13

13

உலகின் தலைசிறந்த சுற்றுலாத்தீவாக இலங்கையை பட்டியலிட்டு ஏமாற்றும் தீவு என பெயரிட்ட Big 7 Travel !

பயண இணையத்தளமான பிக் 7 ட்ரவல் (Big 7 Travel) வெளியிட்ட “2023 ஆம் ஆண்டிற்கான உலகின் 50 சிறந்த தீவுகள்” பட்டியலில் உலகின் சிறந்த தீவுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.

50 தீவுகளில் 13 வது இடத்தில் உள்ள இலங்கை உள்ள நிலையில் அவ்வறிக்கையில் “ஏமாற்று”(beguiling) தீவாக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை தொடர்பில் அவ்வறிக்கையில்,

“அத்துடன், எதிர்ப்புகள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் தொற்றுநோய்கள் காரணமாக இலங்கை சில ஆண்டுகளாக சுற்றுலா நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தது ஆனால் அதன் கதவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன.

ஏமாற்றும் தீவுக்குச் செல்ல ஆயிரம் காரணங்கள் உள்ளன, குறைந்தது அதன் மக்கள், சுவையான உணவு, முடிவில்லா கடற்கரைகள், தேயிலைத் தோட்டங்கள், யானைகள் நிறைந்த வனவிலங்கு பூங்காக்கள், ஆயிரம் ஆண்டுகள் பழமையான இடிபாடுகள் என்பன அதில் அடங்கும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வறிக்கையில் வரிசைப்படுதல்களை மேற்கொள்ள ஒரு நுட்பமான தேர்வு செயன்முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்த இடங்களை நேரடியாக ஆராய்ந்த சமூக ஊடக பார்வையாளர்கள் மற்றும் பயண நிபுணர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, மதிப்பெண்கள் துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுகள் – பின்னிப் பிணைந்த நிலையில் பல உடல்கள் !

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.

குறித்த அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது நாள் தொடர்சியாக அகழ்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்த புதன்கிழமை (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், ஏழாவது நாள் அகழ்வாய்வுகள் இன்று (13) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில், முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதுவரை துப்பாக்கிச் சன்னங்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்தும் இலக்கத் தகடு, உடைகள், கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஆறாம் நாள் அகழ்வாய்வுகள் நேற்று (13) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரி க.வாசுதேவ , தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம், தடயவியல் காவல்துறையினர், கிராம சேவையாளர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அகழ்வுப் பணியின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா “ஒரு உடற்பாகம் முழுமையாகவும் இன்னொரு உடற்பாகம் பகுதியளவில் மீட்கப்பட்டதாகவும் ஏற்கனவே மீட்கப்பட்ட ஐந்து உடற்பாகங்களுடன் ஆறு உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் துப்பாக்கிச் சன்னம் ஒன்றும், கழிவு நீரை சுத்திகரிக்கும் உபகரணம் ஒன்றும் தடயப்பொருட்களாக எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அகழ்வுப் பணியில் உடலங்களை அடையாளப்படுத்துவதில் கடினத்தன்மை காணப்படுவதாகவும் ஒன்றன் மேல் ஒன்றாக பல உடல்கள் பின்னிப் பிணைந்து இருப்பதாலும் இந்தநிலை தோன்றியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

08 வயது சிறுமிக்கு இடது கை அகற்றப்பட்டதன் எதிரொலி – யாழ்.வைத்தியசாலை ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணிப்பாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் கையடக்க தொலைபேசியை பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமிக்கு இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாதியர்கள் கவன குறைவினாலையே சிறுமியின் கை அகற்றப்பட்டது என பல தரப்பினராலும் குற்றம் சாட்டப்பட்டுவரும் நிலையில் கடமையின் பொது ஸ்மார்ட் போன் பாவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

“2ம் உலகப்போருக்கு பின்பு தனிநாட்டை உருவாக்கிய யூதர்களின் கொள்கைகளை புலம்பெயர் தமிழர்கள் பின்பற்றுகிறார்கள்.” – சரத் கொன்கஹகே

யூதர்களுடைய கொள்கையையே தற்போது புலம்பெயர்ந்தவர்கள் பின்பற்றுகின்றாக இலங்கைக்கான ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்துக்கான முன்னாள் தூதுவரான சரத் கொன்கஹகே குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

யூதர்களுடைய மனப்பான்மையை தற்போது புலம்பெயர்ந்தவர்கள் கொண்டுள்ளார்கள். தமக்கான இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்காக அவர்கள் இவ்வாறு செயல்படுகிறாரர்கள். இலங்கை நாடாளுமன்றத்திலும் இவ்வாறு செயல்படும் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இலங்கையின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டாமென கூறும் தரப்பினரும் இவ்வாறான யூதர்களே. இது என்னுடைய கருத்து. இவ்வாறான மனநிலையில் இருந்து நாம் வெளிவர வேண்டும். இலங்கையர்களாக நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.என குறிப்பிட்டார்.

இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பின்னர் உலகம் முழுவதும் இருந்த யூதர்கள் ஒன்று சேர்ந்து இஸ்ரேல் என்னும் ஒரு புதிய நாட்டை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் – சட்டத்தரணிகள் சங்கம்

நீதிமன்றம், நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிபதிகள் தொடர்பில் முன்வைக்கப்படும் கருத்துக்களால் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுயாதீனத் தன்மைக்கு அழுத்தம் ஏற்படுவதாக சட்டத்தரணிகள் சங்கம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து அறிவுறுத்தியுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் குழுவினருக்கும், சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போதே அவர்கள் இதுதொடர்பாக தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியேயும்  குறிப்பாக தற்பொழுது சேவையாற்றிவரும் நீதிபதிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு கருத்துக்களை வெளியிடுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறான நிலைமை கவலைக்குரியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்த சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், இது குறித்த எழுத்துமூல கோரிக்கையையும் சபாநாயகரிடம் கையளித்துள்ளார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன, நீதிபதிகள் உள்ளிட்ட நீதிமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு தான் தொடர்ந்தும் செயற்படுவதாகவும் எதிர்காலத்தில் இது தொடர்பில் உறுப்பினர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விடயத்தை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும் – கனடா வலியுறுத்தல்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழி தொடர்பான விடயத்தை அரசாங்கம் உரிய முறையில் கையாள வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது.

புதைகுழி தொடர்பான விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் அமைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமாதானம் மற்றும் சுதந்திரத்தை பேணுவது குறித்து கனடா, தொடர்ந்தும் கவனம் செலுத்தும் எனவும் ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கருத்து சுதந்திரம், பொருளாதாரம், சமூக வலுவூட்டல், கலாசார உரிமைகள் என்பன சமமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம், நல்லிணக்கத்தின் ஊடாகவும், தமிழ் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதன் ஊடாகவும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

அடக்குமுறைகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீறப்படுவதை ஏற்க முடியாது என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த பயணி – பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட 84 ஊழியர்களே காரணம் என அமைச்சர் பந்துல குற்றச்சாட்டு!

ஹொரபேயில் நேற்று காலை நெரிசல் மிக்க ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த பயணியின் மரணத்திற்கு 84 புகையிரத ஊழியர்களே நேரடிப் பொறுப்பு என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போக்குவரத்து அமைச்சர்,

நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள 84 ஊழியர்களின் சுயநல செயற்பாட்டினால் துரதிஷ்டவசமாக இளைஞன் உயிரை பணயம் வைக்க நேரிட்டதாக தெரிவித்தார்.

 

ஏறக்குறைய 18,000 தொழிலாளர்கள் தமது கடமைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் அல்லது சுயநல நோக்கங்களுக்காக 84 ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் பணிப்புறக்கணிப்புகளை மேற்கொள்ளும் முன் பேச்சுவார்த்தை நடத்துமாறு ரயில்வே ஊழியர்களுக்கு பல தடவைகள் அறிவித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை புகையிரத பொது முகாமையாளருடன் அனைத்து பிரச்சினைகளையும் கலந்துரையாடுமாறும், அது தோல்வியுற்றால் போக்குவரத்து அமைச்சின் செயலாளரை சந்திக்குமாறும் தொழிலாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

 

அந்த முயற்சியும் பலனளிக்கவில்லை என்றால், தன்னை சந்திக்குமாறு ரயில் ஊழியர்களுக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.

 

ரயில்வே ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, அமைச்சரவை உபகுழு உறுப்பினர்களுடன் நாளை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

கலந்துரையாடல் திட்டமிடப்பட்ட போதிலும், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தொழிலாளர்கள் குழு தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

இந்த வேலைநிறுத்தம் மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக நீண்ட தூர ரயில்களின் இயக்கத்தை பாதித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

 

அனைத்துப் பிரச்சினைகளையும் பேசித் தீர்ப்பதற்கு ஏற்கனவே தொழிலாளர்களுக்கு விருப்பங்களை வழங்கியிருப்பதன் மூலம் தொழிற்சங்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது .

 

84 ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தற்போது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இவ்வாறானதொரு துக்ககரமான மரணத்தை தவிர்த்திருக்க முடியும் என்பதால் இவ்விடயம் தொடர்பில் பொலிஸாரின் தலையீட்டை நாடவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

“என்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டார்.” – செனல் 4 ஆவணப்படத்திற்கு தகவல் வழங்கிய அசாத் மௌலானா மீது பெண் ஒருவர் வழக்குத்தாக்கல்!

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆவணப்படத்தின் தகவலாளரான அசாத் மௌலானாவுக்கு எதிராக பெண் ஒருவரால் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியான முறையில் அவர் தம்மை திருமணம் செய்து ஏமாற்றியதாக தெரிவித்து குறித்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த 35 வயதான பெண் ஒருவரே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டதுடன் முறைப்பாட்டின் உண்மை தன்மை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து சைபர் தாக்குதல் – விரிவான விசாரணைகள் ஆரம்பம் !

அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி சைபர் தாக்குதல் காரணமாக பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் பரிமாற்ற தரவுகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது.

gov.lk டொமைனுக்குச் சொந்தமான தரவு அமைப்பை புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, சைபர் தாக்குதலை நடத்திய குழுவின் தகவல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.