25

25

கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் !

கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள  ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் தூதர் மிக்கோ கினூனென் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசாங்கப் படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்க அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கை, கட்டுப்பாட்டு எல்லையின் இருபுறமும் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும்.” – எச்சரிக்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க !

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கலாமே தவிர அதிகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உரப் பிரச்சினையைப் பார்த்தால் யூரியாவைக் கொடுக்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனாலும், இயற்கைப் பசளையே சிறந்தது.
அடுத்து இப்போது பேசப்படும் விடயம் டொலர் பற்றாக்குறை.  இந்தப் பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.
நாட்டில் வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இப்போது சம்பளம் குறைக்க வேண்டுமே தவிர அதிகரிப்பு இல்லை. அதற்காகப் போராட்டம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். நமது நாட்டுக்கு இப்போது முக்கியமாகத் தேவைப்படுவது வெளிநாட்டு பங்களிப்பு.
எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு ஜனவரியில் தீர்வு கிடைக்கும்” – என்றார்.

வீடு செல்ல விடுமுறை வழங்க மறுத்த பொலிஸ்பொறுப்பதிகாரி – நால்வரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் !

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மொனராகலையைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம விடுமுறை வழங்காததையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 துப்பாக்கியால் பொலிஸ்சாஜன் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததுடன், பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததுடன் இறப்பு எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சாஜன் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், மொனராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

முல்லைத்தீவில் 13 வயது சிறுமி இறந்த விவகாரம் – மூவருக்கு விளக்கமறியல் !

முல்லைத்தீவு மூங்கிலாற்றில் சிறுமி உயிரிழப்பில் கைதுசெய்யப்பட்டு காவற்துறை தடுப்பு காவலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணமல் போன  13 வயது சிறுமி 18 ஆம்திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறுமியின் அத்தான் கடந்த 22.12.21 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 04.01.2022 திகதி வரை அவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு காவற்துறையினர்  சிறுமியின் கொலை தொடர்பில் தாய்,தந்தை,சிறுமியின் அக்கா ஆகியோர் கடந்த 23.12.21 அன்று புதுக்குடியிருப்பு காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 48 மணத்தியாலங்கள் காவற்துறை தடுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று 25.12.21 சந்தேக நபர்கள் மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 04.01.2022 வரை விளக்கமயியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு காவற்துறையினர் சந்தேக நபர்கள் மூவரையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றார்கள்.

“பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரர்.” – மனோகணேசன் குற்றச்சாட்டு !

“வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் ஞானசார தேரருக்கும் பங்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் மீது சட்டம் பாயாது என்றும் ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் இளைஞர்களைத் தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர்,

“அமைச்சர் அலி சப்ரியை பதவி விலகுமாறுக் கூறும் ஞானசார தேரரை, ஜனாதிபதி செயலணிக்கு ஜனாதிபதிதான் நியமித்தார். அமைச்சர் அலி சப்ரியையும் அமைச்சராக இந்த ஜனாதிபதிதான் நியமித்தார். இந்நிலையில் ஜனாதிபதியின் ஞானசாரர், ஜனாதிபதியின் அமைச்சரை பதவி விலக சொல்கிறார். இதென்ன கூத்து?

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இப்படி சொன்னால் அதில் ஒரு அரசியல் தர்க்கமாவது இருக்கும். அப்படியும் நான் அதை சொல்ல மாட்டேன். அரசை நாம் கடுமையாக எதிர்ப்பது என்பது வேறு. ஆனால் இந்த அரசுக்குக்கு உள்ளே சிறுபான்மை அமைச்சரவை அமைச்சர்கள் இருப்பது நல்லது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுதான் இலங்கை அரசு. அமைச்சர்கள் அலி சப்ரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் அங்கே இருப்பதால் தமிழ் பேசும் மக்களின் குறைந்தபட்ச பிரச்சினைகளையாவது அரசாங்க தலைமையின் கவனத்திற்கு கொண்டு வர முடிகிறது.

