கிறிஸ்மஸ் மற்றும் நியூஇயர் காலக் கொண்டாட்டங்கள் பிரித்தானியாவில் நடைபெறும் பார்சல் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பை கொண்டுள்ளன. இவ்வாராம் பார்சல் டெலிவரிகளின் மிக உச்சமான காலமாகையால் மோசடிகளின் எண்ணிக்கையும் எகிறியுள்ளது. ஸ்கொட்லன்ட் யாட் இன் மோசடிதடுப்புப் பிரிவின் கணிப்பின்படி இவ்வாரம் மட்டும் 500,000 மோசடிகள் நடைபெறும் என மதிப்பிட்டுள்ளது.
எனக்கு ஹேர்மிஸ் டெலிவரி நிறுவனத்தின் பெயரில் ஒரு கைத்தொலைபேசி இலக்கத்தில் இருந்து டிசம்பர் 21இல் அனுப்பி வைக்கப்பட்ட குறும்தகவலில் தாங்கள் டெலிவரி செய்ய முயற்சித்த போது நாங்கள் வீட்டில் இல்லாததால் நான் மேலதிகமாக 1.45 செலுத்த வேண்டும் என்று சொல்லி அதற்கான இணைப்பை வழங்கி இருந்தனர். இந்த இணைப்பைக் க்கிளிக் செய்தால் அது எங்களின் மிக முக்கியமான தகவல்களைப் பெற்று அதிலிருந்து எம்மி;டம் இருந்து பணத்தைக் கறக்கின்றனர். நான் பொதுவாகவே ஒன்லைனில் எதுவும் ஓடர் செய்வதில்லை என்பதால் எனக்கு அதன் நம்பகத்தன்மையில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. இன்று பிபிசி செய்தியில் இவ்வாறான மோசடிகள் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தன.
மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இலங்கையில் இருந்து புத்தகப் பார்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. டிபிடி குறித்த திகதியில் பார்சலை டெலிவரி செய்யவில்லை. அவர்கள் டெலிவரி செய்ய முயற்சித்த தினத்தில் நான் வீட்டில் இல்லை. அவர்கள் அருகில் உள்ள அவர்களின் கலக்சன் பொயின்ற்றில் பார்சலை விட்டுச் செல்ல வேண்டும். ஆனால் ஏதோ காரணத்தால் அவர்கள் அதனைச் செய்யவில்லை.அவர்களுடைய டெப்போவுக்கு போன் பண்ணி அதனை பெற்றுக்கொள்ள முயன்றால் கொரோனா காரணமாக நாங்கள் டெப்போ பக்கமே வர இயலாது என்றார்கள். போனில் இருந்த பெண்ணும் பிரச்சினையை தீர்க்க முயற்சிக்கவில்லை. எனக்கும் இரத்தக் கொதிப்பாகியது. மனேஜரை கூப்பிடச் சொன்னால் மனேஜரும் அரை மணிநேரத்திற்குள் போன் எடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் போன் எடுக்கவேயில்லை. திருப்பியும் இன்னொரு சுற்று அதே பதில் அதே விளைவு. இன்று ஒரு மாதம் கடந்தும் அந்த பார்சலுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாது.
இதற்கிடையே பார்சலை அனுப்பியவர் தான் இன்னுமொரு பார்சல் அனுப்பி உள்ளதாகவும் அது புதிய முகவரிக்கு வரும் என்றும் சொன்னார். அதுவும் குறித்த டெலிவரியில் வரவில்லை. அதன் பின் அமெக்ஸ் டெலிவரி நிலையத்தில் இருந்து ஒரு குறும் தகவல் வந்தது 11:25க்கும் – 12:25க்கும் இடையே பார்சல் வரும் என்று. அன்று பார்சல் வரவில்லை.
அதன் பின் மறுநாள் மாலை 18:40க்கும் – 19:40க்கும் இடையே பார்சல் வரும் என்று டிஎச்எல் இல் இருந்து ஒரு குறும்தகவல் வந்தது. ஆனால் பார்சல் வரவில்லை. குறும்தகவல் வந்தது. உங்களுடைய பார்சல் டெலிவரி செய்யப்பட்டதாகவும் நான் – ஜெயபாலன் பார்சலை பெற்றுக்கொண்டதாகவும்.
