இலங்கையில் காலநிலை தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் – அமைச்சர் அலி சப்ரி

காலநிலை நீதிக்கான மன்றத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட மூன்று முன்மொழிவுகளை ஐ.நா. காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐ.நா.வின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு நவம்பர் 30 முதல் டிசம்பர் 12 வரை அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்களின் பங்கேற்புடன் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது.

 

இது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பொன்று நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

காலநிலை மாற்றத்தை கையாள்வது ஒரு மாயை என்று சில தரப்பினர்கள் கூறுகின்றன. ஆனால் அது மாயை அல்ல. சுற்றுச்சூழல் சீர்கேடு தொடர்ந்தால், உலகத்தின் இருப்புக்கே பாதிப்பு ஏற்படும்.

 

குறிப்பாக காலநிலை மாற்றத்தால் இலங்கை உள்ளிட்ட வெப்பவலய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றே கூற வேண்டும். வெப்ப வலயத்தில் 136 நாடுகள் உள்ளன. உலக சனத் தொகையில் 40 வீத மக்கள் அந்த நாடுகளில் வாழ்கின்றனர்.

கைத்தொழிற் புரட்சியுடன் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. கைத்தொழிற் புரட்சி செய்யும் நாடுகளை விட கைத்தொழிற் புரட்சியை குறைவாக செய்யும் நாடுகளிலே சுற்றுச்சூழல் மாசுபாட்டின் தாக்கம் குறைவாகக் காணப்படுகிறது.

 

எனவே, இந்த மாநாட்டில் சில புதிய கொள்கை ரீதியான பரிந்துரைகளை இலங்கை சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளது.

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்தின்படி, இலங்கை தலைமை தாங்கி செயற்படுத்தும் காலநிலை நீதிக்கான மன்றத்தின் ஊடாக, காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்குத் தேவையான கொள்கைகளைத் தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

 

இதற்காக யோசனைகள் மற்றும் ஆலோசனைகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், சர்வதேச சமூகத்திடமிருந்து யோசனைகளை பெறுவதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

 

வெப்ப வலயத்திலுள்ள பல நாடுகள் இதற்கு ஆதரவளிக்க ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளன.

 

அத்துடன் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *