06

06

தலிபான்களால் கொலை செய்யப்படும் முன்னாள் அரசபடை வீரர்கள் – அமெரிக்கா கண்டனம் !

ஆப்கானிஸ்தானில் முன்னாள் அரசப் படையினர் படுகொலை செய்யப்படும் விவகாரத்தில், தலிபான்களுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்கா, ஐரேப்பிய ஒன்றியம், அவுஸ்ரேலியா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘ஆப்கானிஸ்தானில் முந்தைய ஆட்சியின்போது பாதுகாப்புப் படைகளில் பணியாற்றியவர்கள் ரகசியமாக படுகொலை செய்யப்படுவது மற்றும் அவர்கள் மர்மமான முறையில் காணாமல் போவது குறித்து மனித உரிமைக் கண்காணிப்பு (ஹெச்.ஆர்.டபிள்யூ) உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கும் தகவல்கள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.

இத்தகைய நடவடிக்கைள் மோசமான மனித உரிமை மீறலாகும். மேலும், முன்னாள் அரசுப் படையினருக்கு ஏற்கெனவே தலிபான்கள் அளித்துள்ள பொதுமன்னிப்புக்கு விரோதமானதாகும்.

எனவே, தலிபான்களின் அனைத்து நிலைகளையும் சேர்ந்தவர்கள் பொதுமன்னிப்பு அறிவிப்பு முழுமையாக அமுல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

முன்னாள் படையினரின் படுகொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவங்கள் குறித்து வெளிப்படையான, முறையான, பொறுப்புணர்வுடன் கூடிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

இத்தகைய உறுதியான நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பிரிவினருக்கும் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும். அப்போதுதான், பொதுமன்னிப்புக்கு எதிராக முன்னாள் அரசப் படையினர் கொல்லப்படுவதும் காணாமல் போவதும் தடுக்கப்படும். ஆப்கனைக் கைப்பற்றிய பிறகு தலிபான்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வைத்துதான் அவர்களை அங்கீகரிப்பது குறித்து முடிவெடுப்போம் என்று கூறியிருந்தோம். அந்த நிலைப்பாடு இன்னும் தொடர்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், கனடா, நியூஸிலாந்து, ரோமேனியா, உக்ரைன் மற்றும் ஏராளமான ஐரோப்பிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

மத்திய வங்கி மோசடி உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க விடுதலை !

மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கல் மோசடி தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்த வழக்கின் 22 இல் 11 குற்றச்சாட்டுக்களில் இருந்தே கொழும்பு மேல்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் பிரதிவாதிகளை விடுதலை செய்துள்ளது.

இதேநேரம் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் 11 ஐ தொடர்ந்தும் முன்னெடுத்து செல்ல முடியாது என நீதியரசர்கள் குழாம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சகோதரியின் தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு செல்ஃபி எடுத்துக்கொண்ட தாயும் மகனும் கைது !

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் ஔரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செய்ததற்காக 19 வயதான சகோதரியை அவரது இளைய சகோதரன் (17) தலை துண்டித்துக் கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் துண்டிக்கப்பட்ட தலையுடன் சிறுவனும் அவரது தாயும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  கைப்பேசியிலிருந்து குறித்த புகைப்படம் நீக்கப்பட்டு, பின்னர் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபர்களான சிறுவனையும், அவரது தாயையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அந்தச் சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றினை முன்னுதாரணமாகக் கொண்டு இந்த செயலைச் செய்துள்ளதாகக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண் கடந்த ஜூன் மாதம் 20 வயதான இளைஞர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களது திருமணம் கலப்புத் திருமணம் இல்லையென்றாலும், வீட்டை விட்டு வௌியேறி காதல் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய குடும்பத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களைக் கொலை செய்ய அந்தப் பெண்ணின் தாயும் அந்தச் சிறுவனும் திட்டமிட்டுள்ளனர்.

திட்டத்தை அமுல்படுத்தும் நோக்கில் அவர்கள் இருவரும் சமரசம் ஏற்பட்டதாக நடித்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளதுடன், அதன்போது குறித்த பெண்ணின் பின்புறமாகச் சென்ற சிறுவன் தன்னுடைய சகோதரியின் தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் தாயும் மகனுமாகச் சேர்ந்து துண்டிக்கப்பட்ட தலையுடன் செல்ஃபி எடுத்துள்ளனர்.

