இலங்கையில் நலிவுற்ற நிலையில் உள்ள பின்தங்கிய சமூகப்பிரிவினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடியவாறான கொள்கை வகுப்பு மற்றும் செயற்திட்ட உருவாக்கத்தில் அரசாங்கம் விசேட கவனஞ்செலுத்தவேண்டுமென புத்திஜீவிகள் மற்றும் பல்துறைசார் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித அபிவிருத்தி முன்முயற்சி ஆகியவற்றினால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள், கண்டறியப்பட்ட விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ‘பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பல்பரிமாண அடிப்படையில் மக்களை நலிவுற்றவர்களாக உணரவைக்கும் காரணிகள் மற்றும் அவை பொதுமக்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்பவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் கடந்த 2022 நவம்பர் மாதம் முதல் 2023 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் தேசிய குடித்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் 25,000 குடும்பங்களை அடிப்படையாகக்கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோடா, ‘அண்மையகாலங்களில் நிதியியல் கட்டமைப்பானது மிகவேகமாகச் சுருக்கமடைந்துவரும் நிலையில், பல்பரிமாணத் தாக்கங்கள் பற்றிய புரிதலை மேலும் ஆழமாக்குதல் என்பது செயற்திறன்மிக்க கொள்கை உருவாக்கத்துக்கான முதற்படியாகும்’ என்று சுட்டிக்காட்டினார். அந்தவகையில் இலங்கை தொடர்பான இவ்வறிக்கையானது நலிவுற்ற சமூகத்தினரின் தேவைகளைப் பூர்த்திசெய்யக்கூடிய கொள்கை உருவாக்கம் மற்றும் செயற்திட்ட வடிவமைப்பில் மிகவும் வலுவான தாக்கத்தைச் செலுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அதேவேளை இந்த ஆய்வறிக்கைத் தயாரிப்பில் பணியாற்றிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வறுமை மற்றும் மனித அபிவிருத்தி முன்முயற்சியின் பணிப்பாளர் கலாநிதி சபினா அல்கிரே, ‘பல்பரிமாணப் பாதிப்புக்களைப் புரிந்துகொள்ளுதல்: இலங்கை மக்கள் மீதான தாக்கம்’ என்ற அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள மற்றும் கண்டறியப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார். ‘இலங்கையில் 55.7 சதவீதமானோர், அதாவது நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.3 மில்லியன் மக்கள் பல்பரிமாணப் பாதிப்புக்களுக்கு முகங்கொடுத்திருக்கின்றனர் என்ற சிக்கலான விடயத்தை இவ்வறிக்கை வெளிச்சம்போட்டுக் காண்பித்துள்ளது’ என்று சுட்டிக்காட்டிய அவர், இந்நிலைவரத்தை உரியவாறு கையாள்வதற்கு கடன்களின் அளவைக் குறைத்தல் மற்றும் அனர்த்தங்களுக்கு முகங்கொடுப்பதற்கான முற்கூட்டிய தயார்நிலையை வலுப்படுத்தல் என்பன இன்றியமையாதனவாகும் என்று வலியுறுத்தினார்.
அதனைத்தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசுஸா குபோடாவினால் வெளியிட்டுவைக்கப்பட்ட இந்த ஆய்வறிக்கையைப் பெற்றுக்கொண்ட கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நாட்டின் கல்வித்துறையை முன்னேற்றுவதற்கும் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் பின்தங்கிய சமூகங்களைச்சேர்ந்த மாணவர்களின் இயலுமையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தியதுடன் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் 17 ஐயும் அடைந்துகொள்வதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுவருவதாகக் குறிப்பிட்டார்.
‘நான் கல்வியமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டபோது நாடு தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்தது. எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருள் மற்றும் சேவை விநியோகங்களும் தடைப்பட்டிருந்தன. இருப்பினும் நாம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இச்சவாலுக்கு முகங்கொடுப்பதற்கு முன்வந்தோம். அதன்படி நன்கொடையாளர்களின் 70 சதவீத உதவியின் மூலம் பாடசாலை மாணவர்களுக்கான பாடநூல்கள் மற்றும் சீருடைத்துணி என்பன இலவசமாக வழங்கப்பட்டன. அவ்வுதவியை இவ்வருடம் 100 சதவீதமாக உயர்த்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. அதேபோன்று அடுத்த சில வருடங்களில் சுமார் 3000 பாடசாலைகளை தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமையளித்துத் திறம்படக் கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.
இருப்பினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, எமது நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடி மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டதெனச் சுட்டிக்காட்டியதுடன் எனவே அரசியல்வாதிகள் ‘அதனைச்செய்வோம், இதனைச்செய்வோம்’ என்று கூறுவதைவிடுத்து, வகுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு செயல்வடிவம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் இவ்வாய்வறிக்கை தொடர்பில் நடைபெற்ற குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்ற கலாநிதி ரமணி குணதிலக, பி.எஸ்.எம்.சாள்ஸ், வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன ஆகியோர் பின்தங்கிய பிரதேசங்கள் உள்ளடங்கலாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் நிலவும் யதார்த்தபூர்வமான பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை விரிவாக முன்வைத்தனர்.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் அதிகாரிகளுக்கு இடையிலான மேற்படி சந்திப்பில், மேற்படி கொள்கை நடவடிக்கைகளை அடைவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், நீண்டகால சுற்றாடல் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்புடன் இந்த சீர்திருத்தங்கள் எவ்வாறு இணைந்துள்ளன என்பன பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.
சீர்திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கான தனது அர்ப்பணிப்பை இதன்போது அமைச்சர் வெளிப்படுத்தினார். நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இந்த சீர்திருத்தங்கள் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான தாக்கத்தையும் பட்டியலிட்டுள்ளார்.மேற்படி இலக்குகளை அடைவதற்காக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் முன்னெடுக்கப்படும் நகர்வுகளுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.