இந்த குறைந்தபட்ச அவகாசத்தையும்கூட தட்டி பறிக்க இந்த காவி பயங்கரவாதி ஆள் முயல்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக இந்த ஆள் பேசுகிறார். கிறிஸ்மஸ் பிறக்கிறது. அதற்கும் இவர் எதையாவது திருவாய் மலருவார். முஸ்லிம்களுக்கு எதிராக பலமுறை பலதையும் பேசியுள்ளார். இந்துக்களை அரவணைப்பது போல் பம்மாத்து காட்டுகிறார்.

ஆனால், வட கிழக்கில், பெளத்த தொல்பொருள் சின்னங்கள் என்று கூறி இந்து ஆலயங்களை அபகரிக்கும் சதியில் இவரும் இருக்கிறார். இதுபற்றி இவருக்கும் எனக்கும் ஒருமுறை வாக்குவாதமே நடந்தது. இந்து ஆலய வளவில் பெளத்த தேரரின் சடலத்தை எரித்தவர் தானே இவர்?
இவர் மீது சட்டம் பாயாது. ஆனால், முகநூலில் எதையாவது சிறுபிள்ளைத்தனமாக எழுதி விடும் தமிழ் பையன்களை தேடி வீட்டுக்கு பொலிஸ் வருகிறது.

இந்த ஆளுக்கு விசேட சட்ட விலக்கு இருக்கிறது. ஆகவே, இவரது செயலணியின் பெயரை ‘ஒரு ஆளுக்கு ஒரு சட்டம்’ என நான் பிரேரிக்கிறேன்.

அதேபோல், இவரது இந்த வாயில் வருவதை எல்லாம் பேசும் நடத்தையை ஆட்சேபித்து, செயலணியில் இருக்கும் தமிழ், முஸ்லிம்கள் உடன் பதவி விலக கோருகிறேன். இல்லா விட்டால் இந்த பாவம் இவர்களையும் சேரும் எனவும் கூறுகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

பாகம் 21: சந்ததியார் தீப்பொறி உறுப்பினரா? ஏன் தீப்பொறியினர் சந்ததியாரை பலிக்கடாவாக்கினர்?

களுதாவளையிலிருந்து பாரிஸ் வரை
ஒர் அரசியல் போராளியின் வாழ்வின் பயணம்!

அசோக் யோகன் கண்ணமுத்துவுடன் ஒர் உரையாடல்! : தோழர் அசோக் யோகன் கண்ணமுத்துவின் சாட்சியம் பகுதி 21 (ஒலிப் பதிவு செய்யப்பட்ட திகதி 10.08.2021). இந்த உரையாடல் அசோக் யோகன் கணணமுத்துவின் பேச்சுமொழியில் எந்த மாற்றமும் இன்றி பிரசுரமாகின்றது.

பாகம் 21:

தேசம்: நாங்கள் இப்போது 84, 85 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தோழர் சந்ததியர் வெளியேறினது சம்பந்தமாக கதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த முரண்பாடுகளை நாங்கள் பார்க்கும் போது இவர்கள் வெளியேறும்போது வைத்த காரணங்கள் முதலே அது சம்பந்தமாக மற்றவர்களுடன் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக வெளியேறுகின்ற தன்மைகள், உட்கட்சிப் போராட்டம் நடக்காதது சம்பந்தமாக எல்லாம் கதைத்திருக்கிறோம்.சந்ததியார் வெளியேறுவதற்கு முதல் நடந்த மத்திய குழு கூட்டத்தில் சில மத்திய குழு உறுப்பினர்கள் தாங்கள் வெளியேறுவதாக அறிவிக்கிறார்கள்.
அவர்கள் வெளியேறிய பிறகுதான் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

அசோக்: ஓம். தோழர்கள் ரகுமான் கேசவன் வெளியேறி கொஞ்ச நாட்களிலேயே தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்…

தேசம்: கூட்டத்தை தொடர்ந்து தான் கடத்தப்படுகிறார்?

அசோக்: ஓம். இந்த மத்திய குழு கூட்டத்திற்கு பின் வெளியேறிய தோழர்கள் ரகுமான் ஜான், கேசவன், கண்ணாடி சந்திரன் என்னுமொரு தோழர் பெயர் ஞாபகம் இல்லை. அவரும் சேர்ந்து மான மதுரை என நினைக்கிறேன் அங்கு தலைமறைவாக போய் இருந்தாங்க. இதன் பிற்பாடுதான் தோழர் சந்ததியார் கடத்தப்படுகிறார்.

