யாக்கையின் வாழ்க்கை!!! நோர்வே நக்கீரா

யாக்கையின் வாழ்க்கை!!!

பூக்கள் சிரிக்க
பூமகள் சிறப்பாள்
பாக்கள் பிறக்க
பாரே சிறக்கும்.

ஐரோப்பியப் பூக்கள் மலர
மகரந்தம் பறக்கும்
மகிழ்ச்சியை அழிக்கும்.
அழகிய மலர்களின் மகரந்தங்கள்
ஐரோப்பாவில் எமக்கு அலேர்ஜி
ஐரோ மட்டும் என்றும் அலாதி

சொண்டு உண்டு உண்டு என்று
சொண்டு உண்டு
சொண்டிழந்து போனவர்கள்
பொய்வாயை மெய்வாயாக்க
செவ்வாய் செய்கிறார்கள்.
அது செவ்வாயல்ல
செய்வாய்
அழகுறச் செய்வாய்
வாய்களில் மட்டுமா பொய்
வார்த்தைகள்??

கண்கெட்டுப் போனவர்கள்
கண்விட்டுப் போய்விடாது
கண்கீறிப்போகும்
காட்சிதான் அஞ்சனமோ?
கண்களின் வஞ்சகமோ?
கண்கீறிய காயங்கள்
விண்ணேறி வலித்தாலும்
பெண்மனத்தில் இல்லைப் பேதமை
கண்கனத்துக் கொண்டாது
கண்ணீரில் சாதனை

விதியின் கரங்கள்
முகத்தில் எழுதிய
வரைபடம்தானே வயது
அதன் முதிர்வு.
விதியைக் கூட
சதிசெய்து அழிக்கும்
சாதனைதானே மேக்கப்பு (ஒப்பனை)
பெண்ணே கீப்பப்பூ

ஒப்பனையில்லா ஒப்பனை கூட
வைப்பனையாகும் முகங்களிலே
செப்பனை செய்யா கற்பனைக்களத்தில்
காளியின் காட்சியின் தரிசனமே.

கண்ணுக்குக் கலர்வில்லை
கண்மயிருக்கு மஸ்காரா
தலைமுடிக்கு விலைகொடுத்து
கலர் அடித்துக் கலைகாணும்
பொய்முடி தரிக்கும்
மெய் மடிந்த பொய் வாழ்க்கை

கலர் கலராய் கலர் அடித்து- எம்மை
கலர்மனிதர்கள் எனக் கசக்கும்
நிறமிழந்த ஐரோப்பிய
நிஜமற்ற நிதவாழ்க்கை
துவேசம்.

பாசமெல்லாம்
ஆபாசமாகி
ஊர்வேசம் போடுகிறது
ஐரோப்பா

மெய்மேல் மெய் படுத்து
பொய்போகும் வாழ்க்கையை
மெய் என்றும் காட்டும்
காக்கைகளே தின்னத்துடிக்கும்
யாக்கையின் வாழ்க்கைதான்
வாழ்க்கையா?

இச்சேர்க்கையின் சீற்றம்
இலங்கையிலும் தொற்றுதே
தமிழினத்தில் ஒர் ஐரோப்பா
ஊரில் இனி உருவாகும்.

நோர்வே நக்கீரா
11.06.2010

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • Fiona
    Fiona

    சப்பெனத் திரிவதைவிட
    ஒப்பனை தப்பல்ல நக்கீரா
    இளமைத் தோற்றங்கொளின்
    மனதும் இளமைகொள்ளுமே

    Reply
  • Nackeera
    Nackeera

    பியோனா! உங்கள் கருத்துடன் எந்த மறுப்பும் கிடையாது. ஒப்பனை என்றும் இருக்க வேண்டியது தான். ஏன் கற்பனையின் வடிக்கும் கவிதையில் கூட ஒப்பனைதானே அழகு. ஒப்பனை என்று எண்ணி ஒவ்வாத ஒன்றை ஒப்பனை ஆக்குவதால் உள்ள அழகுமல்லவா சிலவேளைகளில் கெட்டு விடுகிறது. ஒரு பழமொழி சொல்வார்கள் காகம் அன்னநடை நடக்கப்போய் தன்னடையும் கெட்டதாம் என்ற கணக்காகக் கூடாது. ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு விதத்தில் அழகானவர்கள்தான். ஒப்பனை என்பது உள்ள அழகை பெருகேற்றுவதே. அதற்காக முழுமையாக தம்மை மாற்றப்போய் சுயஅழகும் கெட்டு நிற்கும் நிலையூடாக ஐரோப்பிய வாழ்வியலில் சிவற்றைச் சிந்தியிருக்கிறேன். அஞ்சனம் தீட்டுவது என்பது எமது கீழத்தேயநாடுகளில் இருந்து விருத்தியான ஒன்றுதான். நான் ஒற்பனையினூடாக சொல்லும் விடையம் வேறு. என்ஒப்பனைக்குப் பின்னால் வேறு கருத்துக்கள் மறைந்து கிடக்கின்றன: பார்த்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன்.

