04

04

ஹிட்லரின் படைகளால் கொலைசெய்யப்பட்ட இத்தாலிய குடும்பங்களுக்கு 13 மில்லியன் டொலர்  இழப்பீடு !

கடந்த 1943-ம் ஆண்டு ஜெர்மனியின் நாஜிப் படையினர், இத்தாலியை ஆக்கிரமித்தனர். அப்போது அவர்கள்,  இத்தாலி மக்கள் பலரை கொன்று குவித்தனர்.

அந்த சமயத்தில், நாஜிப் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டதற்காக, இத்தாலி மக்களுக்கு பொது தண்டனை வழங்க நாஜிப் படை முடிவு செய்தது. இத்தாலி மக்களில் 6 பேரை தேர்ந்தெடுத்து அவர்களை பொது இடத்தில் வைத்து நாஜிப் படை தூக்கிலிட்டது. இந்நிகழ்வு நடைபெற்று 80ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு இழப்பீடு வழங்க இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கொல்லப்பட்ட 6 பேரின் குடும்பத்தினருக்கு 13 மில்லியன் டொலர்  இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இழப்பீடு அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவரான மெளரோ பெட்ரார்கோ கூறுகையில், “எங்களால் அந்தத் துயரை கடந்து வரமுடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளில் துக்கம் அனுசரிக்கிறோம்” என்றார்.

 

2016-ம் ஆண்டு ஜெர்மனி அரசு, நாஜிப் படையினரால் இத்தாலியில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. நாஜிப் படையினரால் 22,000 இத்தாலிய மக்கள் உயிரிழந்தாதகவும் பல ஆயிரம் இத்தாலி மக்கள் ஜெர்மனியில் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

நாஜிப் படையினரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்போது இத்தாலி அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இலங்கையில் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள்.”- ஐ.நாவிடம் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டு !

தமிழர் வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதன் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், எனவே இலங்கைக்குத் தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதை விடுத்து, இம்முறை கூட்டத்தொடரில் வலுவான அழுத்தத்தை பிரயோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான ஒரு மாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது.

இந்த அமர்வின் தொடக்க நாளான 11ஆம் திகதியன்று ஏற்கனவே இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்’ என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்கங்களின் அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அதிகாரிகளுக்கும் இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (31) சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் முறைமையில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் சார்பில் இரு அதிகாரிகளும், தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் சார்பில் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன், புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர் சுரேன் குருசுவாமி ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது அண்மைய காலங்களில் தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுவதாகக் கூறப்படுகின்ற போதிலும், யதார்த்தபூர்வமாக அதற்குரிய நடவடிக்கைகள் உரியவாறு முன்னெடுக்கப்படவில்லை என்றும், பெருமளவான காணிகள் இன்னமும் படையினர்வசமே இருப்பதாகவும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர்.

அதுமாத்திரமன்றி, கடந்த சில மாதங்களாக வட, கிழக்கு மாகாணங்களில் தீவிரம் பெற்றுள்ள தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து ஐ.நா அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் நீண்டகால வாழ்விடங்களில் பௌத்த விகாரைகளை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சில இடங்களில் இச்செயற்பாடுகள் ஜனாதிபதியின் உத்தரவை மீறி மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும் சில பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் கண்டும் காணாமல் விடப்படுவதாகவும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகளிடம் கூறினர்.

அத்தோடு இவ்வாறான செயற்பாடுகள் மூலம் மத ரீதியான முறுகல்களைத் தோற்றுவித்து இனப்பிரச்சினையைத் தீவிரப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும் தீர்வின்றித் தொடரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம், கடந்த கால மீறல்கள் தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் எடுத்துரைத்தனர்.

எனவே, எதிர்வரும் 11ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையில், இத்தகைய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்ட அவர்கள், இலங்கைக்கு தொடர்ந்து கால அவகாசம் வழங்குவதில் எவ்வித பயனும் இல்லை என்றும், இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை மீது வலுவான அழுத்தம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

“ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள்.”- லண்டன் டைம்ஸ் அறிக்கையால் பரபரப்பு !

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.

2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்தாக பிரித்தானிய ஊடகமான த டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“கூட்டம் முடிந்தது, சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்சேக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” என ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.

தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பின்னர் 6 மாதங்களில் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.

இவர் இதற்கு முன்னர் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை பெயரிடப்படாத மூத்த அரசாங்க அதிகாரி, இரண்டாவது விசில்ப்ளோயர் தாக்குதல் தரிகளுடன் சாலியின் உறவுகள் பற்றிய மௌலானாவின் கருத்தை ஆமோதித்துள்ளார்.

மேலும் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு, பொலிஸ் விசாரணைகளை மீண்டும் மீண்டும் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.

2019ல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.

2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட போதும், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ அதை வெளியிட மறுத்துவிட்டார். மேலும் மௌலானா பல ஆண்டுகளாக ராஜபக்சக்களுக்கு விசுவாசமான அரசியல்வாதியான பிள்ளையானுக்கு உதவியாளராக பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.