04

04

தை – ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம் – லண்டன் அசம்பிளியில் ஏகமனதாகத் தீர்மானம்!

டீசம்பர் 02இல் லண்டன் அசம்பிளியில் நிக்களஸ் ரோஜர் என்ற அசம்பிளி உறுப்பினர் கொண்டுவந்த ‘ஜனவரி தமிழ் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை அனைத்துக் கட்சி லண்டன் அசம்பிளி உறுப்பினர்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இத்தீர்மானம் லண்டனில் வாழும் தமிழர்களின் வாழ்வியலில் பெரும் மாற்றத்தையோ தாக்கத்தையோ ஏற்படுத்தாத போதும், கடந்த நான்கு தசாப்தங்களாக தமிழர்கள் லண்டனின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் வழங்குகின்ற பங்களிப்பை அங்கீகரிக்கின்ற, அதனை கௌரவிக்கின்ற ஒரு தீர்மானமாக இதனைக் கொள்ளலாம்.

லண்டன் ஒரு பல்லினச் சமூகம் வாழுகின்ற, பலவர்ணம் கொண்ட, ஒருபோதும் உறங்காத ஒரு நகர். உதாரணத்திற்கு லண்டனில் உள்ள ஒரு பாடசாலையில் மட்டும் 56 மொழி பேசுகின்ற மாணவர்கள் கல்வி கற்கின்றனர் என்றால் இந்த நகரின் பன்மைத்துவத்தை கற்பனை செய்து பாருங்கள்.

பிரித்தானியாவில் குறிப்பாக லண்டனில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏனைய சமூகங்களோடு (இந்தியர்கள்: குஜராத்திகள், சீக்கியர்கள், பாகிஸ்தானியர்கள், பங்களாதேசிகள், சீனர்கள்) ஒப்பிடுகையில மிக மிகக் குறைவு. லண்டனின் மொத்த சனத்தொகை அண்ணளவாக 9 மில்லியன், கிட்டத்தட்ட இலங்கையின் மொத்த சனத்தொகையின் 50 வீதத்திற்கு சற்றுக் குறைவு. இதில் மொத்த தமிழர்களின் எண்ணிக்கை அண்ணளவாக இருநூறாயிரம் மட்டுமே. ஆகக்கூடியது 2% வீதமானவர்கள் மட்டுமே. இந்த இரண்டு வீதத்திற்குள் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், ரீயூனியன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த தமிழர்கள் வாழ்கின்றனர். இவர்களில் இலங்கைத் தமிழர்களே லண்டனின் அரசியல், பொருளாதார விடயங்களோடு தங்களை கணிசமான அளவில் இணைத்துக்கொண்டு லண்டனை தங்கள் நகராக்கிக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்களுக்கு ஒரு தாயகப் பிரதேசம் இல்லாதது அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்திய, மலேசியத் தமிழர்களைப் பொறுத்தவரை அவர்கள் லண்டனை ஒரு இடைத்தங்கள் நிலையமாக காண்கின்றனர்.

லண்டன் ஈஸ்ற்ஹாம் என்பது ஒரு குட்டி யாழ்ப்பாணம் என்றால் அதில் மிகையல்ல. அங்கு கவுன்சிலராக பல ஆண்டுகள் வெற்றிபெற்று தைப் பொங்கலை ஈஸ்ற்ஹாம் வீதியில் கடந்த 20 ஆண்டுகளாகக் கோலாகலமாகக் கொண்டாடி வருபவர் முன்னாள் கவுன்சிலர் போல் சத்தியநேசன். தமிழ் சமூகம் பல்வேறு கூறுகளாக முரண்பட்டு இருந்தாலும் அவர்களை இணைத்து தமிழர்களுக்கு என்று ஒரு வரலாற்றை லண்டனில் உருவாக்க வேண்டும் என்பதற்கு வித்திட்டவர்களில் போல் சத்தியநேசன் குறிப்பிடத்தக்கவர். அவருக்கும் பல நெருக்கடிகள் வந்த போதிலும் அவற்றைக் கடந்து சில பல விடயங்களை அவர் சாதித்தும் உள்ளார். லண்டன் அசம்பிளியில் டிசம்பர் 2இல் கொண்டுவரப்பட்ட ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்திற்கு இரு தசாப்தங்களுக்கு முன்னரேயே அவர் வித்திட்டு இருந்தார்.

