November

November

ஒரு மனித குல விரோதியின் மரணம்!!!

பல்லாயிரக் கணக்காண மனிதர்களைக் கொன்றொழித்த அமெரிக்க கொலை இயந்திரத்தின் சூத்திரதாரி ஹென்றி கிசிஞ்சர் இன்று தனது 100வது வயதில் மரணித்தார். உலகின் மிக மோசமான யுத்தக்குற்றவாளி நரகாசுரன் இயற்கையால் இந்த உலகை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். யூத இனத்தவரான ஹென்றி கிசிஞ்சர் இனவெறி கொலை வெறி கொண்ட ஹிட்லரின் கொலைத் தாண்டவத்திலிருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு அகதியாகச் சென்று பிற்காலத்தில் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை அல்ல கொள்ளைகளை கொலைகளை வகுத்தவர். இவரது வழிகாட்டலிலேயே வியட்நாம், கம்போடியா முதல் சிலி வரை இலங்கை உட்பட இன அழிப்பு, காப்பற் பொம்பிங், கொம்யுனிச அழிப்பு என்பன முடுக்கி விடப்பட்டது.

மனித நேயத்திற்கு புறம்பான மனிதனாகக் கருதப்படும் ஹென்றி கிசிஞ்சர் மனித குலத்தின் சாபக்கேடாகவே பார்க்கப்பட வேண்டியவர். ஹிட்லரால் பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து மேலெழுந்து வந்த ஹென்றி கிசிஞ்சர் ஹிட்லர் அளவுக்கு மிகப் பாரிய மனித அழிவுகளை உலகெங்கும் ஏற்படுத்தியவர். அதே ஹிட்லரின் கொலை வெறியில் இருந்து தப்பித்து வந்த யூத சமூகத்திலிருந்து உருவான இஸரேல் பாதுகாப்புப் படைகள் ஹிட்லரைக் காட்டிலும் மோசமான அழிவுகளை கொலை வெறியை காஸாவிலும் வெஸ்ற் பாங்கிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை மட்டும் கொல்லவில்லை. நாளைய பாலஸ்தீன சமூகத்தை துடைத்தழிக்கும் வகையில் பெண்களை, சிறார்களை கொல்கின்றனர். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றக் கூடாது என்பதற்காக மருத்துவ வண்டிகளையும் மருத்துவ மனைகளையும் தாக்கி அழிக்கின்றனர். கருவுற்றிருக்கும் பெண்கள் கருக்கள் கலைக்கப்படும் அளவுக்கு தாக்குதல் முடக்கிவிடப்படுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகளைக்கூடக் கொல்ல வேண்டும் என கொலை வெறிகொண்ட இஸ்ரேலிய பயங்கரவாத அரசு துடிக்கின்றது.

ஹன்றி கிசிஞ்சர் எழுபதுக்களில் கம்போடியா, வியட்நாமில் “நகர்வது எதுவானாலும் தாக்கி அழியுங்கள்” என்று குறிப்பிட்டது போல் காசாவில் நகருவது எதுவானாலும் தாக்கி அழிக்கப்பட்டது. ஹிட்லர் கொலைவெறித் தாண்டவம் ஆடிய போது சமூக வலைத்தளங்கள் எதுவும் கிடையாது. தகவல் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் ஹிட்லருக்கு எதிராக கொதித்து எழுந்தது. ஆனால் ஹிட்லரின் வாரிசுகளாக மாறியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க துடைத்து அழிக்கின்றனர்.

