13

13

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தோண்டும் பணியை தற்காலிகமாக நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றில் இருந்து கடந்த 12ஆம் திகதி உத்தரவு கிடைக்கப்பெற்றிருந்தது.

சர்வதேச தரம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு சுரங்கம் தோண்டுவதற்கு ஏற்ற சூழல் உருவாகும் வரை இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுகள் முறையான நியமங்கள் மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக இல்லை எனவும், அவ்வாறான மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பல தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு அண்மையில் புதைகுழிக்கு அருகில் போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

எவ்வாறாயினும், இந்த இடத்தில் மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, புலிகளின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 16 மனித எலும்புகள், பல புலி சீருடைகள், ஆயுதங்கள், சில வெடிகுண்டுகள் மற்றும் பிற இராணுவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

 

குறித்த பொருட்கள் தற்போது முல்லைத்தீவு நீதிமன்றில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதுடன் கொக்கிளாய் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்கள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு திணைக்களம் இணைந்து கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியை அகழ்வு செய்து வருகின்றனர்.

“எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.” – இலங்கை பாதுகாப்பு அமைச்சு

“இலங்கை இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச கண்காணிப்பை கோருவது சிறுபிள்ளை தனமானது.எடுத்ததற்கெல்லாம் சர்வதேச விசாரணையை கேட்காதீர்கள்.”  என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வலியுறுத்தியுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், சர்வதேச கண்காணிப்பு அவசியம் என்றும் தமிழ் அரசியல்வாதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளின் இந்தக் கோரிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தனவை தொடர்புகொண்டு வினவிய போது, அகழ்வு பணிகளை விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ளார்.

“வன்னிப் பிரதேசம் யுத்தம் நடந்த பூமி எனவும் அந்தப் பகுதியிலேயே மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே அந்த புதைகுழி தோண்டப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் ஜெனரல் கமல் குணரட்ன குறிப்பிட்டுள்ளர்.

சம்பவங்கள் நடக்கும் இடங்களில் அரச புலனாய்வாளர்களின் பிரசன்னம் இருக்கும் என்பதுடன், அதனை தவிர்க்க முடியது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

அது தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கூறியுள்ள அவர், மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் நீதிமன்ற உத்தரவில் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதற்கான பணிகள் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய நடைபெறும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன மேலும் கூறியுள்ளார்.

வழமைக்கு திரும்பியது திரிபோஷா உற்பத்தி விநியோகம் – 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி !

திரிபோஷ உற்பத்தி மற்றும் விநியோகம் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும் தற்போது மாதமொன்றுக்கு 13 இலட்சம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி செய்யப்படுவதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார் .

 

ஒரு மாதத்திற்குத் தேவையான திரிபோஷவை உற்பத்தி செய்ய 15 கிலோ மெற்றிக் தொன் சோளம் தேவைப்படுவதாகவும், அதனை உள்நாட்டில் கொள்வனவு செய்ய முடியாத நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளதாகவும் தலைவர் தெரிவித்தார்.

 

பெரும்பாலான உள்ளூர் விவசாயிகள் மக்காச்சோளத்தை பயிரிட்டாலும், அறுவடைக்கு பின் தேவையான தொழில்நுட்ப அறிவு இல்லாததால், சரியான தரத்துடன் சந்தைக்கு பயிரை வழங்க முடியாமல் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

மாதாந்தம் 19 இலட்சம் திரிபோஷ பொதிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் 13 இலட்சம் பொதிகளை தயாரிக்கமுடிவதாகவும் குறிப்பிட்டுள்ள அவர் தேவையான அளவு சோளம் கிடைத்தால் 19 இலட்சம் பொதிகளையும் தொடர்ச்சியாக 20 நாட்களுக்குள் இலங்கையில் உற்பத்தி செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் இலவச வகுப்புகளை நடாத்தி மாணவிகள் மீது துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!

யாழில் இலவச வகுப்புக்களை நடத்தி வந்த, நபரொருவர் தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மாணவிகள் இருவர் தெரிவித்ததையடுத்து, குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பலாலி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், நேற்றைய தினம் (புதன்கிழமை) தேசிய சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் மாணவர்களுக்கு சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியுள்ளனர்.

 

இதன்போது 13 வயதான மாணவிகள் இருவர், தமக்கு இலவசமாகக் கல்வி கற்பிக்கும் ஒருவர், தம்மை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகத் தெரிவித்துள்ளனர்.

