December

December

தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில் – பாகம் 22

 

பாகம் 22: தீப்பொறி வெளியேற்றம் – தோழியின் மீது கூட்டுப் பாலியல் வல்லுறவு – குற்றம்சாட்டப்பட்டவர்கள் கனடாவில்

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்!: தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 22 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 11.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 22:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம். சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள். அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம்.

தேசம்: நீங்கள் பின் தளத்திலிருந்து ஐஞ்சுபேர் தளத்துக்கு போறீங்கள்..?

அசோக்: நாலு பேர்.

தேசம்: ஓ நாலுபேர். சென்றல் கமிட்டீ 4 பேர்; ஜென்னியுமாக ஐந்து பேர் போறீங்க.

அசோக்: ஓம். நாட்டுக்கு தளம் செல்லும்போது ஜென்னியும் எங்களோடு வருகின்றார்.

தேசம்: ஜென்னிக்கும் – உங்களுக்குமான அதாவது மத்திய குழு உறுப்பினர்களுக்குமான தொடர்பு உறவு எப்படி இருந்தது? பொதுவாக சொல்லப்பட்ட விஷயம் ஜென்னி கம்யூனிகேஷன்ல இருந்தவர். பொதுவா கம்யூனிகேஷன் ல இருப்பவர்கள் உமா மகேஸ்வரனோட நெருக்கமானவர்களாக அல்லது நம்பிக்கையானவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுறது. அப்போ நீங்க போகும்போது அந்த உறவு நிலை எப்படி இருந்தது?

அசோக்: ஜென்னிக்கும் எனக்குமான உறவு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே நல்லதாகவே இருந்தது. அவங்களோட பேமிலி பேக்ரவுண்ட் அவங்க அம்மா எல்லாரையும் தெரியும் எனக்கு. ஆனால் அரசியல் சார்ந்து எனக்கும் ஜென்னிக்கும் முரண்பாடுகள் உண்டு. விமர்சனங்களும் இருக்கிறது. மற்றது எனக்கும் ஜென்னிக்கும் இருந்த இந்த உறவு, மற்ற மூன்று தோழர்களுக்கு இருக்கவில்லை. தோழர்கள் குமரன், முரளி, ஈஸ்வரன் ஜென்னி தொடர்பில் அரசியல் விமர்சனங்களையும், கோபத்தையும் கொண்டிருந்தனர்.

தேசம்: அந்தக் கோபம் கூடுதலா அவர் உமா மகேஸ்வரன் தலைமைக்கு கீழ்…

அசோக்: ஓம். அவர் உமா மகேஸ்வரன்ற விசுவாசியாக இருக்கிறார். அவர் சொல்ற எல்லாத்தையும் நியாயப்படுத்துகிறார் என்று சொல்லி ஆரம்ப காலத்தில் இருந்தே அந்த பிரச்சனை இருந்து கொண்டிருந்தது.

தேசம்: அந்தக் கடல் போக்குவரத்து எவ்வளவு நேரம்?

அசோக்: கடல்போக்குவரத்து நோர்மலா நாற்பத்தி ஐந்து நிமிஷத்துக்கு உள்ள நாங்க போயிடுவோம். ஏனென்றால் ஸ்பீட் போட் தானே. ஆக கூடினால் கடல் கொந்தளிப்பு மழை பெய்தா ஒரு 2 மணித்தியாலம் எடுக்கும்.

அன்றைக்கு சரியான மழையும் கடல் கொந்தளிப்பும். மிகவும் கஷ்டப்பட்டுதான் நாட்டிக்கு போன நாங்கள். அது கடும் கஷ்டமான பயணம்.

தேசம்: அந்தப் பயணத்தில் ஒரு பெண். துணிஞ்சு வாரது என்றது – என்ன சொல்றது கொஸ்டைல் சிட்டிவேசன் தான் அது. ஜென்னிக்கும் இது ஒரு கொஸ்டைல் தான். தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள் ஓட பயணிக்கிறது. அன்டைக்கு நடந்த உரையாடல் எதையும் மீட்க கூடியதா இருக்கா உங்களால…?

அசோக்: ஞாபகம் இல்ல, ஆனா நாங்கள் எந்த அரசியல் உரையாடலும் செய்திருக்க மாட்டம் என்றுதான் நினைக்கிறேன். ஜென்னி தொடர்பான ஒரு பயம் ஒண்டு இருந்தது. அப்ப நாங்கள் போய் மாதகல்லில் தான் இறங்கினது. ஜென்னி உடனே போயிட்டாங்க. அவங்க எங்களோட தங்கல. அடுத்த நாள் காலையில நாங்க வெளிக்கிட்டு கொக்குவில் போகின்றோம்.

தேசம்: ஜென்னி அப்ப மகளிர் அமைப்புக்கு, பொறுப்பா இருந்தா வா..? என்ன..?