மேலும் அந்தச் சிறுவன் சகோதரியின் கணவரையும் கொலை செய்ய முயற்சித்துள்ளதுடன், அவர் அவ்விடத்தை விட்டு வௌியேறி உயிர் தப்பித்துக் கொண்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், கொலை செய்யப்படும் போது குறித்த பெண் கர்ப்பம் தரித்திருந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புலிகளின் தங்கத்தை தேடி அகழ்வு செய்த பொலிஸாருக்கு கிடைத்தது என்ன..?

இறுதி யுத்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கத்தை தோண்டி எடுக்க முயற்சித்ததாக இரண்டு பிரதான அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த தங்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட இடமான முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் அகழ்வு நடவடிக்கை 02-12-2021 ஆரம்பிக்கப்பட்டது.

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த அகழ்வு நடவடிக்கைகள் காவல்துறையினரால்  02-12-2021 அன்று மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இன்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இருப்பினும் அன்றைய தினம் அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக குறித்த பகுதிக்கு கனரக இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாத நிலையில் 03-12-2021க்கு  ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கமைய 03-12-2021 மீண்டும் அகழ்வுப்பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்றன.

இந்நிலையில் குறித்த குழிகளுக்குள் வெள்ளநீர் தேங்கி அதனை அகற்ற முடியாத நிலை உருவானதாலும் கனரக இயந்திரம் நிலத்தினில் புதையுண்டதாலும் அகழ்வுப்பணிகள் பாதியில் இடைநிறுத்தப்பட்டதோடு மீண்டும் குறித்த அகழ்வுப் பணி 06-12-2021 இன்றைய தினம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கமைய இன்றைய தினம் அகழ்வு பணிகள் முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் ஆரம்பமாகி இடம்பெற்றன. இதன்போது குறித்த இடத்தில் தங்க நகைகள் ஏதும் கிடைக்கவில்லை அங்கு கிடைத்த தகரத்துண்டு உரப்பை கயிறு போன்ற பொருட்களை நீதிமன்றில் பாரப்படுத்துமாறும் அகழ்வுப்பணிக்கு முன்னர் குறித்த இடத்தில் அகழ்வு செய்தவர்கள் தொடர்பில் விசாரித்து அறிக்கையிடுமாறு புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்ட முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா அவர்கள்  இது தொடர்பான வழக்கு விசாரணைகள் 2022-01-25 அன்று இடம்பெறும் எனவும் அறிவித்தார்.

ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் !

மியன்மாரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் திகதி அந்நாட்டு இராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்தது.

அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியன்மார் நீதிமன்றம், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

ஆனால், ஆங் சான் சூகி எப்போது சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

“உலகில் வேறு எந்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத்தையும் விட பயங்கரமானது இஸ்லாமிய தீவிரவாதம்.” – ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தலைவர் ஞானசாரதேரர் காட்டம் !

வேறு எந்த தீவிரவாதத்தையும் விட இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சியால்கோட்டில் பிரியந்த குமார எரித்து கொலை செய்யப்பட்டது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் பேசியுள்ள அவர் ,

உலகில் வேறு எந்த தீவிரவாதத்தையும் விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது . சியால்கோட்டில் பிரியந்த குமார ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டதை பயன்படுத்தி இலங்கையிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கவேண்டும்.

உலகில் மததீவிரவாதம் உட்பட பல வகையான தீவிரவாதங்கள் காணப்படுகின்ற போதிலும் இஸ்லாமிய தீவிரவாதம் மிகவும் பயங்கரமானதாக காட்டுமிராண்டித்தனமானதாக மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.எந்த தீவிரவாதத்தின் விளைவுகளும்- பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை ஆனால் இஸ்லாமிய தீவிரவாதமே மிகவும் பயங்கரமானது காட்டுமிராண்டித்தனமானது ஏனைய தீவிரவாதங்கள் இதற்கு அருகில் நெருங்ககூட முடியாது மனிதர்கள் நூற்றாண்டுகளாக சாதித்த விழுமியங்களை அது தொடர்ச்சியாக அலட்சியப்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு இல்லாவிட்டால் அனைத்து இலங்கையர்களையும் மீள அழையுங்கள்.” – ஜே.வி.பி கோரிக்கை !