தமிழர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தமிழர்களின் கல்வி, பொருளாதார தேடல் காரணமாக அவர்கள் லண்டனின் கல்வி, மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளில் கணிசமான தாக்கத்தைச் செலுத்தி உள்ளனர். கல்வியைப் பொறுத்தவரை தமிழர்களுடைய சனத்தொகை விகிதாசாரத்துக்கு அதிகமாகவே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்கின்றனர். பெரும்பாலும் இங்கிலாந்தில் உள்ள முன்னணிப் பல்கலைக்கழகங்களில் தமிழ் சொசைற்றி ஒன்றை வைத்திருப்பார்கள். கல்வி மீதான பாரம்பரிய நம்பிக்கை இன்னமும் கணிசமான அளவில் காணப்படுகின்றது. இது ஆசியர்களுடைய குணாம்சங்களில் ஒன்றாகவும் உள்ளது.

லண்டனில் மட்டும் 40 வரையான தமிழ் கோயில்கள் உள்ளன. லண்டனில் தமிழர்கள் கணிசமாக வாழும் ஒவ்வொரு உள்ளுராட்சிப் பிரிவிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் பள்ளிகள், மற்றும் தமிழ் அமைப்புகள் உள்ளன.

லண்டனில் மட்டுமல்ல இந்கிலாந்தில் ரிரெயில் செக்ரரில் தமிழர்களின் சிறு வியாபார நிறுவனங்கள் இல்லாத இடமே இல்லையென்று சொல்லலாம். இங்கிலாந்தில் உள்ள பெரும்பாலான பெற்றோல் ஸ்ரேசன்கள் தமிழர்களாலேயே நிர்வகிக்கப்படுகின்றது. தமிழர் பாரம்பரிய உணவு வகைகளையும் பல்வேறு சமூகத்தினரும் கொள்வனவு செய்கின்றனர். சட்டத்துறையிலும் தமிழர்களுக்கு குறைவில்லை. பிரித்தானியாவின் சுகாதார சேவைகளில் குறிப்பாக மருத்துவர்களில் கணிசமான பங்கினர் தமிழர்களாக உள்ளனர். தமிழ் மருத்துவர் இல்லாத ஒரு மருத்துவமனை இங்கிலாந்தில் இருக்குமா என்பது தெரியவில்லை. வங்கிகள், ஆசிரியத்துறை, ஊடகத்துறை என தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் சேவையை வழங்கி வருகின்றனர். தமிழர்களுடைய சனத்தொகைக்கு இத்துறைகளில் கணிசமான பங்கினர் ஈடுபட்டுள்ளனர். அதனால் தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிறுபிரிவினராக இருந்தாலும் அவர்கள் ஏற்படுத்துகின்ற தாக்கம் கனதியானதாக உள்ளது. அதனால் அவர்கள் தவிர்க்கப்பட முடியாத ஒரு சிறுபான்மையாக உள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால் தமிழ் சமூகம் சிறுபான்மையாக இருந்தாலும் லண்டனில் ஒரு பார்வைக்குத் தெரியக் கூடிய ஒரு சமூகமாக எப்போதும் இருந்து வருகின்றது. அதனால் லண்டன் அரசியல் தளத்திலும் தமிழ் சமூகம் எப்போதும் ஒரு அதிர்வை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கும். இந்தப் பின்னணியிலேயே ‘ஜனவரி – தமிழர் பாரம்பரிய மாதம்’ என்ற தீர்மானத்தை லண்டன் அசம்பிளி எடுத்திருந்தது.

