இலங்கை உள்விவகாரங்களில் ஐ.நா.தலையிடக் கூடாது – யசூஸி அகாஸி

ya.jpgஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்க உத்தேசித்துள்ள குழுவானது இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஆலோசனைகளையும் சிபாரிசுகளையும் வழங்க முடியும். எனினும் உள்நாட்டு விவகாரங்களில் அது (ஐ.நா) தலையிடக்கூடாதென இலங்கைக்கான ஜப்பானிய விசேட தூதுவர் யசூஸி அகாஸி தெரிவித்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்படவுள்ள இத்தகைய குழு பிரயோசனம் உள்ளதாக இருக்க முடியுமெனக் குறிப்பிட்ட அவர், அக்குழு இலங்கையின் அபிவிருத்தி மீள் கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு சிறந்த ஆலோசனைகளை முன்வைக்க முடியுமெனவும் தெரிவித்தார். ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர். இம்முறை நாம் மேற்கொண்டிருந்த இலங்கை விஜயத்தின்போது பல சாதகமான மாறுதல்களை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் குறித்த தமது மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தவறான கண்ணோட்டத்தில் நோக்கும் சில நாடுகள் அதனை நேரில் கண்டு உண்மை நிலையைத் தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்தார்.

ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வடபகுதிக்கான விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து நேற்று நாடுதிரும்ப முன்னர் அவர் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். அதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜப்பானியத் தூதுவர் யசூஷி அகாஸி இங்கு மேலும் குறிப்பிடுகையில்; ஐ.நா செயலாளர் நாயகத்திற்கென நியமிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான குழு இலங்கை ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ள நல்லிணக்கக் குழுவிற்கு தமது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் வழங்க முடியும். எனினும் அந்த நல்லிணக்கக் குழுவின் நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது. இம்முறை விஜயத்தின்போது நான் தமிழ்க் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தினேன். தமிழ் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அரசியல் தீர்வொன்று சம்பந்த மாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

வடக்கில் மீள்குடியேற்றம் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் உணவு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் சம்பந்தமாக அவர்கள் தெளிவுபடுத்தினர். குறிப்பாக வடக்கில் பெருமளவு இராணுவத்தினர் உள்ளதாகவும் குறிப்பிட்டனர். இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றங்கள் பல்வேறு எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்துள்ளது. இதன் மூலம் சகல இன, மத மக்களும் சுபீட்சமாகவும் அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் இலங்கையொன்றைக் கட்டியெழுப்ப முடியும் என நான் நம்புகின்றேன்.

இலங்கையில் தற்போது பல சாதகமான மாற்றங்களைக் காணமுடிகிறது. அபிவிருத்தி உட்பட பல முன்னேற்றகரமான செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல்வேறு நாடுகள் அதற்கான உதவி ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றன. ஜப்பானும் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமது பூரண ஆதரவினையும் ஒத்துழைப்புகளையும் தொடர்ந்தும் வழங்கும்.

ஜப்பானிய அரசாங்கம் இவ்வருடத்திற்கென 39 பில்லியன் யென்களை இலங்கைக்கு நிதியுதவியாக வழங்குகிறது. நாட்டின் தேசிய நலனைக் கருத்திற்கொண்டு இந்நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நான்கு முக்கிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிழக்கு மத்திய மாகாணங்களின் அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களின் குடிநீர்த்திட்டங்கள், யாழ். போதனா வைத்தியசாலை புனரமைப்பு மற்றும் மேல் கொத்மலை திட்டங்களின் புனரமைப்புக்கும் இந்நிதி செலவிடப்படவுள்ளன.

இலங்கை பல முக்கிய சவால்களை எதிர்கொண்டு தற்போது முன்னேற்றகரமானதும் சாத்தியமானதுமான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டங்களை வெறுமனே விமர்சிப்பது முறையல்ல. இடம்பெற்று வரும் மாறுதல்களை நேரில் கண்டு அவை பற்றி பேச வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு தற்போது நிலவும் சிறந்த சூழலில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிப்பது தொடர்பில் ஜப்பான் கொண்டுள்ள நிலைப்பாடுகள் பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அகாஸி; இவ்விவகாரத்தில் நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்படுகிறது. பாதுகாப்பு விவகாரங்களுக்கு முன்னுரிமையளிக்கப்பட்டு வருவதனால் அதனூடாகவே தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்ள முடியும். நிலைமைகள் சீரடைந்து வருவதால் அரசாங்கம் இது விடயத்தில் உரிய கவனம் செலுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • Appu hammy
    Appu hammy

    Of course they shouldn’t interfere in world affairs!! They are JUST the “UNITED NATIONS” after all…. !!!!

    yes Mr.Akasi you also don’t interfere in our country.

    Shame on you all four nations, constitutent of the so called ?? group. Let there be justice. If you and we fail to do it, the new generations will eventually suffer the consequences; it is history.

    Reply
  • சாந்தன்
    சாந்தன்

    இதேபோல அண்மையில் ஐ.நாவில் விவாததுக்கு வர இருக்கும் திமிங்கில வேட்டை தடைச்சட்டத்துக்கு எதிராக வாக்களிக்க (திமிங்கிலங்களைக் கொல்லும் ஜப்பானுக்கு ஆதரவாக)ஒருநாளுக்கு $1000 லஞ்சமும் மற்றும் ‘நல்ல பெண்களும்’ அந்நாட்டு அமைச்சர்கள் அதிகாரிகளுக்கு வழங்கி ஐ.நா வாக்களிப்பில் ஜப்பான் செய்த விளையாட்டிலும் ஐ.நா தலையிட வேண்டாம் எனச் சொல்லுங்கள்! சொல்ல ஏலாது ஏனென்றால் ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோக்கள் உண்டல்லவா?

    Reply