இன்று காலை எனக்கு தொலைபேசியில் ஒரு குறும் தகவல் Hey dad this is my new number you can delete my old number. இரண்டாவது மகன் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருக்கிறான். ஆனால் இப்ப விடுமுறையில் வந்துவிட்டான். இதற்கு முன்னரும் இவன் இப்படி போன் நம்பரை மாற்றி இருக்கிறான். நான் பஞ்சிப்பட்டு மாற்றாமல் குழம்பி சத்தம் போட்டும் இருக்கிறேன். அந்த போன் நம்பருக்கு போன் செய்தேன் போன் கரகரத்தது. இப்படி அனுபவங்கள் முன்னரும் நடந்தது. மீண்டும் ஒரு மசேஜ். தன்னுடைய போன் உடைந்துவிட்டதாகவும் கதைக்க முடியாது என்றும் மசேஜ் வந்தது. சரி போன் வாங்கி இப்ப ஒரு ஆறு மாதம் தான் வொறன்ரியில் மாற்றுவோம் என்றன். முன்னம் விட்ட தவறை திரும்பவும் விடக்கூடாது. அப்பனுக்கு மகன் அட்வைஸ பண்ண விடக்கூடாது என்று என்பதுக்காக உடனேயே நம்பரை மாற்றி புதிய நம்பரை சேவ் பண்ணிக்கொண்டேன்.
பிறகு இன்னுமொரு மசேஜ் தனது பாங்க் எக்கவுண்டை ப்றீஸ் பண்ணி வச்சிருக்கிறதாகவும் தனக்கு பில்லைக் கட்டிவிடவும் கேட்டான். சரி என்ன பல்கலைக்கழகத்தில் படிப்பவனுக்கு ஒரு ஐம்பது நூறு பவுண் தானே பெத்ததுக்கு அதுவும் செய்யாவிட்டால் மரியாதையில்லை தானே. ‘நோ புரம்பளம்’ என்றும் தகவல் அனுப்பிவிட்டு எவ்வளவு கட்ட வேண்டும் என்றேன். £1800 பவுண் என்று தகவல் வந்தது. எனக்கு தூக்கிவாரிப் போட்டது. நான் ஒரு பிச்சைக்கார வாத்தி என்றது நம்மட கொன்ஸ் தோழரின் புண்ணியத்தில உலகத்துக்கே தெரியும். என்ர பாங்கில எந்தக் காலத்தில £1800 பவுண் இருந்தது. நாங்கள் எல்லாம் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன் மாதிரி £50 பவுண் தாளையே கண்டிராத ஆட்கள்.
ஆனால் பாவம் மகனுக்கு பல்கலைக்கழகத்தில் ரூம் வாடகை குவாட்டருக்கு (இது அந்தக் கூவாட்டர் இல்ல. காலாண்டு) அவ்வளவு வரும் அது தான். அதுவா கட்ட வேணும் என்று மசேஜ் அனுப்பிவிட்டு இன்னுமொரு மசேஜ்ம் போட்டேன். எனக்கு சம்பளம் இன்னும் வரவில்லை. அண்ணாவிடம் வாங்கிக் கட்டு அண்ணாவுக்கு நான் பிறகு குடுக்கிறேன் என்று. என்னிடம் காசு இல்லாமல் அண்ணாவிட்ட கேள் என்று சொன்னது கொஞ்சம் வெட்கமாக இருந்தாலும் வேறு வழியில்லை. அவனுக்கு ஏற்கனவே ஒரு £1000 குடுக்கக்கிடக்கு. (இந்தத் தகவல் தோழர் கொன்ஸ்க்கு அல்வா கொடுக்க.) திரும்பி மசேஜ் வந்தது நீங்கள் அண்ணாவிடம் சொல்லுங்கள் என்று. இப்ப எனக்கு உதைக்கத் துவங்கியது. எற்கனவே டாட் என்று அழைத்ததே எனக்கு இடித்தது.