தேசம்: இதில தெளிவில்லாமல் இருக்கு என்ன என்றால் சந்ததியார் ரெண்டு மூன்று கூட்டங்களுக்கு கலந்துகொள்ளவில்லை. இவர்கள் சந்ததியர் வராமைக்கான காரணத்தை கேட்கிறார்கள். அதை தொடர்ந்து சில குற்றச்சாட்டுகள் வைக்கிறார்கள் படுகொலைகள் சம்பந்தமாக. ஆனால் அதற்கான ஆதாரங்கள் பெருசாக சொல்லப்படவில்லை. இப்ப இந்த வெளியேற முற்பட்ட உறுப்பினர்களுக்கும் சந்ததியாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லையா? இந்த வெளியேற்றம் அவர்களுடன் இணைந்த கூட்டான வெளியேற்றம் இல்லையா?

அசோக்: உண்மையில் நடந்தது என்ன என்று கேட்டால் தோழர் சந்ததியார் இந்த மத்திய குழுக் கூட்டம் நடப்பதற்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார். அவர், டேவிட் ஐயா, சரோஜினிதேவி, சண்முகலிங்கம் எல்லோரும் வெளியேறி அண்ணாநகரிலேயே இருக்கிறார்கள். தோழர் சந்ததியாருக்கும் டேவிட் அய்யாவுக்கும் மிக நெருக்கமான உறவு இருந்தது. இது காந்திய அமைப்பு காலத்திலிருந்து தொடர்வது. அண்ணாநகரில் டேவிட் ஐயாவும், சந்ததியாரும் ஒன்றாகத்தான் இருந்தவர்கள். தோழர் ரகுமான் ஜான் ஆட்கள் வெளியேறி மானாமதுரைக்கு போய்விட்டார்கள்.

உண்மையிலேயே நீங்கள் கேட்ட கேள்வி நியாயமானது. இவர்கள் வெளியேறி போனதற்கு பிற்பாடு சந்ததியாருடன் உறவு இருந்ததோ தெரியாது. ஆனால் உறவு இருந்திருந்தால் இவர்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக் கொண்டு போய் இருப்பாங்க. ஏனென்றால் இவங்கள் வெளியேறினது முகுந்தனுக்கு தெரியவர நிச்சயமாக சந்ததியார் மீது சந்தேகம் வரும்.

உண்மையிலேயே அப்படி உறவு இருந்திருந்தால் இவர்கள் கூட்டிக்கொண்டு போய் இருக்க வேண்டும். அல்லது அவரின் பாதுகாப்பு விடயத்தில் கவனம் செலுத்தி இருக்கவேண்டும். இவங்கள் மத்திய குழுக் கூட்டம் நடந்து இரண்டு மூன்று நாட்களுக்கு நாளைக்குப் பிறகுதான் வெளியேறுறாங்கள். அதற்குப் பிறகுதான் எங்கள் மேல சந்தேகம் வந்து எங்களை தளத்துக்கு அனுப்பாம வைத்திருந்து… அதைப் பற்றி முதலே கதைத்திருக்கிறேன். ஒரு மாதத்துக்கு பிறகுதான் தளத்துக்கு அனுப்பினார்கள். அப்ப சந்ததியார் விடயத்தில் பாதுபாப்பில் இவர்கள் கவனம் செலுத்தி இருக்கவேண்டும்.

தேசம்: இந்த வெளியேற்றத்தில் கூட சந்ததியார், சரோஜினி, சண்முகலிங்கம் மூன்று பேரும் வெளியேறிட்டினம். ஆனால் அவைக்கு எதிரான எந்த ஒரு துன்புறுத்தலும் இந்தக் கூட்டம் நடக்கும் வரைக்கும் நடக்கேல.

அசோக்: நடக்கேல. ஆனால் அவங்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடந்தது.

