தமிழ்!! – இனியவன் இஸாறுதீன்

tamilதமிழ்

மொழியெனப் படுவது
இதயங்களின்
உணர்வுத்தானம்

உணர்வுகளின்
இதயப்பாலம்

ஒருவரது சிந்தனையை
இன்னொருவர் அடைந்துகொள்ள
உதவும் வாகனம்

இத்தனை பயனைப் பெற்ற மாந்தர்
தங்களது தாய்மொழிக்குப்
பாராட்டுவிழா நடத்தினர்

அரேபியர் தங்கள் மொழியை
ஆன்மீகமொழி என்று
அறைந்தனர்

ஆங்கிலேயர் தங்கள் மொழியை
வணிகமொழி என்று
வாழ்த்தினர்

இத்தாலியர் தங்கள் மொழியை
இசைமொழி என்று
இயம்பினர்

பிரெஞ்சுக்காரர் தங்கள் மொழியை
காதல்மொழி என்று
கூவினர்

உருதுக்காரர் தங்கள் மொழியை
கவிதைமொழி என்று
‘கஜல்’ பாடினர்

ஆனால் தமிழே
உன்னைத்தான் உலகத்தமிழர்
இதயமொழி என்றே
இயங்குகின்றனர்

முத்துச் சிரித்தால்
உன்னை
முல்லைத்தமிழ் என்போம்

கண் மொழிந்தால்
உன்னை
கன்னித்தமிழ் என்போம்

பரஸ்பரம் நிகழ்ந்தால்
உன்னை
பிள்ளைத்தமிழ் என்போம்

ஆறுதல் வார்த்தையே
உன்னை
அன்னைத்தமிழ் என்போம்

உன் சுவாசம் இல்லையேல்
எம்மிடம்
இல்லை உயிர் என்போம்

தேகமெல்லாம் தித்திக்கும்
தாய்மொழியே

நீ
உதடுகளுக்கு
உண்மையளிக்கிறாய்

உள்ளங்களுக்கு
விருந்து வைக்கிறாய்

உணர்வுகளுக்கு
ஊட்டமளிக்கிறாய்

செவிகளுக்கு
மதுரமாகிறாய்

விழிகளுக்கு
சிற்பமாகிறாய்

உரைத்தால்
இதய நரம்புகளைத்
தித்திக்க மீட்கிறாய்

வரைந்தால்
விழி வழியே
வானவில்லாகிறாய்

இப்படி
உன் செப்படிவித்தையை
செப்புவதெப்படி
ஓ…
எத்தனை அற்புதம் தமிழே

தொன்மைக்காலத்துப் பிறப்பு நீ
மானுடஇதயங்களில்
முளை விட்டாய்

இலக்கியக்கிளைகளில்
வான்தொட்டாய்

இலக்கணத் தளைகளால்
விருட்சமிட்டாய்

அழகியல்க(இ)லைகளில்
நிழல் விட்டாய்

மானுடக்கலையை
மேம்படுத்தி மேம்படுத்தி
மானுடத்திலேயே
மகத்துவமுற்றாய்

எழுதுகோல் உழுதால்
நீ
எழுத்தாய் முளைப்பாய்

எழுத்துக்கள் முளைத்தால்
சொல்லாய் செழிப்பாய்

சொற்கள் செழித்தால்
வார்த்தையாய் விளைப்பாய்

சிந்தனை விளைந்தால்
அறிவாய் கிளைப்பாய்

அறிவாய் கிளைத்தால்
கேள்வியாய் வரமளிப்பாய்

உயிரோடு மெய்புணர்வாய்
உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாய்
ஜீவன் ததும்பும் சொற்கலையில்
ஓவியம் கொணர்வாய்

