16

16

“அரசை விமர்சிக்கும் அமைச்சர்களை நீக்குங்கள்.” – ஜனாதிபதியிடம் பஷில் ராஜபக்ஷ முறைப்பாடு !

அடுத்த வருட ஆரம்பத்தில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளதாகவும் அதன் பின்னரே அமெரிக்காவிற்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள நிதியமைச்சர் நாடு திரும்புவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிதியமைச்சர் இந்த விடயம் குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்த பின்னரே அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்கள் மத்தியில் பிரபல்யமாவதற்காக அரசாங்கத்தின் செயற்பாடுகளிற்கு முட்டுக்கட்டை விதிக்கும் அமைச்சர்களுடன் இணைந்து பயணிப்பது கடினமான விடயம் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நாடு தற்போது உள்ள பொருளாதார நிலையில் அரசாங்கம் மக்களின் ஆதரவு கிடைக்காத பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியநிலையில் உள்ளது இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தின் கூட்டுப்பொறுப்பை ஏற்பதற்கு பதில் அதனை விமர்சிப்பவர்களுடன் இணைந்து செயலாற்றுவது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என அவர் ஜனாதிபதி, பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார். அவ்வாறான அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பயனில்லை எனவும் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தெரிவித்துள்ளார்.

வேட்டியணிந்து நல்லூர் முருகனை தரிசித்த சீனத்தூதுவர் !

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் மற்றும் தூதரக அதிகாரி வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இன்று காலை 10 மணியளவில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு ஆலயத்திற்கு வருகை தந்திருந்த அவர், இந்து சமய முறைப்படி வேட்டி அணிந்துவந்தார்.

சீனத் தூதுவரின் வருகையோட்டி நல்லூர் ஆலயச் சூழல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்ததுடன் கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக காணப்பட்டது. இதேவேளை இன்று காலை 8 மணியளவில் அரியாலை கடலட்டை பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தார்.

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் அமைதிகாக்க முடியாது.” – ஜீவன் தொண்டமான்

“மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம்.” என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களை அடக்கி ஆள முற்படும் தோட்ட நிறுவனங்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதற்கான தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்ட நிறுவனங்களுக்கு கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என சுட்டிக்காட்டி அதற்கு எதிராகவும், தமது தொழில் உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அக்கரபத்தனை நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி உட்பட முகாமைத்துவ தரத்திலான அதிகாரிகளுக்கும், இ.தொ.கா. உள்ளிட்ட தொழிற்சங்க பிரமுகர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் பிராந்திய தொழில் ஆணையாளர் தலைமையில் இன்று ஹட்டனிலுள்ள தொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான்,

அக்கரபத்தனை நிர்வாகங்களுக்குட்பட்ட தோட்டங்களில் வேலைசெய்யும் மக்களுக்கு நியாயம் கிட்டும்வரை பின்வாங்கப்போவதில்லை பெருந்தோட்ட மக்களை மிகவும் மோசமான நிலைக்கு அக்கரபத்தனை நிர்வாகம் தள்ளிக்கொண்டிருக்கின்றது. சில தோட்டங்களில் 10 முதல் 12 கிலோ கொழுந்து பறிப்பதே கடினமாக செயல். இந்நிலையில் 20 கிலோ பறிக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர். இதனை நாம் ஏற்கவில்லை.

துரைமாரை இறக்கி கொழுந்து பறிக்க சொன்னோம், அவர்கள் எவ்வளவு பறிக்கின்றார்களோ அவர்களைவிட அதிகமாக 2 கிலோ பறித்து தருவதாக குறிப்பிட்டோம். அதற்கு அவர்கள் உடன்படவில்லை. கொடுப்பனவுகளிலும் பிரச்சினைகள் உள்ளன. எனவே, எமது போராட்டம் தொடரும். கடந்த ஒரு வருடமாக நாம் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கவில்லை.

மக்கள் நலனுக்காக அமைதி காத்தோம். இனியும் மக்கள் நலன் பாதிக்காத வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும். தீர்வுக்காக போராடுவோம். அனைத்து தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்கின. அதற்காக நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடலில்  நாளொன்றுக்கான பெயருக்கு 20 கிலோ பறித்தாக வேண்டும் என்பது உட்பட தோட்ட நிர்வாகத்தால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் ஏற்கவில்லை.

அதேபோல் தொழிற்சங்கங்களால் சுட்டிக்காட்டப்பட்ட விடயங்களை நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் உறுதியான இணக்கப்பாடின்றி பேச்சுவார்த்தை முடிவடைந்தது.

