June

June

ஆர் சம்பந்தன் காலமானார்: மரணம் யாரையும் மன்னிப்பதில்லை!

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் தமிழர்களின் முக்கிய அரசியல் தலைவருமான இரா சம்பந்தன் உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் காலமானார். இவர் தனது 91வது வயதில் மரணத்தை தழுவியுள்ளார். தமிழரசுக் கட்சி தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் என தன் நீண்ட அரசியல் பயணத்தைத் தொடர்ந்த இரா சம்பந்தன் இலங்கை அரசியலிலோ தமிழ் அரசியலிலோ ஒரு ஆளுமையாக உருவாகவில்லை. அ அமிர்தலிங்கத்தின் மரணமும் வி ஆனந்தசங்கரிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட முரண்பாடும் அவரைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக்கியது. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் பன்முக அரசியல் தன்மையைக் காட்ட வெளிப்படுத்திய முகம் தான் இரா சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரானது. எஸ் ஜெ வி செல்வநாயகம், அ அமிர்தலிங்கம் வரிசையில் அடுத்து வந்த இரா சம்பந்தன் தமிழ் அரசியல் வரலாற்றில் போராடாத தோற்றுப் போன ஒரு தலைவராகவே பார்க்கப்படுவார். அவருடைய மரணத்துடன் குற்றுயிரும் குலை உயிருமாக இருக்கும் தமிழரசுக் கட்சியும் மரணத்தைத் தழுவும் வாய்ப்பே நிறைய உள்ளது.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு !

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சர்வதேச நீதி கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தால் பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று இந்த ஆர்ப்பாட்டம் (30) இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டோர் ”எமக்கு சர்வதேச நீதியே வேண்டும், எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, ஓ.எம்.பி அலுவலகம் எமக்கு வேண்டாம், கையில் கொடுத்த பிள்ளைகளுக்கு மரண சான்றிதழ் எதற்கு, நாம் இழப்பீட்டை கோரவில்லை, கையில் தந்த எமது சிறுவர்கள் எங்கே” என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இதன்போது, கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெனீற்றா , “எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது.

சர்வதேச நீதியே எமக்கு வேண்டும். ஓ.எம்.பி அலுவலகம் எமக்கு தேவையில்லை எனக் கூறிய போதும் அதனை இரகசியமாக எமது பகுதிகளில் நிறுவியுள்ளார்கள். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கிராம அலுவலர் ஊடக ஓ.எம்.பி அலுவலகத்தின் வேலைகளை முன்னெடுத்துள்ளார். வாழ்வாதார உதவிகளை வழங்கி எமது போராட்டத்தை மழுங்கடிக்க முற்படுகிறார்கள். இது தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டும். எமக்கு நீதி வேண்டும். உயிர் உள்ளவரை நீதிக்காக நாம் போராடுவோம்” என தெரிவித்தார்.

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது 2024 – கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் சாதனை !

கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் 2024 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதினை பெற்றுக்கொண்டது. குறித்த விருதினை இவ்வாண்டு பெற்றுக்கொண்ட ஒரேயொரு தமிழ் பாடசாலையாக அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயம் காணப்படுகிறது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் யூன் 28 இடம்பெற்ற நிகழ்வில் மேற்படி விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கிளி விவேகானந்தா வித்தியாலயமும் லிற்றில் எய்ட் திறன்விருத்தி மையமும் சமகாலத்தில் தங்கள் பயணத்தை ஆரம்பித்ததுடன் நெருக்கமான உறவையும் பேணி வருகின்றன. லிற்றில் எய்ட் திறன் விருத்தி மையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிளி விவேகானந்தாவில் கல்வி கற்பவர்கள். கல்வி கற்றவர்கள். 2023 சிவஜோதி ஞாபகார்த்த விருது கிளி விவேகானந்தா வித்தியாலயத்திக் அதிபர் ஜெயா மாணிக்கவாசகனுக்கு அவருடைய கல்விச்சேவையைப் பாராட்டி வழங்கப்பட்டதுடன் அவர்களுடைய ‘இனியம்’ இசைக்குழவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த 1,50,000 ரொக்கப்பணமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாடாளவிய ரீதியில் பாடசாலைகள், நிறுவனங்கள், அமைப்புக்கள் என 902 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் கிளிநொச்சி விவேகானந்த வித்தியாலயம் அவற்றுக்குள் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே குறித்த பாடசாலை சுற்று சூழல் அமைச்சின் இரண்டு சுற்றுச் சூழல் விருதினை பெற்றுள்ளதோடு, சுற்றுச் சூழல் தகவல் நிலையத்தினையும் பாடசாலை மட்டத்தில் பெற்றுக்கொண்ட ஒரு பாடசாலையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் Green & Clean School 2017 விருதினை இலங்கையின் 5 பாடசாலைகளே பெற்றிருந்தன. அந்த விருதையும் வென்ற ஒரே ஒரு தமிழ் பாடசாலை கிளி விவேகானந்தா வித்தியாலயம்.

