07

07

“மதத்தின் பெயரால் வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் மீது மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை.” – இம்ரான் கான்

இஸ்லாமின் பெயரைச் சொல்லி வன்முறைகளில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பாக மிதமாக நடந்துக் கொள்ளப் போவதில்லை என பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

சியல்கொட்டில் பிரியந்த குமார என்ற இலங்கையர் அடிப்படைவாதிகளால் கடந்த வெள்ளிக்கிழமை சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வொன்று இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவை காப்பாற்ற முயன்ற  பாகிஸ்தானியருக்கு கிடைத்த கௌரவம் (வீடியோ) - ஐபிசி தமிழ்

பிரியந்த குமாரவை அடிப்படைவாதிகள் சுற்றிவளைத்திருந்த போது அவரை பாதுகாப்பதற்கு தமது உயிரைப் பணயம் வைத்து போராடியிருந்த மாலிக் அத்னன் என்பவரின் செயலை பாராட்டி சான்றிதழ் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் இம்ரான் கான்,

2014 ஆம் ஆண்டு பெசாவரில் பாடசாலைமீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது முழு நாடும் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று பட்டதைப் போல, சியல்கொட் சம்பவத்தை அடுத்து முழு பாகிஸ்தானும் இனி இவ்வாறான நிகழ்வொன்று இடம்பெறக்கூடாது என்பதில் ஒன்றுபட்டிருப்பதாக தெரிவித்தார்.

இந்த கொடூரம் இடம்பெற்ற போது தமது உயிரைப் பற்றி கவலைபடாமல், மாலிக் அத்னன் பிரியந்த குமாரவை பாதுகாக்க முயற்சித்தமை சிறந்த முன்னுதாரணமாகும் என்றும் அவர் கூறினார்.

இதற்காக அவருக்கு “தம்ஹா ஐ சுஜாத்“ என்ற அதி உயர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் கொலை செய்யப்படும் இலங்கை பெண்கள் தொடர்பில் அமைதிகாக்கும் தூதரகங்கள்..? – முன்னிலை சோசலிச கட்சி கேள்வி !

பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்தகுமார எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசும் இலங்கை தூதரகங்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் வெட்கக்கேடானது.” என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.

முன்னிலை சோசலிச கட்சியின் தலைமையகத்தில் இன்று (6) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்த போது ,

பாகிஸ்தானில் இலங்கையர் பிரியந்தகுமார எரித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இலங்கை அரசும் இலங்கை தூதரகங்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் வெட்கக்கேடானது. குறிப்பாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இதில் தலையிடவில்லை. குறைந்தபட்சம் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குவதற்கு கூட தலையிடவில்லை.

பிரேத பரிசோதனை அறிக்கைகளின்படி, பிரியந்த குமார தியவதன தலையில் அடிபட்டதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார். எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பின்னர் அவர் எரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போதே எரிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் கூட உள்ளது. இது மிகவும் கொடூரமான செயலாகவே பார்க்கிறோம். இந்தச் சம்பவத்தை முன்னிலை சோசலிசக் கட்சி என்ற வகையில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இந்த நிகழ்வை 21ஆம் நூற்றாண்டில் நிகழக்கூடிய மிகவும் சோகமான மரணம் என்று சொல்லலாம். இதுபோன்ற சம்பவங்களை வரலாற்றில் பார்த்திருக்கிறோம். 1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ரோஹன விஜேவீர அவ்வாறானதொரு செயற்பாடு செயற்படுத்தப்பட்டது என்பதை  இச்சம்பவத்துடன் நினைவுபடுத்துகின்றோம்.

எமக்குக் கிடைத்த தகவலின்படி, தோழர் ரோஹன விஜேவீர இறப்பதற்கு முன் பொரளையில் சுட்டுக் கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார். இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் நிகழும் போது, ​​உலகமாகிய நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்ற அடிப்படை கேள்வியை எழுப்புகிறது.

இச்சம்பவத்தின் போது இலங்கை அரசும் இலங்கை தூதரகங்களும் நடந்து கொண்ட விதம் மிகவும் வெட்கக்கேடானது. குறிப்பாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இதில் தலையிடவில்லை. குறைந்தபட்சம் பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் இந்த சம்பவம் தொடர்பில் ஊடகங்களுக்கு உத்தியோகபூர்வ தகவல்களை வழங்குவதற்கு கூட தலையிடவில்லை.

மத்திய கிழக்கு நாடுகளில் இதுதான் பிரச்சனை. பிரியந்தாவை எரித்து கொல்வது பற்றி பேசுகிறோம். மத்திய கிழக்கில் வருடாந்தம் கொலைசெய்யப்படும் எத்தனை பெண்கள் இலங்கை வெளிநாட்டு வேலை செய்யும் பெண்கள்? அந்த நாடுகளின் தூதர்கள் அவர்கள் குறித்து மௌனம் காக்கின்றனர். வெளிநாட்டில் வாழும் பெருமளவிலான இலங்கைப் பணிபுரியும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகம், கத்திக்குத்து, கத்தியால் குத்தப்பட்ட மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டு பிணங்களாக இலங்கைக்கு வருகிறார்கள்.

இதுபோன்ற விஷயங்களிலும் இந்த தூதரகங்கள் தலையிடுவதில்லை. அந்தத் தலையீடு இல்லாமை இராஜதந்திர சேவையின் பொதுவான திறமையின்மைக்கு அப்பாற்பட்ட ஒரு பிரச்சினையாகும்.