பாகிஸ்தானில் பணிபுரியும் இலங்கையர்களின் பாதுகாப்பை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதிப்படுத்தாவிட்டால், அங்கு பணிபுரியும் அனைத்து இலங்கையர்களையும் திரும்ப அழைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர்,

இலங்கைப் பிரஜை கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பில் பாகிஸ்தான் அரசாங்கம் தலையிட வேண்டும் எனவும், குற்றவாளிகளைத் தண்டிக்க பாகிஸ்தான் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் எங்கும் மத வெறியும், மதத் தீவிரவாதமும் அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளை பெற்றெடுக்கக்கூடிய உயிருள்ள ரொபோக்கள் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை !

உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ரொபோக்கள் தங்களை போன்றே குழந்தைகளை பெற்றெடுக்கின்றன. அமெரிக்காவின் வெர்மாண்ட், டப்ட்ஸ்,ஹார்வர்டு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக உயிரி ரோபோ ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டில் உலகின் முதல் உயிருள்ள ரோபோவை அவர்கள் உருவாக்கினர்.

These Tiny Living Robots Made From Frog Cells Can Swim And Heal Itself -  MobyGeek.com

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜீனோபஸ் லேவிஸ் என்ற தவளை இனத்தின் ஸ்டெம் செல்களில் இருந்து உருவாக்கியதால் இதற்கு ‘ஜீனோபாட்ஸ் 1.0’ என்று பெயரிடப்பட்டது. இவை ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்டவை. பேக் மேன் வடிவிலான இந்த ரோபோக்களால் நகர முடியும். நீந்த முடியும்.

தொடர் ஆராய்ச்சியின் பலனாக கடந்த மே மாதம் ஜீனோபாட்ஸ் 2.0 ரோபோ உருவாக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு ஜீனோபாட்ஸ் 3.0 ரோபோ குறித்த ஆய்வறிக்கையை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதில் கூறியிருப்பதாவது:

உலகின் பல்வேறு நாடுகளில் இரும்பு, பிளாஸ்டிக்கால் ரொபோக்கள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் இருந்து வேறுபட்டு உயிரி ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறோம். இப்போது ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியுள்ளோம். இவற்றால் தங்களைப் போன்றே குழந்தைகளை பெற்றெடுக்க முடியும். இந்த ரோபோ ஆராய்ச்சியின் மூலம் விபத்தில் படுகாயமடைந்த மனிதர்களை குணப்படுத்த முடியும். பிறவி குறைபாடுகள், புற்றுநோயை குணப்படுத்த முடியும். முதுமை பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜீனோபாட்ஸ் 3.0 ரோபாவை உருவாக்கியவிஞ்ஞானிகள் குழுவில் இடம்பெற்றுள்ள டப்ட்ஸ்பல்கலைக்கழக விஞ்ஞானி பிளாகிஸ்தான் கூறும்போது, “ஆய்வகத்தில் ஒரு ஜீனோபாட்ஸ் ரோபோ குழந்தையை பெற்றெடுக்க 5 நாட்கள் ஆகிறது. இதுவும் அச்சு, அசல் ஜீனோபாட்ஸ் ரோபோ போன்றே இருக்கிறது. எதிர்காலத்தில் அணுக் கழிவு, கடலில் சேகரமாகும் மைக்ரோபிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜீனோபாட்ஸ் ரோபோவை பயன்படுத்த முடியும்” என்றார்

அமெரிக்காவின் டூக் பல்கலைக்கழக பேராசிரியர் நிடா பாராஹனி கூறும்போது, “ஜீனோபாட்ஸ் ரோபோவால் தன்னைப் போன்றே குழந்தையை பெற்றெடுக்க முடியும் என்றால் அது ஆபத்தானது. இவை ஆய்வகத்தில் இருந்து தப்பி பூமியில் பல்கிப் பெருக வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இவற்றின் இனப்பெருக்கம், செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. செயற்கையாக உருவாக்கப்பட்ட உயிரி ரோபாவால் மனித குலத்துக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே ஆபத்தான ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக அனைத்து உயிரி ரோபோக்களையும் அழித்துவிட வேண்டும்” என்றா

“குற்றவாளிகளுக்கு கடவுளின் சட்டத்திலும் மன்னிப்பு இல்லை.” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

பாக்கிஸ்தானில் கைத்தொழிற்சாலையில் தொழில் புரிந்துகொண்டிருந்த இலங்கைத் தொழிலாளரான பிரியந்த குமார என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்படுவதற்குக் காரணமான அனைத்துக் குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்டத்தை நிலைநாட்டுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாக்கிஸ்தான் பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை என்பன ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் குறிப்பிட்டுள்ள அவர்,

நியாயம் கிடைக்கும் என்று பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் மீது இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கை, இயன்றளவு உறுதி செய்யப்படும். இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் நம்பிக்கை ஒருபோதும் பாதிப்படைய இடமளிக்கப்பட மாட்டாது.