ஆனால் பார்சல் அதன் பின் 48 மணிநேரங்களிற்குப் பின்னரே என் கைக்கு வந்தது. புத்தகம் என்பதால் யாரும் அதனை களவாடியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் பெறுமதியான பொருட்கள் என்றால் சில வேளை இந்தப் பார்சல் எனக்கு கிடைத்தே இருக்காது.
ஒரு பார்சலை டெலிவரி செய்வதற்கு ஏன் இத்தனை நிறுவனங்கள். இந்நிறுவனங்கள் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையே. தங்களுடைய பொறுப்புக்களை தட்டிக்கழிப்பதற்காக வெவ்வேறு பெயர்களில் இயங்கி மக்களை ஏமாற்றுகின்றனர். நீங்கள் பொருளை அனுப்புவதற்கான பணத்தைக் கட்டும்வரை தான் அவர்களுக்கு கஸ்டமர். அதற்குப் பின் நீங்கள் யாரோ அவர்கள் யாரோ. அவர்களுக்கு பணத்தையும் கட்டி அவர்களுக்கு போன் பண்ணி அவர்களுக்காக காத்திருந்து நேரத்தையும் வீணடித்து அமசோன் நிறுவன உரிமையாளர் ஜெப் பெஸோஸ் போன்றவர்களை அதீத செல்வந்தராக்கி கொண்டிருக்கிறோம். எமது நுகர்வோர் கலாச்சாரமே அவர்களது அதீத செல்வத்தின் பின்னணி. எமக்கு என்ன வேண்டும் என்பதை இன்று இவர்களே தீர்மானிக்கின்றனர்.
இந்தப் பெரும் நிறுவனங்களும் லாப நோக்கில் டெலிவரி ரைவர்களை மிகவும் கசக்கி புளிகின்றனர். ப்றிலன்ஸாக தங்கள் வாகனத்தை பயன்படுத்தும் இவர்களுக்கு சிறுநீர் கழிக்க நேரம் இல்லாத அளவுக்கு டெலிவரி செடுயூல் போடப்பட்டு இருக்கும். அவர்கள் வானில் உள்ள போத்தலிலேயே சிறுநீர் கழிக்கின்றனர். வாகனத்தை ஓட்டிக் கொண்டே உணவருந்துகின்றனர். எல்லாத் தவறுகளும் எல்லா பொறுப்புகளும் அவர்கள் தலையிலேயே கட்டப்படுகின்றன. சம்பளம் பெறும் நவீன கூலி அடிமைகளாக்கப்பட்டு உள்ளனர். கொன்சவேடிவ் அரசின் சிரோ அவர் கொன்ராக் இந்த மல்டிநஷனல் நிறுவனங்கள் லாபத்தை குவிக்கவே உதவுகின்றது. தொழிலாளர்களின் நலன்பற்றியோ மக்களின் நலன்பற்றியோ எவ்வித கரிசனையும் கிடையாது.
திறந்த சந்தைப் பொருளாதாரம் உங்களுக்கு தேர்வு செய்வதற்காக உரிமையை வழங்குவதாக மார்தட்டி பீற்றிக்கொள்கின்றது. அந்த தேர்வு என்ன? ரைட் செடுயூலில் சிறுநீரை போத்தலில் களித்து வேலையைச் செய்ய வேண்டும். இல்லையேல் வேலையில்லாமல் பிச்சைப் பணத்திற்கு கையேந்த வேண்டும். இந்த மேற்கு நாடுகளின் வாழ்வதற்கான உரிமை என்பதற்குள் ஒளிந்திருப்பது சாவதற்கான உரிமையும் தான். அதனை கோவி;ட் அம்மணமாக நிரூபித்துள்ளது. கோவிட்இல் வறுமைகோட்டில் வாழ்வோரே பெரும்பாலும் உயிரிழந்தனர். உயிர் இழந்துகொண்டிருக்கின்றனர். உயிரிழப்பர். 2000க்கும் மேற்பட்ட அதீத செல்வந்தர்களின் லாபம் கோவிட் காலத்தில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துள்ளது.