வன்னிவானத்தை இருள் கவ்வியது
ஈழத்தமிழர் வாழ்வு போல்
வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன
வெளிநாடுகளில் இருந்து
தருவிக்கப்பட்ட இடியும் மின்னலும்
சிவப்புக் கௌபோய் (cowboy)படம் எடுக்க
சீன இந்திய நடிகர்கள்
குறும்பார்வைக் குறையால்
வன்னிமந்தைகள் புலிகளாக
கண்ணீர்கள் வரிகளாக
மேய்போரே மந்தையை மேய்ந்தபோதும்
உருப்பெருக்கு வில்லைதேடி அலைந்தார்கள்
புவியியலாளர்கள்.
கண்வில்லைகள் போதாது என்று
வானவில்லைகள்
விலையுயர்ந்த வில்லைகளுக்குக் கூட
மனிதவிலைகள் தெரியவில்லை
உருப்பெருக்க வில்லைகள் ஐ.நாவிடம் இருந்தும்
கண்டுபிடிக்க முடிந்ததா மரணம்தரும் வைரசுக்களை.
வானமே வெடிகுண்டானது
அவதார புரிசர்களுக்கே
அடைக்கலம் தேவைப்பட்டது.
தலைகள் எல்லாம் கணனிகொண்டு
கொலைக்களங்கள் திரிந்தன.
கொம்பியூட்டர் கண்களில்
மக்கள் மறைந்தனர்
கணனியில் வைரசாம்
புதிய கணனியில்
புலத்துப் பணத்தில்
பணவீழம் அமைக்க
இன்றும் பலவைரசுகள்
அகதியாடு நனைகிறது என
ஓலமிடுகின்றன ஓநாய்கள்
நிலத்திலும் புலத்திலும்.
உதிரவெள்ளம் ஓடி அடங்க
பிணக்குவியல்களில் புழுக்கள் கிளம்ப
நிசப்தத்தின் மத்தியில் ஒரு நித்திய புருசன்
பிணங்களில் இருந்து பிரிந்து எழுந்தான்
உதிரம் வடியும் கண்களோடு
மனிதம் நிமிர்ந்த மார்புகளோடு
மேய்பனாக புத்தன்
விசுபரூபத்தில் போதிமாதவனாய்
மாயவனான மாதவன் கண்டு ஆதவன் அலற
சுடுகலன்கள் அனைத்தும் சுருண்டு போயின.
நிஸ்டையின் விரல்களை
நீட்டீயே காட்டி
வடக்கு கிழக்கு பிணங்களின் குவியல்
தெற்குத்திசையில் பசி பட்டிணியின் அவியல்
இதுவா தர்மம்!!
இதுவா நீதி!!!
இதுவா மனிதம்!!!!
மீண்டும் மறைந்தான்
உறைந்தது உலகம்
அறைபட்டது ஆத்மா.
விஸ்வமாக வளர்ந்த அசரீரி
அஸ்திரமாக நின்றது சமநீதி
”உலகம் எங்கணும் எல்லைகள் இல்லை
எல்லை உரிமை எவனுக்குமில்லை
மாதவ மனதில் சூனியம் இல்லை
வானம் பூமியில் வஞ்சகம் இல்லை
மனித மனங்களில் வஞ்சம் இருந்தால்
மீண்டும் வருவேன்
எரிக்கும் ஆதவனாக
சுழலும் சூறாவளியாக
சுனாமியாக.
அடங்காது போனால் கல்கியாக
எல்லா உடமையும் அனைவற்குமாகுக
பொல்லா மனநோய்கள் அணைந்து போகுக
வேதனம் என்பது வாழ்வுக்கானபின்
சீர்-தனம் எதற்கு சீர்கெட்ட மனிதா?
விகாரைகள் கட்டி
மனித விகாரம் எதற்கு
மனிதா (ஆ)லயம் கட்டு
ஆத்மா இலயிக்கும்
அரசு நடத்த அரசமரம் எதற்கு
அன்பை வளர்த்து அகிலத்தை ஆள்
ஆணவம் அழித்து கல்கியைக் கொல்
மனிதத்தின் மடியில் உலகம் உருள
அன்பின் அடியில் அடங்கும் அகிலம்”
மாதவனோடு
நோர்வே நக்கீரா
2.10.2010