தேசம்: சந்ததியார் வேறு அமைப்புகளோடு சேரவோ அல்லது தான் புதிய அமைப்பை உருவாக்குவதற்கோ ஏதாவது முயற்சி எடுத்த மாதிரி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

அசோக்: இல்லை இல்லை. அவங்க மிக அமைதியாக தான் அண்ணாநகரில் இருந்தவங்க. டேவிட் ஐயா, சந்ததியார், சரோஜினிதேவி, சண்முகலிங்கம் அவங்க பூரணமாக புளொட்டிலிருந்து ஒதுங்கிட்டார்கள். அவர்களுக்கு புளொட்டில் எந்த அரசியல் ஈடுபாடும் இருக்கவில்லை. புளொட்டிக்கு எதிராக இந்த நடவடிக்கைகளிலும் அவங்க ஈடுபடவில்லை. அவர்கள் ஒதுங்கி அமைதியாகத்தான் இருந்தாங்க.

தேசம்: அதற்கு பிறகு இவர்கள் வெளியேறுகிறார்கள் ஆனால் சந்ததியாரை அழைத்துக் கொண்டு செல்லேல. இவர்களுக்கும் உறவு இருந்தது தொடர்பாக தெரியாது. அவர்கள் எங்கேயாவது பதிவு செய்திருக்கிறார்களா தீப்பொறி அல்லது…

அசோக்: தங்களோட தீப்பொறியில் சந்ததியார் இருந்தது என்று நிறைய இடத்தில் பதிவு செய்திருக்கிறார்கள். தீப்பொறி தங்களுடைய உறுப்பினராக சந்ததியாரை அடையாளப்படுத்துகிறார்கள்.

தேசம்: ஆனால் அதற்குள் ஒரு முரண்பாடு வருது எல்லோ. சந்ததியார் தீப்பொறி யோடு இருந்திருந்தால் அவர்கள் ஒன்றாக தானே போயிருக்க வேண்டும்.

அசோக்: இதுல தான் பெரிய சிக்கல் என்ன என்று கேட்டால் உண்மையிலேயே இவங்கள் சந்ததியார் தீப்பொறியில் இருந்தார் என்று அடையாளப்படுத்துகிறார்கள். எந்த அடிப்படையில் சொல்கிறார்களோ தெரியவில்லை. அப்படி இருந்திருந்தால் இவங்கள் வெளியேறும்போது சந்ததியாரையும் கூட்டிக்கொண்டு போயிருக்கவேண்டும். ஏனென்றால் இந்த வெளியேற்றத்துக்குப் பிறகு அவங்களுக்கு தெரியும் சந்ததியாருக்கு பிரச்சனை வரும் என்று. ஆனால் இவங்கள் கூட்டிக்கொண்டு போகவே இல்லை. சந்ததியர் அங்க சுதந்திரமாக திரியுறார். ஆனால் அவருக்கு எதிரான பிரச்சாரங்கள் முகுந்தன் தரப்பினாரால் வைக்கப்படுகின்றது. பிறகு நாங்கள் நாட்டுக்கு போனதற்குப் பிறகு தான்…

தேசம்: அந்த விடயத்துக்கு பிறகு வாரேன். இது ஒரு சிக்கலான விடயம். மேலும் தெளிவுபடுத்திக் கொள்ளுவோம். டேவிட் ஐயா, சரோஜினி ஒரு இடத்தில் இருக்கிறீனம் என்றால் டேவிட் ஐயாவின் ஒரு நேர்காணலில் அவர் சொல்லுறார் உமாமகேஸ்வரன் தலைமையிலான புளொட் அமைப்பு வந்து ஒரு சர்வாதிகார போக்கை கொண்டிருக்கிறது என்று சொல்லுகிறார். தான் அதை உமாமகேஸ்வரனுக்கும் சொன்னதாகவும் இது சம்பந்தமாக மற்ற உறுப்பினர்களுக்கு தெரியாமல் இருந்ததா? சந்ததியார் இருக்கிறார், டேவிட் ஐயா இருக்கிறார் முக்கியமான ஆட்கள் இருக்கினம். தோழர் ரகுமான் ஜான், தோழர் நேசன் நீங்கள் .. எனக்கு இன்னும் அதற்கான… எனக்கும் விளங்கவில்லை ஒரு பலமான முற்போக்கு சக்திகள் இருந்தும் எப்படி ஒரு பலவீனமான உமாமகேஸ்வரன் அந்த அதிகாரத்தை கைப்பற்றுகிறார்