டிசம்பர் 02இல் கொன்சவேடிவ் கட்சியின் உறுப்பினர் நிக்களஸ் ரொஜர் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் லண்டனின் உருவாக்கத்தில் தமிழர்களின் பங்கை மொசாக் படத்தின் ஒரு கூறாக ஒப்பிட்டுக் குறிப்பிட்டார். சில சமயங்களில் அந்த ஒவ்வொரு கூறையும் ஆழந்து கவனிக்க வேண்டும் என்றும் அந்த வகையில் லண்டன் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார். இந்தப் பங்களிப்பு இலங்கையில் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தப்பித்து வந்த பின்னரளித்த பங்களிப்பு என்றும் குறிப்பிட்டார். அந்த வகையில் ‘தமிழ் மொழியையும் அதன் வளம்மிக்க கலாச்சாரத்தையும் இந்த மாதத்தில் பதிவு செய்வது பொருத்தமானது. ஜனவரி தமிழர்களுடைய பாரம்பரிய மாதம். அறுவடை நாளான ஜனவரி 14கை நாங்கள் கருத்தில் எடுக்க வேண்டும். இதனை 2016இல் கனடிய அரசு அங்கிகரித்து இருந்தது. அதே போல் லண்டன் மேயரும் லண்டன் உள்ளுராட்சி மன்றங்களும் ஜனவரியை தமிழருடைய பாரம்பரிய மாதமாக அங்கீகரித்து அதனை அரத்தமுள்ளதாக்கி கொண்டாட வேண்டும்’ என்று நிக்களஸ் ரொஜர் விவாதத்தை தொடக்கி வைத்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரும் கறுப்பினத்தவரான சோன் பெய்லி தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்ததுடன் (ஒக்ரோபர் மாதம்) கறுப்பின வரலாற்று மாதம் எவ்வாறு கறுப்பின மக்களுக்கு பயனைக் கொடுத்ததோ அதுபோல் தமிழர்களுடைய பாரம்பரியம் ஜனவரியில் மேற்கொள்ளப்படுவது அவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்றார். கறுப்பின வரலாற்று மாதம் பாடசாலைகளிலும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அடிமைத் தனத்தில் இருந்து கறுப்பின மக்கள் போராடி விடுதலை பெற்று பல்வேறு சாதனைகளைப் படைத்ததை நினைவு கூருவதனூடாக கறுப்பின இளம் தலைமுறையினருக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் கறுப்பின மக்களின் பங்களிப்புப் பற்றி இம்மாதத்தில் பேசப்படும்.

லண்டன் அசம்பிளியின் துணைத் தலைவரான கெய்த் பிரின்ஸ் கொன்சவேடிவ் கட்சியைச் சேர்ந்தவர் குறிப்பிடுகையில் ஜனவரி மாதம் அறுவடை நாள், தமிழர்களுடைய தைப்பொங்கல் தினம் என்றும் அவர்களுடைய பங்களிப்பை இம்மாதத்தில் கௌரவிப்பது பொருத்தமானது என்றும் தெரிவித்தார்.

தொழிற்கட்சியின் அசம்பிளி உறுப்பினர் குருபேஸ் ஹிரானி, தமிழர்களுடைய பங்களிப்பை விதந்துரைத்து தீர்மானத்தை வரவேற்பதில் தான் பெருமைப்படுவதாகக் குறிப்பிட்டார்.

தொழிற்கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ஒன்ஹார் ஸோஹோற்றா பேசுகையில் தமிழர்கள் பல்வேறு முனைகளிலும் தங்கள் பங்களிப்பை வழங்கி உள்ளனர் எனக்குறிப்பிட்டு தமிழர்கள் முன்ணுதாரணமாகத் திகழ்ந்துள்ளனர் என்றார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஜனவரி 14 தைப்பொங்கலை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொழிற் கட்சியின் மற்றுமொரு உறுப்பினராக உன்மேஸ் தேசாய் குறிப்பிடுகையில் 1984 இல் முதல் தொகுதி தமிழர்கள் குண்டுவெடிப்புகளில் இருந்து தப்பி குறிப்பாக யாழ்ப்பாண நகரில் இருந்து வந்ததாகக் குறிப்பிட்ட அவர் அவர்கள் தன்னுடைய பகுதியான ஈஸ்ற்ஹாமிலேயே குடியேறியதாகவும்; ஈஸ்ற்ஹாம் ரெட்பிரிஜ் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு தமிழ் வீடுகளிலும் உள்ளவர்களின் அவர்களின் ஊரில் உள்ள வீடுகளில் ஒருவரையாவது இந்த மோசமான யுத்தத்தில் இழந்துள்ளனர். உடல் ஊனமுற்றுள்ளனர் என்றார். தமிழர்கள் இல்லாமல் ஈஸ்ற்ஹாம் ஹைஸரீற் இல்லையென்றும் யுத்த வடுக்களோடு வந்து லண்டன் நகரோடு இரண்டறக் கலப்பதற்கு தமிழர்கள் ஒரு முன்ணுதாரணம் என்றும் கூறி தீர்மானத்தை வரவேற்றார்.

‘வணக்கம்’ என்று சொல்லி தான் பேச்சை ஆரம்பிக்க விரும்புவதாகக் கூறி ஆரம்பித்த லிபிரல் டெமொகிரட் கட்சியைச் சேர்ந்த ஹினா புஹாரி மற்றையவர்களைப் போல் தாங்களும் இத்தீர்மானத்தை மிகவும் வரவேற்பதாகவும் தமிழர்களுடன் தங்கள் கட்சி நெருக்கமாகச் செயற்படுவதைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் சமூகத்திற்கு ‘நன்றி’ என்று சொல்லி தன் பேச்சை முடித்தார்.

