங்களின் ஆத்மதிருப்திக்கு உரியதுமானதாக கணிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு IBC, GTV, தீபம் போன்ற சர்வதேச தரம்வாய்ந்த ஊடகங்களை கேட்டும் பார்த்தும் தெரிந்து கொள்க.

துரோகி: இது தமிழரசுக் கட்சியினால் அகழ்ந்தெடுக்கப்பட்டு TULF இனால் பட்டைதீட்டப்பட்டு விடுதலைப் புலிகளினால் மகுடமிடப்பட்டது. கடந்த 25 ஆண்டு காலம் அதன் ஏகபோக உரிமையாளர்களாக இருந்து கடுமையான கஸ்ரங்களின் மத்தியிலும் இதைப் பாதுகாத்து வந்தார்கள் என்ற பெருமையைப் விடுதலைப் புலிகள் தமதாக்கிக்கொண்டார்கள்.

இது புலிச் சமூகத்தின் மிகவும் இன்பகரமான சொல்லாகவும் புலிசார் ஊடகங்களின் மிகவும் கவர்ச்சியானதுமாக கணித்திருக்கிறார்கள். இது மிகஆழமான உட்பொருட்களை சுட்டி நிற்பதால் இதை ஓர் சர்வதேச தரம்வாய்ந்த சொல்லாக கருதுகிறார்கள்.

ஈழத்தமிழர் வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதியில் அதிகமாக பயன்படுத்திய சொல் என்பதால் கின்னஸ்ஸில் இடம் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறியிருக்கிறார்கள்.

இதன் மேலதிக விபரங்களுக்கு www. வி. பு. அகராதி. com என்று பார்க்க.

இது Oxford அகராதிக்கு இணையானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

ஒரு குடைதான், ஒரு நிறக்குடையல்ல! : யூட் ரட்ணசிங்கம்

Multicoloured_Umbrella1948ம் ஆண்டு ஆங்கில ஆதிக்கத்திலிருந்து விடுபட்டது இலங்கை. அன்றிலிருந்து தமிழ் பேசும் மக்களின் சுதந்திரத்துக்காக பல தமிழ், முஸ்லீம் அரசியல் கட்சிகள் உருவாக்கப்பட்டு அகிம்சை வழியில் போராடிவந்தன. தனித்தனிக் கட்சிகளாக நின்று தமிழ்பேசும் மக்களின் உரிமையை வென்றுவிடமுடியாது என்று எண்ணிய இந்த தலைமைகள் 1976ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலே வட்டுக்கோட்டை என்னும் இடத்தில் கூடி தனித்தமிழீழத்தை வென்றெடுக்க அனைவரும் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டும் என்று அறைகூவல் விடுத்து, தமிழீழத்தின் தேவையை வலியுறுத்தினார்கள். அதுவே வட்டுக்கோட்டை தீர்மானம் என்று அழைக்கப்பட்டது. (வட்டுக்கோட்டை தீர்மானத்தை ஏதோ ஐ நா பாதுகாப்புக் கவுன்சிலில் எடுக்கப்பட்ட தீர்மானம்போல் சிலர் பிதற்றித்திரிகிறார்கள்.)

இலங்கையின் நான்கு தனித்துவமான இனங்களில் தமிழ்பேசும் மூன்று தனித்துவமான இனங்களின் பிரதிநிதிகள் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற (TULF) குடையை உருவாக்கினார்கள். 1977ம் ஆண்டு தேர்தலில் வரலாறுகாணாத வெற்றியீட்டி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஸ்தானத்தில் இருந்தது TULF. இதன் தலைவராக அன்று திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் இருந்தார். (இவர் தந்தை செல்வாவின் தமிழிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பாளராகவும் இருந்தார் என்று என் நண்பர் அடிக்கடி கூறுவார்.) இவர் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். சட்டவல்லுனர்.

தேர்தலின்பின் ஒரு குடையில் ஏற்பட்ட விரிசலால் கூட்டுச்சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக குடைக்கம்பிகள் போன்று விலக்கப்பட்டார்கள். அல்லது விலகிப்போனார்கள். ஒரு குடையிலிருந்து விலகிப்போன திரு தொண்டமான், திரு ராசதுரை, திரு தேவநாயகம் போன்றோர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த J R ஜயவர்த்தனாவின் UNP யுடன் சேர்ந்து கொண்டார்கள். தனித் தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுத்தார்கள்.