 

அது தொடர்பில் பலாலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் குறித்த நபரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தனியார் வகுப்புக்களில் பாடசாலை மாணவிகள் மீது துஷ்பிரயோகம் நடைபெறுவது அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் இதுபோல முல்லைத்தீவு நகர் பகுதியில் உள்ள பிரதானமான பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவர் உயர்தர ஆண் மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தி அதன் மூலமாக பாடசாலையின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை வீடியோக்களாக்கியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளுக்கும் – இதனைக் கண்டு கொள்ளாது இருக்கும் வலயக்கல்வி பணிமனை அதிகாரிகளுக்கும் எதிராக உறுதியான நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் கல்வி கற்ற சமூகம் எடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

இதனைக் கண்டுகொள்ளாது கடந்து செல்வோமாயின் பாடசாலை கல்வியை தொடரும் முன் வரும் பல மாணவிகளின் எதிர்காலமே கேள்விக்கு உள்ளாகும் துப்பாக்கிய நிலை ஏற்படலாம் என பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர்.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு 1929 என்ற தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்துமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் கவனிக்கத்தக்கது.

சரியான மருத்துவ உபகரணங்கள் இல்லை – 21 வயது யுவதி மரணம் – இலங்கையில் தொடர்கதையாகும் வைத்தியசாலை மரணங்கள்!

அரசு சரியான மருத்துவ உபகரணங்களை வழங்காதது பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்தமைக்கான காரணமாக இருக்கலாம் என அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எச். எம். பி. எஸ். மடிவத்த இன்று தெரிவித்தார்.

யுவதிக்கு செலுத்தப்பட்ட மருந்தை 10 மில்லி சிரிஞ்சில் கரைத்து செலுத்த வேண்டும் என்றாலும், பேராதனை வைத்தியசாலையில் மட்டுமன்றி கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் 10 மில்லி சிரிஞ்ச்கள் இல்லை.இதனால் தாதி இரண்டு 5 மில்லி சிரிஞ்ச்களில் இரண்டு முறை ஊசி போட்டிருக்க கூடும் .

குறித்த 5 மில்லி சிரிஞ்சில் நீர்த்திருந்தால், அது அதிக செறிவூட்டலில் பெற்றிருக்கலாம் என்றும், அரசு மருத்துவமனைகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை வழங்காததே இதற்குக் காரணம் என்றும் அவர் மேலும் கூறினார்.

 

ஊசி மூலம் செலுத்தப்பட்டுள்ள மருந்து, நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படும் மருந்து என்றும், செவிலியர் மீது எந்த தவறும் இல்லை என்றும், சரியான முறையில் தடுப்பூசி போடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

சமீபகாலமாக, தரம் குறைந்த மருந்து மிஷன் அல்லது வேறு காரணங்களுக்காக பெறப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

செவிலியர்களாகிய தாங்கள் நோயாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் மருந்துகளையே வழங்க வேண்டியுள்ளது என தெரிவித்த அவர், மருந்தின் தரத்தை கையாளும் திறன் செவிலியர்களுக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்றதான வைத்தியசாலை மரணங்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் கிளிநொச்சி போதனாவைத்தியசாலையில் முறையான பராமரிப்பு இன்றி நான்கு சிசுக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது. மேலும் நுவரெலியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண்சிகிச்சையால் பலர் பாதிக்கப்பட்டிருந்தததுடன் 10ற்கும் அதிகமானோரின் நிலை மோசமடைந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய நிறுவனமொன்றிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் காணப்பட்ட பற்றீரியா காரணமாகவே சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் அசௌகரியத்தை எதிர்்கொண்டதாகவும் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தமை கவனத்தில் கொள்ளத்தக்கது.

முல்லைத்தீவில் இந்து ஆலயம் கட்டப்போகிறார்கள் என கல்கமுவ சந்தபோதி தேரர் பொலிஸில் முறைப்பாடு !

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழர்களால் இந்து ஆலயம் ஒன்று நிறுவப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து கல்கமுவ சந்தபோதி தேரர் நேற்றுமுன்தினம்(11) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார்.

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூக செயற்பாட்டாளர் மயூரன் மற்றும் சிவகுரு ஆதீனத்தின் முதல்வரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையாக மக்கள் பேரியக்கத்தின் இணைப்பாளருமான வேலன் சுவாமிகள் ஆகிய மூவருக்கு எதிராக இம்முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களைச் சார்ந்த தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் இந்துக் குருமார்களையும் இணைத்து மிகப்பெரிய பூஜை ஒன்றை நடத்தி ஆலயம் ஒன்றை நிறுவ இருப்பதாக தகவல் தகவல் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு எதிராக நாளை(14) சிங்கள மக்கள் அனைவரையும் ஒன்றிணையுமாறு தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது தொடர்பில் நேற்று(12) துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மூவரையும் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த ரவிகரன் “எவ்வாறாயினும் நாளையதினம் (14) பூஜைகள் நடைபெறும். எனக் குறிப்பிட்டுள்ளார்.