அசோக்: டேவிட் ஐயா முரண்பட்டுக் கொண்டு போகும்போது அந்த முரண்பாட்டுக்கான காரணங்களை அவர் நிச்சயமாக சந்ததியாருக்கு சொல்லியிருப்பார். பேட்டியிலும் அதைத்தான் சொல்லுறார். நான் சொல்வது என்ன என்று கேட்டால் ஆரம்பத்துல டேவிட் ஐயா வெளியே போகும்போது ஒரு சில குற்றச்சாட்டுகளை வைக்கிறார். டேவிட் ஐயா வைத்த குற்றச்சாட்டுக்கள் பற்றி பின் தளத்தில் இருந்த முக்கிய தோழர்கள் எல்லோருக்கும் நிச்சயம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். ஆனால் யாரும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாதது மிக மிக கவலைக்குரியதுதான். அந்தக் காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் தீர்க்கமான முடிவெடுத்து இவ்வாறான பிரச்சனைகளுக்கு முடிவு கண்டிருக்கவேண்டும்.

ஆனால் டேவிட் ஐயா முன்வைத்த குற்றச்சாட்டுகளை புளொட் அமைப்பின் பிரச்சனையாக பார்க்காமல் டேவிட் ஐயாவின் பிரச்சனையாக குறுக்கி பார்த்ததின் விளைவுதான் அது என நினைக்கிறேன். இது புளொட்டில் தொடர்ச்சியாக நான் அவதானித்த விடயம்தான். மற்றவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் முரண்பாடுகள் பற்றி யாரும் அக்கறை கொள்ள மாட்டார்கள். தனி நபர் சார்ந்த விடயமாக, அவருடைய பிரச்சனையாக, அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரிகடந்து சென்றுவிடும் பழக்கம் எல்லோரிடமும் இருந்தது. அது இயக்கத்தை பாதிக்கும் சீர்குழைக்கும் என நாங்க நினைப்பதில்லை. எங்களின் இருப்பும் தனிநபர் சார்ந்த எங்களின் அபிலாசைகளும்தான் இதற்கு காரணம்.

தேசம்: சந்ததியாருக்கு முதலே டேவிட் ஐயா வெளியேறிவிட்டாரா?

அசோக்: ஓம் டேவிட் ஐயா முதலே வெளியேறிவிட்டார்.

தேசம்: எவ்வளவு காலத்துக்கு முதல்?

அசோக்: நீண்டகாலத்துக்கு முதலே முகுந்தனோடு முரண்பட்டு வேலை செய்ய முடியாது என்று டேவிட் ஐயா போயிட்டார்.

தேசம்: டேவிட் ஐயாவின் உடைய குறிப்பின்படி எண்பத்தி மூன்றாம் ஆண்டு தாங்கள் மட்டக்களப்பு சிறை உடைப்பு எல்லாரும் தமிழ்நாட்டுக்கு போன பிறகு அவர் ஒரு ஆறு மாதம் செய்கிறார். அப்ப கிட்டத்தட்ட எண்பத்தி நான்கு தொடக்கத்திலேயே அல்லது 83 கடைசியிலேயோ போயிட்டார்.

அசோக்: நான் நினைக்கிறேன் டேவிட் ஐயா 84 கடைசியில்தான் வெளியேறிப் போய் இருப்பார் என. அதுக்குப் பிறகு புளொட்டோட தொடர்பு இருந்தது அவருக்கு. உத்தியோக பூர்வமாக எந்த வேலையும் செய்யவில்லை. காலப்போக்கில் முற்றாக புளொட்டினுடைய தொடர்பை விட்டுவிட்டார்.

தேசம்: உங்களுக்கு அவர் வெளியேறினது தெரியுமா?

அசோக்: டேவிட் ஐயா வெளியேறினது தெரியும்.

தேசம்: அப்போ நீங்கள் தோழர் ரகுமான் ஜான் ஆட்களுடன் அல்லது மற்ற தோழர்களுடன் கதைக்கவில்லையா இதைப்பற்றி…?

