19

19

இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை நீட்டிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை 2027 டிசம்பர் 31 வரை மேலும் 04 ஆண்டுகளுக்கு நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19) தீர்மானித்துள்ளது.

 

இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதியுடன் இந்த வரிச் சலுகை முடிவடைய இருந்தது.

 

புதிய ஜிஎஸ்பி பிளஸ் முறைமை தொடர்பான கலந்துரையாடல்கள் தொடரும் அதேவேளையில் இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை வரிச் சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, 2022 ஆம் ஆண்டில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு 3.2 பில்லியன் யூரோக்கள் மதிப்பிலான ஏற்றுமதிகளை செய்துள்ளதாக இலங்கையில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

“நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணங்கினால் மாத்திரமே 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும்” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் நடைமுறைக்கு வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதைத் தமிழ்க் கட்சித் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

 

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இதற்க முன்னர் விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்குப் பதிலளித்த ஜனாதிபதி தான் ரணில் விக்ரமசிங்க என்றும் ரணில் ராஜபக்ஷ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தாம் விரும்புவதாகவும் அவர்களால் அரசியல் ஆதாயங்களைப் பெறுவது தனது நோக்கமல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகரித்துள்ள மதுபாவனையால் இலங்கையின் வடக்கில் நரம்பியல் நோய்களும் அதிகரிப்பு !

அண்மைக்காலமாக அதிகரித்துவரும் மது பாவனையின் காரணமாக, வடக்கில் நரம்பியல் சார் நோய்கள் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் , அதிகரித்த மது பாவனையின் காரணமாக வடக்கு மாகாணத்தில் நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் இன்சுலின் உற்பத்தி தடைப் படுகின்றது. மதுபாவனையை தடுப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அதேபோல போதைப் பொருள் பாவனையும் நரம்பியல் சார் நோய்களின் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. குறிப்பாக இளையவர்கள் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு ,பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றார்கள்.

எனவே அதிகரித்துள்ள மதுபாவனை போதைபொருள் பாவனையினால் அவர்கள் அறியாமலே அவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது.

இந்த மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அஜந்தா கேசவராஜா தெரிவித்தார்.

யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கை விரைவில் – அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

நாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் யானை – மனித மோதலைத் தீர்க்க புதிய கொள்கையொன்று தயாரிக்கப்படும் என வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இதனைத் தெரிவித்தார்.

 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி,

 

இந்நாட்டின் 80 சதவீத நிலம் அரசுக்குரியது. 20 சதவீத நிலத்தையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சனத்தொகை அதிகரிப்பால் மக்கள் தமது அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் நீர்ப்பாசன செயற்பாடுகளின்போது யானைகளின் வாழ்விடங்கள், அவை பயணிக்கும் பாதைகள் பாதிக்கப்படுகின்றன. இதுவே யானை – மனித மோதலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.

 

அமைச்சு என்ற ரீதியில் இந்த யானை – மனித மோதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. யானை-மனித மோதலுக்கான குறுகிய, இடைக்கால மற்றும் நீண்ட காலத் தீர்வுகளை காண அமைச்சு பல செயலமர்வுகளை நடத்தியுள்ளது.

 

அதன்படி, கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அனைத்து செயற்பாடுகளையும் ஒருங்கிணைத்து ஒரு கொள்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அந்தக் கொள்கையை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் மூலம் யானை மனித மோதலைத் தீர்க்க முடியும் என எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

 

எதிர்கால சந்ததியினருக்காக வனவிலங்குகள் மற்றும் வன வளங்களைப் பாதுகாப்பதுடன், வன வளங்களை செயற்றிறன்மிக்க வகையில் பயன்படுத்துவதற்கான பணிகளை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

இந்த சுற்றுலாத்துறையின் மூலம் அந்தப் பகுதி மக்களின் பொருளாதார நிலை மேம்படும் என்றும், பாரிய அளவிலான நிர்மானங்கள் இல்லாமல் சூழல்நேய சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதன் மூலம் நிலையான அந்நியச் செலாவணியைப் பெற வன வளங்களைப் பயன்படுத்துவதற்கான பல்வேறு பணிகளை எதிர்காலத்தில் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

“பலஸ்தீனம் சுயாதீன நாடாக இருப்பதற்கான சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.” – இலங்கை நாடாளுமன்றில் மகிந்த ராஜபக்ச !

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாம் தொடர்ந்தும் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி  வேளையில் கிங்ஸ் நெல்சன் எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

பலஸ்தீனத்தில் ஏழு தசாப்தங்களாக நிலவும் பிரச்சினையால் ஆயிரக்கணக்கான உயிர்களை அந்த நாடு இழந்துள்ளதுடன் மேலும் ஆயிரக் கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் முதல் அனைவரும் இந்த மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவான மக்கள் இன்னும் அகதிகளாகவே வாழ்கின்றனர்.அந்த அகதி முகாம்களை இலக்கு வைத்து தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன.

இதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நெருக்கடி நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு உலக நாட்டுத் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அது தொடர்பில் இங்கே கலந்துரையாட வேண்டியது எமது கடமையாகும்.

பலஸ்தீனத்தை ஒரு நாடாக இலங்கை 1988 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்டது. அப்போதிலிருந்து இலங்கை அந்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றது. ஐ.நா மாநாட்டில் அரச தலைவராக உரையாற்றிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் அந்த மக்களுக்காக குரல் எழுப்பியுள்ளதுடன் அவர்களுக்கு உதவிகளையும் வழங்கியுள்ளோம்.

பலஸ்தீனம் சுயாதீன நாடாக எழுவதற்கு சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் தொடர்ந்தும் உள்ளோம்.அந்த மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றார்.