அசோக்: அப்ப மகளிர் அமைப்புக்கு அவங்க பொறுப்பில்ல. அப்ப வந்து மகளிர் அமைப்புக்கு பொறுப்பாய் இருந்தது செல்வி, நந்தா போன்றவங்கதான். சரியா ஞாபகம் இல்ல. ஜென்னி அப்ப தான் தளத்திற்கு வாராங்களோ தெரியல்ல. இது பற்றி எனக்கு ஞாபகம் இல்லை. அதுக்குப் பிறகுதான் ஜென்னி பொறுப்பெடுக்கிறார் என நினைக்கிறேன்.

தேசம்: அப்ப நீங்க நாலு பேரும் களைப்புல படுத்திட்டிங்க நிம்மதியா நித்திரை கொண்டு இருக்கீங்க.

அசோக்: நிம்மதி எண்டு சொல்ல முடியாது. ஒரே குழப்பமான மனநிலைதான் எங்களுக்கு இருந்தது. காலையில் கொக்குவிலுக்குப் போறோம். அங்க போன பின்புதான் கேள்விப்படுகிறோம், நேசன், ஜீவன், பாண்டி ஆக்கள் எல்லாம் வெளியேறிட்டாங்கள் என்று சொல்லி.

தேசம்: அங்க அவர்கள் வெளியேறுற அதே காலகட்டத்தில் இங்க,

அசோக்: நான் நினைக்கிறேன் அவங்களுக்கு பின் தளத்தில் காந்தன், கேசவன், கண்ணாடிச் சந்திரன் வெளியேறினது தெரிய வந்தவுடன் இவங்கள் வெளியேறி இருக்கலாம்.

தேசம்: ஓம் நீங்க ஒன்றரை மாதத்திற்கு பிறகு தானே தளத்திற்கு வந்தீங்கள்.

அசோக்: ஓம். ஓம். நாங்க இங்க வந்து பார்த்தால் நிறையக் குழப்பம். சிக்கல்கள். எங்களை சந்திக்கின்ற தோழர்கள் எல்லாருமே எங்களை சந்தேகமாக தான் பார்க்கிறார்கள். இங்க வதந்தி பரப்பபட்டு விட்டது , என்ன என்றால், நாங்க புளொட் அமைப்போட முரண்பட்டு தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் ஆட்களோடு சேர்ந்து புளொட்டை உடைச்சிட்டு வெளியேறி வாறம் என்று. இவங்கள் இங்க வந்து பிரச்சினை கொடுக்க போறாங்க, புளொட்டை உடைக்கப்போறாங்க என்று சொல்லி ஒரே பிரச்சினை. எங்கள் மீது சந்தேகம். வந்து ரெண்டு மூணு நாளால பெண்கள் அமைப்பினர் சொல்கின்றனர் எங்களை சந்திக்க வேண்டும் என்று. அப்ப நான், ஈஸ்வரன், குமரன், முரளி எங்க நாலு பேரையும் பெண்கள் அமைப்பு சந்திக்குது. எங்க மேல குற்றச்சாட்டு. நாங்கள் புளொட்ட உடைச்சுட்டு வந்துட்டம் என்று.

அதுவரைக்கும் நாங்கள் எதுவும் கதைக்காம இருந்தனாங்கள். அப்ப தான் மௌனம் கலைக்குறம். அங்க நடந்த பிரச்சனைகளை சொல்லுறம். இதுதான் பிரச்சினை, இதுதான் நடந்தது, அங்க ஒரு ஜனநாயக சூழல் இல்லை. தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன் வெளியேற்றம், மத்திய குழுவில் நடந்த பிரச்சனை எல்லாவற்றையும் சொல்கிறோம்.

பிறகு நாங்கள் முடிவெடுக்குறோம். இவங்களுட்ட மட்டும் கதைக்க கூடாது. எல்லா அணிகளையும் கூப்பிட்டு கதைக்கலாம் என்று. அதன் பின் மாணவர் அமைப்பு, தொழிற்சங்கம், மக்கள் அமைப்பு எல்லாரோடையும் நாங்கள் உரையாடல் செய்கிறோம், இதுதான் பிரச்சினை என்று சொல்லி விளங்கப்படுத்துகிறோம்.

பிறகு யாழ்ப்பாண மாவட்டத்தில் மாத்திரம் இல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும், பிரச்சனைகளை விளங்கப்படுத்த வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்கிறோம். கிளிநொச்சி, முல்லைத்தீவு எல்லாத்துக்கும் நான் போறேன். ஈஸ்வரன் கிழக்கு மாகாணம் போறார். முரளி வந்து வவுனியா போறாங்க. இப்படி எல்லா இடமும் போய் எங்கட நிலைப்பாட்டை சொல்கிறோம்.

தேசம்: இந்தக் காலகட்டத்தில் பாதுகாப்பு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கேலையா உங்களுக்கு தளத்துல?

அசோக்: அந்த நேரத்தில் தளத்தில் இராணுவப் பொறுப்பாளராக சின்ன மென்டிஷ் தான் இருந்தவர். சின்ன மென்டிஸ் உமாமகேஸ்வரனின் விசுவாசிதான். ஆனால் அவரிடம் பின்தளத்தில் நடக்கும் பிரச்சனைகள் தொடர்பாக அதிருப்தி இருந்தது. கொஞ்சம் நேர்மையான ஆள். வித்தியாசமான ஆள். அவரோட உரையாடலாம். பிரச்சனைகளை புரிந்து கொள்ளக்கூடியவர். குமரன் பின்தளத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி விளங்கப்படுத்தி விட்டார்.

