07

07

எங்கள் ரகசியங்களை திருடி உருவானதே த்ரெட்ஸ் – வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு !

த்ரெட்ஸ்(Threads) நிறுவனம் மீது வழக்கு தொடுக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

குறித்த முறைபாட்டில் ட்விட்டர் நிறுவன இரகசியங்களை திருடி த்ரெட்ஸ் உருவாக்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ட்விட்டர் சார்பாக மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மெட்டா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சமீபத்திய சமூக ஊடக கருவியான (Threads) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.

முதல் நான்கு மணி நேரத்தில் 5 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பேர்க் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய கருவி ட்விட்டர் நெட்வொர்க்கிற்கு கடுமையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக ட்விட்டர் உரிமையாளர் எலோன் மஸ்க் செய்த சமீபத்திய மாற்றங்கள் காரணமாக சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்,

இத்தகைய பின்னணியில், புதிய கருவி விரைவில் பிரபலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் சிறீதரன் !

மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றில் 60 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை செய்யப்பட்டு ஆலயக் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்டபாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அண்மையில் கொக்குதொடுவாயில் பல பெண் போராளிகளின் உடல்கள் எனக் கூறப்படும் பல மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

எமது நாட்டில் எங்கு தோண்டினாலும் எலும்புக் கூடுகளே இன்று மீட்கப்படுகின்றன.

இந்த நாட்டில் எங்கு பார்த்தாலும் தமிழ்ப் போராளிகளின் உடல்கள் எடுப்பது போல இந்த மண்டைதீவு தூமையார் ஆலயக் கிணற்றையும் துப்புரவு செய்தால் சுமார் 60க்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்களை தோண்டி எடுக்க முடியும்.

இதன் காரணமாகவே இலங்கை இராணுவத்தினர் அந்த இடத்தில் உள்ள மக்களின் காணிகளைப் பறித்து வைத்திருக்கின்றனர்.

சில காணிகளை விடுவிக்காமலும் இருக்கின்றனர். மண்டைதீவில் சதாசிவம் செந்தில் மணி, வைரவநாதன் மகேஸ்வரி உள்ளிட்ட பலரின் காணிகளை இராணுவத்தினர் பலவந்தமாக பிடித்து வைத்திருக்கின்றனர்.

இதனால் குறித்த காணிகளுக்குச் சொந்தக்காரர்கள் இலங்கையின் பல பிரதேசங்களில் அகதிகளாக வாழ்கிறார்கள்.

நல்லிணக்கம் குறித்து அதிகம் பேசும் அரசாங்கம், சமாதானம் பேசும் அரசாங்கம் தொடர்ந்தும் அப்பாவி மக்களது காணிகளை அபகரிக்க நினைப்பது மிக மோசமான செயற்பாடுகளாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“சர்வதேச பொறிமுறை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையும்.” – சரத் வீரசேகர

சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளமை எமது நாட்டு இராணுவ வீரர்களுக்கு பாதகமாக அமையுமென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வியடம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக சர்வதேச பொறிமுறையின் கீழ் விசாரணை இடம்பெற வேண்டும் என்று ஜெனிவா பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு அரசாங்கம் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.

எனினும் இந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் ஊடாக எமது இராணுவத்தினருக்கு எதிராக ஆதாரங்களை திரட்டினால், அவர்களை சர்வதேச நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல முடியுமா என்பதை நாம் ஆராய வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் நாம் அன்று எதிர்ப்பினை இங்கு வெளியிட்டோம். ஏனெனில், இதில் எவரேனும் ஒருவர் இராணுவத்தினருக்கு எதிராக பொய் சாட்சி கூறுவாராயின், குறித்த இராணுவ வீரரை கைது செய்து சர்வதேச நீதிமன்றில் முன்னிலைப்படுத்த முடியும்.

