29

29

இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக வேலைவாய்ப்பு !

இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்க ஜப்பான் செயற்பட்டு வருவதாகவும், ஜப்பானிய முதலீட்டாளர்களை இலங்கைக்கு ஈர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குவதாகவும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹெய்டயாகி தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு கண்டியில் அமைந்துள்ள புனித தலதா மாளிகையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

தூதுவரை சர்வதேச அலுவல்கள் செயலாளர் காமினி பண்டார தலதா மாளிகையில் வரவேற்றார். பின்னர், தூதுவர் புனித சின்னத்துக்கு மரியாதை செலுத்தியதுடன், சிறப்பு விருந்தினர் புத்தகத்தில் குறிப்பு எழுதி நினைவுப் பரிசையும் வழங்கினார்.

தலதா மாளிகையிலுள்ள சர்வதேச பௌத்த அருங்காட்சியகத்தில் உள்ள ஜப்பானிய கண்காட்சிக் கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.

இந்தியாவில் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பிரமாண்ட சிலை !

கால்பந்து என்றால் சட்டென்று நினைவுக்கு வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் போர்த்துக்கலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ. தனது சிறப்பான ஆட்டத்தினாலும், கட்டுக்கோப்பான உடற்தகுதி மூலமும் உலகில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ளார்.
இந்தியாவில் வடகிழக்கு மாநிலம் மற்றும் கோவாவில் கால்பந்து விளையாட்டு பிரபலம். இந்தியாவை கிரிக்கெட் ஆக்கிரமித்த போதிலும், அங்கு கால்பந்து விளையாட்டுக்கு இன்னும் வரவேற்பு குறையவில்லை.
இந்த நிலையில் கோவா மாநிலம் பனாஜியில், கிறிஸ்டியானோ ரொனால்டோவின் பிரமாண்ட சிலை நேற்று திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவா மாநில மந்திரி மைக்கேல் லோபோ கூறுகையில் ‘‘இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும், கால்பந்தை கோவா மாநிலம், இந்தியாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் இந்த நிலை நிறுவப்பட்டுள்ளது. நம்முடைய குழந்தைகள் இதுபோன்ற உலகளவிலான ஜாம்பவான்கள் போன்று வர வேண்டும் என விரும்புகிறோம்’’ என்றார்.

ஆபாச கருத்துக்களை வெளியிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து !

ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்து தயாரிக்கப்பட்ட சட்டம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்ன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு வயது பிள்ளைகளின் நலன்கள் மற்றும் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பெண்கள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்த சட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டதே தவிர கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காக அல்ல.

இது தொடர்பில் சிவில் அமைப்புக்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பான உப குழு மற்றும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோரது நிலைப்பாடுகள் கோரப்பட்டு, அவற்றை உள்ளடக்கிய திருத்தங்களுடன் குறித்த சட்ட மூலத்தை மீள சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அண்மையில் வெவ்வேறு தரப்பினரால் மாறுபட்ட நிலைப்பாடுகளும் , விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனவே மேற்கூறப்பட்டவாறு திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் வரை , ஏற்கனவே இது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் செயற்கையான வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரிசிதட்டுப்பாடும் விலை உயர்வும் !

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அரிசியின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – புறக்கோட்டை அரிசி மொத்த விற்பனை நிலையங்களுக்கு இன்று விஜயம் செய்ந்திருந்தார்.

அதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், செயற்கையான தட்டுப்பாட்டின் பாரிய பாதிப்பை நுகர்வோரே சுமக்க நேரிடுவதாக தெரிவித்தார்.

“அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கின்றது.” – அசோக அபேசிங்க

நாட்டு மக்கள் மூன்று வேளை உண்ண முடியாத நிலைக்கு வந்துள்ள நிலையில் அரசாங்கம் டொலர்களுக்காக வெளிநாடுகளில் பிச்சை எடுக்கின்றது என்றும் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

நாடு சுதந்திரமடைந்த பின்னர் ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் வெளிநாடுகளுக்குச் சென்று டொலர் பிச்சை எடுத்ததில்லை என்றும் அசோக அபேசிங்க சுட்டிக்காட்டினார்.