இலங்கையில் சடுதியாக அதிகரித்த ஒமிக்ரோன் பரவல் !

இலங்கையில் கொவிட் ஒமிக்ரோன் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 3 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இதற்கு முன்னர் ஒரு ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியர் மீண்டும் நியமனம் !

குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மீண்டும் பணியில் அமர்த்தப்படவுள்ளார். மேலும் கட்டாய விடுமுறையில் காலத்திற்குரிய அனைத்து ஊதியங்களையும் அவருக்கு வழங்கவும் பொதுச் சேவை ஆணைக்குழு சுகாதாரச் செயலாளருக்கு அறிவித்துள்ளது.

இவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியி பெலோபியன் குழாயில் தடை ஏற்படுத்துவதன் ஊடாக சிங்கள தாய்மார்களுக்கு சட்ட விரோத கருத்தடைசெய்தார் என பல்வேறு தரப்பினரால் குற்றம் சுமத்தப்பட்டது.

இது நாடளாவியரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மேலும், 2019. மே 24, முதல் வைத்தியர் ஷாபியை கட்டாய விடுமுறையில் அனுப்ப சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப்புலிகள் , பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை !

பேஸ்புக்கில் இலங்கையை தளமாகக் கொண்ட மூன்று அமைப்புகளுக்கு பேஸ்புக் தடை விதித்துள்ளது.

இதன்படி, இவ்வருடமும் பேஸ்புக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை மேற்கொள்ள அந்நிறுவனம் தடை விதித்துள்ளது.

பேஸ்புக் தமது வகைப்படுத்தலின் கீழ், விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாக குறிப்பிட்டு இவ்வாறு தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டில் உள்ள பொதுபல சேனா அமைப்பு மற்றும் அந்த அமைப்பைச் சேர்ந்த கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பிலும் எந்தவொரு பதிவையும் இடுவது பேஸ்புக்கினால் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறே, ‘சிங்ஹலே’ என்ற அமைப்புக்கும் தொடர்ந்தும் தடை விதித்துள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட இரண்டு அமைப்புகளுக்கும் சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கு மத்தியில் வெறுப்புப் பேச்சுகளை கொண்டுசெல்லுதல் மற்றும் சமூகங்களுக்கு இடையில் பிரச்சினை கருத்துக்களை பகிர்தல் என்றதன் அடிப்படையில் பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.

தவணையிடப்பட்டது எழிலன் உட்பட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் தீர்ப்பு !

விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட இறுதிக்கட்டபோரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து, காணாமல்போனவர்களை முன்னிலைப்படுத்துமாறு தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான தீர்ப்பு, அடுத்த வருடத்துக்கு தவணையிடப்பட்டதாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கின் தீர்ப்பு வவுனியா மேல்நீதிமன்றத்தினால், இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்படவிருந்த நிலையில், மனுதாரர்கள் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகிய சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ணவேல் மேலும் கூறியுள்ளதாவது, “இறுதிப்போரின் கடைசி நாட்களில் இராணுவத்திடம் சரணடைந்து, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவிற்கான தீர்ப்பு இன்றையதினம் வழங்கப்படவிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று, அந்த நீதிமன்றம் ஒரு அறிக்கையினை சமர்ப்பித்திருந்தது.

குறித்த அறிக்கை மீதான வவுனியா மேல்நீதிமன்றின் தீர்ப்பு இன்று வழங்கப்படுவதாக நியமிக்கப்பட்டிருந்தது. எனினும் அந்தத்தீர்ப்பு இன்னும் தயாரித்து முடிக்கப்படவில்லை என்று வவுனியா மேல்நீதிமன்றம் இன்று எமக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் எதிர்வரும் வருடம் மாசி மாதம் 14 ஆம் திகதி இந்த உத்தரவு அறிவிக்கப்படும் என்ற விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வழக்கு, இலங்கை இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் சட்டமா அதிபருக்கும் எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மக்கள், காணாமல் போனமை தொடர்பாக இலங்கை இராணுவமும் அரசாங்கமுமே பொறுப்புக்கூற வேண்டும் என்ற விடயத்தினை கருப்பொருளாக கொண்டு  வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் இராணுவத்தின் சார்பாக அவர்களுடைய சட்டத்தரணிகள் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். மேலும் சட்டமா அதிபர் திணைக்களத்தை சேர்ந்த சிரேஸ்ட அரச சட்டவாதி யொகான் அபேவிக்கிரம பிரசன்னமாகியிருந்தார். வழக்கினை தாக்கல்செய்த மனுதாரர்களான முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் மற்றும் ஏனைய காணாமல்போனவர்களின் குடும்பத்தினரும் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

யாழ்.பல்கலைகழகத்துக்கு அருகே இளைஞரை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய கும்பல் – தொடரும் பொலிஸாரின் அசமந்த போக்கு !