தாய் வெளிநாட்டில், மகள் மீது தந்தை பாலியல் துஸ்பிரயோகம் – மட்டக்களப்பில் சம்பவம் !

அண்மையநாட்களில் இலங்கையில் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன.  முக்கியமாக இந்த துஷ்பிரயோக சம்பவங்கள் வெளியே இருந்தல்லாமல் குடும்பங்களினுள்ளிருந்தோ – அல்லது நன்கு அறிமுகமான நபர்களாலோ இடம்பெறுகின்றன என்பது கவலை தருகின்ற விடயமாகும்.

இது போன்றதான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது.

தனது மகளான சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்து தப்பி செல்ல முயன்றவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி காத்தான்குடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இன்று(7) செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக இடமாற்றப்பட்டுள்ளார்.

மேற்குறித்த சம்பவமானது மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் திங்கட்கிழமை(6) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன் போது சுமார் 13 வயது மதிக்கத்தக்க மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை இரவு கொழும்பிற்கு தப்பி செல்வதற்காக காத்தான்குடி பஸ் தரப்பிடத்தில் மறைந்திருந்த போது காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைதானவர் 36 வயதுடையவர் என்பதுடன் இவரது மனைவி மத்தியகிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருகின்றமையும் பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. கைதாகிய சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் சமூக தொற்றாக உருவெடுத்துள்ள ஒமிக்ரோன் !

உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமிக்ரோன் வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது. அந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது.

இங்கிலாந்து நாட்டிலும் ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் பாராளுமன்றத்தில் பேசும்போது, ‘ஒமிக்ரோன் வைரஸ் இங்கிலாந்தின் பிராந்தியங்கள் முழுவதும் சமூக பரவலாக மாறியுள்ளது. இதில் சர்வதேச பயணத்துடன் தொடர்பில்லாத பாதிப்புகளும் உள்ளது. எனவே இங்கிலாந்தின் பல பகுதிகளில் தற்போது சமூக பரவல் என்பதை நாம் முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தார்.

யாழ் கடற்கரையோரங்களில் கரையொதுங்கும் சடலங்கள் காணாமற் போனோருடையதா..?

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாாதக நிலையில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.

கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி வருகின்றன எனில் கடலில் விபத்துக்கள் நடைபெற்று இருக்க வேண்டும், அப்படியில்லையெனில் இலங்கை மீனவர்கள், அல்லது இந்திய மீனவர்களினது மீன் பிடி படகுகள் விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக தகவல் இல்லை. இதனால் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.

மக்களுக்கு விபரங்களை விரைந்து கொடுக்க வேண்டும். காவல்துறையினர், கடற்படை மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே காவல்துறை மற்றும் கடற்படை ஆகியவை இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மை தன்மைகளை விபரங்களை விரைவாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உணவில் போதை மருந்து கொடுத்து 17 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்த பாடசாலை முகாமையாளர்கள் !

இந்தியாவின், உத்தரபிரதேச மாநிலத்தில் முசாபர்நகர் பகுதியில் 17 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் பாடசாலைகளின் முகாமையாளர்கள் இருவரை கைதுசெய்ய காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த நவம்பர் 18 ஆம் திகதியன்று இரவு, செயன்முறை பரீட்சையென கூறி மேற்படி 17 மாணவிகளை, சந்தேகநபர்களான பாடசாலை முகாமையாளர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, அந்த மாணவிகளுக்கு உணவில் போதை மருந்து கலந்துகொடுத்து, மயக்கமடையசெய்த சந்தேக நபர்கள், அவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்திற்கு மறுநாள் குறித்த மாணவிகள் பாடசாலைக்குச் செல்ல மறுத்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் விசாரித்த போது, இச்சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். காவல்துறையினர் முன்னெடுத்த விசாரணையை அடுத்து சந்தேக நபர்களான பாடசாலை முகாமையாளர்கள் கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ளதால் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரியந்த குமார படுகொலை சாதாரண விடயம் என கூறிய பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் – சரத் வீரசேகர வழங்கியுள்ள பதில் !

பிரியந்த குமார படுகொலை சாதாரண விடயம் என பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்த கருத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பிரியந்த குமாரவின் வீட்டிற்கு சென்று உடலிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் பாக்கிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கருத்திற்கு அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களில் பாதுகாப்பு அமைச்சரின் கருத்தினை பார்த்ததாகவும் அந்த கூற்று நிராகரிப்பு தன்மையை கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரியந்த குமாரவின் படுகொலையை கண்டித்துள்ள அமைச்சர் இந்த படுகொலை குறித்து பாக்கிஸ்தான் பிரதமர் கண்டணமும் வெட்கமும் வெளியிட்டு குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக தெரிவித்தமை மாத்திரமே ஆறுதலான விடயம் என குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“பிரியந்த எரித்துக்கொலை செய்யப்பட்டது மோசமான சம்பவம் அல்ல.” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு !

பாகிஸ்தான் – சியல்கோட்டில் வன்முறைக் கும்பலால் கொடூரமான முறையில் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் படுகொலையைப் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக்  நியாயப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களின் இத்தகைய செயல்கள் மோசமானவை அல்ல என்றும் உணர்ச்சியில் இவ்வாறான விடயங்கள் சிலவேளைகளில் நடக்கும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.

மேலும் இது தொடர்பில் தனது உத்தியோக பூர்வ ட்விட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் டெய்லி இணையதளத்தின் ஆசிரியர் ஹம்சா அசார் சலாம், பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக்கின் அறிக்கையை மேற்கோள் காட்டி ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.