கொன்சவேடிவ் கட்சியின் மற்றுமொரு உறுப்பினரான ரொனி டெவினிஸ் சுருக்கமாக குறிப்பிடுகையில் நிக்களஸ் ரொஜர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் தான் ஏற்றுக்கொள்வதாகக் குறிப்பிட்டார். கிரீன் பார்ட்டியைச் சேர்ந்த ஸாக் பொலாஸ்கி தமிழர்களுடைய பங்களிப்பையும் தீர்மானத்தையும் வரவேற்றுக் குறிப்பிட்டார்.

இறுதியாக நிக்களஸ் ரொஜர், தீர்மானத்துக்கு ஆதரவளித்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ள தீர்மானம் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

லண்டனில் தமிழர்களுடைய அரசியல் தாக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும் அது அதன் முழவீச்சில் இன்னும் இல்லை. இதுவரை தமிழர் யாரும் பாராளுமன்ற உறுப்பினராக வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அண்மைய எதிர்காலத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும் தமிழர்களுடைய சனத்தொகை கணிப்பின்படி ஒவ்வொரு தொகுதி தமிழர்களும் ஒரே மாதிரி வாக்களித்ததால் 50 உள்ளுராட்சி கவுன்சிலர்கள் வரக்கூடிய வாய்ப்பு இருந்தது. ஆனால் உள்ளுராட்சி உறுப்பினர்கள் பத்து முதல் பதினைந்து பேர் வரையே உள்ளனர். தமிழர்களுடைய அரசியல் செல்வாக்கு என்பது இன்னமும் தமிழ் தேசிய அரசியலை ஒட்டியதாகவே இன்னமும் உள்ளது. இங்குள்ள அரசியல் வாதிகளை வைத்து இலங்கை அரசுக்கு எதிராக எதையாவது சாதித்திட வேண்டும் என்ற முனையிலேயே லண்டன் தமிழ் அரசியல் இன்னமும் உள்ளது.

இவ்வாறு எல்லாவற்றையும் முன்ணுதாரணமாகக் காட்டுவதால் லண்டன் தமிழ் சமூகத்திற்குள் பிரச்சினையே இல்லையென்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிடக் கூடாது. இளைஞர் குழக்களின் வன்முறை தேசிய அளவில் பேசப்படும் அளவுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் லண்டனை உலுக்கிய சில கொலைகள் உட்பட 30 வரையான தமிழ் படுகொலைகள் தமிழர்களால் நடந்துள்ளன. ரெயிலில் குதித்து தற்கொலை செய்ததாக செய்தி வந்தால் அது தமிழராக இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளில் ஐந்து தாய்மார் பிள்ளைகளைக் கொலை செய்து தற்கொலைக்கு முயற்சித்தனர். அவ்வளவுக்கு தமிழ் சமூகத்தில் மனநிலை பாதிப்புகள் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது. குடும்ப வன்முறைகள் அதனால் பிள்ளைகள் அரச சமூகப் பிரிவின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்படும் நிலைகளும் இங்குள்ளது.

ஆகவே ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் உள்ள சிக்கல்களும் கஸ்டங்களும் தமிழ் சமூகத்திற்குள்ளும் உள்ளது. அவற்றை ஆராய்ந்து பிரச்சினைகளை ஏற்றுக் கொண்டு அடுத்த கட்டம் நோக்கி தமிழர்கள் நகரவேண்டும். யாழ்ப்பாணத்தில் மழை பெய்தால் ஈஸ்ற்ஹாமிலும் ஹரோவிலும் குடை பிடிக்கும் அரசியல் இன்னும் எத்தினை நாளைக்கு. லண்டனில் பலநூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்களில் குடும்பவன்முறை பெரும் பிரச்சினையாக உள்ளது. அதற்கு அதீத மதப்பழக்கம் முக்கிய காரணமாக உள்ளது. மனவழுத்தம் பற்றிய விழிப்புணர்வு இன்னமும் சரியான வகையில் கையாளப்படவில்லை. இவை ஒரளவு வெளித்தளத்தில் தெரிகின்ற பிரச்சினைகள் இதைவிடவும் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் பலவும் உள்ளது. இங்குள்ள தமிழர்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளும் அவசியமாகின்றது. லண்டன் அசம்பிளி ‘ஜனவரி தமிழர் பாரம்பரிய மாதம்’ என்று அறிவித்தது போல் லண்டன் தமிழர்கள் ஜனவரியை மது விலக்கு மாதமாக அறிவிக்க வேண்டும். கடைப்பிடிக்க வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களில் மதுவை முற்றாகத் தடை செய்ய வேண்டும். பொது நிகழ்வுகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மதுப் பாவனையையும் அதன் படங்களைப் போட்டு கொண்டாடுவதையும் முற்றாக நிறுத்த வேண்டும்.