தேசம்: சின்ன மென்டிஸ் தான் தள பொறுப்பு…?

அசோக்: ஓம். தள இராணுவ பொறுப்பு.

தேசம்: அவர மீறி எந்த படுகொலைகளும் …?

அசோக்: நடக்காது. நடக்க வாய்ப்பில்லை. பின் தளத்தில் இருந்து வந்து செய்யலாமே தவிர இங்க செய்ய வாய்ப்பில்லை. நாங்கள் தோழர்களை சந்தித்து பிரச்சனைகளை கதைக்கும் போதெல்லாம் மென்டிஸ் எதுவும் கதைக்கல மௌனமா இருந்துட்டார். பிறகு நாங்கள் எல்லா இடங்களுக்கும் போய் கதைத்த பின் ஒரு முடிவுக்கு வருகின்றோம். நாங்கள் நினைக்கிறோம் , ஜனநாயக பூர்வமான முறையில் ஒரு தள மாநாட்டை நடத்தி அந்த மாநாட்டுக்கூடாக சில தீர்மானங்களை நிறைவேற்றலாம் என்று.

தேசம்: தளமாநாடு – மத்திய குழுக் கூட்டம் முடிந்து வரும்போது உங்களுட்ட இந்த நோக்கம் இருந்ததா?

அசோக்: இல்ல அப்படியான ஒரு நோக்கம் இருக்கல. ஆனால் பின்தளப் பிரச்சனைகளை பற்றி தோழர்களோடு கதைத்து ஏதாவது முடிவுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

தேசம்: தளத்துக்கு வந்த பிறகு…

அசோக்: ஓம். தளத்துக்கு வந்த பிறகு குழப்ப நிலையைப் பார்த்த பிறகு இப்பிரச்சனைகளுக்கு, குழப்ப நிலைகளுக்கு தீர்வு காண வேண்டிய கட்டாய நிலை எங்களுக்கு ஏற்படுகிறது. தனிப்பட்ட வகையில் நம்பிக்கையான தோழர்களோடு உட்கட்சிப்போராட்டம் பற்றி கதைக்கின்றோம். தள மாநாடு நடத்தி ஜனநாயக பூர்வமான முறையில் முடிவுகள் எடுக்கவேண்டும், உட்கட்சிப் போராட்டத்தை ஆரோக்கியமான முறையில் கொண்டு நடத்தவேண்டும் என நினைக்கிறோம். இதற்கெல்லாம் வழிகாட்டியாக மிக்க துணையாக இருந்தவர் தோழர் கௌரிகாந்தன். கோட்பாட்டு ரீதியாக உட்கட்சிப் போராட்டத்தையும், தள மாநாட்டையும் நடாத்திமுடிக்க துணை நின்றவர் அவர்தான். அவர் இல்லாவிட்டால் சாத்தியப்பட்டு இருக்காது.

தேசம்: அவர் அந்த பின்னாட்கள்ல தீப்பொறியோட போய் இருந்ததோ…?

அசோக்: இல்ல. அவர் போகல்ல. கடைசி வரைக்கும் எங்களோடு இருந்தவர்.

தேசம்: அவருக்கும் தீப்பொறி வெளியேறினாக்களுக்கும் பெரிய தொடர்பில்லை…

அசோக்: எந்த தொடர்பும் இல்லை. அவர் கடைசி வரைக்கும் எங்களுடன் தான் இருந்தார். உட்கட்சி போராட்டத்துல மிகத் தீவிரமாக புளொட்ட திரும்பவும் சரியான திசைவழி கொண்டு வரலாம், ஒரு முற்போக்கு அணியா திரும்ப சீரமைக்கலாம் என்றதுதுல உறுதியாக இருந்தவர். இந்த உட்கட்சிப் போராட்டம் பலமா நடக்கிறதுல பெரும்பங்கு அவருக்குறியது தான். அந்த நேரத்தில் தோழர் கௌரி காந்தனின் இயக்கப் பெயர் தோழர் சுப்பையா என்பது.

தேசம்: அதுக்கு முதல் இந்த புதியதொரு உலகம் புத்தகம் எந்த காலகட்டத்தில வந்தது?

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறிய பின் அவர்களால் எழுதப்பட்டு… அந்த காலகட்டத்தில வெளிவந்தது. அது வந்து 86 நடுப்பகுதி என நினைக்கிறேன்.

தேசம்: வெளியேறினா பிறகு தான் அவை எழுதத் தொடங்கினம்.