அசோக்: பெருசா இதைப்பற்றி கதைக்கவில்லை. உண்மையிலேயே அது பெரிய பிழைதான். இன்னொரு சிக்கல் என்னவென்றால் கம்யூனிகேஷன் பிரச்சினையாக இருந்தது அந்த நேரம். நாங்கள் நாட்டிலிருந்து போற ஆட்கள் தானே. நிறைய விடயங்கள் தளத்தில் இருந்த எங்களுக்கு காலம் கடந்துதான் தெரியவரும். பின்தளம் செல்லும் போதும் இப்பிரச்சனைகள், முரண்பாடுகள் பற்றி யாரும் எங்களோடு கதைப்பதில்லை. இதுபற்றி முன்னரே நிறைய கதைத்துள்ளேன். உண்மையிலேயே நாங்க நிறைய தவறுகள் விட்டிருக்கிறம். ஆரம்ப காலத்தில் இந்த தவறுகளை பற்றி நாங்க கவனம் கொள்ள தவறிட்டம்.

தேசம்: அந்த நேரம் இப்போ உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் இல்லை என்பது உண்மைதான். நீங்கள் அங்கே இருந்து சில மத்தியகுழு கூட்டங்களுக்கு வரேக்க மத்திய குழுக் கூட்டத்துக்கு வெளியிலேயும் சில கருத்தாடல்கள் நடந்திருக்கும் தானே… அதுகளிலும் இது சம்பந்தமாக எதுவும் முக்கியத்துவம் பெற இல்லையா? தோழர் ரகுமான் ஜான் யாரும் இதைப் பற்றி உங்களுடன் கலந்துரையாடவில்லையா.

அசோக்: டேவிட் ஐயாவின் வெளியேற்றம் எங்களுக்குப் பெரிய பாதிப்பை தரவில்லை. நான் முன்னர் சொன்ன மாதிரி டேவிட் ஐயாவின் பிரச்சனையை வெளியேற்றத்தை அவரின் தனிப்பட்ட பிரச்சனையான நாங்க பார்த்ததன் விளைவுதான் அது. அத்தோடபுளாட்டின் முக்கிய ஆளாக இல்லை என்ற நினைப்பும் எங்களிடம் இருந்தது. டேவிட் ஐயாவின் குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் இயக்கத்தின் ஒட்டு மொத்த பிரச்சனையாக நாங்க காணத் தவறிட்டம். இப்ப யோசிக்கும் போது மற்றவர்களை குற்றம் சுமத்துவதில் பிரயோசனம் இல்லைப் போல் தெரிகிறது. எங்களிடம் நிறைய பிரச்சனைகள் தவறுகள் இருந்திருக்கு.

தேசம்: காந்தியத்தில் முக்கியமான ஆள். ஆனால் அவர் வைக்கும் குற்றச்சாட்டு மிகப் பயங்கரமானது. அந்த நேரமே அதற்கு எதிரான ஒரு நடவடிக்கை எடுத்திருந்தால் இது நிச்சயமாக தடுக்கப்பட்டு இருக்கலாம். டேவிட் ஐயாவை கடத்தினவர்களுக்கு டேவிட் ஐயா சந்ததியார முழு பேரையும் தெரியுமா.

அசோக்: தெரிந்திருக்க வில்லையா அல்லது முகுந்தனின் கட்டளையை தவறாக புரிந்து கொண்டார்களா தெரியல்ல. டேவிட் ஐயா அந்த நேர்காணலில் ஒரு இடத்தில் சொல்லுகிறார் தன்னை வாகனத்தில் கடத்திக்கொண்டு போகிறார்கள். போகும்போது இடையில அந்த வாகன சாரதிதான் டேவிட் ஐயாவின் குரலை அடையாளம் காண்கிறார் இவர் டேவிட் ஐயா என்று. ஆனால் இவர்கள் உண்மையாக கடத்த வந்தது சந்ததியாரை. கடத்திக் கொண்டு போன உறுப்பினர்களுக்கு சந்ததியார் யாரென்று தெரியாமல் கடத்தினார்களா அது தெரியல்ல. சங்கிலி கந்தசாமி போகவில்லை. அவரின்ர உளவுப்படைதான் போனது. அந்த ட்ரைவர் இருந்தபடியால் தான் விட்டுட்டு போனவர்கள் இல்லாவிட்டால் அவரையும் மேடர் பண்ணி இருப்பார்கள்.

