ஒரு மனித குல விரோதியின் மரணம்!!!

பல்லாயிரக் கணக்காண மனிதர்களைக் கொன்றொழித்த அமெரிக்க கொலை இயந்திரத்தின் சூத்திரதாரி ஹென்றி கிசிஞ்சர் இன்று தனது 100வது வயதில் மரணித்தார். உலகின் மிக மோசமான யுத்தக்குற்றவாளி நரகாசுரன் இயற்கையால் இந்த உலகை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளார். யூத இனத்தவரான ஹென்றி கிசிஞ்சர் இனவெறி கொலை வெறி கொண்ட ஹிட்லரின் கொலைத் தாண்டவத்திலிருந்து தப்பித்து அமெரிக்காவிற்கு அகதியாகச் சென்று பிற்காலத்தில் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையை அல்ல கொள்ளைகளை கொலைகளை வகுத்தவர். இவரது வழிகாட்டலிலேயே வியட்நாம், கம்போடியா முதல் சிலி வரை இலங்கை உட்பட இன அழிப்பு, காப்பற் பொம்பிங், கொம்யுனிச அழிப்பு என்பன முடுக்கி விடப்பட்டது.

மனித நேயத்திற்கு புறம்பான மனிதனாகக் கருதப்படும் ஹென்றி கிசிஞ்சர் மனித குலத்தின் சாபக்கேடாகவே பார்க்கப்பட வேண்டியவர். ஹிட்லரால் பாதிக்கப்பட்ட இனத்தில் இருந்து மேலெழுந்து வந்த ஹென்றி கிசிஞ்சர் ஹிட்லர் அளவுக்கு மிகப் பாரிய மனித அழிவுகளை உலகெங்கும் ஏற்படுத்தியவர். அதே ஹிட்லரின் கொலை வெறியில் இருந்து தப்பித்து வந்த யூத சமூகத்திலிருந்து உருவான இஸரேல் பாதுகாப்புப் படைகள் ஹிட்லரைக் காட்டிலும் மோசமான அழிவுகளை கொலை வெறியை காஸாவிலும் வெஸ்ற் பாங்கிலும் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்களை மட்டும் கொல்லவில்லை. நாளைய பாலஸ்தீன சமூகத்தை துடைத்தழிக்கும் வகையில் பெண்களை, சிறார்களை கொல்கின்றனர். காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றக் கூடாது என்பதற்காக மருத்துவ வண்டிகளையும் மருத்துவ மனைகளையும் தாக்கி அழிக்கின்றனர். கருவுற்றிருக்கும் பெண்கள் கருக்கள் கலைக்கப்படும் அளவுக்கு தாக்குதல் முடக்கிவிடப்படுகிறது. குறைப்பிரசவக் குழந்தைகளைக்கூடக் கொல்ல வேண்டும் என கொலை வெறிகொண்ட இஸ்ரேலிய பயங்கரவாத அரசு துடிக்கின்றது.

ஹன்றி கிசிஞ்சர் எழுபதுக்களில் கம்போடியா, வியட்நாமில் “நகர்வது எதுவானாலும் தாக்கி அழியுங்கள்” என்று குறிப்பிட்டது போல் காசாவில் நகருவது எதுவானாலும் தாக்கி அழிக்கப்பட்டது. ஹிட்லர் கொலைவெறித் தாண்டவம் ஆடிய போது சமூக வலைத்தளங்கள் எதுவும் கிடையாது. தகவல் தொழில்நுட்பமும் குறிப்பிடத்தக்க அளவில் வளரவில்லை. ஆனாலும் உலகம் முழுவதும் ஹிட்லருக்கு எதிராக கொதித்து எழுந்தது. ஆனால் ஹிட்லரின் வாரிசுகளாக மாறியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டிருக்க துடைத்து அழிக்கின்றனர்.

உலகம் என்றும் கண்டிராத அதர்மத்துடன் இஸ்ரேல் இராணுவம் தனது கொலைவெறித் தாண்டவத்தை புரிகின்றது. அதற்கு அமெரிக்தகா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பூரண அங்கிகாரம் வழங்கியுள்ளன. ஹின்றி கிசிஞ்சர் கொம்யுனிசத்தை தீண்டத்தகாத சொல்லக்கூட்டாத கெட்ட வார்த்தை என்று மேற்குலகை நம்ப வைத்தார். இன்றைய வலதுசாரி இஸ்ரோலிய பென்ஜமின் நெத்தன்யாகு யுத்த நிறுத்தத்தை கெட்ட வார்த்தை என்று அறிவித்துவிட்டார். ஹென்றி கிசிஞ்சரின் பள்ளியில் படித்த அன்ரனி பிளின்கனும் அதனைப் பிடித்துக்கொண்டுவிட்டார். அவரோடு சேர்த்த மேற்குலகக் கும்பலும் இப்போது யுத்த நிறுத்தம் என்றால் ஏதோ துஸணம் பேசுவது போல் கருதி அதனை பொது மேடைகளில் சொல்வதில்லை. பத்திரிகையாளர்கள் அதுபற்றி கேட்டாலும் வெட்கப்பட்டு பூசிமெழுகி அந்தச் சொல்லையே சொல்வதில்லை.

ஆயத வன்முறையால் உலகெங்கும் ஆண்டு தோறும் 500,000 பேர் கொல்லப்படுகின்றனர். உலகின் ஆயத விற்பனையில் 75 வீதத்திற்கும் அதிகமான வியாபாரம் நேட்டோ நாடுகளினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதில் 40 வீதமான வியாபாரம் அமெரிக்காவினால் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றது. அமெரிக்காவில் பாடசாலைகளுக்குள்ளேயே துப்பாக்கிச் சுடுகள் நடத்தப்படுவதும் குழந்தைகள் கொல்லப்படுவதும் சாதாரண விடயமாக உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த ஆயத விற்பனைக்கு தடையைக் கொண்டுவருவதே முடியாத காரியமாக இருந்து வருகின்றது. தங்கள் சொந்த மக்களின் குழத்தைகளின் உயிரிழப்புப் பற்றியே அக்கறையற்ற அமெரிக்க ஆட்சியாளர்கள், அச்சிறார்களின் குருதியில் லாபத்தை சுவைக்கும் அமெரிக்க ஆட்சியாளர்கள் பாலஸ்தீனத்தில், உக்ரெயினில், எரித்திரியாவில், சுடானில் உயிரிழப்பவர்கள் பற்றி கரிசனை கொள்வார்களா?

உலக ஒழுங்கு மிகவும் மாறிக்கொண்டுள்ளது. மனிதமும் மனித நேயமும் ஹின்ரி கிசிஞ்சர், பென்சமின் நெத்தன்யாகு மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதும் மேற்குலகினால் மரணத்தின் விளிம்புக்கு கொண்டு வந்துவிடப்பட்டுள்ளது. ‘சமாதானம்’ என்பது ஒரு கேவலம் கெட்ட சொல் என்று அடுத்த தலைமுறையை நம்பவைக்க மேற்குலகம் முயற்சித்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. சமாதானம் என்றால் போர் இல்லை. போர் இல்லாவிட்டால் ஆயதங்களை விற்க முடியாது. ஆயதங்களை விற்காவிட்டால் எப்படி லாபமீட்டுவது? லாபமீட்ட எதுவெல்லாம் தடையாக இருக்கின்றதோ அதுவெல்லாம் மிகக் கெட்ட விடயங்கள். இது தான் இன்றைய மேற்குலகின் நியதி.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *