19

19

கொழும்பு பல்கலைகழக பட்டமளிப்பு விழா – 13 பதக்கங்களை வென்று அசத்திய மருத்துவபீட தமிழ் மாணவி !

கொழும்பு பல்கலைக்கழகத்தின் MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த தமிழ் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

வைத்திய துறையில் (First class) சித்தியடைந்து அக்கரைப்பற்று மண்ணிற்கு பெருமை  சேர்த்துள்ளார் தணிகாசலம் தர்சிகா!

அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மாணவியே 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை இவர் கைப்பற்றியுள்ளார்.

அத்துடன், குறித்த பட்டப்படிப்பு ஆண்டுக்குரிய முதல்நிலையாளராகவும் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் தூக்கில் தொங்கிய நிலையில் 03 பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு !

சந்தேகத்திற்கிடமான வகையில் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணபட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தரான இவர் முன்பள்ளி ஆசிரியையாக சேவை புரிந்து வந்துள்ளார். கிளிநொச்சி விநாயகபுரம் இயக்கச்சி பகுதியை சேர்ந்த இவர் தொழிலின் நிமித்தம் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

32 வயதுடைய நிலகரட்ண ஜெயசீலி என்ற 03 பிள்ளைகளின் தாயாரே இவ்வாாறு தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரது கணவர் பிரிந்துள்ள நிலையில் 3 பிள்ளைகளுடன் தனித்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் இவரது மூத்த பிள்ளைகள் இரண்டும் தாயாருடன் பணிபுரியும் பெண்ணின் வீட்டில் வழமையாக தங்குவர்.

நேற்று இரவும் வழமைபோல இரண்டு பிள்ளைகளும் சென்றுள்ளனர். அதே வேளை கடைசி பிள்ளை தாயாருடன் வழமைபோல நின்றுள்ளது. இந்த நிலையில் ஆரம்பகட்ட விசாரணைகளில் பெண்ணின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

சடலத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

கொழும்பு பல்கலைக்கழக வேந்தராக பௌத்த தேரர் – வைரலாகும் மாணவர்கள் எதிர்ப்பு நடவடிக்கை !

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வேந்தராக நியமித்தமைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழாவில் பட்டப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாமல் அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். குறித்த சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன் மதத்தையும், அரசியலையும் – கல்வியோடு கலக்காதீர்கள் என்ற கோஷங்கள் அதிகம் பகிரப்படுபட்டுவருகின்றன.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக முகாமைத்துவ மற்றும் நிதி ஆசிரியர் சங்கம் (FMFTA) முன்னதாக அறிக்கையொன்றில் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே மாணவர்கள் சிலர், அவரிடம் பட்டப் பத்திரங்களை பெற்றுக்கொள்ளவில்லை.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக முழு வைபவத்தில் பங்கேற்கப் போவதில்லை என FMFTA தெரிவித்துள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா, பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இன்றும் (19) நடைபெறுகிறது. இந்த விழா, கடந்த மூன்று நாள்களாக நடைபெறுகின்றனமை குறிப்பிடத்தக்கது.

“பின்னடைவுகள் நமது பயணத்தின் ஒரு பகுதி.” – கோட்டாபய ராஜபக்ஷ

“பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி. அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் இருக்க வேண்டும்.” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தியத்தலாவ இராணுவ கல்வியியற் கல்லூரியில் இன்று(19) முற்பகல் இடம்பெற்ற 96ஆவது விடுகை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும்போதே, ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்களின் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றிக்கான பிரதான காரணியாக அமைகின்றது.இராணுவ அதிகாரி ஒருவரது வாழ்வில் ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாக கருதப்படுகிறது.  ‘எளிமையான பணிகளில் கூட அதிக கவனத்தைச் செலுத்துதல் மற்றும் கூட்டாகச் செயற்படும் திறனை வளர்த்துக்கொள்ளல் என்பன இராணுவத்தினருக்கான பண்புகளாகும்.

ஒருவர் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், மற்றவர்களின் ஒத்துழைப்பின்றி வெற்றிபெற முடியாது. எவ்வாறான இடையூறுகள், தடைகள் ஏற்பட்டாலும் மக்களுக்கான பணியில் கவனம் செலுத்த வேண்டும்.

பின்னடைவுகள் பயணத்தின் ஒரு பகுதி எனவும் அவற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு துணிச்சலான தீர்மானங்களை எடுக்கக் கூடியவராக தலைவர் இருக்க வேண்டும் எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.” – இரா. சாணக்கியன்

“வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று (19) பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

எங்கள் கைகளில் அதிகாரம் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதற்காக அதிகாரம் வேண்டாம் என்று எங்களினால் கூற முடியாது. அதிகாரம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது. மயிலத்தமடு பிரச்சினைக்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவும் இணைந்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். எங்களின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி வழக்கு பேசி வருகிறார். அந்த வழக்கை கொண்டு இவர்களை வெளியேற்றுவது மட்டுமல்ல நோக்கம். அந்த இடத்தை மேய்ச்சல்தரையாக்க வேண்டும்.