    நன்றியுடன் நோர்வே நக்கீரா

    Reply
  • palli
    palli

    ஒப்பனை கேடு சொல்லி
    அப்பனாய் கவிதை ஒன்று
    நக்கீரன் தந்துள்ளார்

    அளவான ஒப்பனைகள்
    அழகான குடும்பத்துக்கு
    அதுக்கான சிறு குறிப்பு
    அன்போடு பல்லியிவன்

    வாசலிலே கோலமிட்டு
    வீட்டுக்கு அழகென்றால்
    முதுகிலே கோலமிட்டு
    ஒப்பனையின் இலக்கணமாம்

    இமை காக்க முடியில்லை
    இதனாலே கவலையில்லை
    கண் மீது கரு வளயம்
    கரும் பேனா துணையுடனே

    அளவான உடுப்பில்லை
    ஆனாலும் அழகென்பார்
    பல் கூட துலக்காமல்
    அதுக்கும் ஒப்பனையாம்

    இங்கேபார் என்பதுபோல்
    இடுப்பின் கீழ் சிற்றாடை
    இளசுகள் வட்டத்துக்கோ
    இதனாலே தடுமாற்றம்

    வறுமையின் கோலத்தால்
    காதிலே தோடில்லை-அன்று
    ஒப்பனையின் வேகத்தால்
    நாவிலேயும் தோடுண்டு- இன்று

    உள்ளாடை தெரியட்டாம்
    உடுப்பு கடை முதலாளி
    அது தெரிய உடுக்கட்டாம்
    ஒப்பனையின் மேஸ்த்திரிகள்

    முடியில்லா முகத்திலே
    மீசையுடன் தாடி உண்டு
    முடிஉள்ள தலையேனும்
    மொட்டைதான் ஒப்பனையாம்

    கண்ணுக்கு மை அழகு
    ஒப்பனையில் எழுதியது
    தொடர்வதனால் அது கேடு
    மருத்துவமே சொல்லுகிறது

    ஒப்பனையை ரசிப்போம் நாம்
    சினிமாவிலும் ராமாவிலும்
    வாழ்க்கை என்ன சினிமாவா
    ஒப்பனையை வரவேற்க;

    நட்புடன் பல்லி;

    Reply
  • T sothilingam
    T sothilingam

    நக்கீரா பல்லி
    கவிதை கேட்டு
    குண்டலீனி எழுந்து
    அண்டமெல்லாம் அளந்து
    அலைந்து விழுந்தது
    பிளாக் கோலில்

    Reply
  • கந்தையா
    கந்தையா

    என்னத்தைச் சொன்னாலும் பல்லி இப்ப நல்லாய் கவிதை எழுதப் பழகிட்டார். வாழ்த்துக்கள் பல்லி.

    முடியில்லா முகத்திலே
    மீசையுடன் தாடி உண்டு
    முடிஉள்ள தலையேனும்
    மொட்டைதான் ஒப்பனையாம்

    நக்கீரா மிஸ்பண்ணிய ஆண்களின் ஒப்பனையையும் பல்லி கவர் பண்ணீட்டார்.

    Reply
  • palli
    palli

    ::// வாழ்த்துக்கள் பல்லி. //
    நன்றி கந்தையாண்ணா;

    //அலைந்து விழுந்தது
    பிளாக் கோலில்:://
    அப்புறம்???

    Reply
  • Nackeera
    Nackeera

    பல்லியைக் காணவில்லை என்று கவலைப்பட்டேன். கோடைவிடுமுறையைக் கழிக்க எங்காவது பயணித்து விட்டாரோ என்றெண்ணினேன். நான்விட்டதை பல்லி தொடர்ந்திருக்கிறார்.

    பல்லி கலக்கிறார்
    கலக்கிறது அடிவயிறு

    கன்னிகள் எல்லாம்
    கனிகளாகி
    கன்னிகழிகிறது
    13வயதில்
    சீதணம் இன்றி
    இதுவும் ஒப்பனையாம்
    நாகரீகத்தின் கற்பனையாம்
    குழந்தை குழந்தை பெறும்
    கோலம்தான் ஒப்பனையாம்

    தோடு குத்த இடமின்றி
    தொப்பிளிலும் தோப்பையிலும்
    கண்காணா இடமெல்லாம்
    காட்டவென்றே குத்துகிறார்
    குத்திக் குத்தியே
    கண்கெட்டுப்போய் பின்
    புண்பட்டுப்போனதோ?

    அப்புவின் கோவணம்
    ஐரோப்பாவில் நாகரீகம்

    பணம் பிதுங்கும் நாடுகளில்
    உடையின்றி அவலங்கள்
    உடைக்குப் பதில்
    உடலில் கீறப்படும்
    உடையில்லா வரைபடங்கள்.
    வரைபடமே உடையாகும்
    ஒப்பனை தனையும்
    கண்டீரோ?
    ஒப்பனை செய்ய
    கீறவிடமின்றி
    அங்கேயும் கீறுகிறார்கள்
    இனி எங்கெங்கு கீறிக் கிளிப்பார்களோ?

    Reply
  • Nackeera
    Nackeera

    என்ன சோதிலிங்கம்! குண்டலீனி எழுந்தால் பிளக்கோலில் விழக்கூடாது. இங்கே விழுபவர்கள் எல்லாம் வேற்று நீர் விழுந்தவர்கள். குண்டலீனி எழுந்தாலும் ஞானம். ஆமாம் பிளக்கோலிலும் ஞானம்தானே… ஞானம் என்பது பால்வெளி மண்டலம். விமானங்கள் தொலையும் பிளக்கோலும் அங்குதான். விமானமா ரொக்கட்டா என்பதை தொழில் நுட்பம்தான் நிர்ணயிக்கும்.

    சோதியின் கற்பனை அபரீதம்.
    கற்பனை மிக மிக அழகாக இருக்கிறது.
    தொடருங்கள்.
    கவிதையின்
    ஒப்பனையே
    கற்பனை தான்

    Reply
  • Nackeera
    Nackeera

    தடிமன் வராதிருக்க
    தலையெடுத்த கதைபோல
    முடியில்லா மண்டையில்
    மொட்டையும் ஒப்பனையே
    நன்றி பல்லி

    பிற்குறிப்பு: யாக்கை-மெய் என்பது உடல் அல்லது உடம்பு என்பது பொருள். இனி மீண்டும் ஒருதரம் கவிதையைப் படித்துப் பாருங்கள். கவிதையில் புதுவடிவம் தென்படும்

    Reply
  • palli
    palli

    நக்கீரா உன் கவி வேண்டும்
    அதுக்காக என் வரி சில;

    அழகியல் குறிப்பொன்று
    அடிவயிறு கலங்கி நிற்க்க
    ஆனாலும் அதுதானாம்
    ஆடம்பர அங்கலாய்ப்பு

    கழுத்துக்குமேல் மட்டும்
    கழுவிவிடுங்க முகமதனை
    இதமாய் தலைநனைத்து
    ஈரமாய் கட்டி விட்டு

    கதிரை ஒன்றை எடுத்து
    கண்ணாடி முன் அமர்ந்து
    காற்றில்லா அறையில்
    கதவையும் தாழிட்டு

    வேகவைத்த இட்டலியை
    வேகாத றால் சேர்த்து
    தேசிக்காய் சாறூற்றி
    தேறும்வரை பிசைந்து விட்டு

    தேறிய களி எடுத்து
    தேயுங்கள் முக திரையில்
    உண்மை முகம் மாறும் வரை
    உள்ளம் கையால் தேயுங்கள்

    கண்ணிமைக்கு பசை பூசி
    கட்பண்ணி இழுத்திடுங்கள்
    பாவபட்ட இமை அதனை
    பலமாயே அமத்திடுங்கள்

    உடுக்கும் கலர் கொண்டு
    உதட்டைதான் போர்த்திடலாம்
    வில்லாய் வளைத்திடலாம்
    வீங்கிய கண் மேலே

    கட்டிய தலை முடியை
    அவிழ்த்து விட்டு சிலிப்பிடுங்கள்
    கண்டபடி சிரித்து விட்டு
    கதவைதான் திறந்திடலாம்

    அழகோ அழகு அப்படி அழகு
    இத்தனைக்கும் பல்லிக்கு
    ஒரு நன்றி சொன்னாலே போதும்
    மறக்க வேண்டாம் நன்றி சொன்னாலே போதும்;