“என்னைப் பார்த்து இந்த பாடசாலையை ஆரம்பிப்பது தேவையற்ற விடயம் பயனில்லாததது என்றார்கள். அப்போது நாம் நம்பிக்கையுடன் நகர்ந்தோம். அதன் விளைவு நாம் பெறுபேறுகள் சார்ந்தும் சமூக மாற்றம் தொடர்பிலும் பல வெற்றிகளை பெற்றுள்ளோம். தேசிய அளவில் பல சாதனைகளையும் எமது பாடசாலை பதிவு செய்துள்ளதும் கவனிக்கத்தக்கது. இப்படியாக பல துறைகளில் நமது பாடசாலை நிமிர்ந்துள்ளது. எனக்கு இன்னுமொரு பாடசாலைக்கு இடமாற்றம் தந்தால் எந்த ஓர் கிராமத்தில் மாணவர்கள் படிக்கிறார்கள் இல்லையோ – கல்வியில் பின்தங்கியுள்ளார்களோ அந்த பாடசாலையையே நான் தெரிவு செய்வேன்” எனக் கூறியவர் ஜெயா மாணிக்கவாசகன். லிற்றில் எய்ட் விருதைப் ஏற்று வழங்கிய சிற்றுரையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து இருந்தார்.

கிளி விவேகானந்தா வித்தியாலயம் பற்றி லண்டனில் வதியும் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன் வருமாறு குறிப்பிடுகின்றார்: “பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட சில ஆண்டுகளில் அங்கு சென்றிருந்தேன். ஒரு கைவிடப்பட்ட வெளியில் அகோர வெய்யிலில் பாடசாலை இருந்தது. தோற்றத்தில் ஏனைய பாடசாலைகளிலிருந்து வித்தியாசம் இருக்கவில்லை. ஆனால் அப்போது அங்கு கற்பவர்கள் பெரும்பாலும் மலையகத்தைப் பின்புலமாகக் கொண்டவர்களாக இருந்தனர். கல்வி விழிப்புணர்வு உடைய பெற்றோரின் பிள்ளைகளாக அவர்களில்லை. ஆனாலும் வடமாகாணத்திலேயே கணிதத்தில் 100 வீதம் சித்தியை அன்றே பெற்றுச் சாதனை படைத்தது அப்பாடசாலை. பத்து ஆண்டுகள் கழிந்து 2022இல் மீண்டும் அப்பாடசாலைக்குச் சென்றேன். பாடசாலை வளாகமே குளிரூட்டப்பட்டிருந்தது. ஏசி பூட்டப்பட்டல்ல. கடந்த பத்து ஆண்டுகளாக வளர்க்கப்பட்ட மரங்களால் சோலையாக பசுமையாக இருந்தது. மழை நீர் சேகரிப்பு, இயற்கை உரம் தயாரிப்பு, அரிய மூலிகை வளர்ப்பு, விளையாட்டுத்துறை எனப் பாடசாலை வளர்ச்சி பிரமிக்க வைத்தது. ஐரோப்பிய நாட்டுப் பாடசாலைகளைக் காட்டிலும் வளங்களை வினைத்திறனுடன் பயன்படுத்தி அதன் பலனையும் வெளிப்படுத்தி நின்றது அப்பாடசாலை. இவையெதுவுமே வெளிநாடுகளில் உள்ள பழைய மாணவர் சங்கத்தின் உதவியால் நிகழவில்லை. நடுத்தர வர்க்க, கூலித் தொழிலாளிகளான பெற்றோர் அவர்களின் பிள்ளைகளான மாணவர்களினால் மட்டுமே நிகழ்ந்தது. ஒவ்வொரு அதிபரும் ஜெயா மாணிக்கவாசகனானால் தமிழ் பிரதேசங்களில் கல்விப் புரட்சியொன்றே நிகழ்ந்துவிடும்” என்றார் லிற்றில் எய்ட் ஸ்தாபகர் த ஜெயபாலன்.

2011 ஆம் ஆண்டு அன்றைய பாராளுமன்ற உறுப்பின மு சந்திரகுமாரினால் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பிக்கப்பட்ட கிளி விவேகானந்தா வித்தியாலயம் அதிபர் ஜெயா மாணிக்கவாசகனின் தலைமையில் மிக குறுகிய காலத்திற்குள் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் தேசிய மட்டத்தில் சாதனை புரியும் அளவில் வளர்ந்துள்ளமை கிளிநொச்சி மண்ணுக்கே கிடைத்துள்ள பெருமையாக கொள்ளப்படுகின்றது.

 

பாரிய போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படை வீரர்கள் உதவி !

பாரிய போதைப்பொருள் வர்த்தகத்திற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் கடற்படை அதிகாரிகள் இருவரை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (30) கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட உள்ளக விசாரணையின் பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த இரண்டு அதிகாரிகளும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றியவர்கள் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு ஆகியோர் உள்ளனர் – சிறீதரன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் அசமந்த போக்குடன் செயற்படுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கொடிகாமத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

யாழ்ப்பாணம் இந்து கல்லுாரிக்கு அருகில் உள்ள எனது இல்லத்திற்கு முன்பாக 4 மோட்டார் சைக்கிள்களில் இனந்தெரியாத 9 பேர், முகத்தையும் மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டையும் கறுப்பு துணிகளால் மறைத்தவாறு, வாள்களை சுழற்றிக் கொண்டு செல்வது எனது வீட்டின் கண்காணிப்பு கெமராவின் மூலம் அவதானிக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நடக்கும் பல குற்றச்செயல்களுக்குப் பின்னால் இராணுவம் கடற்படை, விமானப்படை, பொலிஸார், உளவுப்பிரிவு பின்னணியில் இருப்பது வெளிப்படுத்துகின்றது.

யுத்தகாலத்தில் இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரும் மோட்டார் சைக்கிளில் கறுப்பு துணிகளை கட்டியவாறு வந்து துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.

அதே பாணியில், உள்ளூர் மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி இராணுவத்தினரோ, கடற்படையினரோ, விமானப்படையினரோ, பொலிஸாராரோ, அல்லது உளவுப்பிரிவினரோ இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பார்களோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இளைஞர்கள் செய்வதாகவும் குழுக்கள் செய்வதாகவும் காட்டிக்கொண்டு அவர்களை கைது செய்யாமலும் நடவடிக்கை எடுக்கமாலும் விட்டு யாழ்ப்பாணத்தை அச்ச சூழலுக்குள் வைத்திருக்க முற்படுகின்றனர்.

யாழ்ப்பாணம் தற்போது மிகப் பயங்கரமான சுழலில் உள்ளது. எனது வீட்டின் முன்பாக ஆயுதங்களுடன் நடமாடியமை தொடர்பாக நாளை மறுதினம் சபாநாயகருக்கும் எழுத்து மூலம் அறிவித்து உரிய தரப்புக்களுக்கும் விரைவில் தெரியப்படுத்துவேன்.

இதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தயங்கினால் யாழ்ப்பாணம் இன்னமும் மோசமான நிலைக்குச் செல்லும்” இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரித்துள்ளார்.

சர்வதேச அளவில் கணினி குற்றச்செயல்களை புரியும் மத்திய நிலையங்கள் இலங்கையில் – நூற்றுக்கணக்கானோர் கைது !

வெவ்வேறு கணினி குற்றச்செயல்களை புரியும் மத்திய நிலையங்கள் தொடர்பில், இலங்கையின் வெவ்வேறு பகுதிகளிலும் தகவல்கள் பதிவாகி வருகின்றன.

கடந்த சில நாட்களில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளில் இந்த மோசடி சம்பவங்களுடன் தொடர்புடைய வௌிநாட்டு பிரஜைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அவற்றில் பெரும்பாலானவற்றில் சுமார் ஒரு இலட்சம் ரூபா அல்லது அதற்கு அதிகமான சம்பளம் பெற்றுத்தரப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த விளம்பரங்களில் தொழில்கள் தொடர்பில் விசேட தகுதிகளாக கணினி அறிவு மற்றும் தட்டச்சு செய்வதற்கான வேகம் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன.

கல்வித் தகுதியாக க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி மாத்திரம் போதுமானதென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரங்கள், மியன்மார் மற்றும் துபாயில் இடம்பெறும் கணினி குற்றங்களுக்கு இளைஞர்களை ஈடுபட ஊக்குவித்த விளம்பரங்களைப் போலவே காணப்பட்டன.

நேர்முகப் பரீட்சையில் நிமிடத்திற்கு 30 ஆங்கில சொற்கள் அல்லது அதற்கும் அதிகமாக தட்டச்சு செய்தால், அவர்கள் தேர்ச்சி பெற்று, கணினி குற்றங்களுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள்.

