July

July

“குருந்தூர்மலையில் பானையை காலால் தட்டியதை ஜனாதிபதியிடம் கூறிய போது அதனை பொலிஸ் சம்பந்தப்பட்ட விடயம் என கூறிவிட்டார்.” – இரா.சாணக்கியன்

ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக் கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

துறைநீலாவணை தமிழரசுக்கட்சியின் வட்டாரக்கிளையின் ஏற்பாட்டில் கறுப்பு ஜீலை தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பதாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ் அதிகாரம் இல்லாத அதிகார பரவலாக்கலில் நாம் எவ்வாறு எமது மக்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதுகாக்க முடியும்? கறுப்பு ஜூலை போன்றதொரு  நிலைமை மீண்டும் வந்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தலைவர்களிடம் எந்த அதிகாரங்களும் இல்லை.

தற்போதைய தலைவர்கள் மக்களை காப்பாற்ற முடியாத நிலையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கம் போடும் பிச்சைகளைப் பெற்று அபிவிருத்தி செய்வதாக சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள் இதனைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பவமானது அரசியல் இலாபம் ஈட்டும் வகையில் திட்டுமிட்டு செய்யப்பட்ட விடயமாக தற்போது வரையில் பேசப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கறுப்பு ஜூலை போன்றதொரு நிலைமை மீண்டும் வந்தால் மக்களைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தலைவர்களிடம் எந்த அதிகாரங்களும் இல்லை.

அதனடிப்படையிலேயே நாங்கள் ஜனாதிபதியுடனான அனைத்துச் சந்திப்புக்களிலும் தமிழர்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் அழுத்தம் கொடுத்து வருகின்றோம். நாங்கள் ஒரு தீர்வினை வலியுறுத்திப் பெற்றுக் கொள்வதாக இருந்தால் அது எமது தமிழ் மக்களைக் காப்பாற்றக்கூடியதாகவும் அதற்கான அதிகாரங்களைப் பெற்றுத்தரக் கூடியதுமாக இருக்க வேண்டும்.

வெறுமனே அரசாங்கம் அபிவிருத்தி என்ற போர்வையில் வீதிகளைப் போடுவதும் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதும் எமது இனத்திற்கான நிரந்தரத் தீர்வுகள் அல்ல. எனவேதான் நாம் அதிகார பலத்தினைக் கோரி நிற்கின்றோம். குருந்தூர் மலை விவகாரத்தில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். பொலிஸ் அதிகாரிகளின் தயவில் அந்தப் பொங்கல் நிகழ்வுகள் தடுக்கப்பட்டன.

பானையைக் காலால் எட்டி உதைத்தார்கள். இந்த விடயத்தினையே ஜனாதிபதியிடம் நாம் கூறியிருந்தோம். அவர் இதற்கு அது பொலிஸ் சம்பந்தப்பட்ட விடயம் எனக் கூறியிருந்தார். இந்த அதிகாரம் எங்களிடம் இருந்தால் இவ்வாறான விடயங்கள் இடம்பெறாது. எனவே இதற்குத் தான் நாம் எமக்கான பொலிஸ் அதிகாரமும் தேவை என்பதனை வலியுறுத்துகின்றோம்” என அவர் மேலும் குறிப்பிட்டாhர்.

57 நாடுகளைச் சேர்ந்த 1,767 பேருக்கு பார்வை வழங்கிய இலங்கையர்கள் !

இந்த வருடத்தின்  கடந்த 28 ஆம் திகதி வரையான காலப் பகுதியில்  57 நாடுகளைச் சேர்ந்த 1,767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான்,  தாய்லாந்து, மலேஷியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதயாராச்சி  தெரிவித்தார்.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும்  ஒரு கண் அல்லது இரண்டு கண்களாலும்   பார்க்க முடியாத எந்தவொரு நபருக்கும் இலங்கை கண் மருத்துவ சங்கம் இலவசமாக கண்களை வழங்க முன்வருவதாகவும் ஜகத் சமன் மாதயாராச்சி தெரிவித்தார்.

சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின்னர் உயிரிழந்த மூன்று வயது சிறுவனுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம் !

கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின்னர் மூன்று வயது சிறுவன் உயிரிழந்தமைக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் நேற்று 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடிக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

சிறுநீரக சத்திர கிசிச்சையின் பின் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் உடல் நேற்று (30) மாலை அடக்கம் செய்யப்பட்டதன் பின்னர் குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதேவேளை, முஹம்­மது ஹம்தி எனும் சிறு­வ­னுக்கு ஏற்­பட்ட நிலை தொடர்பில் விசா­ர­ணை நடத்த உத்­த­ர­வி­டப்பட்­டுள்­ள­தாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் ஜீ. விஜ­ய­சூ­ரிய தெரிவித்­துள்ள நிலையில், சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்

முல்லைத்தீவில் 1500 ஏக்கர் நிலத்தில் சிங்கள குடியேற்றங்கள்..?

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக இன்று மாலை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக  முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் எனப்  பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் அக்கரைவெளியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமாகவிருந்த ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

மகாவலி ‘எல்’ வலயத்தினுள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம அலுவலர் பிரிவுகளைக் கையேற்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையிலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல் !

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் சனிக்கிழமை (29) கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் நால்வரையும் ஞாயிற்றுக்கிழமை (30) மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

தொடரும் பொருளாதார நெருக்கடி – வவுனியாவை சேர்ந்த நால்வர் அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சம் !

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியாவைச் சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மரைன் காவல்துறையினர் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

 

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை விட்டு வெளியேறிய 70 பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் – மாணவர்கள் சிரமத்தில் !

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய அனுபவமிக்க விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வெளியேறியதன் காரணமாக அந்தப் பல்கலைக்கழகத்தின் பல பீடங்களில் அன்றாடக் கற்கைகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

2022 ஜனவரி முதல் இந்த ஆண்டு மே வரை 70க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தரும் ஊடகப் பேச்சாளருமான பேராசிரியர் டபிள்யூ.எம். டெரன்ஸ் மதுஜித் இது குறித்து தெரிவிக்கையில் :

“பல ஆசிரியர்கள் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி வெளிநாடு சென்றுள்ளனர். இந்நிலை மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பல் மருத்துவ பீடங்களையே பிரதானமாக பாதித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையான 16 மாதங்களில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னணி விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் 70 பேர் பல்கலைக்கழகத்தை முழுமையாக விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். ஏராளமானோர் படிப்பு விடுப்பில் வெளிநாடு சென்றுள்ளனர்.” என பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சுமார் 50,000 ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள்!

நாட்டில் ஐஸ் போதைப்பொருள் பாவனையாளர்கள் சுமார் 50,000 பேர் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

 

அதன் தலைவர் சட்டத்தரணி சாக்கிய நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பரவி மூன்று வருடங்கள் கடந்துள்ள நிலையில், ஏனைய போதைப்பொருட்களுடன் ஒப்பிடும் போது, ​​அதன் பரவல் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

அதேநேரம் பாடசாலை அமைப்பில் புகையிலை பாவனையின் போக்கு காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பாடசாலை அமைப்பில் நாம் அடிக்கடி புகையிலை பாவனையை பார்க்கிறோம். வீட்டிலேயே புகையிலையைச் செய்து சுண்ணாம்புடன் கலந்து வாயில் வைக்கும் பழக்கம் மாணவர்கள் இடையே காணப்படுகின்றது. புகையிலையால் ஏற்படும் போதைக்கு அவர்கள் பழக்கப்பட்டுள்ளதாக தேசிய தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

“விரைவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் – ஐந்து வருடங்களில் வடக்கு மாகாணமும் சிங்களவர் மயமாகும்.” – யாழ்.பல்கலைக்கழக வேந்தர் பத்மநாதன் கவலை !

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றமையினால் எதிர்வரும் ஐந்து வருடங்களில் வட மாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை இல்லாது போய்விடும் என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.

 

தமிழ் மக்களுடைய மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டுமானால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர் யாழ்ப்பாணத்தில் வைத்து அவர் கூறியுள்ளார்.

எனவே 13 ஆவது திருத்தத்தில் உள்ள பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள நடைமுறைப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் இருப்பை நிலை நாட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

யாழ்ப்பாண பல்கலைக்கழகக் கலைப்பீடத்தை தவிர்ந்த ஏனைய பீடங்கள் பெரும்பான்மை மாணவர்களை கொண்டுள்ளமை போன்று வடக்கு மாகாணமும் தமிழர்களின் தனித்துவமான அடையாளத்தில் இருந்து மாற்றக்கூடிய வகையில் செயற்பாடுகள் இடம்பெற்று வருதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியரும் வேந்தருமான பத்மநாதன் தெரிவித்தார்.

 

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நீண்ட வரலாறு உண்டு எனக் குறிப்பிட்ட வாழ்நாள் பேராசிரியர் பந்மநாதன் , தமிழ்த் தலைவர்கள் உரிய நேரத்தில் கேட்கவேண்டியவற்றை கேட்காமையின் தவறினாலேயே இலங்கையில் இனப் பிரச்சினை உருவெடுத்தது என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

அப்போதைய தமிழ்த் தலைவர்கள் கொழும்பை மையமாகக் கொண்டு வடக்கு கிழக்கு தமிழர்களின் பிரச்சினையை நோக்கியதாக அவர் கூறினார்.

கிழக்கு மாகாணம் மூன்று சமூகங்களின் பிரதேசமாக உள்ளதுடன் முஸ்லிம் சமூகம் தமிழ் சமூகத்திலும் பார்க்க கூடுதலாக காணப்படுவதாக தெரிவித்தார்.

 

தமிழ் மக்கள் தமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொண்டால் நிலங்களையும், கடல் வளங்களையும் பயன்படுத்தி பொருளாரத்தில் பலமடைய முடியும் என்பதுடன் தொழில் வாய்ப்புக்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் எனவும் பத்மநாதன் தெரிவித்தார்.

 

எனவே உரிய முறையில் மாகாணசபை அதிகாரங்களை நடைமுறைப்படுத்த அனைத்து கட்சிகள் உட்பட கல்வியலாளர்கள், பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் அரசியல் கட்சி கூட்டத்தில் குண்டுவெடிப்பு – 40 பேர் பலி !

பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று (30) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அப்போது திடீரென குண்டு வெடித்ததில் இதில் கட்சியின் முக்கிய பிரமுகர் உள்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 200 பேர் காயமடைந்துள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

குறித்த குண்டு தாக்குதல் பாகிஸ்தானின் பஜௌர் நகரில் அரசியல் கூட்டத்தை குறி வைத்து இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.