தேசம்: சந்ததியார் வெளியேறி எவ்வளவு காலத்திற்கு பிறகு அவர் கொலை செய்யப்படுகிறார்? அவர் கொலை செய்யப்பட்ட விடயம் எப்போது தெரிய வருகிறது?

அசோக்: நான் நினைக்கிறேன் 85 கடைசிப் பகுதியில் கொலை செய்யப்படுகிறார் என்று. மத்திய குழுக் கூட்டம் முடிந்து இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்படுகிறார் என நினைக்கிறேன்.

தேசம்: கடத்தப்பட்ட இரண்டு மூன்று மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டு இருக்குறார்?

அசோக்: இல்லை. மத்திய குழுக் கூட்டம் நடந்த பிற்பாடு அவர் சுதந்திரமாக அண்ணாநகரில் தான் இருக்கிறார். அதுக்குப் பிறகுதான் கடத்தப்படுகிறார்.

தேசம்: மத்திய குழுக் கூட்டத்திற்கு பிறகு தானே கடத்தப்படுகிறார்?

அசோக்: மத்தியகுழு கூட்டத்திற்கும் அவர் கடத்தப்படுவதற்கு இடையில் நான் நினைக்கிறேன் 2, 3 மாதம் இடைவெளி இருக்கும். சரியாக காலத்தை என்னால் நினைவு படுத்தமுடியாமல் உள்ளது. கடத்தப்பட்டு ஒரு வாரத்துக்குள்குள்ளேயே கொலை செய்யப்பட்டு விட்டார் என நினைக்கிறேன். இதனோடு சம்பந்தப்பட்ட பலர் இன்னும் இருக்கிறார்கள். கடத்தப்பட்டு என்ன நடந்தது என்றே தெரியாது. எப்ப கொலை செய்தார்கள் என்ன நடந்தது ஒன்றுமே தெரியாது தானே.

தோழர் சந்ததியார் கடத்தப்பட்ட உடனேயே டேவிட் ஐயா பொலிசில் என்ரி போட்டுட்டார், சந்ததியாரை காணேல என்று . காணேல என்று சொன்னதுமே விளங்கிவிட்டது புளொட் தான் கடத்தி விட்டது என்று சொல்லி. பிறகு அப்படியே போனது தான் போலீசாரும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.

தேசம்: அந்த நேர்காணலில் டேவிட்டையா சொல்லுகிறார் தன்னைக் கடத்த வந்தவர்கள் தன்னை கடத்தவில்லை உன்னைத்தான் கடத்த வந்தார்கள் ஆகவே நீ பாதுகாப்பாக இரு என்று சந்ததியாரிடம் சொல்லுறார். அப்படி இருந்தும் அந்த எச்சரிக்கையை மீறி இவர் திரிகிறார். அது எப்படி புளொட்டில் படுகொலைகள் நடக்கிறதை நீங்கள் முழுமையாக நம்பி இருந்தால் டேவிட் ஐயாவை கடத்தி போட்டு விடுவித்திருக்கிறார்கள் அதைத் தொடர்ந்து அவர் கவனம் இல்லாமல் வெளியில் திரிந்து.

அசோக்: டேவிட் ஐயா சந்ததியாரை கவனமாக பாதுகாப்பாக இருக்கும் படி சொல்லியுள்ளார். அதுல கொஞ்சம் கவனம் இல்லாமல் தான் இருந்திருக்கிறார் என நினைக்கிறேன். அதற்குப் பிறகு தோழர் சந்ததியாருக்கு வேண்டிய ஒருவர் கஷ்டத்தில் இருப்பதாக தெரிவித்து தான் சந்ததியாரை வர வைக்கிறார்கள். திட்டமிட்டுத்தான் வர வைக்கிறார்கள். டெலிபோன் பண்ணினதும் நம்பிட்டார் என்று நினைக்கிறேன். நான் கேள்விப்பட்டது அப்படித்தான் நம்பிக்கையான ஒரு ஆளை கொண்டு டெலிபோன் பண்ணி வெளியில வரவழைத்து தான் கடத்தினார்கள் என்று சொல்லி.

