September

September

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை மாணவி – நகோயா சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

இலங்கை யுவதி ஒருவர் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் உயிரிழந்தமை தொடர்பில், குடிவரவு சேவைகள் பணியக அதிகாரிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக குற்றம் சுமத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக ஜப்பானில் உள்ள நகோயா சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் உயிரிழந்த யுவதியின் குடும்பத்தினர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற 33 வயதான இலங்கை யுவதி 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உயிரிழந்தார்.

அவர் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியக தடுப்பில், சுமார் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

 

இந்த நிலையில் நாகோயாவில் உள்ள வழக்கு விசாரணைக்கான குடிமக்கள் குழு, இலங்கை யுவதியின் மரணத்திற்கு காரணமான தொழில்முறை அலட்சியத்திற்காக அந்த நேரத்தில் குறித்த குடிவரவு சேவைகள் பணியகத்தில் பணியாற்றிய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட முடியுமா என்பதை சட்டத்தரணிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

எனினும் விசாரணைகளை மேற்கொண்ட சட்டவாதிகள், யுவதியின் மரணத்திற்கான காரணங்கள் அல்லது அவரது மரணத்திற்கு வழிவகுத்த காரணங்களை குறிப்பிட முடியவில்லை என அறிவித்துள்ளனர்.

இருந்த போதும் மரணமான யுவதியின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, ஸோய்ச்சி இபுசுகி (Shoichi Ibusuki), ”அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த குற்றத்தை மூடிமறைத்து அலட்சியம் செய்கின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி ஒரு மாணவியாக 2017ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றார். எனினும் வீசா காலம் முடிந்தும் அங்கு தங்கியிருந்தமைக்காக குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ்க குணதிலக பாலியல் வன்கொடுமையில் ஈடுபடவில்லை – அவுஸ்ரேலிய சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றம் விடுதலையளித்து தீர்ப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க குற்றவாளி அல்ல என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அனுமதியின்றி உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

32 வயதான அவர், டி20 உலகக் கிண்ண தொடருக்காக அவுஸ்ரேலியா சென்றிருந்தபோது, இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் இந்த சம்பவம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

 

இதனை தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் பொலிஸாரிடம் அவர் வாக்குமூலம் வழங்கும் காணொளி கடந்த வாரம் நீதிமன்றில் காட்டப்பட்டது.

 

இதனை தொடர்ந்து அவரது நேர்காணலில் உண்மை வெளிப்படுவதாக தெரிவித்துள்ள நீதிபதி, சம்பந்தப்பட்ட பெண் எழுப்பிய அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததோடு தனுஷ்க குணதிலகாவை குற்றமற்றவர் என்று அறிவித்தார்.

இதேவேளை சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

 

“நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக. இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி. எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார். நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. “எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மீண்டும் கிரிக்கெட் விளையாடும் வரை என்னால் காத்திருக்க முடியாது.”

இதேவேளை தனுஷ்க குணதிலகவிற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக கிரிக்கெட் தடையை நீக்குவது குறித்து இலங்கை கிரிக்கெட் சபை இன்று பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜர்பைஜான் – அர்மேனியா இடையோன போர் – அகதிகளாக அலையும் மக்கள் !

ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது. இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.

2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர்.

கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது. இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.

“ஜோபைடன் வேண்டாம்“ – கருத்துக்கணிப்பில் வெளியான அமெரிக்கர்களின் அதிர்ச்சியான முடிவு !

அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி ஜோ பைடன் (வயது 80) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் அங்கு அடுத்த ஆண்டு தேர்தலுக்கான பணிகள் தற்போதே சூடுபிடித்துள்ளன. இதற்கிடையே ஜோ பைடன் மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதேசமயம் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகிறார்.

இந்தநிலையில் அமெரிக்காவில் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி குறித்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதில் சுமார் 44 சதவீதம் பேர் ஜோ பைடன் ஆட்சியில் தங்களது பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக கூறி உள்ளனர். மேலும் சுமார் 37 சதவீதம் பேர் மட்டுமே ஜனாதிபதி ஜோ பைடனின் நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர். 56 சதவீதம் பேர் இவரது செயல்பாட்டை ஏற்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

 

அதேசமயம் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் நிர்வாகத்தை சுமார் 48 சதவீதம் பேர் ஏற்றுக்கொண்டுள்ளனர். இது 2021-ல் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தபோது இருந்ததை விட 10 சதவீதம் அதிகம் ஆகும். 74 சதவீதம் பேர் அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு ஜோ பைடனுக்கு வயதாகி விட்டது என வாக்களித்துள்ளனர். எனவே அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனுக்கு பதிலாக வேறு ஒருவரை நிறுத்த வேண்டும் என 62 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக அந்த கருத்து கணிப்பு கூறுகிறது. இதன் மூலம் அங்கு தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