“ஜே.வி.பியிர் வேறு. புலிகள் வேறு. புலிகளை நினைவு கூற அனுமதிக்கமாட்டேன்.” – சரத் பொன்சேகா

அடுத்து வரும் தங்களது ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சராக தன்னை நியமிப்பதாக கட்சித் தலைவர் தெரிவித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மாசல் சரத் பொன்சேக்க  தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று பாதுகாப்பு அமைச்சு,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்க்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அடுத்த அரசில் எனது பணிகளை நிறைவு செய்ய முழு அதிகாரம் தருவதாகவும் தலைவர் தெரிவித்தார். அடுத்த ஐக்கிய மக்கள் சக்தி அரசொன்று உருவாகும். அதில் நான் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவேன். மோசடியுடன் தொடர்புள்ளவர்கள் இருந்தால் எதிர்தரப்பில் மட்டுமன்றி எமது தரப்பில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்றார்.

எல்.ரீ.ரீ.ஈ நினைவு கூரல்கள் தற்பொழுது நடைபெறுகிறது. தேசிய மட்டத்தில் முடிவு எடுத்து அவற்றை நிறுத்த வேண்டும். இந்த விடயத்திற்கு எனது கட்சித் தலைவரினதும் கட்சியினதும் அனுமதி உள்ளது. அதனால் பொறுப்புடனே சொல்கிறேன். இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு பாதுகாப்பு செயலாளரை கோருகிறேன். இறந்தவர்களை நினைவு கூருவதாக சொல்கின்றனர். அதில் பிரச்சினை கிடையாது. அதற்கு பிரபாகரனின் பிறந்தநாளை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. பிரபாகரனை அவரது குடும்பத்தினரால் நினைவு கூரமுடியும்.

பிரபாகரனின் பிறந்த தினத்தில் மாவீரர் தினத்தை கொண்டாடுவதை ஏற்க முடியாது. புலிகள் இயக்கத்தை தொடர்புபடுத்தி நினைவு கூருவது சட்டவிரோதம். புலிகள் இயக்கம் தடைசெய்யப்பட்ட இயக்கமாகும்.எல்.ரீ.ரீ. ஈ நினைவு கூரலும் ஜே.வி.பி நினைவு கூரலும் ஒன்றல்ல. அரசியல் மாற்றம் ஏற்படுத்தவே ஜே.வி.பி முயன்றது. நாட்டை பிரிக்க அவர்கள் முயலவில்லை என்றார்.

மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி யாழில் கையெழுத்து போராட்டம் !

இழுவைமடி மீன்பிடித் தொழிலுக்கு எதிரான சட்டங்களை நடைமுறைப்படுத்தி நிலையான மீன்பிடித் தொழிலை உறுதிப்படுத்த கோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாண நகர பகுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் வட மாகாண கடற்றொழிலாளர் இணையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று (சனிக்கிழமை) கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மக்களிடம் பெற்றுக்கொள்ளப்படும் கையெழுத்துகளுடனான மகஜர்  ஜனாதிபதி, சட்டமா அதிபர் மற்றும் கடற்றொழில் அமைச்சரிம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கையெழுத்து சேகரிப்பு நடவடிக்கை  இடம்பெற்ற நிலையில், இன்றையதினம் யாழ். நகர பகுதியில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் பலி !

நிலாவெளி கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நீரில் அள்ளுண்டு சென்று உயிரிழந்தனர்.

இறக்கக்கண்டி வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 13 மற்றும் 14 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு மரணித்தனர்.

இன்று முற்பகல் உறவினர்களுடன் கடலில் நீராடச் சென்ற நிலையில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நிலாவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை குச்சவெளி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

“சமஷ்டியை தருவதிலிருந்து இவர்கள் பின்வாங்கவே முடியாது.” – எம்.ஏ.சுமந்திரன்

இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கம் பின்வாங்குவதை தொடர்ந்தால், நாடு பேரழிவைச் சந்திக்கும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நாடாளுமன்றில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சபையில் இன்று(04) உரையாற்றிய போதே அவர் மேந்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழு, சில நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டு இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவுமாறு கோரியதாக குறிப்பிட்டார்.