உலகம் என்றும் கண்டிராத அதர்மத்துடன் இஸ்ரேல் இராணுவம் தனது கொலைவெறித் தாண்டவத்தை புரிகின்றது. அதற்கு அமெரிக்தகா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பூரண அங்கிகாரம் வழங்கியுள்ளன. ஹின்றி கிசிஞ்சர் கொம்யுனிசத்தை தீண்டத்தகாத சொல்லக்கூட்டாத கெட்ட வார்த்தை என்று மேற்குலகை நம்ப வைத்தார். இன்றைய வலதுசாரி இஸ்ரோலிய பென்ஜமின் நெத்தன்யாகு யுத்த நிறுத்தத்தை கெட்ட வார்த்தை என்று அறிவித்துவிட்டார். ஹென்றி கிசிஞ்சரின் பள்ளியில் படித்த அன்ரனி பிளின்கனும் அதனைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவரோடு சேர்த்த மேற்குலகக் கும்பலும் இப்போது யுத்த நிறுத்தம் என்றால் ஏதோ துஸணம் பேசுவது போல் கருதி அதனை பொது மேடைகளில் சொல்வதில்லை. பத்திரிகையாளர்கள் அதுபற்றி கேட்டாலும் வெட்கப்பட்டு பூசிமெழுகி அந்தச் சொல்லையே சொல்வதில்லை.

ஆயத வன்முறையால் உலகெங்கும் ஆண்டு தோறும் 500,000 பேர் கொல்லப்படுகின்றனர். உலகின் ஆயத விற்பனையில் 75 வீதத்திற்கும் அதிகமான வியாபாரம் நேட்டோ நாடுகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 40 வீதமான வியாபாரம் அமெரிக்காவினால் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்காவில் பாடசாலைகளுக்குள்ளேயே துப்பாக்கிச் சுடுகள் நடத்தப்படுவதும் குழந்தைகள் கொல்லப்படுவதும் சாதாரண விடயமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த ஆயத விற்பனைக்கு தடையைக் கொண்டுவருவதே முடியாத காரியமாக இருந்து வருகின்றது. தங்கள் சொந்த மக்களின் குழத்தைகளின் உயிரிழப்புப் பற்றியே அக்கறையற்ற அமெரிக்க ஆட்சியாளர்கள், அச்சிறார்களின் குருதியில் லாபத்தை சுவைக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தில், உக்ரெயினில், எரித்திரியாவில், சுடானில் உயிரிழப்பவர்கள் பற்றி கரிசனை கொள்வார்களா?

உலக ஒழுங்கு மிகவும் மாறிக்கொண்டுள்ளது. மனிதமும் மனித நேயமும் ஹின்ரி கிசிஞ்சர், பென்சமின் நெத்தன்யாகு மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதும் மேற்குலகினால் மரணத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிடப்பட்டுள்ளது. ‘சமாதானம்’ என்பது ஒரு கேவலம் கெட்ட சொல் என்று அடுத்த தலைமுறையை நம்பவைக்க மேற்குலகம் முயற்சித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சமாதானம் என்றால் போர் இல்லை. போர் இல்லாவிட்டால் ஆயதங்களை விற்க முடியாது. ஆயதங்களை விற்காவிட்டால் எப்படி லாபமீட்டுவது? லாபமீட்ட எதுவெல்லாம் தடையாக இருக்கின்றதோ அதுவெல்லாம் மிகக் கெட்ட விடயங்கள். இது தான் இன்றைய மேற்குலகின் நியதி.

இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் – அமைச்சர் அலி சப்ரி

காலநிலை நீதிக்கான மன்றத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகளை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐ.நா.வின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது.

 

இது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றத்தை கையாள்வது ஒரு மாயை என்று சில தரப்பினர்கள் கூறுகின்றன. ஆனால் அது மாயை அல்ல. சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்ந்தால், உலகத்தின் இருப்புக்கே பாதிப்பு ஏற்படும்.

 

குறிப்பாக காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட வெப்பவலய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். வெப்ப வலயத்தில் 136 நாடுகள் உள்ளன. உலக சனத் தொகையில் 40 வீத மக்கள் அந்த நாடுகளில் வாழ்கின்றனர்.

கைத்தொழிற் புரட்சியுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. கைத்தொழிற் புரட்சி செய்யும் நாடுகளை விட கைத்தொழிற் புரட்சியை குறைவாக செய்யும் நாடுகளிலே சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.