தமிழர்களின் மேச்சல்தரையான மயிலத்தமடு மாதவனை, கெவிலியாமடு திபுலான, வட்டமடு போன்ற அனைத்தையும் பிரித்து ஏனைய சமூகங்களுக்கு கொடுக்க முனைப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதனை எங்கள் மக்கள் உணரவேண்டும். இவற்றெல்லாம் மாற்றியமைக்க அரசியல் அதிகாரம் எங்களின் கைக்கு வரவேண்டும். காணியதிகாரம், பொலிஸ் அதிகாரம் எங்களுக்கு தேவை. பொலிஸ் அதிகாரம் எங்களிடம் இருந்தால் நாங்கள் விடயங்களை கையாளுவோம். இப்போது எங்களின் பிரச்சினைகளுக்கு கொழும்பில் இருந்துதான் அறிவித்தல்கள் வருகிறது.

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வடக்கு கிழக்கு என்று நாங்கள் பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள். அது எங்களின் நிலம் அதனை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சில வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது என்றார்.

போதைப்பொருள் வாங்குவதற்காக குழந்தையை விற்ற பெற்றோர் – விசாரணையில் வெளிவந்த உண்மை !

குருநாகல் பகுதியில் தனது குழந்தையை விற்பனை செய்து, அந்த பணத்தில் போதைப்பொருள் பயன்படுத்திய பெற்றோரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த குழந்தையை 7 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குருநாகல் நகரிலுள்ள சட்டத்தரணி ஒருவரின் ஊடாக, கடிதமொன்றை கையெழுத்திட்டு, அநுராதபுரம் பகுதியிலுள்ள தம்பதிகளுக்கு குழந்தையை கையளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பெண்ணொருவரின் கை பையிலிருந்து குழந்தையொருவரின் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த ஆடைகள் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே, இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குழந்தையை விற்பனை செய்த பணத்தில் 30,000 ரூபாவிற்கு போதைப்பொருளை கொள்வனவு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எஞ்சிய 6,70,000 ரூபா பணத்தை வங்கியில் வைப்பிலிட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையால் கைது !

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையால் ராமேஸ்வரம் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று (18) சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் தமிழக அரசு வழங்கும் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

மீனவர்கள் தனுஷ்கோடிக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது நேற்று இரவு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தென்னரசு, லியோன் பீட்டர், கருப்பையா உள்ளிட்ட ஆறு பேருக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகுகளையும் அதில் இருந்த கோபி, சக்தி, பிரபு, குட்வின், கருமலையான், ராஜு உட்பட 43 மீனவர்களையும் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலிட்டி துறை முகத்திற்கு அழைத்து சென்றனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 43 மீனவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். மேலும் மீனவர்கள் பிடித்து படகுகளில் இருந்த மீன்களை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

ஒரே நாள் நள்ளிரவில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 43 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சென்ற சம்பவத்திற்கு ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் மீனவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இலங்கை பிரச்சனை காரணமாக பாரம்பரிய மீனவர்கள் மீன்பிடி தொழிலை விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாநிலங்களுக்கு பஞ்சம் பிழைக்க செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் மீன்பிடி தொழில் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேசி நல்ல தீர்வு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், மீனவர்கள் சிறை பிடிப்பை கண்டித்து தமிழக மீனவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.

“கடனுதவி பெற்றால் ஒரு கணம் கூட அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை.” – வாசுதேவ எச்சரிக்கை !

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனுதவி பெறச் சென்றால் ஒரு கணம் கூட அரசாங்கத்தில் இருக்கப் போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாணய நிதியத்திலிருந்து கடன் வாங்குவது ஏழு தலைமுறைகளுக்கு எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒரு நாடு இக்கட்டான நிலையில் இருக்கும் போது கடைசி வழி என்றும், அங்கு செல்லும் எந்த நாடும் உதவியற்றது என்றும், பின்னர் நடக்கும் அனைத்தும் அதன் கொள்கையின்படி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அனைத்து அரச சொத்துக்களையும் தனியார் மயமாக்குதல், நாட்டின் நலனில் வெட்டுகள் மற்றும் ரூபாவின் மிதப்பு போன்ற பல கடுமையான நிபந்தனைகளை அவர்கள் முன்வைப்பதாக அவர் மேலும் கூறினார்.

“சீனா தொடர்பில் தமிழ்அரசியல்வாதிகள் அச்சத்தை ஏற்படுத்த முனைகின்றனர்.” – சீன தூதுவர் கிய் சென் ஹொங்

பயங்கரவாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் வடபகுதியில் சீனா முன்னெடுத்துள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு எந்த தீமையும் ஏற்படாது என இலங்கைக்கான சீன தூதுவர் கிய் சென் ஹொங் தெரிவித்துள்ளார்.

