02

02

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு !

இலங்கை அரசால் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படும் விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படவுள்ளது.

இந்த விடயத்தை சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

பயனாளிகளின் பட்டியல் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் என இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. தற்போது குடும்பங்களுக்கான பெயர் பட்டியல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் தற்போதுவரை 5 இலட்சத்து 60 ஆயிரத்து 211 மேன்முறையீடுகளும், 5 ஆயிரத்து 419 ஆட்சேபனைகளும் கிடைப்பெற்றுள்ளது.

அதேசமயம், விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக நோயாளிகளை உள்ளடக்கிய இன்னும் வெளியிடப்படாத பயனாளிகளின் இரண்டாவது பட்டியல் நாளை மறுதினம் வெளியிடப்படும்.” என இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் பூர்வீகக் கிராமத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய விகாரை !

வவுனியா வடக்கில் தமிழர்களின் பூர்வீகக் கிராமமான கச்சல் சமளங்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய விகாரை இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் பகுதி என்ற பெயரில் தொல்பொருள் திணைக்களத்தினால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இந்த விகாரையின் நிர்மாணப்பணிகள் இடம்பெற்றது.

1980 ஆம் ஆண்டுவரை வாழ்ந்து போரின் காரணமாக தமிழர்கள் இடம்பெயர்ந்த நிலையில் இக் கிராமத்தில் தொல்லியல் அடையாளம் எனக் கூறப்பட்டு தமிழர்கள் தடுக்கப்பட்டு வந்தனர்.

அவ்வாறான பகுதியிலேயே இந்த விகாரை அமைக்கப்பட்டு நிறைவுபெற்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“புலிகளுக்காக செயற்படும் கூட்டமைப்பினர் சொல்வதை கவனத்திற்கொள்ள தேவையில்லை.” – நாடாளுமன்றில் சரத் வீரசேகர !

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நோக்கத்திற்கேற்பவே செயற்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கூறும் விடயங்களை கவனத்திற்கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(02.07.2023) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும், எந்த தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அதற்கு எதிர்ப்பினையே வெளியிடும். கூட்டமைப்பு என்பது ஒரு தேசத்துரோக அமைப்பாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் அம்பாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் இலக்கு நாட்டை பிளவடையச் செய்வதாகும். கூட்டமைப்பின் எம்.பி.க்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் முன்னிலையிலேயே பதவிப்பிரமாணம் செய்தனர்.

எனவே அவர்கள் கூறும் விடயங்களை கவனத்தில் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என சரத் வீரசேகர தெரிவித்தார்.

“ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார்.” – எதிர்க்கட்சித்தலைவர் குற்றச்சாட்டு !

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய ஒருதலைபட்சமாகவும்,சர்வாதிகாரியாகவும் செயற்படுகிறார். சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகரின் செயற்பாடுகள் குறித்து ஒரு தீர்மானம் எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டம் மீதான வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் இரு நாள் விவாதத்தை கோரினோம். தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்து நாட்டு மக்கள் பல விடயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு தெரியாமல் மக்களின் இறுதி சேமிப்பை கொள்ளையடிக்கும் அரசாங்கத்தின் செயற்பாட்டை வெளிப்படுத்துவதற்காகவே இருநாள் விவாதம் கோரினோம்.

இருநாள் விவாதம் அவசியமில்லை. சனிக்கிழமை (01) முழு நாள் விவாதத்தை நடத்தலாம். தேவையாயின் விவாதத்துக்கான காலத்தை நீடித்துக் கொள்ளலாம் என கட்சித் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான விவாதத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் உரையாற்ற இருந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்காமல் தன்னிச்சையாக செயற்திட்டம் மீதான வாக்கெடுப்பை சபாநாயகர் நடத்தினார். வாய்ப்பு கோரியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கட்சித் தலைவர் கூட்டத்தில் எடுத்த தீர்மானங்களை புறக்கணித்து ஆளும் தரப்பின் ஆலோசனைகளுக்கு அமைய சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார். பாராளுமன்றம் அரசாங்கத்துக்கு சொந்தமானது என்ற நிலைப்பாட்டில் இருந்துகொண்டு சபாநாயகர் சர்வாதிகாரி போல் செயற்படுகிறார்.

சபாநாயகர் ஒருவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன செயற்படுகிறார். பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவரின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு தீர்மானம் எடுப்போம் என்றார்.

இறுதி யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டாரா..? – மைத்திரிபால சிறீசேன வழங்கிய பதில்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம், மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது. நான் இறுதி யுத்த காலத்தில் சில வாரங்கள் மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (2) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியுள்ளா‍ர்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரபணு பரிசோதனை தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.  நான் இறுதி யுத்த காலத்தில் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பதில் பாதுகாப்பு அமைச்சராக இருந்தேன். அதனால் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு அதை பற்றி யாரும் எதுவும் சொல்லவில்லை.

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது. அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும். அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என்றார்.

இறுதி யுத்தத்தின் வெற்றியில் தனக்கும் கணிசமான பங்கு இருப்பதாக கடந்த காலங்களில் தெரிவித்து வந்த மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய இக்கருத்து முற்றிலும் முரணாக உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றது.

கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சாபம் போட்ட சாணக்கியன் !

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (1) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவி வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி முதலாவது மோசடி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசாங்கத்தில் நாடு வங்குரோத்து நிலையை அடையும் என அறிந்தும் வெளிநாட்டு கடன் டொலரில் செலுத்தப்பட்டது.

தற்போது கடன் மறுசீரமைப்பு ஊடாக மற்றுமொரு மோசடி இடம்பெறவுள்ளது.

தேசிய கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவாக வாக்களித்த அனைவருக்கும் 25 இலட்ச ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப். உறுப்பினர்களின் சாபம் சென்றடைய வேண்டும். தேசிய கடன் மறுசீரமைப்பு என்பது அரசாங்கத்தின் பிறிதொரு மோசடியாகும் என்றார்.