துபாயை கேந்திரமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த வர்த்தகம் மியன்மார், இந்தியா, பம்போடியா மற்றும் லாவோஸ் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் வியாபித்துள்ளது.

வௌிநாட்டிலிருந்து இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞர் ஒருவர் இது தொடர்பில் தௌிவுபடுத்தினார்.

இந்த வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்ட 50-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது சீன குற்றக்குழுக்களினால் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை விடுவிப்பதற்கு பாரிய பிரயத்தனம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தற்போது கொழும்பு – பத்தரமுல்லை, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறான கணினி குற்றங்களில் ஈடுபட்டுள்ள வௌிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பில் 2 வாடகை வீடுகளில் கடந்த 24 ஆம் திகதி 30 வௌிநாட்டுப் பிரஜைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ், இந்தோனேஷியா, அல்ஜீரியா, நேபாளம் மற்றும் மலேஷிய பிரஜைகளுடன் இதில் இலங்கை பிரஜைகளும் உள்ளடங்குகின்றனர்.

இந்த குற்றம் முன்னெடுக்கப்படும் ஏனைய கிளைகள் துபாய் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கின்றமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இதனுடன் தொடர்புடைய குழுக்களை 3 சீனப் பிரஜைகள் வழிநடத்துகின்றமை தெரியவந்ததுடன், அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே, இணையத்தளம் ஊடாக நிதி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் இந்திய பிரஜைகள் 137 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு கொச்சிக்கடையின் 2 பகுதிகளில் 107 பேர் கைது செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லை – ஹீனட்டிகும்புர பகுதியில் 15 பேரும் பத்தரமுல்லை – மாதிவெல பகுதியில் மேலும் 13 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மியன்மாரிலும் இதேபோன்ற சம்பவமே பதிவானது.

சீன குற்றக்குழுக்களின் உறுப்பினர்களால் பலவந்தமாக வௌிநாட்டு இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு வெவ்வேறு கணினி குற்றச்செயல்கள் புரியப்படுகின்றன.

மியன்மாரில் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பகுதி ஆயுதம் ஏந்திய குற்றக்கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், இளைஞர், யுவதிகளை மீட்பது தற்போது வரை கடினமாக உள்ளது.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையில் இடம்பெற்ற குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்கள் தற்போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ட்ரம்ப் – பைடன் இடையேயான பொது விவாதம் – “திணறிய பைடன்“ !

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனுக்கும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கிடையிலான விவாதத்தில் ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகின்றது.

இதனால் அவரது கட்சி ஆதரவாளர்களும், நிர்வாகிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்ததோடு பைடனை விலக்கி வேறு வேட்பாளரை களத்தில் இறக்க மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குமுன் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பது வழக்கமான விடயமாகும். இந்த விவாத நிகழ்ச்சிகளின்போது வெளியுறவு கொள்கைகள், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு வேட்பாளர்களும் விவாதிப்பார்கள்.

அந்த வகையில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்கள் ஜோ பைடன், டொனால்ட் ட்ரம்ப் இடையேயான நேருக்கு நேர் விவாதம் நேற்று (28) நடைபெற்றது.

விவாத நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரப்பாகியதோடு மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த விவாதத்தில் ட்ரம்ப், பைடன் என இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த விவாதத்திலேயே, ட்ரம்பை எதிர்கொள்ள முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகின்றது.

ஏற்கெனவே பைடனின் வயது தேர்தலில் பேசு பொருளான நிலையில் அவரது உடல் தளர்ச்சி மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பிலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள்.

 

இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று இருவரும் காரசார விவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அமெரிக்க பொருளாதாரம், குடியேற்றம், உக்ரைன், இஸ்ரேல் விவகாரம், அரசின் பல்வேறு சட்டங்கள் குறித்து ட்ரம்ப் வாதத்திற்கு பதிலடி தர முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகிறது.

தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி   ஜோபைடன் ஜனநாயக கட்சி சார்பிலும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள்.

இத்தேர்தலில் முக்கிய நிகழ்வாக இரு கட்சி ஜனாதிபதி வேட்பாளர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் பங்கேற்று இருவரும் காரசார விவாத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அமெரிக்க பொருளாதாரம், குடியேற்றம், உக்ரைன், இஸ்ரேல் விவகாரம், அரசின் பல்வேறு சட்டங்கள் குறித்து ட்ரம்ப் வாதத்திற்கு பதிலடி தர முடியாமல் பைடன் திணறியதாக கூறப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டுகளுடன் கைதான வன்முறைக்கும்பலின் முக்கியமான நபருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் !