மிதவாதிகளை மறுத்து அகிம்சையைப் புறக்கணித்து தீவிரவாத இயக்கங்கள் ஆயதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இவர்களுடைய இலக்கும் தமிழீழமே ஆனால் ஒரு குடைக்கொள்கையை உடனடியாக அமுல்படுத்த முயலவில்லை. காலப்போக்கில் எல்லா இயக்கங்களும் வளர்ந்து போராளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்த பின்னர் நான்கு இயக்கத் தலைவர்கள் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்து வெளியிட்டார்கள். வட்டுக்கோட்டை போல் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை. இதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படாத ஒரு குடைக் கொள்கைதான். அதுவும் காலப்போக்கில் போட்டுத்தள்ளப்பட்டு முடியாட்சியில் முடிந்தது. தனிக்காட்டு ராஜாவாக உருவெடுத்த மன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் அவரது LTTE அமைப்பும் ஒரு குடைக் கொள்கையை கையிலே எடுத்துக்கொண்டார்கள். இது யாழ்ப்பாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு வன்னிக்கு வந்துசேர்ந்த விடுதலைப் புலிகளின் கிளிநொச்சிப் பிரகடனமாக இருந்தது.

இது வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப்போல் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டதல்ல, ஆயதத்தை அரணாகக் கொண்ட தீர்மானம். “வடக்குக் கிழக்கிலே வாழுகின்ற அத்தனை அசையும் அசையாச் சொத்துக்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வருதல், அதன்மூலம் தமிழீழத்தை வென்றெடுத்தல்.”

இந்தக் குடைக் கம்பிகளும் கருணாவைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக கழற்றப்பட்டன அல்லது கழன்று போயின. கழற்றப்பட்ட கருணாவும் அவர் சகாக்களும் ஆட்சியில் இருந்த சுதந்திரக்கட்சியுடன் உடனடியாக இணைந்து கொண்டார்கள். தனித்தமிழீழம் அவர்களின் முதல் எதிரியானது. ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண அறைகூவல் விடுக்கிறார்கள். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமது மிகுதியான அரசியல் வாழ்வை அர்ப்பணிக்க விரும்புகிறார்கள்.

Tamil_Eelam_Umbrellaகடந்த கால வரலாற்றை நோக்கின் தமிழ்த் தேசியக் குடைக் கொள்கை மக்களை இணைத்ததைவிட பிரிப்பதில் அதிக பங்கு எடுத்துள்ளது. அகிம்சைவாதிகளும் சரி, ஆயததாரிகளும் சரி ஒரு குடையிலிருந்து பிரியும்போது முன்வைத்த குற்றச்சாட்டுகள் ஒன்றாகவே காணப்படுகின்றன.
1) ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படையில் பொறுப்பானவர்கள் செயல்படவில்லை
2) ஒரு மாவட்டத்தின் ஆளுமை
3) தனிநபர் விரோதப்போக்கு
4) மற்றய மாவட்டங்களையும் அந்த மக்களையும் சமமாக ஏற்று மதிக்கப்படாத தன்மை
5) சாற்றை எடுத்துவிட்டுச் சக்கையை துப்புகின்ற சிந்தனை
6) மட்டக்களப்பான் மந்திரவாதி, மலையகத்தான் வடக்கத்தையான், வன்னியான் காட்டுமிராண்டி, முஸ்லீம் தொப்பிபிரட்டி, யாழ்ப்பாணத்தான் பனங்கொட்டை சூப்பி என்று சமூகங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வரைவிலக்கணங்களும் அவை சார்ந்த சிந்தனைப் போக்கும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய ஒருகுடையின் கீழ் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருவதுபோன்ற பல.

இதுவரை காலமும் ஒரு குடை என்றதுமே அது ஒரு நிறக்குடையாக இருக்க வேண்டும் என்பது கடுமையான நிபந்தனை. ஆளுமை செலுத்துகின்றகட்சி, மக்கள் தொகையில் எண்ணிக்கை கூடிய பிரதேசம், அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்ட தனிநபர், அமைப்பு, ஒரு குழுமமக்கள் போன்ற குறுகிய எண்ணமும் செயலும் ஒரு குடையின் இயங்குசக்திகளாக இருந்தன.

கடந்த அரை நூற்றாண்டு கால அனுபவங்களும் கால் நூற்றாண்டு கால வன்முறைகளும் இதுவரை காலமும் கட்டிக்காத்துவந்த தமிழ்த் தேசிய குடைக்கொள்கையின் உள்ளமைப்பை தோலுரித்துக் காட்டி நிற்கின்ற நேரத்தில் மீண்டும் ஒரு குடைக்கொள்கையின் அவசியமும் அவசரமும் பலராலும் உணரப்படுகின்ற வேளை இது ஓர் ஆய்வுக்குரியதாகவும் மாறியிருக்கிறது.