தீர்வு விடயம் குறித்து ஜனாதிபதியால் கடந்த ஜுலை மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பின்னர் அது பிற்போடப்பட்டது. அது விரைவில் நடைபெறும் என்றும், மற்றுமொரு திகதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டு, 5 மாதங்கள் ஆகின்றன.

இந்த சந்திப்பு கட்டாயமாக நடைபெற வேண்டும். தீர்வுக்கான அடிப்படைகள் ஏற்கனவே பல தடவைகள் எட்டப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் முன்னோக்கி செயற்பட்டால், அதனுடன் இணைந்து பயணிக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாம் சர்வதேசத்தின் ஆதரவையும் கோருவோம். இந்தப் பிரச்சினை தொடரக்கூடிய பிரச்சினை அல்ல என்பதை சர்வதேசம் அறிந்துள்ளது. இனப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வைக் கண்டறிய வேண்டும்.

அதேவேளை சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு ஏற்கனவே அரசாங்கம் இணங்கியுள்ளது. எனவே அதிலிருந்து பின்வாங்க முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் இலங்கையர் எரியூட்டி கொலை செய்யப்பட்ட விவகாரம் – பின்னணி என்ன..?

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தி எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற குறித்த நபர், 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், கைத்தொழில் பொறியியல் முகாமையாளராக பணியில் இணைந்ததுள்ளார்.

பின்னர் 2012 இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொது முகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.

தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

“இலங்கையரை கொலை செய்தவர்களுக்கு அதியுச்ச தண்டனை வழங்கப்படும்.” – கோத்தாபாய ராஜபக்வுக்கு இம்ரான்கான் உறுதி !

பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக நீதியை நிலைநாட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை இலங்கை பாராட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாகிஸ்தான் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பதிவில், இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவுடன் உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

கொலைக் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக அவர் இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

இங்கிலாந்தை மிரட்டும் கொரோனா – ஒரே நாளில் 50000க்கும் அதிகமான தொற்றாளர்கள் !

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது.
ஆனால், பல வளர்ந்த நாடுகளிலேயே கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முக்கிய இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் நேற்று 50,584 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன்மூலம் நாடு முழுவதும் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 79 ஆயிரத்து 647 ஆக உயர்ந்திருக்கிறது.
இதைப்போல கொரோனாவால் மேலும் 143 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,45,424 ஆக உயர்த்தி இருக்கிறது என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் இலங்கையர் எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் – 100க்கும் மேற்பட்டோர் கைது !

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர், இன்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

76 ஆண்டுகளின் பின்பு வெடித்த இரண்டாம் உலகப்போர் கால குண்டு – 4 பேர் படுகாயம் !

ஜேர்மனியில் தொடருந்து கட்டுமான தளத்தில், 76 ஆண்டுகளுக்கு பின்னர் இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்ததில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரண்டாம் உலகப்போர் 1939 ஆம் ஆண்டு, செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் திகதி வரை இடம்பெற்றது.

வெடிக்காத போர்க்கால குண்டுகள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து படைகளால் எறியப்பட்ட குண்டுகள், போர் முடிந்து 76 ஆண்டுகள் ஆன நிலையிலும் ஜேர்மனியில் அடிக்கடி கண்டுபிடிக்கப்படுகின்றன.

அதன் காரணமாக அந்தப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு, பெரும்பாலான குண்டுகள் வெடிக்காமல் நிபுணர்களால் செயலிழக்க செய்யப்படுகின்றன.

கடந்த 2017 ஆம் ஆண்டு, பிராங்பர்ட் நகரில் 1.4 டன் எடையுடைய ‘பிளாக் பஸ்டர்’ குண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, 70 ஆயிரம் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், ஜேர்மனியில் முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர் பாலத்துக்கு அருகே தொடருந்து துறை கட்டுமான தளத்தில் கட்டுமானப்பணி இடம்பெற்று வருகிறது.

அந்தப்பகுதியில் நேற்று முன்தினம், இரண்டாம் உலகப்போர் குண்டு ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.

பாலத்துக்கு அருகே சுரங்கப்பாதை பணியின்போது இந்த குண்டு வெடித்ததாக அந்நாட்டு