12

12

பாலஸ்தீனக் குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் குவிகிறது ! அமெரிக்க – பிரித்தானிய ஆயத வியாபாரத்தில் லாபம் பல மடங்காக பெருகுகிறது!! காசா, பாலஸ்தீனிய குழந்தைகளைக் காப்பாற்றும் மாபெரும் போராட்டத்தில் லண்டன் தமிழர்களின் குரல்களும் ஆங்காங்கு எழுந்தது!!!

‘ஞாபகார்த்த தின’ நாளான நவம்பர் 11இல் லண்டனில் நடைபெற்ற மாபெரும் ஊர்வலத்தில் மக்கள் சாரை சாரயாக மிகுந்த ஆக்கிரோசத்துடன் பங்கேற்றனர். ஈராக் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்த்து பிரித்தானிய மக்கள் வீதியில் இறங்கியதற்கு ஒப்பாக பெருவரியான மக்கள் நேற்றைய போராட்டத்தில் குதித்திருந்தனர். இன, மத, மொழி பேதமற்று போராட்த்தில் ஈடுபட்டவர்கள் பிரித்தானியப் பிரதமர் ரிசிசுனாக் மற்றும் அவரின் நம்பிக்கைக்குரிய உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன் ஆகியோருக்கு எதிராகவும் மேற்கத்தைய தலைவர்களுக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.

ரிஸி சுனாக்கை குப்பைப்பை என்று கோசமெழுப்பியவர்கள் இந்த அமைதிப் போராட்டத்தை வஞ்சகப் போராட்டம் என வர்ணித்த உள்துறை அமைச்சர் சுவலா பிரவர்மன்னை இனவாதி என அழைத்தனர். இப்போராட்டத்துக்கு லூட்டனில் இருந்து வந்திருந்த பல்கலைக்கழக மாணவி அலிசா சௌத்திரி, “தான் சுவலா பிரவர்மனுக்கு நன்றி சொல்வதாகவும் அவருடைய இனவாதப் பேச்சுத் தான் என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இந்த அமைதிப் போராட்டம் லண்டனில் வாரம் தோறும் நடைபெற்று வருவதுடன் உலகின் பல்வேறு நகரங்களிலும் நடைபெற்று வருகின்றது. மேற்கு நாடுகளினதும் ஏனைய நாடுகளினதும் தலைவர்களும் அரசியல் தலைமைகளும் எவ்வாறு இரட்டைவேடம் கட்டி நடிக்கின்றனர் என்பதை குறைமாதத்தில் பிறந்த இன்குபேற்றர் பேழையில் பேணப்படும் குழந்தைகள் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றனர்.

“நாங்கள் மனிதத்துவம் இல்லாமல் போய்விட்டது” என்று சொல்ல முடியாது என்று குறிப்பிட்ட கொமிற்றி போர் வேர்கஸ் இன்ரநஷனல் இன் இன்ராநெஷனல் செக்கிரிற்றியற்றும் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் ஸ்தாபகருமான சேனன், “ஆம் மேற்குத் தலைமைகளிடமும் ஏனைய அரசியல் தலைமைகளிமும் மனிதத்துவம் செத்துவிட்டது, ஆனால் மக்களிடம் மனிதத்துவம் இன்னும் உயிப்புடன் தான் இருக்கிறது. அதனால் தான் அவர்கள் வெகுண்டு எழுந்து இங்கு வந்து, அதிகாரத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

போராட்டத்தில் வந்தவர்களைக் களைப்படையச் செய்யும் வகையிலும் அவர்களைத் தேவைப்படும் பட்சத்தில் முடக்கும் வகையிலும் அமெரிக்க தூதரலாயத்தை நோக்கிச் செல்வதற்கு நீண்ட பாதையொன்றை மெற்றோபொலிட்டன் பொலிஸார் திட்டமிட்டு இருந்தனர். மாலை ஐந்து மணியளவில் போராடும் மக்களோடு மக்களாக தமிழ் சொலிடாரிட்டி குழவின் ஊர்வலம் வொக்சோல் பிறிட்ஜ்சை எட்டிய போது ஏற்கனவே அங்கு அசையாது நிலைகொண்டிருந்த போராட்டக்காரர்களால் அசைய முடியாத நிலையில் மாலை 5:30 மணியளவில் போராட்டம் அவ்விடத்தில் முற்றுப் பெற்றது.

காலை பத்து மணி முதலே தொகையாகத் திரள ஆரம்பித்த மக்கள் கூட்டம் பதினொரு மணியை எட்டியதும் லண்டனின் இதயப் பகுதியைச் சுற்றியுள்ள ரியூப் ஸ்ரேசன்களில் சன நெருக்குவாரத்தை ஏற்படுத்தி சில பிரதான ரியூப் ஸ்ரேசன்களை மூடிவைக்க வேண்டிய நிலைக்கு கொண்டுவந்தது. மாபிளாச் ரியூப் ஸ்ரேசனில் தங்களை ஒழுங்குபடுத்திய தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ராஜன், இவ்வாறு தொகையான மக்கள் கூட்டம் இரண்டுமணி நேரமாக வந்து குவிந்து கொண்டிருப்பதை தான் காணவில்லை எனத் தெரிவித்தார். மாபிளாச்சில் இருந்து நகர்ந்து கொண்டிருந்த ஊர்வலத்தோடு 11:30 மணி அளவில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரும் கலந்துகொண்டனர். ராஜன் மற்றும் கஜன் தமிழ் சொலிடாரிட்டி பனரைத் தாங்கிச் செல்ல ஏனையவர்கள் பின் தொடர்ந்தனர்.

மிக உயர்த்திப் பிடிக்கப்பட்ட பாலஸ்தீனக் கொடிகளில் ஒன்றாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் கொடியும் உயரப் பறந்தது. பாலஸ்தீனியர்கள் முஸ்லீம்கள் அல்லாதவர்களும் போராட்டத்தில் தோள்கொடுப்பதை உணர்ந்து தமிழ் சொலிடாரிட்டிக் குழுவை பலரும் புகைப்படம் எடுப்பதை காணக்கூடியதாக இருந்தது.

இப்போராட்டம் உலகத் தலைவர்களை அம்பலப்படுத்தியதோடு பிரித்தானிய உள்துறை அமைச்சர் போராட்டகாரர்களை வஞ்சம் கொண்டவர்கள் என்று இனவாத்தோடு கூறிய கருத்துக்கு முகத்தில் அறைந்தாற் போல் அமைந்தது. மூன்று லட்சம் பேர் இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக உத்தியோகபுர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் உண்மையில் இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சமாக இருந்திருக்க வேண்டும் என்ற மதிப்பீடுகளும் உள்ளது. அன்றைய தினம் உள்துறை அமைச்சரின் இனவாதக் கருத்துக்களால் தூண்டப்பட்ட சில நூறு வலதுசாரித் தீவிரவாதிகள் எதிர்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களே வஞ்சகத்தோடும் வன்மத்தோடும் காடைத்தனத்தில் ஈடுபட்டு பொலிஸாருடன் மோதி ஞாபகார்த்த நிகழ்வை இழிவு செய்து குழப்பம் விளைவித்தனர். இதற்காக 90 வரையானோர் கைது செய்யப்பட்டனர். பிரதமர் ரிசி சுனக் மற்றும் சுவலா பிரவர்மனின் நேசக்கரங்களே ஞாபகார்த்த நிகழ்வை இழிவுபடுத்தியது அனைத்து ஊடகங்களிலும் பதிவாகியது. போலிஸாரும் அதனை உறுதிப்படுத்தினர். இவற்றைத் தொடர்ந்து சுவலா பிரவர்மன் பதிவியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்ற கோஷங்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

அமெரிக்க – பிரித்தானிய ஆளும் குழுமம் பாலஸ்தீனியர்களையும் அவர்களின் குழந்தைகளையும் கொல்வதன் மூலம் லாபம் ஈட்டுகின்றனர் என்பதற்காக யுத்தங்களை நெய்யூற்றி வளர்க்கின்றனர். அரபு நாடுகளின் கூட்டமைப்புக் கூட வெறும் கண்டனத்தை தெரிவித்து நேற்று நவம்பர் 11 தனது கூட்டத்தை முடித்துக்கொண்டது. இஸ்ரேலுக்கு எதிராகவோ இஸ்ரேலின் இன அழிப்புக்கு ஆதரவாகச் செயற்படும் அமெரிக்க – பிரித்தானிய அரசுகளுக்கு எதிராகவோ காத்திரமான பொருளாதார எண்ணைத் தடைகள் எதனையும் அறிவிக்கவில்லை. தொடர்ச்சியான மக்கள் போராட்டங்கள் சர்வதேச அரசியலில் காத்திரமான மாற்றங்களைக் கொண்டு வரும். அதனால் அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் ஆசீர்வாதத்தோடு இஸ்ரேல் மேற்கொள்ளும் பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலையை, குழந்தைகளைக் கொல்வதன் மூலம் பாலஸ்தீனவம்சத்தை அழிக்கும் இஸ்ரேலின் மிகக் கொடிய திட்டத்தை சமூக வலைத்தளங்கள் மூலம் அனைவரும் அம்பலப்படுத்த வேண்டும் அவற்றை பகிர வேண்டும்.