அரசின் இயலாமையை மூடிமறைக்வே அமைச்சுக்களின் செய லாளர்களை ஜனாதிபதி, மாறியமைக்கின்றார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“நாட்டுக்கு எவ்வளவு நெருக்கடி வந்தாலும் மகிந்தராஜபக்ஷ பதவி விலகமாட்டார்.” – முருத்தெட்டுவே ஆனந்த தேரர்

நாடு எவ்வளவு நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டாலும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை விட்டுச் செல்ல மாட்டார் என்றும் மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வைக் காணும் சக்தி அவரிடம் உள்ளது என்றும் தான் நம்புவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய அபயராம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் துன்ப நிலைமையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் மகிந்தவிடம் உள்ளது. நாங்கள் நன்றாக ஆராய்ந்து பார்த்தோம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மனதில் பதவி விலகுவதற்காக அவ்வாறான ஒரு தீர்மானம் இல்லை. தற்போது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியாக ஆசைப் படுகிறார்கள் இது தான் உண்மை.

தற்போது மக்களை முட்டாள்களாக்க முடியாது என்றும் பொதுமக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

, 2022 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப் படையற்றது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் பதவிக் காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக மாட்டார் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்புத் தன்மையை சரி செய்யும் உபாயத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்கு அறிவார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி.யின் சிறந்த டி-20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஹசரங்கவின் பெயரும் பரிந்துரை!

2021 ஐ.சி.சி.யின் சிறந்த டி-20 வீரருக்கான விருதுக்கு சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தினால் பந்துரைக்கப்பட்ட நான்கு வீரர்களில் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார்.

ICC AWARDS Mens T20

குறித்த விருதுக்கான பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இரண்டு சிறந்த விக்கெட் காப்பாளர்-பேட்ஸ்மன்களும், இரண்டு சகலதுறை ஆட்டக்காரர்களும் உள்ளனர்.

அதன்படி இங்கிலாந்து ஜோஸ் பட்லர், இலங்கையின் வனந்து ஹசரங்க, அவுஸ்திரேலியாவின் மிட்செல் மார்ஸ் மற்றும் பாகிஸ்தானின் மொஹமட் ரிஸ்வான் ஆகியோர் 2021 ஐ.சி.சி.யின் சிறந்த டி-20 வீரருக்கான விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் ஆவர்.

இவ்வாண்டில் மொத்தமாக 20 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ள ஹசரங்க மொத்தமாக 36 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

துடுப்பாட்டத்திலும் அவர் ஒரு அரை சதத்துடன் 196 ஓட்டங்களை குவித்துள்ளார். வனிந்து ஹசரங்கவிற்கு இது ஒரு திருப்புமுனையான ஆண்டாகும், அவர் டி-20 கிரிக்கெட் அரங்கில் சிறந்த பந்து வீச்சாளராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் துடுப்பாட்டத்திலும் சிறந்த ஆற்றலை வெளிக்காட்டியுள்ளார். டி-20 அரங்கில் இவ்வாண்டு சிறந்த விளங்கிய ஹசரங்கவின் சாதனை ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தின் போது உச்ச நிலையினை எட்டியது.

24 வயதேயான ஹசரங்க இலங்கை கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு வீரராக மாறியுள்ளார்.

“குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.” – ஜனாதிபதி கோட்டாபய

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து பொதுமக்களிடமோ அல்லது ஊடகங்களிடமோ மறைக்க எதுவும் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்த போது ,

அரசாங்கத்தின் குறைப்பாடுகளை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை இருப்பதாகவும், இவ்வாறான நியாயமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ள அரசாங்கம் தயாராக இருக்கின்றது.  என்னை ஜனாதிபதியாக தெரிவு செய்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எனது ஒரே நோக்கமாக இருக்கின்றது. ஏற்படும் குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளது.

நான் ஆட்சிக்கு வரும் போது எதிர்பாராத விதமாக கொவிட் பரவல் ஆரம்பமானதுடன், அதனால் நான் எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் போயுள்ளது. செல்வந்த நாடுகளில் இருந்த பொருளாதார பலம் காரணமாகவே அவை கொவிட் பரவலை முறையாக எதிர்கொண்டன. அத்துடன், எனக்கு யாருடனும் போட்டி இல்லை. நாட்டைக் கட்டியெழுப்புவதே எனது ஒரே குறிக்கோள். சிலரிடமிருந்து அதற்கு தேவையான ஆதரவு கிடைக்கவில்லை.