இதேவேளை அண்மையில்  அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தில் செயல்படும் விமானப் படைக்குச் சொந்தமான கல்வி நிலையத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற போது, அதிபர் ஜோ பைடன் கால் இடறி கீழே விழுந்தமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் ஜோபைடனின் வயது தொடர்பில் அதிக கேள்வி எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

“உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.” – நந்தலால் வீரசிங்க

உலகச் சந்தையில் போட்டிபோடக்கூடியவாறு உள்ளூர் தனியார் துறையினர் தங்களை மாற்றிக் கொள்ளாது விட்டால் சவால்களுக்கு மத்தியில் நீடித்திருக்க முடியாதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

உலகளாவிய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மாநாடு அண்மையில் ‘கொந்தளிப்பான தருணத்தில் தலைமைத்துவம்’ எனும் தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்நாட்டில் உள்ள தனியார் துறையினருக்கு நீண்ட வரலாறுகள் காணப்படுகின்றன. அவர்கள் அரசாங்கத்திடத்தில் தமது வணிகத்துறை நிலைத்திருப்பதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றார்கள்.

குறிப்பாக, தமது துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்துகின்றார்கள். இறக்குமதி வரிச்சலுகைகளை வழங்குமாறு கோருகின்றார்கள்.

உண்மையில் உள்நாட்டின் தனியார் துறையினர் நிலைத்திருப்பதாக இருந்தால் அவர்களுக்கான சந்தை வாய்ப்பு விரிவுபடுத்தப்பட்டதாக அமைய வேண்டும்.

குறிப்பாக, உலகளாவிய ரீதியில் உள்ள சந்தை வாய்ப்புக்களை நன்கு பயன்படுத்துவதற்கான ஏதுவான நிலைமைகளை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுப்பதையே நோக்காக கொண்டிருக்கின்றது.

அந்த வகையில் உலக சந்தையை அணுகும்போது அதில் காணப்படுகின்ற சவால்களுக்கு முகம்கொடுத்து போட்டித்தன்மையான களத்தின் ஊடாக முன்னேறுவதன் ஊடாகவே தனியார் துறையினர் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்திருக்க முடியும்.

குறிப்பாக, இந்தியா, தென்கொரியா, சீனா போன்ற நாடுகள் அவ்விதமான முறைமைகளையே பின்பற்றுகின்றன. ஆகவே, இலங்கையின் தனியார் துறையினரும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தை வாய்ப்புக்களை திட்டமிடல்களுடன் பயன்படுத்துவதன் ஊடாக எதிர்காலத்தில் வெற்றிகளை அடையாலம் என்றார்.

“இந்தியாவை சீண்டிப் பார்ப்பது எமது நோக்கமல்ல. ஆனாலும் கொலையின் பின்னணியில் இந்தியாவே உள்ளது.” – ஜஸ்டின் ட்ரூடோ

இந்தியாவை சீண்டிப் பார்ப்பது எமது நோக்கமல்ல. ஆனால் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்திய அரசுக்கும் நம்பத்தக்க தொடர்பு உள்ளது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் இடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வளரும் முக்கியத்துவம் கொண்ட நாடு இந்தியா என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் இந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது உலகம் முழுவதுமே இந்தியாவுடன் தொடர்ந்து உறவாட வேண்டிய அவசியம் உள்ளது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடா நாட்டு பிரஜை. ஒரு கனடியர் கனடிய மண்ணில் கொல்லப்பட்டதற்கும் இந்திய அரசுக்கும் தொடர்பு உள்ளது என நம்பகமான காரணங்கள் இருக்கின்றன. எனவே இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.இந்திய அரசு எங்களுடன் சேர்ந்து உண்மையை கண்டறிய உதவ வேண்டும் என கூறுகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்தியா–கனடா நாடுகளுக்கு இடையேயான மோதல் நிலைமை அண்மைய நாட்களாக அதிகரித்து வருகிறது. கனடாவில் பணியிலிருந்த இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றப்பட்டதை அடுத்து பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரகத்தின் மூத்த அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற இந்திய வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை – இஸ்ரோ தொடர்ந்தும் முயற்சி!

விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

 

எனினும், சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14ஆம் திகதி பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.3 எம்4 ரொக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.