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில்  நேற்று (புதன்கிழமை) பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்ற போது வாள்வெட்டுக்ககுழுக்களின்“ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருந்த போதும் எந்தளவு தூரம் அவர் இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளார் என தெரியவில்லை. மேலும் யாழ்ப்பாண காவல்துறையினரின் அசமந்த போக்கும் இந்த வாள்வெட்டுக்குழக்களின் தொடர்ச்சியான அட்டகாசத்துக்கு காரணம். துரித கதியில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் மிக்பபெரிய சமூதாய சீரழிவு ஏற்கபடுவதற்கான வாய்ப்புள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கது.

அமெரிக்காவை அடுத்து சீன குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள அவுஸ்ரேலியா !

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் காரணமாக பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர புறக்கணிப்பாக அறிவித்ததில் அமெரிக்காவுடன்  அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.

பீஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்புவதில்லை என்ற முடிவை பைடன் நிர்வாகம் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

சீனாவுடனான உறவு முறிவைக் காரணம் காட்டி, அவர்களது தூதுவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நிகழ்வைப் புறக்கணிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாக  அந்நாட்டு ஒலிபரப்புக் கழகம் (ஏ.பி.சி) தெரிவித்துள்ளது.

மேலும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன் கருதியே இதனை செய்வதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியா மீதான பீஜிங்கின் சொந்த இராஜதந்திர முடக்கம், சீனத் தலைவர்களிடம் நேரடியாக மனித உரிமைகள் குறித்த தனது கவலைகளை  தெரிவிக்க முடியாததால், விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் அதிகாரிகளின் முடிவிற்கு ஊட்டமளித்ததாக மோரிசன் கூறியுள்ளார்.

இதேவேளை அண்மையில்  வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள். ஆனால் நிர்வாகம், அரசாங்க அதிகாரிகளை விளையாட்டுகளுக்கு அனுப்பாது என்று கூறினார்.

இந்த நடவடிக்கை, ஜின்ஜியாங்கில், குறிப்பாக உய்குர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக, கட்டாய உழைப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்பாக, சீனா மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிப்பதைக் குறிக்கிறது என சி.என்.என்  செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.

மேலும் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற மாநாட்டு நிகழ்வொன்றில்,  சீனாவில் மனித உரிமை மீறல்கள் வழக்கம் போல்  இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புவதாக சாகி கூறியுள்ளார்.

இதற்கிடையில், பீஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 இராஜதந்திர புறக்கணிப்பு குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை முழுமையாக மதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சபை (IOC) தெரிவித்துள்ளது.

அரசு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் இருப்பு ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் முற்றிலும் அரசியல் முடிவாகும், IOC அதன் அரசியல் நடுநிலைமையை முழுமையாக மதிக்கிறது. அதே நேரத்தில், ஒலிம்பிக் போட்டிகளும், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என  ஐ.ஓ.சி, தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.

வடக்கில் உக்கிரமடைந்துள்ள தொழில் வாய்ப்ப்பின்மை பிரச்சினை – திண்டாடும் இளைஞர் பட்டாளம் !

வடக்கு மாகாணத்தில் வேலையில்லாப் பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

இலங்கையில் 25 மற்றும் 29 வயதுக்குட்பட்டவர்களில் 9.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி இருக்கின்றனர் என்று புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

சாதாரண தரம் கல்வி கற்றவர்களில் 7.2 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். ஒட்டுமொத்தமாக இலங்கையில் உயர் தரம் மற்றும் பட்டப்படிப்பை நிறைவு செய்தவர்களில் 9.1 வீதமானவர்கள் தொழில் வாய்ப்பின்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் தொழில் வாய்ப்பின்மை பிரச்சினை மேலும் உக்கிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளனர்.

அரசாங்கம் அடுத்த வருடம் வேலை வாய்ப்பை வழங்காது என்று அறிவித்துள்ள நிலையில் ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முடியுமான பல தொழிற் சாலைகள் வடக்கில் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன என்றும் தெரிய வருகின்றது.