சீசெல்ஸில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சீசெல்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சீசெல்ஸின் லாடிகு தீவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த 47 வயதுடைய இலங்கையர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கையைச் சேர்ந்த நபர் ஒருவர் இம்மாதம் 10 ஆம் திகதி அவர் தங்கியிருந்த வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
பல நாட்களாக பணிக்கு வராததால் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற நிறுவனத்தின் அதிகாரி ஒருவர், அவர் வீட்டின் அறையில் விழுந்து கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். பின்னர் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த நபர் உயிரிழந்திருந்தமையும், பிரேத பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதில் உயிரிழந்திருந்தமையும் தெரியவந்தது.
அதன்படி, இலங்கையரின் கொலை தொடர்பில் அந்நாட்டு பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், இதுவரை சந்தேகத்தின் பேரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.