இச்செயலுடன் தொடர்புடைய அனைத்து வீடியோக் காட்சிகள் மற்றும் தகவல்கள், தற்போது பாக்கிஸ்தான் பாதுகாப்புப் பிரிவினரால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை 113 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதுடன், ஏனையவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாகப் பாக்கிஸ்தானில் தொழில்புரிந்த இலங்கையரான பிரியந்த குமார, ஒரு முகாமையாளராக உயர் தொழில் திறமையைக் காட்டியவர் என்றும் ஜனாதிபதி அவர்களிடம் பாக்கிஸ்தான் பிரதமர் தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு கடவுளின் மன்னிப்பு இல்லை என்றும் சட்டத்திலும் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்காதென்றும் தெரிவித்த பிரதமர், நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதுடன், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்படும் என்றும், இலங்கை அரசாங்கமும் மக்களும் வைத்துள்ள நம்பிக்கையை உறுதி செய்வதாகவும் குறிப்பிட்டார்.

“மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிக்க ஒன்றுபடுங்கள்.” – இந்து சமுத்திர பிராந்திய நாடுகளிடம் கோத்தாபாய ராஜபக்ஷ கோரிக்கை !

தொற்றுப் பரவலுக்குப் பின்னர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, இந்து சமுத்திர பிராந்தியத்திலுள்ள அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் நேற்று மாலை ஆரம்பித்த இந்து சமுத்திர மாநாட்டின் தொடக்க உரையை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர் ,

உயிர்களைக் காப்பாற்றுவது என்பதை விலை மதிக்க முடியாவிட்டாலும், தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக அதிக செலவை ஏற்கவேண்டி ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரச் செயற்பாடுகளின் மந்தகதியால், உலகளாவிய சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்றன கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளன. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு வல்லரசு நாடுகளால் வழங்கப்படும் ஒத்துழைப்புகளால் மாத்திரமே, அவ்வாறான சவால்களை எதிர்கொள்ள முடியும்.

அனைத்துப் பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றப்படும் வரையில், கொவிட் – 19 தொற்றுப் பரவல் இல்லாமல் போகப்போவதில்லை.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு, வல்லரசு நாடுகள் உதவி புரிய வேண்டுமென்றும். உலகளாவிய தொற்றுப் பரவலைத் தடுக்கும் வேலைத்திட்டத்துக்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலைமைத்துவம் வழங்கி வருகின்ற போதிலும், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பொருளாதார மீட்சிக்கு, எந்தவோர் உலக அமைப்பும் உதவ முன்வரவில்லை.

தொற்றுப் பரவலென்பது, வறிய மற்றும் வல்லரசு நாடுகளை ஒரே விதத்தில் பாதிப்படையச் செய்திருப்பினும், வீதத்தின் அடிப்படையில், பாதிப்பின் சுமைகளை வறிய நாடுகளே தாங்கிக்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டுக் கடனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரங்களுக்கு இது ஒரு மிகவும் கடினமான காலமாகும். தொற்று நோயால் மேலும் பாதிக்கப்பட்டுள்ள வறிய நாடுகளுக்கு கடன் மன்னிப்பு வழங்கல், மறுசீரமைப்பை மேற்கொள்ளல் அல்லது கடன் நிவாரண காலங்களை வழங்க வல்லரசு நாடுகளும் பல்வேறு நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்தால், அது மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும்.

தொற்றுநோய் அனுபவத்தின்படி, ஒரு நாட்டில் உள்ள பாதகமான நிலைமைகள், விரைவாக பிராந்தியத்துக்கும், இறுதியில் உலகம் முழுவதும் பரவக்கூடும். அதனால்தான், தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் விடயங்களில் நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க – பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.

தொற்றுநோய்கள், பொருளாதாரம் அல்லது சூழலியல் தொடர்பாக நாடுகளைப் பாதிக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பிராந்தியத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் இணைந்து செயற்பட வேண்டும்.

மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாக தற்போதைய காலநிலை நெருக்கடி காணப்படுகிறது.எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவு என்பது, ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல. கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல், கூட்டு முயற்சியால் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது.