இது புவிவட்டப்பாதை, நிலவு வட்டப்பாதையை கடந்து, ஆகஸ்ட் 23ஆம் திகதி மாலை 6.04 மணி அளவில் விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் 40 நாட்கள் பயணத்தை முடித்து நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியது.

 

அடுத்த 2 மணிநேரத்திற்கு பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெளியே வந்தது. ரோவர் வெளியான அந்த நாள், நிலவில் 14 நாட்களுக்கு (ஒரு நிலவு நாள்) பிறகு இரவு முடிந்து, பகல் ஆரம்பித்த நாள். அன்றைய தினமே ரோவர் ஆய்வுப்பணியை தொடங்கியது.

ரோவரில் உள்ள ‘லிப்ஸ்’ எனப்படும் ‘ஸ்பெக்ட்ரோஸ்கோப் கருவி’, நிலவில் கந்தகம் இருப்பதை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது.

 

தொடர்ந்து, அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டேனியம், மாங்கனீசு, சிலிகான் மற்றும் ஒக்சிஜன் உள்ளிட்ட கனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்ததுடன் பல்வேறு கோணங்களில் லேண்டருடன் சேர்ந்து நிலவின் தென் துருவத்தில் மேல்பரப்பில் பல்வேறு புகைப்படங்களையும் எடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைத்தது.

 

தொடர்ந்து நிலவு நாள் முடிவடைந்து அங்கு இரவு தொடங்கியபோது இருள் சூழ்ந்த நிலவின் தென்துருவத்தில் ரோவர் மற்றும் லேண்டரால் ஆய்வுப்பணியில் ஈடுபட முடியவில்லை. இதனால் இம்மாத ஆரம்பத்தில் நிலவின் தென் துருவத்தின் மேல்பரப்பில் பிரக்யான் ரோவர் உறக்க நிலையில் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து லேண்டரும் உறக்க நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தநிலையில் நிலவில், முதல் 14 நாட்கள் சூரிய வெளிச்சம் இருந்தபோது, ரோவரில் இருந்த பேட்டரிகள் சோலர் தகடுகள் மூலம் சார்ஜ் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் சிவசக்தி புள்ளியில் சூரிய ஒளிபடும்போது, அங்கு உறக்கத்தில் உள்ள ரோவர், லேண்டர் கருவிகளின் செயற்பாட்டு நிலைமைகள் மேம்படும்.

14 நாட்கள் நீடித்த நிலவு இரவில், சந்திரனின் சுற்றுச்சூழல் சுமார் 200 டிகிரி உறைபனி தட்பவெப்பநிலையால் சூழப்பட்டு இருக்கிறது.இத்தகைய கடுமையான காலநிலையில் தொழில்நுட்ப உபகரணங்கள் வேலை செய்வது சாத்தியமில்லை.

 

ஆகவே தான் விஞ்ஞானிகள் அவற்றை உறக்க நிலைக்கு கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் நேற்று (22) சூரிய உதயம் ஆரம்பிக்கும்போது, உறக்க நிலையில் இருக்கும் லேண்டரும், ரோவரும் எழுந்து மீண்டும் ஆராய்ச்சி பணியில் ஈடுபட வைக்கும் முயற்சி நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்து இருந்தது.

அதன்படி, விக்ரம் லேண்டரை மீண்டும் செயல்பட வைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. ஆனால், விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது – யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் கட்டளை !

த.வி.பு உறுப்பினர் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என இரண்டாவது தடவையாகவும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று மதியம் (22) கட்டளை பிறப்பித்தது.

 

தியாகதீபன் திலீபன் நினைவேந்தலை தடைசெய்ய வேண்டுமென யாழ்ப்பாணம் பொலிஸார் கடந்த செப்டம்பர் 19 ஆம் திகதி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

 

இந்த மனுவை தள்ளுபடி செய்து, செப்டம்பர் 20 ஆம் திகதி யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 

இந்த நிலையில், பொலிஸ் திணைக்களத்தின் சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டமா அதிபர் திணைக்கள பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவொன்று, நேற்று (21) கொழும்பிலிருந்து ஹெலிகாப்டரில் வந்து, யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் அவசர மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

 

இதில், தியாகதீபம் திலீபன் நினைவுநாள் அனுட்டிப்பு வன்முறை வடிவம் எடுப்பதால், அவசரமாக நினைவுநாளுக்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

அத்துடன், வவுனியா பம்பைமடுவில், சிவில் உடையில் வந்து வீடியோ படம் பிடித்த புலனாய்வாளர்களின் கைத்தொலைபேசி பறிக்கப்பட்டு, காட்சிகள் அழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோவை நீதிபதிக்கு திரையிட்டு காண்பித்தனர்.

