மனம்பிட்டியவில் இடமபெற்ற பேருந்து விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட பேருந்தின் சாரதியை எதிர்வரும்24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னம்பிட்டியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஏறாவூரைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட மூவரும் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனும் ஆனைமடுவ கலாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த இரு பல்கலைக்கழக மணவர்கள் உள்ளிட்ட 11 பேரும் உயிரிழந்தனர் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை பகல் ஒரு பெண் உயிரிழந்ததையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆக அதிகதித்துள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சாரதி, போதை பொருள் பாவித்துள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் இடமபெற்று வருவதாகவும் மன்னம்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துக்கு காரணமான பஸ் நிறுவனம் சச்சின் போக்குவரத்து நிறுவனத்தினுடையது என அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த நிறுவனத்தின் பேருந்துகள் எப்போதும் அதிவேகமாகவே பயணம் செய்வதாகவும் – பயணிகள் தொடர்பில் கவனம் செலுத்துவது கிடையாது எனவும் சமூக வலைத்தளங்களில் பலரும் விசனம் வெளியிட்டு வருகிறார்கள்.
இதேவேளை அரச பேருந்துகளின் சாரதிக்களும் – தனியார் பேருந்துகளின் சாரதிகளும் போட்டிக்கு பேருந்துகளை ஓடும் போக்கு அண்மைய நாட்களில் அதிகரித்துள்ளது. அதிக பயணிகளை ஏற்றி காசு பார்ப்பதில் தொடங்கும் இந்த போட்டி பல பயணிகளின் உயிர்களை காவு கொள்ளும் துர்ப்பாக்கிய நிலையே தொடர்கின்றது. மேலும் இந்த விபத்துக்களை ஏற்படுத்தியதற்காக கைதாகும் சாரதிகள் சில நாட்களிலேயே சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக மீண்டும் பேருந்துகளை ஓட்டும் துர்பாக்கிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