    நகைசுவைக்காய் பல்லி;

    Reply
  • Nackeera
    Nackeera

    அழகியல் குறிப்பிற்கு
    இழகிய இதயத்தால்
    நன்றியோ நன்றி பல்லி

    மரத்தில் இருந்து
    குதித்த குரங்கு
    ஆடை அணிந்தே
    நாகரீகம் ஆனது

    படுக்கையை விட்டெழுந்து
    உடுப்பை மறந்து விட்டு
    தடக்கி விளவென்று
    மிதுவடி இட்டுக்கொண்டு
    இடக்கு மிடக்காய்
    போகிறார்கள் பெண்கள்
    நாகரீகம் நாறுகிறது.

    குளிக்கப்போன பிள்ளை
    குறுக்குக்கட்டுடன்
    குதிக்கால் அணியுடனும்
    குதித்துக் குதித்து
    போவது கண்டு
    குரங்கு கூடக்
    குனிந்து பார்த்தது.
    புரிந்துகொண்டது
    குரங்கு நாகரீகத்தை.

    குண்டூசி குத்த இடமின்றி
    வண்டியிலும் குண்டியிலும்
    எப்போ தொண்டையில்?

    குழந்தைகள் சீ சீ என்பது
    சொல்லப் மொழி சீச்சீ
    சோறுக்கு சீ
    சோச்சீ
    பாலுக்கு சீ……?
    என்று கேட்கிறார்கள்
    திறந்த மனத்துடன்
    தேவதைகள் போகும் போது

    உடலுக்கு உடைபோய்
    உடைக்கு உடலானது
    உலகம்
    காசிருந்தும்
    காய்கிறது வயிறு

    சிலிக்கோனில்
    பாலில்லை என்று
    அலறுகிறான் பாலகன்
    அம்மா யாருக்கே
    கடன் கொடுத்து விட்டாளாம்
    அப்பா சொல்கிறார்

    எந்த துச்சாதனம்
    ஐரோப்பிய அவையில்
    துயில் கலைந்தான்.
    துரொபதியாகத்
    திரிகிறார்களே
    தெருக்களெங்கும்
    தேவதைகளின் தேக(ச)ம்.
    தேவதைகள் அல்ல
    தேவ வதை வதை தேவதை
    தேவதைகளே
    தேகத்தைத் தையுங்கள்
    தேசியம் தெரியும்:
    உங்கள் தேகம் போல்
    கிடக்கிறது எம்தேசியம்.

    தேசியம் அல்ல இது
    தேச அவம்

    இதுவும் நகைச்சுவைக்காகவே

    Reply
  • palli
    palli

    //உடலுக்கு உடைபோய்
    உடைக்கு உடலானது
    உலகம்
    காசிருந்தும்
    காய்கிறது வயிறு

    சிலிக்கோனில்
    பாலில்லை என்று
    அலறுகிறான் பாலகன்
    அம்மா யாருக்கே
    கடன் கொடுத்து விட்டாளாம்
    அப்பா சொல்கிறார்//

    இலக்கியத்தில் சொல் எடுத்து
    இலக்கணமாய் அதை தொடுத்து
    கம்பனிடம் கடன் வாங்கி
    கவிதை பல உண்டுதான்

    ஆனாலும் அவை தாண்டி
    நக்கீரா உன் யதார்த்த கவி
    பல்லியையும் எழுத வைக்கும்;

    Reply
  • Nackeera
    Nackeera

    பல்லி மனம்திறந்து சொல்கிறேன். உங்களது கவிதைகள் அருமை. சொற்களை அழகாக அடுக்குகிறீர்கள். தேசத்தில் ஒரு பரீட்சாத்தமாகதான் கவிதை போடப்பட்டது. பின்புதான் புரியவந்தது. பல்லியைப்போல் பலர்கவித்துவத்துடன் எத்தனைபேர் ஒழிந்திருக்கிறார்கள் என்று. அசிங்கங்களைக் கூட அழகாகத் தரக்கூடியது கவிதை.

    கவியின் விதையே
    கவிதை
    கவிதாவி கடுதாசியில்
    விழுந்தாலும் கவிதை
    கருவின் விதையல்லவோ
    கவிதை

    இது என்கவிதைக்கான கவிவரைறை. நான் பல்லிக்கவிதையின் இரசிகன். தொடர்ந்து எழுதுங்கள்.

    Reply