 

நினைவுநாள் அனுஷ்டிப்பு வன்முறை வடிவமெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு எதற்காக நினைவுநாளை தடைவிதிக்க வேண்டும், பொலிஸார் நடவடிக்கையெடுத்திருக்கலாம் அல்லவா என நீதிபதி வினவியபோது, பொலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வன்முறை பரவலை தடுக்க நினைவு நாள் அனுஷ்டிப்பை தடை செய்ய வேண்டுமென கோரினர்.

 

இந்த மனு தொடர்பில் இன்று (22) மதியம் 1.30 மணிக்கு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது என கட்டளை பிறப்பித்து நீதிமன்றம் அறிவித்தது.

மீண்டெழும் தமிழரின் கல்விப் பாரம்பரியம் – இலங்கையில் முன்னிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் !

நடைபெற்று முடிந்த 2022ஆம் ஆணடுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மாகாண மற்றும் மாவட்டங்களுக்கான பல்கலைகழக மாணவர்களின் தெரிவும் – சித்தி வீதத்தையும் அடிப்படையாக கொண்ட தரவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் முதலிரண்டு இடங்களையும் பெற்றுள்ளமையானது பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

கடந்த காலங்களில் குறிப்பாக 2021ஆம் ஆண்டுக்கு முன்பாக தமிழரின் பூர்வீக பகுதிகளாக கருதப்படும் வடக்கு – கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை பாரிய வீழ்ச்சி கண்டிருந்ததது. தரம் 11 மாணவர்களின் பெறுபேறுகளில் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பாரிய சரிவை உச்சகட்டமாக எதிர்கொண்டிருந்தன.

 

இது பற்றிய முழுமையான விடயங்களை தரவுகளுடன் பேசுகிறது தேசம் திரை..;

 

“பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஆன்மீக உரையாடலில் ஈடுபட்டேன்.” – பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் குணதிலக !

தனுஸ்க குணதிலக மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள பெண் அவருடன் உறவில் இருந்தவேளை அவரின் போன ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என தெரிவித்ததால் தான் அச்சமடைந்ததாக தனுஸ்ககுணதிலக தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் வெளியிடப்பட்ட பதிவு செய்யப்பட்ட வீடியோவில் தனுஸ்க தெரிவித்துள்ள விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பிட்ட பெண்ணை அவரது வீட்டில் முத்தமிட்டது அவருடன் பாலியல் உறவு கொண்டது போன்ற விடயங்களை தனுஸ்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

அதன் பின்னர் அந்த பெண்ணுடன் இடம்பெற்ற ஆன்மீக உரையாடல் குறித்து தனுஸ்க தெரிவித்துள்ளார், இந்த உரையாடலின் போது எனது முன்னைய ஜென்மங்கள் குறித்து தனக்கு தெரியும் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

அந்த உரையாடல் சுவராஸ்யமாக இருந்தது என நான் நினைத்தேன் அந்த பெண்ணிற்கு இலங்கை கலாச்சாரம் பௌத்தம் குறித்து நன்கு தெரிந்திருக்கின்றது என நினைத்தேன் என தெரிவிக்கும் தனுஸ்க குணதிலக பின்னர் அழுவதையும் தனது முகத்தை துடைப்பதையும் காணமுடிகின்றது.

நான் சிரித்துக்கொண்டே நான் முன்னைய ஜென்மத்தில் நான் யார் என தெரிவிக்க முடியுமா என கேட்டேன் நானும் அவரின் அயலவர்களும் தாய்லாந்தில் பிறந்தோம் என அந்த பெண் தெரிவித்தார் என தனுஸ்க குறிப்பிட்டுள்ளார்.

தன்னால் எனது போன ஜென்மத்தைபார்க்க முடிவதாக அவர் குறிப்பிட்டார் நான் அச்சமடைந்தேன் எனவும் தனுஸ்க தெரிவித்துள்ளார்.

ஏன் என தெரியவில்லை எனக்கு அந்த உணர்வு ஏற்பட்டது அந்த பெண் சற்றுவித்தியசாமானவராக காணப்படுகின்றார் என நினைத்தேன் அந்த பெண் எனக்கு டக்சியை ஏற்பாடு செய்து தந்தார் நான் ஆடையணிந்துகொண்டு முத்தமிட்டு அங்கிருந்து புறப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் குற்றஞ்சாட்டிய  பெண் முன்னைய ஜென்மங்கள் குறித்த பேச்சுக்களை தான் முதலில் ஆரம்பிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.