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் மேற்கொண்டமை, வாகனங்களுக்கு தீ வைத்தமை, நெல்லியடி பகுதியில் புடவைக்கடை ஒன்றிற்கு பெற்றோல் குண்டு வீசியமை உள்ளிட்ட வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து  சொகுசு கார் , மோட்டார் சைக்கிள்,  2 வாள்கள் மற்றும் உள்ளூர் தயாரிப்பு வெடிகுண்டு என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரின் வன்முறை கும்பலை சேர்ந்த மேலும் ஐந்து சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் , கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முற்படுத்திய வேளை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத்தளபதியாகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் சேவை இராணுவத்தளபதியாகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ முடிந்துவிடப் போவதில்லை. அவர் நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன. யுத்த களத்தில் மாத்திரமின்றி அரசியல் களத்திலும் வரலாற்று வெற்றியை அவர் பதிவு செய்வார் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவின் ‘இராணுவத்தளபதி நாட்டுக்கு வழங்கிய வாக்குறுதி’ நூல் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை (28) கொழும்பு, தாமரை தடாகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த ஜனாதிபதி மேலும் குறிப்பிடுகையில்,

பீல்ட் மார்ஷல் பொன்சேக்கா வழங்கிய வாக்குறுதிக்கமைய இராணுவத்தளபதியாக பொறுப்பேற்று 3 தசாப்தகால யுத்ததத்தை நிறைவு செய்தார். அதன் காரணமாகவே அவர் பீல்ட் மார்ஷலாக தரமுயர்த்தப்பட்டார். இலங்கையில் பீல்ட் மார்ஷலாக செயற்பட்ட ஒரேயொரு இராணுவத் தளபதி அவர் மாத்திரமே.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டிய தேவை காணப்பட்டது. அதற்காக அங்கு இராணுவத்தின் ஒரு முழுமையான படையணி கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் நான் சரத் பொன்சேக்காவையே நியமித்தேன். காரணம் பொன்சேக்கா என்ற ஒரு நபர் ஒரு படையணிக்கு சமமானவர் என்பதால் ஆகும்.

யுத்த களத்தைப் போன்று அரசியலிலும் பல்வேறு பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளார். சவால்களையும் சந்தித்துள்ளார். அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார். அதே போன்று எதிர்காலத்திலும் அவர் நிச்சயம் வெற்றியைப் பதவி செய்வார். எனவே அவரது சேவை இராணுவத்தளபதியாவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ நின்று விடப் போவதில்லை. நாட்டுக்கு சேவை செய்வதற்காக இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன என்று நான் நம்புகின்றேன் என்றார்.

இந்தியாவில் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் – அமெரிக்க வெளியுறவுத்துறை விசனம் !

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார்.

சமீபகாலாமாக இந்தியாவில்  சிறுபான்மையினருக்கு எதிரான மதமாற்றத் தடைச் சட்டம், வெறுப்புப் பேச்சு,  அவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி ப்ளிங்கென் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் ஆண்டறிக்கையை வெளியிட்டுப் பேசிய ப்ளிங்கென் தெரிவித்ததாவது..

” இந்தியாவில், சிறுபான்மையினரின் மதச் சுதந்திரம் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில், உலகெங்கிலும் மக்கள் மதச் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராடி வருகின்றனர்.  இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் சட்டங்களைக் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில மாநிலங்களில் திருமணத்திற்காக மதமாற்றம் செய்வதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் இந்தியாவில் உள்ள மதச் சுதந்திரக் குறைபாடுகள் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கடந்தாண்டு, வன்முறைகளில் இருந்து சிறுபான்மையினரைப் பாதுகாப்பது, சிறுபான்மையினருக்கு எதிராகக் குற்றங்களை விசாரிப்பது, சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது குறித்த விஷயங்களில் சில சிறுபான்மைக் குழுக்கள் நமது அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மதங்களுக்குத் தனி சட்டம் இருப்பதை மாற்றி பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர பிரதமர் மோடியின் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் இஸ்லாம், சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பழங்குடியின மக்களும், சில மாநில அரசுகளும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக மாற்றுவதற்கான முயற்சியாக இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர் “ என வெளியுறவுத்துறை ஆண்டறிக்கையில்  கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அறிக்கையை வரவேற்றுள்ள இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதால் இந்தியாவின் மதச் சுதந்திர நிலைமையைக் கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.