இந்திய அரசு குறிப்பாக குஜராத் படுகொலைகளை முன்நின்று நடத்திய நரேந்திர மோடியும் அவரது பாரதிய ஜனதாக் கட்சியும் இஸ்ரேலுக்கு ஆதரவான பொய்ப் பிரச்சாரங்களை முன்றின்று நடத்துகின்றனர். அத்தோடு தங்களுக்குள்ள முஸ்லீம் எதிர்ப்பின் காரணமாக பாலஸ்தீனியர்கள் முஸ்லீம்கள் என்பதால் பாலஸ்தீனப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வாதந்திகளையும் பரப்பி வருகின்றனர். இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும் பாலஸ்தீனியர்களின் போராட்டத்துக்கு எதிராகவும் வரும் சமூக வலைத்தளச் செய்திகள் இந்தியாவில் இருந்தே வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் எழுபது, எண்பதுக்களில் இந்திய, இலங்கை அரசுகள் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாக இருந்தனர். இஸ்ரேலோடு உறவாடுவது என்பது ‘கள்ளத்தொடர்பு’ என்பது போன்றே பார்க்கப்பட்டது. ஆனால் அதனை நரேந்திர மோடி வெளிப்படையாகவே செய்யத் துணிந்துவிட்டார்.

தமிழ் சொலிடாரிட்டி அமைப்பினரைத் தவிரவும் வேறு சில தமிழர்களும் தனியாகவும், விரல்விட்டும் எண்ணிக்கையில் குழுவாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். இப்போராட்டத்தில் இலங்கைக் கொடியோடு சிங்கள மக்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

கீழைத்தேச ஆசிய நாடுகள் இஸ்ரேலை ஒரு நேச அணியாக பொதுத்தளத்தில் கருதுவதில்லை. மாறாக ஒரு தீண்டத் தகாத அரசாகவே கணித்து வந்தனர். அண்மைய மோடி அரசு அதற்கு விதிவிலக்காக இஸ்ரேலுடன் உறவை வலுப்படுத்தி வருகின்றது.

இந்த மோடி இந்திய அலையில் தங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று கூறிக்கொள்ளும் ஆர்வக்கோளாறுகள் சிலரும் அள்ளுப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் மத்தியில் பாலஸ்தீனப் போராட்;டத்தை கொச்சைப்படுத்தும் நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். “வே பிரபாகரனுக்குப் பின் மோடியை தலைவராக்கிக் கொண்டுள்ள இந்தக் கொசுக்கள் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கின்றது” என்கிறார் போராட்டத்தில் பங்கேற்ற ஹரோவைச் சேர்ந்த பற்குணன் தவராஜா.

தமிழ் மக்களிடம் இயல்பாகவே உள்ள சான்றிதழ்க் கல்வி பற்றிய அதீதி உணர்வும் செல்வந்தராவது மற்றும் சாகச உணர்வும் மேல் மட்டத்துக்கு நகரும் எண்ணமும் உள்ளது. ஆனால் அதை அடையும் வழிகள் பற்றிய பண்புகளை கண்டும் காணமல் தவிர்த்துவிடுகின்றனர். அதனால் கல்வியில் செல்வத்தில் வீரத்தில் முன்நிற்கின்ற இஸ்ரேலை அவர்கள் முன்ணுதாரணமாக பார்க்கின்றனர். இஸ்ரேலிய அரசு கல்வியை, செல்வத்தை, வீரத்தை தனக்கு நாடு அமைக்க இடம்விட்ட பாலஸ்தீனியர்களையே கொன்றொழிப்பதை கண்டும் காணாமல் உள்ளனர். இஸ்ரேலியர்களின் மொசாட் அமைப்பு உலகெங்கும் அதிகாரத்தில் உள்ள கொடுங்கோலர்களுக்கு பயிற்சி வழங்குவதையும் இவர்கள் கண்டுகொள்விதில்லை.

நிறையப் சான்றிதழ் வைத்திருப்பவன், நிறைய செல்வம் வைத்திருப்பவன், பலமானவன் பின்னால் தமிழர்கள் அணிதிரளாமல் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களுக்கு, அடிப்படை நேர்மையுடையவர்களுக்கு, மனிதாபிமானம் கொண்டவர்களுக்கு தோளோடு தோள் கொடுக்க வேண்டும். அந்த வகையில் தமிழர்களுடைய ஆதரவு பாலஸ்தீனியர்களுக்காக இருக்க வேண்டும். நவம்பர் 11 போராட்டத்தை தமிழர்கள் பலரும் கண்டுகொள்ளவில்லை எனபது மிகவும் வேதனையானது.