இந்நாட்டின் பெண்களின் மேம்பாட்டுக்காக பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை வைக்கவும் விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.
இந்த சட்டமூலத்துக்கு மேலதிகமாக பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டல் தொடர்பான சட்டமூலம் ஆகிய இரண்டு சட்டமூலங்களையும் பாராளுமன்றத்துக்கு அமர்ப்பிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே தெரிவித்தார்.
நியூஸிலாந்துப் பாராளுமன்றத்திலுள்ள இலங்கை வம்சாவளியான வனூஷி வோல்டர்ஸ் உடன் zoom தொழிநுட்பத்தின் ஊடாக அண்மையில் (05) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய மகளிர், சிறுவர் அலுவல்கள் அமைச்சுப் பதவியை ஜனாதிபதி கௌரவ ரணில் விக்ரமசிங்க வகிப்பதாகவும், பெண்கள் மற்றும் சிறுவர்களின் மேம்பாட்டுக்காக செயற்படுவதில் ஜனாதிபதிக்கு பெரும் ஆர்வம் உள்ளதாகவும் சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே மேலும் தெரிவித்தார்.
அத்துடன், அரசியலில் பெண்களை ஊக்குவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. பெண்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான சாதகமான சூழலை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. தமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கக் கூடிய பகல்நேர பராமரிப்பு மையங்களை அதிகரிப்பது தொடர்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன், அது தொடர்பில் நியூசிலாந்து பின்பற்றும் முறை மிகவும் முக்கியமான முன்மாதிரியாக உள்ளதா இங்கு வலியுறுத்தப்பட்டது.
உலகில் ஏனைய பாராளுமன்றங்களை பிரதிநிதித்துவப்படுத்திடும் பெண் உறுப்பினர்கள் போன்று, ஏனைய பாராளுமன்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை வம்சாவளி பெண் உறுப்பினர்கள் மற்றும் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு தான் முயற்சி செய்வதாக வனூஷி வோல்டர்ஸ் இதன்போது குறிப்பிட்டார்.
ஒன்றியத்தின் உப தலைவர் ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஒன்றியத்தின் உறுப்பினர்களான சட்டத்தரணி பவித்ராதேவி வன்னியராச்சி, சட்டத்தரணி தலதா அத்துகோரல, கோகிலா குணவர்தன, முதிதா பிரஷாந்தி, மஞ்சுளா திசாநாயக்க, கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
நாட்டின் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட இலங்கைப் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனம் (USAID) மற்றும் தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் (NDI) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.