தேசம்: நான் நினைக்கிறேன் இந்த தகவல்கள் கூடுதலாக சரோஜினி அக்காவுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கு.

அசோக்: சரோஜினி அக்காவுக்கு தெரியும். சண்முகலிங்கத்துக்கும் தெரியும் அவர் இறந்து போய் விட்டார். ஒரே ஒரு ஆள் சரோஜினி அக்கா தான். ஏனென்றால் சரோஜினி அக்கா தான் அந்த காலகட்டத்தில் டேவிட் ஐயா, தோழர் சந்ததியார் ஆட்களோடு நெருக்கமாக இருந்தவங்க. ஆனால் தோழர் சந்ததியாரின் கடத்தலோடும், கொலையோடும் சம்பந்தப்பட்ட, இந்த விடயம் தெரிந்த பலர் இப்போதும் உயிருடன் இருக்காங்க. அவங்களின்ற மனச்சாட்சி அவங்களை உறுத்தாது என நினைக்கிறன். அவங்க வாய் திறக்க மாட்டாங்க.

தேசம்: தீப்பொறி உடனான தொடர்புகளையும் அவா தான் சொல்ல முடியும் என்று நினைக்கிறேன். இப்ப மத்திய குழுக் கூட்டம் நடந்து முரண்பாடுகள் ஏற்பட்டு அவர்கள் வெளியேறுகிறார்கள் தீப்பொறி சார்ந்த நபர்கள். அப்ப தீப்பொறி என்று பெயர் வைக்கவில்லை என்று நினைக்கிறேன். அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்களுக்கு பிறகு நீங்கள் தாயகத்திற்கு திரும்புகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் தாயகத்தில் இருந்து இங்கு வந்த உடனேயே உங்களை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததா?

அசோக்: எங்களுக்கு படகு ஒழுங்கு செய்து தரப்படவில்லை.

தேசம்: அது திரும்பிப் போவதற்கு. மத்திய குழுக் கூட்டத்துக்கு பின் தளத்துக்கு வரும்போது நீங்கள் கண்காணிக்கப்பட்டீர்களா?

அசோக்: அதுல எந்த கண்காணிப்பும் இருக்கவில்லை. நோர்மலா தான் இருந்தது. அதற்குப் பிற்பாடு நடந்த விடயங்க ள்தானே எல்லாம். மத்தியகுழு கூட்டம் பிரச்சனை வெளியேற்றம் இவை எல்லாம்.. அதன்பின்தான் எங்களுக்கு நெருக்கடி தொடங்குகிறது.

தேசம்: அதற்குப் பிறகு ஒன்றரை மாதங்கள் ஏற்பாடு செய்து தரேல.

அசோக்: ஒன்றரை மாதங்கள் இருக்காது என நினைக்கிறேன் ஒரு மாதம் இருக்கும். கரையில் நிற்கும் போதுதான் கண்காணிப்பு போடப்பட்டது. பிறகு அவர்கள் ஒழுங்கு பண்ணிக் தந்துதான் நாட் டிக்கு தளத்திற்கு போன நாங்கள். இது பற்றி முன்னர் கதைத்துள்ளோம்.

தேசம்: அப்போ உங்களுக்கு அச்ச உணர்வு வரேல்லையா. கடலுக்குள்ளே ஏதாவது? உங்களை அனுப்பி போட்டு இலங்கை ராணுவத்துக்கு தகவல் கொடுத்து இருந்தால்…

அசோக்: அப்படி எங்களுக்கு அச்சம் இருக்கல. எங்களோடு வந்த ஓட்டி மிக நம்பிக்கையான ஆள். ஓட்டி மாதகலைச் சேர்ந்தவர். . குமரனுக்கு மிக நெருக்கமான ஒரு ஆள்.

தேசம்: யார் யாரெல்லாம் போனது.

அசோக்: நான், ஈஸ்வரன், முரளி, குமரன்.

தேசம்: இப்ப வந்து எண்பத்தி ஆறு முற்பகுதி இலங்கைக்கு போகிறீர்கள். 85 கடைசிப் பகுதியில் தான் போறோம்.