வடபகுதியில் சீனாவின் நடவடிக்கைகளால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது அர்த்தமற்ற விடயம் என தூதுவர் தெரிவித்தார் என சண்டே ஒப்சேவர் செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவும் இந்தியாவும் அயலவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் உள்நோக்கம் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் சீனாவால் இந்தியாவிற்கு ஆபத்து என தெரிவித்து அச்சத்தை உருவாக்க முயல்கின்றனர் ஆனால் நாங்கள் அயலவர்கள் என அவர் தெரிவித்துள்ள அவர், இலங்கையின் வடபகுதி தீவுகளில் சூரியசக்தி மற்றும் காற்றாலைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள தூதுவர் அந்த திட்டத்தை இ;ன்னமும் கைவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு தேவை இந்தியாவா ..? சீனாவா..? – எம்.ஏ.சுமந்திரன் நிலைப்பாடு என்ன.!

“சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் விரும்பவில்லை.”  என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் கலைத்தூது மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற கருத்தாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கே அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இங்கே சிலர் கேட்கின்றனர் சீனாவை ஏன் எமக்கு ஆதரவாக சேர்க்க கூடாது என்கின்றனர். இதற்கு நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன் சீனர்களின் செல்வாக்கை வடக்கு கிழக்கில் நாம் இரு காரணங்களிற்காக விரும்பவில்லை. அதில் ஒன்று எமது அரசியல் விடிவிற்காக நாம் செய்யும் போராட்டம் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைக் கோட்பாட்டில் தங்கியுள்ளது. இது இரண்டுமே சீனாவிற்கு தெரியாது என்பதாகும்.

இரண்டாவது விடயம் இலங்கை தென் சீனக் கடலில் தீவாக இருந்திருந்தால் சீனாவின் கடலில் இருந்திருந்தால் அதனை அந்த பிராந்தியத்தின் நியாயமான கரிசணையாக அது இருந்திருக்கும். ஆனால் இலங்கை இந்தியாவின் அருகில் உள்ள ஓர் தீவு. இந்தியாவின் நியாயமான பாதுகாப்பு கரிசணையை நாம் உள் வாங்கியிருக்கின்றோம். அதுவும் இந்தியாவிற்கு மிக அண்மையில் உள்ள பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை நாம் விரும்பவில்லை. ஏனெனில் சீனா இந்தியாவின் நட்பு நாடு அல்ல.

இதைச் சொல்லித்தான் சீனர்களின் இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்தில் மிகவும் கரிசணை கொண்டுள்ள அமெரிக்காவுடனும் பேசினோம், இந்தியாவுடனும் பேசினோம். அதாவது உலக வல்லரசும், பிராந்திய வல்லரசும் இதனை விரும்பவில்லை. இதன்போதே வடக்கு கிழக்கில் சீனா நிலைகொள்ளாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி இரு நாட்டிடமும் உண்டு. அதற்கு நாங்கள் கேட்கின்றோம் அந்த இடத்தில் இருப்பது நாங்கள் எனவே சட்ட அதிகாரம் எங்களிடம் இருந்தால், அது நாங்கள் கேட்கும் வடிவில் கொடுக்கப்படுமாக இருந்தால் எங்கள் நிலம் மீதான சட்ட அதிகாரம் எங்கள் கைகளில் இருக்குமானால் நீங்கள் அந்தப் பயத்தைகொள்ளத் தேவையில்லை என்கின்றோம்.

சட்டம், ஒழுங்கு எங்களுடைய கையில் இருக்குமானால் இவை தொடர்பில் அவர்கள் பயம்கொள்ளத் தேவையில்லை என்றோம். அநேகமாக எல்லா நாடும் தமது நலனிலேயே செயல்படுவார்கள் அதில் வியப்பில்லை. சிலவேளை ஒரு பிரதேசத்தில் குழப்பம் இருந்தால்தான் அங்கே தமது தலையீட்டை தொடர முடியும் என்ற எண்ணம் இருக்கலாம் நாம் கூறியுள்ளோம் இங்கே தொடர்ச்சியாக குழப்பநிலை இருந்தால் இலங்கை அரசிடமே நில அதிகாரம், பாதுகாப்பு அதிகாரம் எல்லாம் இருக்கப்போகின்றது. அது உங்களிற்கும் சாதகம் இல்லை. இதனை தீர்த்து வைத்தால் மட்டுமே உங்களிற்கு சாதகம் என்றோம். தற்போதும் சந்திப்புக்கள் தொடர்கின்றது இவை படம் எடுத்து முகநூலில் போடும் சந்திப்பு அல்ல. அப்படியும் இடம்பெறுகின்றது. இதே நேரம் ஜனவரியில் முக்கிய விடயங்கள் இடம்பெறவுள்ளது இடம்மெறும்போது தெரியும் என்றார்.