கூட்டாகச் செயற்படும் கலையை நான் நன்கு அறிந்தவன். ஒன்றிணைந்து போராடுவதன் மூலம் ஜனநாயகக் கட்டமைப்பிற்குத் தேவையான ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

வட்டுக்கோட்டை ‘மாவடி சிறி’யின் படைப்புகள் – நாடகங்கள் ஒரு பகிர்தல்

நாடகத்துறையில் அண்மைக் காலமாக வளர்ந்து வருகின்ற ஒரு கலைஞர் மாவடி சிறி என்று அறியப்பட்ட ஏ ஆர் சிறிதரன். யாழ் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த அவர் நான் கற்ற யாழ் வட்டு இந்துக் கல்லூரியிலேயே கற்றவர் எனப்தும் எனக்கு சில ஆண்டுகள் சீனியர் என்பதாலும் எனக்கு அவர் மீது எப்போதும் ஒரு ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்துள்ளது.

அன்றைய காலகட்டங்களில் வடக்கில் பஷனைக் கொண்டுவருவது யாழ் வட்டுக்கோட்டையும் மானிப்பாயும். அதற்குக் காரணம் இப்பிரதேசங்களில் காணப்பட்ட கிறிஸ்தவர்களின் அளுமை. யாழ்ப்பாணக் கல்லூரி. அதுவே தமிழ் பிரதேசத்தின் முதல் பல்கலைக்கழகமாகவும் மாறியது. கலைத்துறையைப் பொறுத்தவரை சோமசுந்தரப் புலவர் குறிப்பிடத்தக்கவர்.

யாழில் சனத்தொகை செறிந்த பிரதேசங்களில் ஒன்றாகவும் வட்டுக்கோட்டை இருந்துள்ளது. அதுவொரு தனியான தேர்தல் தொகுதியுமாகும். வட்டுக்கோட்டை இல்லாமல் இலங்கைத் தமிழரின் வரலாற்றை யாரும் எழுதிவிட முடியாது. இலங்கையின் ஒரேயொரு தமிழ் எதிர்க்கட்சித் தலைவரை தந்த மண். போராட்ட காலங்களில் ஒப்பீட்டளவில் பாதுகாப்பாக இருந்த மண். இராணுவ மற்றும் கடற்படை முகாம்களில் இருந்து சில மைல் தூரத்தில் இருந்த படியால் பாரிய இழப்புகளை சந்திக்காத மண்.

ஆனால் விடுதலைப் போராட்ட அரசியலில் மிகவும் அரசியல் மயப்பட்ட மண். முதலாவது அரசியல் படுகொலை – சுந்தரம் படுகொலை வட்டுக்கோட்டையிலேயே நடந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் புதிய பாதை சுந்தரத்தை படுகொலை செய்தனர். வட்டுக்கொட்டையிலேயே தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் மிகக் காட்டுமிராண்டித்தனமாக தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பள்ளிமாணவர்களான ஆறுவரை படுகொலை செய்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்திற்கும் இடையே நடந்த மோதலில் வட்டுக்கோட்டையில் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க போராளிகளின் உடல்கள் மக்களால் பொறுப்பேற்கப்பட்டு கௌரவமான முறையில் தகனம் செய்யப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் பெயர்பெற்ற அமைப்புகள் எல்லாம் இருக்கின்ற போதும் தனியொருவனாக சாகசம் புரிந்து தாக்குதல்களை நடத்திய ரெலி என்கின்ற இயக்கத்தின் தலைவர் ஜெகனின் ஊரும் வட்டுக்கோட்டை. அவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டதும் வட்டுக்கோட்டையில் தான்.

சாதியத்திற்கு எதிராக முதல் முதல் ஆயதம் ஏந்தியதும் வட்டுக்கோட்டையில் தான். ஆனாலும் இன்று சாதியம் மையங்கொண்டிருப்பதும் வட்டுக்கோட்டையில் தான்.

ஒரு காலத்தில் கல்வியில் சிறந்து விளங்கிய வட்டுக்கோட்டையில் இன்றும் மலாயன் பென்சனியர்களை அதிகம் காணலாம். வட்டுக்கோட்டைக்கும் மலேசியாவுக்கும் இன்றும் நெருங்கிய உறவு உள்ளது.