அசோக்: பின் தளத்தில் தோழர் ரகுமான் ஜான், கேசவன் வெளியேறி பின் சில மாதங்களில் தோழர் கேசவன் கோவிந்தன் என்ற பெயரில் இந்த புதியதொரு உலகம் நாவலை எழுதுகிறார். உண்மையில் இது ஒரு கூட்டு முயற்சி. தோழர் ரகுமான் ஜான் பங்கும் அதில் நிறைய உண்டு. அவங்க வெளியேறின பிறகு 86 முற்பகுதியில் தீப்பொறி என்ற பத்திரிகையை வெளியிட்டாங்கள். பெப்ரவரி மார்ச்சில தீப்பொறி வந்திட்டுது என நினைக்கிறேன்.

தேசம்: அதுல என்ன குற்றச்சாட்டுகள் வருது. ஏதாவது?

அசோக்: அது வந்து பின்தளப் பிரச்சனைகள், கொலைகள் தொடர்பாக கடும் விமர்சனங்களோட அரசியல் சார்ந்துதான் அது வந்தது.

தேசம்: அதுல ஆதாரங்கள் வழங்கப்பட்டதா? யார் கொல்லப்பட்டது? என்ன நடந்தது…? எப்ப கொல்லப்பட்டது.

அசோக்: பெருசா ஆதாரங்கள் ஒன்றுமில்லை. புளொட்டினது அராஜகங்கள். முகுந்தனுடைய தனிநபர் பயங்கரவாத போக்குகள் பற்றி இருந்தது.

தேசம்: தாங்கள் பற்றிய சுய விமர்சனம்…?

அசோக்: ஒன்றுமே இல்லை. சுய விமர்சனம் ஒன்றுமில்லை.

தேசம்: பார்க்குறமாதிரி ஏட்டிக்கு போட்டியான,

அசோக்: ஏட்டிக்கு போட்டியானது என்று சொல்ல முடியாது. புளாட்டில் நடந்த பிரச்சனைகளை முன்வைத்தாங்க. ஆனால் எல்லாவற்றிக்கும் முகுந்தனே பொறுப்பு என்றே குற்றம் சுமத்தினார்கள். தங்களைப் பற்றிய விமர்சனம், சுயவிமர்சனம் எதையுமே முன் வைக்கவில்லை. வெளியேறுவதற்கான சுதந்திரம் எல்லாருக்கும் இருக்கு தானே. கொலை செய்யப்பட்டவர்கள் தொடர்பான பூரணமான பட்டியல்கள் யாரிடமும் இல்ல தானே.

தேசம்: இல்ல பூரணமான பட்டியல் தேவையில்ல. அட்லிஸ்ட் யார் யார் கொல்லப்பட்டார்கள்…? என்னத்துக்காக கொல்லப்பட்டார்கள்…? ஏனென்றால் இன்றைக்கு வரைக்கும் அது பெருசா வெளியில் வராத விஷயம் அதான்.

அசோக்: ஆனால் சில தோழர்கள் மத்தியில் குறிப்பிட்ட விவரங்கள் இருக்கு. ஆனா அவை ஆவணப்படுத்தப்படவில்லை. உண்மையில் என்ன பிரச்சனை என்றால் இதுவரை யாரும் வெளிப்படையாக யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்களை வெளியிடவில்லை. ஒருசில பெயர்களை சொல்லுகின்றனர்.

தேசம்: அப்ப தோழர் ரீட்டா பிரச்சனை எப்போது நடந்தது… ?

அசோக்: நேசன், ஜீவன், பாண்டி வெளியேறிய பின் இந்த சம்பவம் நடக்கிறது. அதிருப்தி ஆகி இவங்க வெளியேறிட்டாங்க. வேறு சில தோழர்களும் வெளியேறிட்டாங்க. தீப்பொறி பத்திரிகை வந்தபிறகுதான் தங்களை தீப்பொறி குழுவினர் என ஐடின்டி பண்ணுறாங்க. வெளியேறியவர்கள் தொடர்பா தளத்தில் எந்த ஒரு சிக்கலும் இருக்கவில்லை. எங்களுக்கும் வெளியேறியவர்கள் தொடர்பில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்க வில்லை. புளொட் மிக மோசமான அமைப்பாக இருந்ததால தானே அவர்கள் வெளியேறினார்கள். அதால எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இருக்கவில்லை. வெளியேறுவதற்கான ஜனநாயகமும், சுதந்திரமும் அவங்களுக்கு இருக்குத்தானே. அதை எப்படி மறுக்கமுடியும் ?

ஆனால் வெளியேறிய நேசன், ஜீவன், கண்ணாடிச் சந்திரன் தொடர்பாக எங்களுக்கு விமர்சனம் இருந்தது. பின் தளத்தில் நடந்த அதிகார துஸ்பிரயோசங்கள், கொலைகள், தன்னிச்சையான போக்குகளை போன்று , தளத்தில் இவர்களும் செயற்பட்டவங்கதானே. இவை தொடர்பாக முன்னர் கதைத்திருக்கிறேன். சில தோழர்கள் எங்களிடம் ஒதுங்கி இருக்கப் போவதாக சொல்லி இருக்காங்க. அவங்களுக்கு சுதந்திரம் இருக்குத்தானே. ஆனால் நாங்க உட்கட்சிப் போராட்டம் பற்றி தள மகாநாடு நடத்துவது பற்றி நம்பிக்கை ஊட்டிய பின் தங்களின் எண்ணங்களை மாற்றிக் கொண்டாங்க.

