லிபியாவில் புயல் தாக்கத்தை அடுத்து ஏற்பட்ட வௌ்ளத்தில் 20,000-இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என டெர்னா நகர மேயர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 6000 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டேனியல் புயலால் கடந்த சில நாட்களாக லிபியாவில் பலத்த மழை பெய்தது. கனமழையால் கிழக்கு லிபியாவில் டெர்னா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதன் இரண்டு அணைகள் உடைப்பெடுத்தன.
இதன் காரணமாக டெர்னா, பாய்தா, சூசா, ஷாஹத், மார்ஜ் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
மலையின் அடிவாரத்தில் அமைந்திருந்த டொ்னா நகருக்குள் வெள்ளம் வெகு சீற்றத்துடன் பாய்ந்து, அங்கிருந்த வீடுகளை உடைத்து அவற்றின் இடிபாடுகளையும், அங்கிருந்த வாகனங்கள் உள்ளிட்ட பிற பொருட்களையும் அருகிலுள்ள கடலுக்குள் அடித்துச்சென்றது.
அதேபோல், பலர் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்பதால், அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
பலர் உறக்கத்தில் இருந்த போது சுனாமி போன்ற ஒரு பெரிய வெள்ளம் கடலை நோக்கி மக்களை அடித்துச்சென்றிருக்கிறது.
இதனால், கடலுக்குள் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
லிபியாவின் மத்திய தரைக்கடல் கடற்கரை முழுவதும் வீசிய புயல் காரணமாக கனமழை பெய்தது. செப்டம்பர் மாதம் முழுவதும் நாடு பொதுவாகப் பெறும் 1.5 மிமீ மழையுடன் ஒப்பிடுகையில், 24 மணி நேரத்திற்குள் சில பகுதிகளில் 400 மிமீ வரை மழை பெய்திருக்கிறது.
இந்த அசாதாரண வெள்ளம், நகரின் வழியாக ஓடும் டெர்னா ஆற்றின் இரண்டு முக்கிய அணைகளை உடைத்து, பல முக்கிய பாலங்களையும் சிதறடித்தது.
நகரம் தண்ணீரில் மூழ்குவதற்கு முன்பு ஒரு பெரிய வெடிச்சத்தம் கேட்டதாகவும், வெள்ளம் கிட்டத்தட்ட 10 அடி உயரத்திற்கு வந்ததாகவும் தப்பி வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்பு பணிகளுக்கு எகிப்து உட்பட சில அண்டை நாடுகளில் இருந்து லிபியாவிற்கு உதவிகள் வரத் தொடங்கியுள்ளன
ஆனால், லிபியாவின் அரசியல் சூழ்நிலையால் மீட்பு முயற்சிகள் தடைபட்டுள்ளன. நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் ஆட்சி செய்து வருவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, ஈரான், இத்தாலி, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உதவிகளை அனுப்புவதாகக் கூறியுள்ளன.