உன் ஒலிவடிவம்
இதயம் தொடும்போது
வரிவடிவங்களுக்கு
வனப்பும் கொடுப்பாய்

கற்றால்
எங்கள் கல்விக்கு
நீ
மெய்ஞானம் ஆவாய்

கேட்டால்
கேள்விக்கு
நீ
விஞ்ஞானம் ஈவாய்

மானுட உதடுகள்
இதயத்தில் செதுக்கிய
இதிகாசக் கல்வெட்டு நீ

உன் நயத்தால்
எங்கள் வாழ்வை
வளப்படுத்துகிறாய்

உன் நயனத்தால்
எங்கள் நாவுகளை
நெறிப்படுத்துகிறாய்

எதுவாயினும்
நீ
இதயங்களை
இணைக்கும்போதுதான்
நாங்கள்
பரவசமடைகிறோம் தமிழே

-இனியவன் இஸாறுதீன்-

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Kusumpu
    Kusumpu

    ஒவ்வொருவனும் தன்மொழியை பெரிதெனக்கருதுவான். ஆனால் அரேபியருக்கு அரபு தெய்வீக மொழியானாலும் தெய்வீக மொழியாகக் கருதப்பட்டவை 3 மொழிகள் மட்டும்தான். ஒன்று சமஸ்கிருதம்: தமிழ்: இலத்தீன். இம்மூன்று மொழிகளும் ஆதி மொழிகளே.இன்றைய ஐரோப்பிய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிருதம் இவ்வகை மொழியை இந்தோஈரோப்பியன் மொழி எனச் சொல்லப்படுகிறது. போப் எனும் கிறிஸ்தவப்பாதிரியாரின் ஆய்வில் கூட தமிழ் ஒரு தெய்வீகமொழியாகவே கருதினார். அதற்கு அவர்காட்டிய உதாரணங்கள் மாணிக்கவாசரின் திருவாசகமே. திருவாசகத்துக்கு உருகாதால் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது அடைமொழி பழமொழி இன்றைய புதுமொழியும் கூட. கிறீஸ்தவத்தின் மொழியாக ஐரொப்பாவில் பாவிக்கப்பட்டது இலத்தீன். இன்று இருக்கம் பழமைவாய்ந்த கிறீஸ்தவம் கத்தோலிக்கமே. வெகுகாலமாக கத்தோலிக்கம் பாவித்தது இலத்தீனையே. அரேபிய மொழி மிக இவற்றுடன் ஒப்பிடும் போது மிக மிக இளமையான மொழியாகும்.

    நான் முன்பு எழுதிய 3 மொழிகளிலும் இன்று உயிருடன் 40கோடி மக்களுக்கு மேல் உணர்வுகளைப் பகிரும் பாலமாகவும் இன்ரநெட் உலகில் ஆங்கித்துக்கு அடுத்த பெருமொழியாக அருப்பது தமிழே. ஆதியில் இருந்து இன்றுவரை அழியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மொழி தெய்வீக மொழியாகாமல் எந்த மொழி மன்னா தெய்வீக மொழயாக முடியும். வடமொழி கூடத் தமிழுக்குக் கடன் பட்டதே. அதுமட்டுமல்ல தமிழல் உள்ள வடமொழிச் சொற்கள் வாழ்கின்றன. ஆனால் வடமொழி அழிந்து விட்டது தெரிமோ?

    Reply
  • nallurkanthan
    nallurkanthan

    Dear Issarudeen,
    It is really very sweet.My best wishes for your poetic talent.Do more reading and hardwork.Sky is the limit

    Reply
  • பல்லி
    பல்லி

    தமிழ் மீது கவிதை::
    தரமான கவிதை;;
    தாயக கவிதையோ;;
    தனித்துவமான கவிதையே;;

    பல்லிக்கும் விருப்பம்;;
    தமிழை தரணி பாட;;
    பகுத்தறிவாய் எழுதுவேன்;;
    தடுக்காதோ தமிழ்நெறி;;

    இடை மீது இலக்கியம்;;
    இன்பமாய் இலக்கணம்;;
    இதனாலே வெறுப்பெனக்கு;;
    இலக்கிய இலக்கணத்தில்;;

    விளையாட கலைத்துவிட்டான்;;
    பாரதி பாப்பாக்களை;;
    ஓடி ஒழிந்து விடு புலிவருது;;
    தாயவள் கவலையிது;;

    செந்தமிழ் மகாநாடு;;
    சேரியிலே தமிழ் வாழ்வு;;
    சிரிக்காதோ மாற்று மொழி;;
    சிந்திகட்டும் தமிழ் மொழி;;

    பல்லி!!!

    Reply