இவ்விரு சம்பவங்களையும் சுட்டிக்காட்டக் காரணம், அபாயகரமான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களைக் கடற்பரப்புக்குள் கொண்டுசெல்வதில் கடுமையான கட்டுப்பாடுகளின் அவசரத் தேவை காணப்படுவதால் ஆகும். நவீன உபகரணங்களுடன் கூடிய இழுவைப் படகுகள் மூலம் எல்லைகடந்த கடற்பகுதியில் மீன்பிடிப்பது குறிப்பிடத்தக்க பிரச்சினையாக உள்ளது.

இதனால், தேசிய அளவில் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டிருக்கும் வறிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. எதிர்காலத்தில், இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த சூழலையும் உள்ளூர் பொருளாதாரங்களின் நம்பகத்தன்மையையும் பராமரித்தல் போன்ற பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்வதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பது முக்கியமாகிறது.

இந்து சமுத்திரப் பிராந்தியமானது, மனிதக் கடத்தல்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களின் மையமாகக் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.

போதைப்பொருள் வியாபாரமானது, பிராந்திய நாடுகளுக்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதென்பதையும், புலனாய்வுப் பிரிவுகள், கரையோரப் பாதுகாப்புப் பிரிவுகள் மற்றும் பிராந்திய நாடுகளின் கடற்படையினர் இடையேயான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமாகவே இதனை வெற்றிகரமாக முறியடிக்க முடியும்.

மனிதக் கடத்தல்களைக் கட்டுப்படுத்தவும், இவ்வாறானதொரு நடவடிக்கையும் ஒருங்கிணைவும், ஒத்துழைப்புமே அவசியமாக உள்ளது. பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்குத் தற்போது பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள மத அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதச் செயற்பாடுகளை முறியடிப்பதற்கும், இவ்வாறான ஒருங்கிணைப்பே தேவைப்படுகின்றது என்பதையும்,

இது தொடர்பில் மிகக் கவனமாகக் கண்காணித்து இவற்றை இல்லாது ஒழிக்கவில்லையாயின், அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாதம் போன்றன சுலபமாக இன்னுமோர் இனத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலை ஒட்டிய நாடுகள் மற்றும் அந்தக் கடலைப் பரவலாகப் பயன்படுத்தும் பிற நாடுகளைப் பாதிக்கும் பொது நலன்கள் மற்றும் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் நோக்கத்துக்காக – 2016ஆம் ஆண்டில், “இந்து சமுத்திர மாநாடு” ஆரம்பிக்கப்பட்டது.

இதன் நான்காவது மாநாடு, 2019ஆம் ஆண்டில், மாலைதீவில் இடம்பெற்றதோடு, அதன்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வழக்கத்துக்கு மாறான சவால்கள் பற்றிக் கலந்துரையாடப்பட்டது.

“சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல்” என்ற தொனிப்பொருளில், இந்த முறை மாநாடு இடம்பெறுகின்றது.

“இந்து சமுத்திரத்தின் ஊடாகப் பல்தரப்பு செயற்பாடுகளுக்கான அரங்காகச் செயற்படக்கூடிய, பயன்மிக்க கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், வழிகாட்டி உள்ளார். சமுத்திரத்தின் அழகு மற்றும் உயிரியல் பல்வகைமையை எமது எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாப்பதன் மூலம் சுற்றாடல் மாசடைவதன் காரணமாக, இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறைக்க நாம் இன்றே தொடங்க வேண்டும்” என்று – ஓமான் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் சாய்ட் பாட்ர் பின் ஹமாட் பின் ஹமூட் அல் பூசயிட் அவர்கள் தனது நேற்றைய சிறப்புரையில் குறிப்பிட்டார்.

“அதிகப் பொறுப்புக்களை வகிப்பதற்கும், தமக்கடையே மிகவும் சிறந்த தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் முக்கியத்துவமளிக்க வேண்டிய நிலை, இந்து சமுத்திர நாடுகளுக்கு இன்று ஏற்பட்டுள்ளது’ என்றும்,

“கொவிட் நோய்த்தொற்றின் காரணமாகப் பாதிக்கப்பட்ட வாழ்வாதாரத்தை இயல்வு நிலைக்குக் கொண்டு வருவதற்கும் வரவேற்புக்களுடன் விரைவான புதிய பொதுமைப்படுத்தலுக்குச் செல்ல வேண்டும்” என்றும் – இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தனது  சிறப்புரையின் போது குறிப்பிட்டார்.

18 நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்கள், 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான பிரதிநிதிகள் உள்ளிட்ட பெருமளவிலானோர், இந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தனர்.