ரோம் உடன்படிக்கையில் நாமும் கைச்சாத்திட்டுள்ளமையால், இவ்வாறான செயற்பாடுகள் எதிர்க்காலத்தில் இடம்பெறலாம். எனவே, இவை நடக்காமல் இருக்க அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும். அத்தோடு, யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த பாதுகாப்புத் தரப்பினர், அரசியல்வாதிகளுக்கு சில நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன.

இது முற்றாக சட்டவிரோதமான செயற்பாடாகும்” என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

வன்னி இராணுவ முகாம்களிலுள்ள விகாரைகளின் கீழ் காணாமலாக்கப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளார்கள் !

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினர் நிலைகொண்டுள்ள காணிகள் மற்றும் இராணுவ முகாம்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைகளின் கீழ் மனித புதைகுழிகள் காணப்படலாம் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் நேற்று இடம்பெற்ற மனித எச்சங்களை அகழும் பணிகளை பார்வையிட்ட பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த ஆராய்ச்சிகளில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இங்கு வந்திருக்கின்றதா? என்று எங்களுக்கு தெரியவில்லை. இதனால், சரியான முறையில் இந்த அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கை வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஏனென்றால், இதில் சர்வதேச நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்களும் கலந்துகொள்ள வேண்டும். அல்லது இந்தக் குழாமில் இருக்க வேண்டும் என்று மக்களும் நாங்களும் விரும்புகிறோம்.

இவர்கள் சரணடைந்தவர்களை மன்னிப்பு வழங்காமல் தமது எண்ணத்திற்கு கொண்டு வந்து இங்கே புதைத்திருக்கலாம் என்று மக்கள் குமுறுகின்றார்கள்.வட்டுவாகல், கேப்பாபிலவு போன்ற இடங்களில் உள்ள இராணுவ முகாம்களில் புத்த விகாரைகளை பெரிதாக கட்டி இருக்கிறார்கள். இந்த விகாரைகளுக்கு கீழே கூட இவ்வாறாக உடலங்கள் கிடக்கிறதோ என்ற ஊகங்கள் கூட எமது மக்களிடம் உள்ளது.

என்னிடம் இது தொடர்பில் மக்களும் பல தடவைகள் கதைத்திருக்கிறார்கள். இதனை சர்வதேச குழு சரியான முறையில் விசாரணை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு உரிய நியாயமான தீர்வுகளை வழங்க வேண்டும்.

இவ்வாறான விகாரைகளின் அடிப்பகுதிகளையும் தோண்டிப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தர வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

“இந்த வருடம் ஒரு நெல்மணி அரிசியை கூட இறக்குமதி செய்யவில்லை.” – விவசாயிகளை பாராட்டிய விவசாய அமைச்சர் !

எமது நாட்டில் நெற்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் மூலம் இவ்வருடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தேசிய விவசாயக் கல்விக் கண்காட்சியை நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள நிலையில், உத்தேச நிகழ்வு தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சில் நடைபெற்றது.

2022 ஆம் ஆண்டில் 800,000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த அரிசி ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் மிகப்பெரிய தொகையாகும். மேலும் ஜனவரி முதல் இறுதி வரை அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. இந்த 800,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது” என அமைச்சர் தெரிவித்தார்.

“இந்த வருடம் இதுவரையில் ஒரு நெல்மணியை கூட இறக்குமதி செய்யவில்லை. அதிகப்படியான அரிசியைப் பயன்படுத்துவது குறித்து பரந்த அளவில் சிந்திக்க வேண்டியது அவசியம் மற்றும் ஏற்றுமதி செய்யக்கூடிய அரிசி வகைகளின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தரம் குறைந்த மருந்துகளால் மற்றுமொரு மரணம் – நாடாளுமன்றில் விசனம் வெளியிட்ட சஜித் பிரேமதாச !

நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும் தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட Propofol மருந்தை செலுத்தியதால் காலியைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மாதிரி தர சோதனைகளில் தோல்வியடைந்த மூன்று மருந்துகளில் ப்ரோபோஃபோலும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என தெரிவித்ததாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

“தரமற்ற மருத்துவம் தொடர்பான சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க எங்களிடம் இடமில்லை அல்லது இதுபோன்ற சம்பவங்களை விசாரிக்கும் பிரிவு இல்லை. அதற்கான சரியான பொறிமுறையை நாம் கொண்டிருக்க வேண்டும். தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் திருடர்களின் கூடாரமாக உள்ளது. அதன் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும்,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வே.பிரபாகரன் உயிரிழந்ததை உறுதி செய்வதற்கான ஆதாரங்கள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு அமைச்சிடம் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்ததை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்கள் நாட்டின் பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு வெளியிடப்படாமல் இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் மிக நெருக்கமாக செயற்பட்ட கருணா அம்மான், தயா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் அவர் உயிரிழந்தமைக்கான சாட்சி என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பில் மீண்டும் மீண்டும் பேசிக் கொண்டிருக்க தேவையில்லை எனவும் அதனை விட முக்கியத்துவம் செலுத்த வேண்டிய பல்வேறு காரணிகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நிலைத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக சில குழுக்கள் தற்போது திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் பிரமித பண்டார தென்னகோன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான குழுக்கள் தொடர்பில் பாதுகாப்புதுறை மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஆறு மாத காலத்தினுள் இலங்கையை விட்டு வெளியேறிய 150,000 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் !

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.

மேலும், கடந்த  ஜூன் மாதம் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கபெற்ற நேரடி அந்நிய செலாவணி 476 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் உயர்வடைந்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளனர்.

மேலும், இவர்களில் அதிகமானோர் மத்திய கிழக்கு நாடுகளுக்கே சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

இந்த வருடத்தின் இறுதி பகுதிக்குள் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிமித்தம் செல்வார்கள் என எதிர்பார்க்கலாம்.

மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து பயணித்தவர்கள் மாத்திரமே இதில் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த வருடம் ஜூன் மாதம் தொழிலாளர்களிடமிருந்து கிடைக்கபெற்ற நேரடி அந்நிய செலாவணி 476 மில்லியன் அமெரிக்க டொலர் வரையில் உயர்வடைந்துள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் குறித்த பெறுமதி 274 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.

இந்நிலையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு கிடைக்கபெற்ற நேரடி வெளிநாட்டு

அந்நியச் செலாவணி 2,823 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

“இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்து“ – முல்லைத்தீவில் மக்கள் போராட்டம் !

“இலங்கை அரசே கொக்குத்தாடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக” எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (07) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்த்தீவு மாவட்ட பொதுமக்கள் மற்றும், பொது அமைப்புக்கள், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் என்பன இணைந்து முன்னெடுத்த இவ்வார்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பிரதானமாக சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையில் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் இடம்பெறவேண்டும் என்பதனை வலியுறுத்தியிருந்தனர்.

அதேவேளை இலங்கை அரசே  உன்கையில் ஒப்படைத்த உறவுகள் எங்கே, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிவேண்டும், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்காணிப்பு வேண்டும், உள்ளிட்ட பதாதைகளைத் தாங்கியவாறும் கோசங்கைளை எழுப்பியும் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர்.

மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், சமூகசெயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர்இளஞ்செழியன், சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள் மேலும் பல மனிதப்புதைகுழிகள் கிடைக்கும் – மக்கள் போராட்டத்தில்!

முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், தமிழர் பகுதிகளிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றினால், மேலும் பல மனித புதைக்குழிகளை கண்டறிய முடியும் என்றும் இவர்கள் தெரிவித்தனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தினர் இன்று, மன்னார் பசார் பகுதியில் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தின் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலேயே இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட மனுவல் உதயச்சந்திரா, தமிழ் பகுதிகளில் உள்ள இராணுவ முகாம்களை அங்கிருந்து அகற்றினால், பல புதைக்குழிகளை கண்டறிய முடியும் என்று தெரிவித்தார்.