இது வட்டுக்கோட்டை பற்றிய என் மனப்பதிவுகளில் இருந்து குறிப்பிட்ட சில. அப்பேற்பட்ட பிரதேசத்தில் இருந்து வருகின்ற ஒரு எழுத்தாளனோ படைப்பாளியோ அரசியலற்ற ஒருவராக இருப்பது முடியாத காரியம். அந்த வகையில் மாவடி சிறி ஒரு அரசியல், சமூக படைப்பாளியே. அதனாலோ என்னவோ அவருடைய படைப்புகளில் கலையையும் கடந்து அரசியல் வெளிப்பட்டுவிடுகின்றது. அதனால் படைப்பின் கலையம்சத்திற்கும் அதன் அரசியல், சமூக கருத்தியலுக்கும் இடையேயான சமநிலை மாறிப்போய்விடுகின்றது.

2014 முதல் இதுவரை 5 நாடகங்களை மாவடி சிறி மேடையேற்றி உள்ளார். கனவுகள் மெய்ப்பட வேண்டும், நல்லதோர் வீணை செய்து, உன் பார்வை ஒருவரம், கும்மியடி பெண்ணே கும்மியடி, அக்கினிக்குஞ்சு ஆகியவற்றோடு அண்மையில் கொரோனாவுடன் தொடர்புபடுத்தி ஒரு மணிநேர படத்தையும் தந்திருந்தார். மாவடி சிறி கலையை கலைக்காக படைப்பவரல்ல. கலையை மக்களுக்காக படைப்பவர். அவருடைய படைப்புகள் மக்களின் வாழ்நிலையை பிரதிபலிக்கும் விதத்தில் அமைக்கப்படுகின்றது.

ஆனால் பல சந்தர்ப்பங்களில் அவருடைய அரசியல் சமூக கருத்தியல் அவருடைய கலையுணர்வுச் சமநிலையை மீறி பிரச்சாரச் சாயலை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்கு அவர் ஒரு சமூக செயற்பாட்டாளராக இருப்பதும் காரணம் எனலாம். பன்முக ஆளுமை மிக்க மாவடி சிறி திங் ருவைஸ் என்ற அமைப்பை கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மோலாக நடத்தி வருபவர். ஒன்றினது தாக்கம் அவர்களை அறியாமலேயே மற்றைய அம்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகின்றது. மாவடி சிற புலம்பெயர்ந்த வாழ்வின் பல்வேறு இன்னல்கள் தடைகள் மத்தியிலும் இவ்வாறான படைப்புகளை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருப்பதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவருடைய குழவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

‘சமூக செயற்பாட்டில் படைப்பாளர் பற்றிய பகிர்தல் வெளி’ என்ற தலைப்பில் செம்முகம் ஆற்றுகைக் குழு சூம் ஊடாக இணைய வெளி கலந்துரையாடல் ஒன்றை நாளை டிசம்பர் 30 2021இல் இலங்கை நேரம் மாலை 6:30 ற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர்கள் மீரா பாரதி, யதார்த்தன், செம்முகம் ஆற்றுகைக் குழு இயக்குநர் சத்தியசீலன், நாடகச் செயற்பாட்டாளர் தருமலிங்கம் புலவர் சிவநாதன் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். மாவடி சிறி இறுதியில் ஏற்புரை நிகழ்த்துவார்.

சீன விண்வெளி நிலையத்தை நெருங்கிய எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் – ஐ.நாவில் முறைப்பாடு !

ஐ.நா. சபையில் சீனா எலன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மீது புகார் அளித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தங்கள் விண்வெளி நிலையம் மீது எலன் மஸ்க்கின் செயற்கைக்கோள்கள் இரு முறை நெருங்கியது என சீனா தெரிவித்துள்ளது.

உலகின் பிரபல பணக்காரர்களில் ஒருவரான எலன் மஸ்க் தனது நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் மூலம் பல்வேறு செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தியுள்ளார். அந்த செயற்கைக்கோள்களில் சில கடந்த யூலை1 மற்றும் ஒக்டோபர் 21 ஆகிய திகதிகளில் தங்கள் நாட்டு விண்வெளி நிலையத்திற்கு மிக அருகே மோதுவது போல் வந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

செயற்கைக்கோள்கள் மோதுவது போல் வந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக சீன விண்வெளி நிலையம் தடுப்பு மோதல் தவிர்ப்பு கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றியது என சீனா தெரிவித்துள்ளது.