 

எனவே, இந்த மாநாட்டில் சில புதிய கொள்கை ரீதியான பரிந்துரைகளை இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படி, இலங்கை தலைமை தாங்கி செயற்படுத்தும் காலநிலை நீதிக்கான மன்றத்தின் ஊடாக, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

 

இதற்காக யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், சர்வதேச சமூகத்திடமிருந்து யோசனைகளை பெறுவதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

வெப்ப வலயத்திலுள்ள பல நாடுகள் இதற்கு ஆதரவளிக்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன.

 

அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

பிறந்தநாளுக்கு கேக் வெட்டியதற்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளார்கள் – சாணக்கியன் விசனம் !

நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைதுசெய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக்கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 

இன்று (29) மட்டக்களப்பு வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் உறுப்பினர் அண்மையில் தரவை துயிலும் இல்லத்தில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து அவருடன் கலந்துரையாடியுள்ளார்.

 

மாவீரர் துயிலும் இல்லம் என்ற பதாகை வைக்கப்பட்டதன் காரணமாக மாவீரர் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் உட்பட நான்கு பேரை கைது செய்து அவர்கள் மீது பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பொலிஸார் வழக்கு தொடுத்துள்ளதாகவும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு இரண்டு தினங்களை கடந்துள்ள நிலையில் இதுவரையில் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமை குறித்து கேள்வியெழுப்பியபோதிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளதன் காரணமாக அவர்களை மூன்று தினங்கள் வைத்து விசாரணை செய்த பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த முடியும் என பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் என்று சர்வதேசத்திற்கு கூறிவிட்டு இங்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இதேபோன்று வவுணதீவு பிரதேசத்தில் பிறந்த நாளுக்கு கேக்வெட்டியவர்களையும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் இந்த நாட்டில் இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தாது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசென்று அவர் இது தொடர்பான நடவடிக்கையெடுக்காவிட்டால் அவர் நல்லிணக்கம் பேசும் ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கு மாறாக இறந்தவர்களை நினைவுகூருவோரை கைது செய்யும் பொலிஸாரின் செயற்பாடுகளை அவர் கண்டு மௌனமாக இருப்பாரானால் அவரின் செயற்பாடுகளை அவர் ஏற்றுக் கொள்கின்றார் என்றே பார்க்க வேண்டும்.

 

இராணுவத்துடன் இணைந்து கடந்த காலத்தில் தமிழ் மக்களை கொலைசெய்தவர்கள் வெருகல் பகுதியில் சிவப்ப மஞ்சல் கொடிகளைகட்டி நிகழ்வுகளை செய்யும் போது அவர்களுக்கு எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை.

 

எதிர்வரும் காலங்களில் ஆலயங்களில் கூட சிவப்பு, மஞ்சள் கொடிகளைக்கட்டி நிகழ்வுகளை செய்யும் போது அதுவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றமாக சொல்வார்களா என்பது தெரியாது என தெரிவித்தார்.

இலங்கையில் மீண்டும் ஆணுறை விற்பனைத் திட்டம்!

பயணத்தின் இடையே மக்கள் ஆணுறைகளைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ஆணுறை விற்பனை இயந்திரங்களை நிறுவும் பணி மீண்டும் தொடங்கப்படும் என்று தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்புத் திட்டம் தெரிவித்துள்ளது.

 

எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் வகையில் இத்திட்டம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக எயிட்ஸ் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி வித்யாபத்திரன தெரிவித்துள்ளார்.

 

2017 முதல், இந்த ஆணுறை விற்பனை இயந்திரம் ரயில் நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் நிறுவப்பட்டன.

 

ஆனால், கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்ட நிலையில், அதனை மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை ஆணுறைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், கடந்த வாரம் 20 லட்சம் ஆணுறைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

 

அதன்படி, சிகிச்சைகளுக்கு வரும் மக்களுக்கு இந்தக் கருத்தடை உறை

தனியார் மயமாக்கப்படவுள்ள இலங்கை போக்குவரத்து சபை..? – போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன !

2024ஆம் ஆண்டுக்குள் இலங்கை போக்குவரத்து சபை(SLTB) இலாபம் ஈட்டாவிடின், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

இதனை தவிர்க்க வேண்டுமாயின், இலங்கை போக்குவரத்து சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்ற வேண்டும். இலங்கை போக்குவரத்து சபையின் பல டிஜிட்டல் திட்டங்களை எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் பணிப்பாளர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

“யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு ஆரம்பம்!

மலையகம் -200, “யாழில் மலையகத்தை உணர்வோம்” என்ற தொனிப்பொருளிலான நிகழ்வு இன்று ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் மூன்றாம் திகதிவரை இடம்பெற இருக்கிறது.

யாழ்ப்பாணம் சிவில் அமைப்புகள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்நிகழ்வினை நடத்துகின்றன.

இந்த நிகழ்வின் இன்றைய ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ், முன்னாள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

“யாழில் மலையகத்தை உணர்வோம்” நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தில் மலையக மக்களின் கடந்தகால மற்றும் தற்போதய வாழ்வியலை உணர்த்தும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தின நினைவேந்தல் – மாணவன் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது !

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள், ஜெனரேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை வாடகைக்கு எடுத்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டனர்,

 

மற்றவர்கள் நவம்பர் 27 அன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

 

இதில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கூறியுள்ளார்.

 

பயங்கரவாத தடை சட்டத்தில் பயங்கரவாதம் என வரையறுக்கப்படாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது கூட பயங்கரவாதமாக கூறப்பட்டுள்ளதாக என்றும் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும் நினைவு கூறுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் அவநம்பிக்கையை மேலும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள் – மூடப்பட்டுள்ள 40ற்கும் அதிகமான வைத்தியசாலைகள் !

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது மேலும் அதிகரித்து 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

இதற்கமைய, குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்து, சிகிச்சை செயற்பாடுகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளரின் தலைமையில் விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

 

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் தனி நபர் நிகர கடன்தொகை 1.2 மில்லியன்களாக அதிகரிப்பு !

கடந்த ஆண்டிறுதி நிலவரத்தின் படி (31.12.2022) தனி நபர் நிகர கடன்தொகை 1.2 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக பொதுக் கணக்காளர் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டு (31.12.2021), 759,471 ரூபாயாக காணப்பட்ட நிலையில், ஒரு வருட காலத்திற்குள் 474,887 ரூபாய் அதிகரிப்பை காட்டியுள்ளது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 62.53% அதிகரிப்பைக் காண்பித்து, தனிநபர் கடன் சுமையினை அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சராசரி ஆண்டு மக்கள்தொகையுடன் நாட்டின் மொத்த பொதுக் கடனை ஒப்பிட்டு அறியப்படும் இந்த தனிநபர் நிகரக் கடன் என்பது நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான அளவீடு ஆகும், இது ஒரு அரசாங்கத்தின் கடனின் மதிப்பை அதன் அதிகார வரம்பிற்குள் ஒவ்வொரு குடிமகனுக்கும் கூறப்படும் தொகையின் அடிப்படையில் அளவிடப்படுகிறது.

இந்த எண்ணிக்கையின் அதிகரிப்பு சராசரி இலங்கை குடிமகன் சுமக்கும் நிதிச்சுமையிலும் அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.

நிகர தனிநபர் கடனின் அதிகரிப்பிற்கு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாங்கும் கடன் தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பே காரணம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக இலங்கை தனது கடன் சுமைகளை நிர்வகிப்பதிலும், அதன் நிதி கடப்பாடுகளுக்கு ஏற்ப சேவை செய்வதிலும் பல்வேறு சவால்களை எதிர்நோக்குகின்றது.

இது தொடர்பாக பொருளாதார வல்லுநர்கள் கருத்துரைக்கையில் அதிகரித்து வரும் கடன் சுமை நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கங்களை ஏற்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.

இதற்கு முன்னர் 2012 ஆம் ஆண்டு (31.12.2012) நிகர தனிநபர் கடன் தொகை 264,811 ரூபாயாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.