கடந்த 60 ஆண்டுகால அரசியல் வரலாறும் முக்கியமாக கடந்த 30 ஆண்டுகால ஆயுத வன்முறையோடு கூடிய அரசியலும் ஆராயப்பட வேண்டியவை. 30 ஆண்டுகால வன்முறை கலந்த ஆயதப் போரில் நான்கு தனித்துவமான இனங்களின் குறிப்பாக தமிழ், முஸ்லீம், மலையக மக்களிடையே ஏற்பட்டுள்ள மன உளைச்சல்களும், மன மாற்றங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

தமிழ் தேசியக் குடை மீண்டும் ஒருமுறை மூன்று தனித்துவமான தமிழ் பேசும் மக்களை உள்ளடக்கி இயங்கும் தன்மை கொண்டதா? இல்லையென்றால் இதன்பின் ஆய்வு எதற்கு? ஆம் என்றால் எப்படி? கருத்தில் கொள்ளப்பட வேண்டியவை எவை?
1) இலங்கையில் வடகிழக்கில் நான்கு தனித்துவமான இனங்கள் உள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொள்ளல்
2) அவர்களுடைய தனித்துவங்களான மொழி, மதம், பிரதேசம் போன்றவை முதன்மையாக கருதப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படல்
3) தவறிப்போன நேர்மையான அரசியலை அறிமுகம் செய்து திறந்த மனதுடனான ஜனநாயக அரசியலை முன்னெடுத்தல், அதுவே ஒரு குடைக் கொள்கையாக பிரகடனப்படுத்தல்
4) சம்பந்தப்படுவோர் தமது சொந்த விருப்பு வெறுப்புகளை கைவிட்டு (முனிவர் நிலையடைதல்) அத்தனையும் தமது மக்களின் வாழ்வுக்கு அர்ப்பணித்தல்
5) அந்தந்த மாவட்டங்களை அந்த மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் ஆளுகின்ற முறைமையை அறிமுகப்படுத்தி செயல்படுத்தல்
6) ஒருவரை ஒருவர் தமது தேவைகளுக்காக பயன்படுத்துவது என்ற காட்டுமிராண்டித்தனமான சிந்தனையை கைவிட்டு ஒருவரை ஒருவர் மதித்து, ஒவ்வொருவரிடமும் காணப்படுகின்ற தனித்துவமான திறன்களை சமூகம் பெறும்படியான திட்டங்களை முன்வைத்தல்
7) ஒவ்வொரு மாவட்டத்திலும் கிடைக்கின்ற வளங்களை அந்தந்த மாவட்டமக்கள் பெறும்படியான திட்டங்களை வகுத்து மிகுதியானவற்றை மற்றய மாவட்டங்களும் பகிர்ந்துகொள்ளும் வழிமுறைகளை கண்டுபிடித்தல் போன்ற பல கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

Multicoloured_Umbrellaஇனி உருவாக்குகின்ற குடை அனைத்து மக்களையும் உள்ளடக்கிய, அவர்களின் தனித்துவங்களையும் ஏற்றுக்கொண்டு மதித்து வாழுகின்ற ஓர் ஜனநாயகத் தளத்தை உருவாக்குகின்ற பல வர்ணக் குடையாக இருக்குமேயானால் இந்தக் குடையின் கீழ் வருவதற்கும் வாழ்வதற்கும் அத்தனை பேரும் விரும்புவார்கள் என்பது என் கருத்து.

மக்களின் மனங்களில் உள்ள சந்தேகங்களை நீக்க புதிய புதிய சிந்தனைகளை வேறுபட்ட தளங்களிலிருந்து உள்வாங்கி ஆய்வுகளை செய்யாதவரை கூடுவதும் பின் பிரிவதும் என்பது தமிழ்த் தேசியத்தின் வாழ்வாக மாறிவிடும். அந்த வாழ்க்கைச் சக்கரத்துள் தமிழ் தேசியம் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப்பட்டுவிடும்.

ஒருவரோடு ஒருவர் சார்ந்து வாழவேண்டும் என்பது தமிழ் சமூகத்துக்கு மட்டும் கொடுக்கப்பட்ட கட்டளையல்ல. நம்முடைய உருவாக்கத்தின் அடிப்படையிலிருந்து உருவான இயற்கை விதி அது. அணுவிலிருந்து அண்டவெளிவரை அனைத்துமே ஒன்றேடு ஒன்று சார்ந்துதான் வாழுகின்றன. அந்த அணுவால் உருவாக்கப்பட்டு இந்த அண்டவெளிக்குள் வாழும் மனிதன்மட்டும் எப்படி சார்பின்றி வாழ்வது? சார்பின்றி வாழ்வில்லையென்பது வரலாற்று உண்மை. இதை இன்று முழுஉலகும் குறிப்பாக பொருளாதார வல்லரசுகளே உணர்ந்துள்ள காலம் இது. தமிழ்பேசும் மக்களும் தலைவர்களும் உணர்வார்களா?