இந்த காலகட்டத்தில்தான் திடீரென்று ஒரு நாள் பிரச்சனை வருகின்றது, ரீட்டா என்ற தோழரைக் காணவில்லை என்று சொல்லி. பிறகு உதவி ராணுவ பொறுப்பாளர் காண்டீபன் வந்து எங்களிட்ட சொல்றார் ரீட்டா என்ற தோழர் மீது பாலியல் பலாத்காரம் நடந்திருக்கிறது என்று சொல்லி. எங்களால முதல் இத நம்ப முடியல, அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் என்று. பிறகு பெண்கள் அமைப்பு தோழர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இச்சம்பவம் உண்மை என. நாங்க நினைக்கிறோம் வேறு யாராவது இப்படி செய்திருக்கலாம் என்று சொல்லி.

தேசம்: வேற அமைப்புக்கள்…?

அசோக்: வேற அமைப்புகள் அல்லது வேற நபர்கள் யாராவது செய்திருக்கலாம் என்ற எண்ணம்தான் எங்களுட்ட இருந்தது.

தேசம்: நீங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல அந்த கொக்குவில் பகுதி அந்தக் காலம் புளொட் கோட்டையாக இருந்த பகுதி.

அசோக்: ஓம். கோட்டையாக இருந்த இடம். எந்தப் பகுதியில் நடந்தது என்று ஞாபகமில்லை எனக்கு.

தேசம்: அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று சொல்லி தீப்பொறி தரப்பில இருந்து சொல்லப்பட்டிருக்கு இல்லையா…?

அசோக்: ஆரம்பத்தில் மறுத்தாங்க. பிறகு உண்மை என நிருபிக்கப்பட்டதும் வேறு யாரோ தங்களை மாட்ட இப்படி செய்ததாக சொன்னார்கள். காலப்போக்கில தங்கள் மீது பழி சுமத்த வேறு யாராவது செய்து இருக்கலாம் எண்டு ஒரு கதையைக் கொண்டு வந்தாங்கள். இப்போது இவங்க ஃபேஸ்புக்லகில் எழுதுறாங்க அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை. கட்டுக் கதை என்று.

தோழர் ரீட்டாவை கண்ணை கட்டித்தான் கடத்தி இருக்கிறார்கள். பிறகு பாலியல் பலாத்காரம் நடந்திருக்கு. பெரிய டோச்சர் எல்லாம் நடந்திருக்கிறது. கதைத்த குரல்களை வைத்து ஒருவர் பாண்டி என்பதை அந்த தோழி அடையாளம் கண்டு விட்டா. அடையாளப்படுத்தின பிறகுதான் ஆகப்பெரிய பிரச்சினை தொடங்கினது. பெண்கள் அமைப்பில பெரிய கொந்தளிப்பு. பாண்டி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் வேலை செய்ய முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

அதன் பின்தான் பாண்டியை இராணுவப்பிரிவு தேடத் தொடங்கியது. இந்த நேரத்தில் பாண்டியோடு, நேசன், ஜீவன் ஆட்களும் தலைமறைவாக ஒன்றாக இருந்தாங்க. இதனால் இவங்களையும் புளாட் இராணுவப் பிரிவு தேடத் தொடங்கினாங்க.

பாண்டி, ஜீவனோடயும் நேசனோடையும் தான் எங்கேயோ ஒளிந்து இருக்கிறதா தகவல் வருது. ஒரு தடவை போய் ரவுண்டப் பண்ணி இருக்காங்க, அதுல தப்பிவிட்டாங்கள். தொடர்ந்து பாண்டிய தேடும்போது, இவங்க மூணு பேரும் ஒன்றாக த்தான் இருக்காங்க. பிறகு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. அதுல அவங்கள் பிடிபடல.

அதுக்கிடையில, அங்க திருநெல்வேலி கிராமத்தில விபுல் என்றொரு தோழர் இருந்தவர். அந்த தோழர் இவங்களோடு மிக நெருக்கமானவர். புளொட் இராணுவம் அவரை அரெஸ்ட் பண்றார்கள். அரெஸ்ட் பண்ணி அவரை அடித்து துன்புறுத்தினார்கள்… இவர்கள் ஒழிந்திருக்கும் இடத்தை காட்டும் படி. பிறகு அந்த கிராம மக்கள் அந்த தோழருக்கு ஆதரவாக போராட்டம் செய்ததால அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்தத் தோழர் இப்ப கனடாவில இருக்கிறார். அவர் நல்ல தோழர். அவர் இதுல சம்பந்தப்பட வில்லை.