என்னுடைய பிள்ளைகள் யாரும் என்னை ஒரு போதும் டாட் என்றோ டாடி என்றோ அழைப்பதில்லை. அப்பா என்றே அழைப்பார்கள். ஆங்கிலத்தில் மசேஜ் வந்தாலும் Appa என்றே எழுதுவார்கள். கொஞ்சம் அன்பு கூடினால் டோய் அப்பா அப்பா லூசா என நான் அவர்களை அழைப்பது போலே அழைப்பார்கள். டாட் டாடி எல்லாம் கொஞ்சம் ரூமச் மாதிரித்தான் தெரிந்தது. ஆனால் யூனிவர் சிற்றியில குவாட்டர் இறங்கிச்சுதோ தெரியேல்ல. அத்தோடு அண்ணாவிட்ட கேள் என்றால் அவன் நேர அண்ணனின் கழுத்தைப் பிடித்து காசை மாற்றியிருப்பான். அண்ணன் தான் அலறி அடித்து எனக்கு அடித்திருப்பான். சரி என்று மூத்தவனுக்கு அடித்தேன். அவன் போனைத் தூக்வில்லை. அண்ணவோடு கதைத்துவிட்டு சொல்கிறேன் என்றுஒரு மசேஜ் போட்டுவிட்டு இருக்க மூத்தவன் அடித்தான்.
‘தம்பி நிக்கிறானா?’. ‘ஓம்’ என்றான். கொடுத்தான். ‘ஏன் ரூம் ரென்ற் கட்டவில்லையா’ என்றேன். ‘ஏன் காசு கேட்ட நீ’ என்றேன். அப்பதான் நித்திரையால் எழும்பியவன், ‘உங்களுக்கு என்ன லூசா?’ என்றான். அப்ப தான் ஓடி வெளித்தது. பிச்சைக்காரனாய் இருந்தால் எங்களிட்ட இருந்து காசு பிடுங்குவது கொஞ்சம் கஸ்டம் என்று.
உடனே நான் மசேஜ் போட்டேன் ‘நீ தந்த எக்கவுண்டுக்கு 1500 பவுண் போட்டிருக்கிறேன்’ என்று அதுக்குப் பிறகு அவரை இழுத்தடித்து சம்பாசணையில் இருந்து கொண்டே அக்சன் புரொடில் போய் கொம்பிளெயின் பண்ணிவிட்டு அவன் தந்த எக்கவுண்டுக்கு 1.50 மாற்றிவிட்டு வங்கிக்கு போன் பண்ணிச் சொல்லி உள்ளேன்.
பெரும்பாலும் நாங்கள் ஊகங்களின் அடிப்படையிலேயே செயற்படுகிறோம். அதனால் தவறான முடிவுகளுக்கு தள்ளப்பட்டு பொருளாதார நஸ்டத்தையும் சந்திக்கின்றோம். இன்று எனது வங்கியில் பணம் இருந்திருந்தால் சில வேளை நான் அந்தத்தொகையை இழந்திருப்பேன். ஏதோ எனக்குத் தட்டிய சிறுபொறி என்னைக் காப்பாற்றியது. மிகக் கவனம். சிறிய கவனக் குறைவுகள் பெரும் இழப்புகளுக்கு எம்மைக் கொண்டு செல்லும். பொருளாதார இழப்புகள் மட்டுமல்ல அதனிலும் மோசமான உறவு முறிவுகள்இ உயிரிழப்புகள் என அவை பாரதூரமானவையாகவும் அமைந்துவிடும்.
முன்கூட்டிய முடிவுகளை வைத்துக்கொண்டு தான் நாம் பலவற்றைச் செய்கின்றோம். முதல் குறும் தகவலில் நான் ‘நீ யார்? என்று கேட்காமல் அந்தச் தகவல் என்னுடைய பிள்ளைகளிடம் இருந்துதான் வந்தது என்று முடிவுக்கு வந்துவிட்டேன். அவன் காசு கேட்ட போது நானாக அது வாடகைக் காசாகத்தான் இருக்கும் என்று முடிவுக்கு வந்துவிட்டேன். இந்த முன் கூட்டிய முடிவுகள் என்னை தவறான முடிவுகளை எடுக்க வைத்தது. அதனால் எதனையும் தீர ஆராய்ந்து இயலுமான தகவல்களை திரட்டிய பின்னரேயே முடிவெடுக்க வேண்டும்.
இன்னும் சில நாட்களில் £250,000 பவுண்களை பறிகொடுத்த லண்டன் தமிழர்களின் கதை தேசம்நெற்றில். பறிகொடுத்தவர்களும் தமிழர்கள் பறித்தவர்களும் தமிழர்கள்.