தேசம்: அவர் இதுல சம்பந்தப்படல. இவங்களை தெரியும் என்டதால…

அசோக்: ஓம். ஓம். அந்தத் தோழர் புளொட்டுக்காக நிறைய தன்னுடைய வாழ்க்கையை இழந்தவர். நிறைய வேலை செய்தவர். திருநெல்வேலி பகுதியில் நிறைய தோழர்களை தங்க வைக்கிறதுக்கும், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து தந்த மிக அருமையான தோழர். இவங்களோட தொடர்பு இருந்ததால் இவங்கள தெரியும் என்று கைது செய்தாங்க. ஊராக்கள் சப்போட் அவருக்கு. ஆர்ப்பாட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்த, உடனே அவர விட்டுட்டாங்கள்.

தேசம்: இந்த மூன்று பேரும் தப்பி இப்ப இவை …

அசோக்: ஓம் கனடாவுல மூன்று பேரும் பாண்டியோட நெருக்கமாக தான் இருக்குறாங்க. பாண்டி மீது எந்த விமர்சனமும் இவர்களுக்கு இல்லை. கொஞ்சம் கூட இவங்களுக்கு மன உறுத்தல் இல்லை.

தேசம் : தோழர் ரீட்டாவின் பிற்கால வாழ்க்கையில்…

அசோக்: அவங்க இங்கதான் பிரான்சிலதான் வாழ்ந்தாங்க. மிகவும் மனநிலை பாதிக்கப்பட்டு, மனச்சிதைவுக்குள்ளாக்கப்பட்டாங்க. அவர், குடும்பத்தினராலும் – உறவினர்களாலும் கைவிடப்பட்ட நிலையில் ஜெகோவின் சாட்சியம் என்ற கிறிஸ்தவ நிறுவனம், அவரைப் பராமரித்து வைத்தியசாலையில் அனுமதிச்சாங்க. மனநல சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்தாங்க. இறுதியில் அவர்களும் கைவிட்டுட்டாங்க…

அதன் பின்னான காலங்களில் அவருக்குத் தெரிந்த பெண்கள் உதவினாங்க. காப்பாற்ற முடியல்ல. இளம் வயதிலேயே இறந்துட்டா…

தேசம்: ஏற்பட்ட அந்த அகோரமான சம்பவங்களால அவாவோட குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு…

அசோக்: ஓம். குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்டு மிகமிக துன்பப்பட்டு தான் அவங்க இறந்தாங்க. உண்மையில் நான் உட்பட எல்லாப் பேர்களும் குற்றவாளிகள், தண்டனை அனுபவிக்க வேண்டியவர்கள். இதைப்பற்றி கதைப்பதென்பது வேதனையானது.

தேசம்: அது மிக துரதிர்ஷ்டம் என. 85ம் ஆண்டு தான் முதல் பெண் போராளி ஷோபாட மரணமும் நிகழுது. இப்பிடி ஒரு பெண் போராளிகளாலேயே துன்புறுத்தப்படுறா.

அசோக்: பெரிய வேதனை. அந்த அவலத்தை, துன்பத்தை, கொடுரத்தை உணர்கின்ற சூழல் இன்று இல்ல.

தேசம்: இதற்கு பிற்பட்ட காலத்தில இதுல சம்பந்தப்பட்ட ஒருவர் தான் அதுல ஈடுபடல என்டு கடிதத்தில கையெழுத்து வாங்கினதாக;

அசோக்: ஓம். அந்தப் பாண்டி என்றவர் இதில சம்பந்தம் இல்லை என்று ரீட்டா தங்களுக்கு கடிதம் எழுதித் தந்ததாக. ஃபேஸ்புக்ல ஜீவன் நந்தா கந்தசாமி, நேசன் தான் எழுதியிருந்தவங்க. இச்சம்பவம் தொடர்பாக ஜீவனும், நேசனும் மிக மோசமான பொய்களையும், புனைவுகளையும் எழுதினாங்க. இவர்களின் இந்த செயலை என்னோடு அரசியல் முரண்பாடு கொண்ட பலர் ஆதரித்தாங்க. ஜீவன், நேசன், பாண்டி ஆட்களை விட இவர்கள் மிக ஆயோக்கியர்கள். இவரகளின் பெயர்களை சொல்லமுடியும். வேண்டாம்.

தேசம் : அதே மிக மோசமானது.

அசோக்: ஓ. மோசமானது தான். ஒருபெண் இப்படி கொடுப்பாங்களா. இப்படி எழுதுவது எவ்வளவு மோசமான சிந்தனையும் ஆணாதிக்கதனமும் பாருங்க. அப்படி குடுப்பாங்களா ஒரு கடிதம்…

கணவருடன் தகராறு – 21 வயது மனைவி தற்கொலை – காத்தாங்குடியில் சம்பவம் !

காத்தாங்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய பாலமுனை வீதி மஞ்சந்தொடுவாய் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாத குழந்தையின் தாயான பார்த்திமா றிமா (21) என்பவரே தனது வீட்டின் அறையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக நேற்று மாலை (30) மீட்கப்பட்டுள்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த பெண்ணுக்கும் அவரின் கணவருக்குமிடையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்ட குடும்பத்தகறாற்றினால் சம்பவதினத்தன்று தனது கைக்குழந்தையினை அவரின் கணவர் வெளியில் எடுத்துச்சென்று சற்று நேரத்தின் பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் அறையினுள் குறித்த பெண் தனக்குத்தானே தூக்கிட்டிருந்த நிலையில் அயலவரின் உதவியுடன் தூக்கிலிருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வைத்தியர்கள் இறந்து விட்டதனை உறுதிப்படுத்தியதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற காத்தாங்குடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்ல பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை காத்தாங்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபச்சாரத்திற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் – இலங்கைக்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி !

ஹோட்டல்களில் அல்லது குழந்தைப் பராமரிப்புப் பணியாளர்களாக வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்து, விபச்சாரத்திற்காக உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் குறித்து ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறு உஸ்பெகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட பல பெண்களுக்கு கடந்த சில மாதங்களாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கையில் மனித கடத்தலை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அந்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளனர்.

பெயர் தெரியாத நிலையில், வெளிநாட்டவர்கள் சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு கடத்தப்படும் பெண்கள் விபச்சாரத்திற்கு தள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில பாதிக்கப்பட்டவர்கள் இலங்கையில் தீர்ப்பு வழங்கப்படும் வரை 2-3 ஆண்டுகள் தங்கியிருக்க வேண்டும் என்பதால், விசாரணைகளுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தப்பித்து ஆதரவைத் தேடும் பெண்கள் பெரும்பாலும் தங்குமிடம் அல்லது பாதுகாப்பான வீடுகளில் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடத்தப்பட்ட பெண்கள் சிலரின் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் பாதுகாப்பு கோரி 4-5 மாதங்கள் அவர்கள் இலங்கையில் இருப்பதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், இதனால் அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்களின் வழக்கு நடந்துகொண்டிருக்கும் நேரத்தில் தாங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

சக்திவாய்ந்த ஆதரவுடன் இயங்கும் சில விபச்சார விடுதிகளுடன் உள்நாட்டு கடத்தல் தொடர்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகத்தின் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கையில் (TIP Report) இலங்கையில் மனித கடத்தல் தரமிறக்கப்படும் அபாயத்தை நாடு எதிர்நோக்கும் மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் தற்போது கண்காணிப்புப் பட்டியலில் உள்ள இலங்கை, மனித கடத்தலை எதிர்த்துப் போதிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் தரமிறக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆதாரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிவதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் !

வடக்கு – கிழக்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான வழமையான இடமாற்ற நடைமுறையின்கீழ் இந்த இடமாற்றம் தலைமை நீதியரசரினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், திருகோணமலை குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ்சாந்தன் சூசைதாஸன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் – இலங்கையை இலகுவாக வீழ்த்தியது இந்தியா !

2021 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரை இந்திய இளையோர் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் இந்திய இளையோர் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

போட்டியின் 33 ஆவது ஓவரில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 74 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது போட்டியில் மழை குறுக்கிட்டது. இதனையடுத்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இரு அணிகளுக்கும் 38 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதற்கமைய, 38 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களைப் இலங்கை இளையோர் அணி பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் யசிரு ரொட்ரியோ 19 ஓட்டங்களையும், ரவீன் டி சில்வா 15 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் விக்கி ஒஸ்ட்வெல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இதற்கமைய, டக்வொர்த் லூயிஸ் முறைக்கமைய 99 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய இளையோர் அணி 21.3 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய இளையோர் அணி சார்பில் அங்கிரிஷ் ரகுவான்ஷிஆட்மிழக்காமல் 56 ஓட்டங்களையும், ஷெய்க் ரஷீத் ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டனர்.

“அரசாங்கம் பால்மாவின் விலையை அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.” – சஜித் பிரேமதாச

“அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.” என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மலையளவுக்கு வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வாக்களித்த 69 இலட்சம் மக்கள் உட்பட ஒட்டுமொத்த மக்களையும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

87 லட்சம் மதிப்பிலான டிஜிட்டல் கணினித் திரைகள் மற்றும் கணினி உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

“கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சியாக நாங்கள் பெரிய பங்கை வகிக்கிறோம். எதிர்க்கட்சியின் மூச்சுத் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்கினோம். தொற்று நோயால் பின்தங்கிய  கல்வியை உயர்த்தி வலிமையான மாணவ தலைமுறையை உருவாக்க இந்தத் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்து கிறோம்.

எதிர்க்கட்சியாகிய நாங்கள் இவ்வாறான பணியை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அரசாங்கம் என்ன செய்து வருகின்றது என்பது தொடர்பில் கடும் கவலை ஏற்பட்டுள்ளது.

நத்தாருக்கு முன் எரிபொருளின் விலையை அதிகரித்து நத்தார் பரிசுகளை வழங்கிய அரசாங்கம் புத்தாண்டுக்கு முன்னர் பால்மாவின் விலையையும் அதிகரித்து மக்களுக்கு புத்தாண்டுப் பரிசுகளை வழங்கியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நவீனத்துவ, மனிதாபிமான, புதிய அரசியல் இயக்கம். திறமையான இளைஞர்களைக் கொண்டு பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவோம் என நம்புகிறோம்,” என்றார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் குயின்டன் டிகொக் !

தென்னாபிரிக்க அணியின் விக்கெட் காப்பாளர் குயின்டன் டிகொக் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

செஞ்சூரியனில் வியாழன் அன்று நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 113 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது.

29 வயதான டி கொக், தென்னாபிரிக்காவின் தற்காலிக டெஸ்ட் 2021 இல் நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் தென்னாபிரிக்கா இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் 50 சதவீத வெற்றியை பதிவுசெய்துள்ளது.

தென்னாபிரிக்கா இலங்கையை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வென்றது, ஆனால் அதே வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

டி கொக் 2014 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர். இதுவரை 54 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38.82 சராசரியுடன் 6 சதங்கள் அடங்கலாக 3,300 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி நாளை முதல் கட்டாயமாக்கப்படுகிறது !

வெளிநாட்டு பிரஜையை திருமணம் செய்துகொள்ளும் இலங்கையர்களுக்கு நாளை முதலாம் திகதி முதல் புதிய சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்ய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறுவது நாளை முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பதிவாளர் திணைக்களத்தினால் சகல மாவட்ட பதிவாளர் திணைக்களங் களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டவர் தங்கள் நாட்டின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் இந்த விதிகள் அமுலுக்கு வரும் வகையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பிரஜையை இலங்கைப் பிரஜை ஒருவர் திருமணம் செய்துகொள்ளும்போது, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

வெளிநாட்டு பிரஜை ஒருவரை இலங்கை பிரஜை திருமணம் செய்துகொள்ள வேண்டுமாயின் இதற்கு முன்னர் உரிய விசா அனுமதி பத்திரம், சிவில் நிலைமையினை உறுதிப்படுத்தும் சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் என்பன மாத்திரம் அவசியமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், குறித்த வெளிநாட்டவர் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டாரா, கொவிட் தடுப்பூசி பெற்றுள்ளாரா, என்ன தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது, புற்றுநோய், எச்ஐவி, மலேரியா, சிறுநீரக பாதிப்பு, ஹெபடைடிஸ் பி, சி அல்லது காசநோய் உள்ளதா.? என இலங்கை அதிகாரிகளிடம் சுய சுகாதார அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் செல்லுபடியாகும் கடவுச் சீட்டு, சிவில் நிலையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், தேவைப்பட்டால் விவகாரத்து அல்லது விதவை நிலையை உறுதி செய்யும் ஆவணம், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றைக் குறிப்பிடும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 2021ல் வீதிவிபத்துக்களில் மட்டுமே 2000 பேர் பலி !

கடந்த 11 மாதங்களில் இடம்பெற்ற 20,280 வீதி விபத்துகளில் 2082 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்புக்கான தேசிய கவுன்சிலின் தலைவர் அன்டன் டி மென்ஸ் நேற்று தெரிவித்தார்.

குறைந்தது 526 பாதசாரிகள், 776 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 130 சைக்கிள் ஓட்டுநர்கள், 231 சாரதிகள், 238 பயணிகள் மற்றும் 28 பேர் (அடையாளம் தெரியாத) வீதி விபத்துகளில் கொல்லப் பட்டுள்ளனர்.

பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்குக் கிடைத்த தகவலின்படி, 95 தனியார் பஸ் விபத்துகள், 30 இலங்கை போக்குவரத்து சபை பஸ் விபத்துகள், 326 லொறி விபத்துகள், 29 கொள்கலன் வாகன விபத்துகள், 154 கார் விபத்துகள், 778 மோட்டார் சைக்கிள் விபத்துகள், 254 முச்சக்கர வண்டி விபத்துகள், 18 சைக்கிள் விபத்துக்கள், 25 டிரக்டர் விபத்துகள், 11 தரை வாகன விபத்துகள் என அவர் கூறினார்.

“ராஜபக்சவினரை காட்டிலும் புலிகளின் தலைவர் பிரபாகரனே பரவாயில்லை.” – ஐக்கிய மக்கள் சக்தி

முப்பது ஆண்டுகள் போரில் இருந்து நாட்டை விடுவித்ததாகக் கூறிய ராஜபக்சவினர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை விட நாட்டுக்கு மிக மோசமான பேரழிவைத் தேடி தந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்து வெளியிடும்போதே சம்பிக்க ரணவக்க இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஆழிப்பேரலை அனர்த்தத்தை விட மிக மோசமான அனர்த்தம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. அரசில் இருக்கும் பலரும், ராஜபக்சவினருக்கு வாக்களித்தவர்களும் இந்த அழிவைப் புரிந்துகொண்டுள்ளனர். நாட்டை மிக மோசமான நிதி நெருக்கடி நோக்கிக் கொண்டு சென்றவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர் என்பது உலகத்துக்குத் தெளிவாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவாகி பல மாதங்கள் முக்கிய அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிக்க முடியாமல் போனது. இதன் மூலம் நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல ஜனாதிபதி தயாரில்லை என்பது தெளிவானது” – என்றார்.