30

30

“முழு உலகமும் என்னை இலங்கையில் ஆட்சியில் உள்ள பைத்தியக்காரர்களின் கரங்களில் கைவிட்டுவிட்டது.” – இலங்கையில் தலைமறைவாக வாழும் பிரிட்டிஸ் பெண் !

இலங்கையில் அரகலய நாட்களில் ஆர்ப்பாட்டங்களின் வீடியோக்களை வெளியிட்டார் என குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரிட்டிஸ் பெண் இலங்கையின் ஒடுக்குமுறை அரசாங்கத்திடமிருந்து 13 மாதங்கள் மறைந்திருந்துள்ள நிலையில் தனக்கு நம்பிக்கைகள் குறைவடையத்தொடங்கிவிட்டன என குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டனை சேர்ந்த கெய்லே பிரேசர் என்ற பெண்ணே இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இலங்கையில் அவர் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற குடிவரவுதுறை அதிகாரிகள் அவரின் கடவுச்சீட்டை பறித்து சென்றனர்.

அந்த பெண் செல்லுபடியற்ற விசாவில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என தெரிவித்த குடிவரவுதுறை அதிகாரிகள் அவரின் கடவுச்சீட்டை பறித்து சென்றுள்ளனர்.

எனினும் தான் அரகலயவீடியோக்களை வெளியிட தொடங்கிய பின்னரே இது குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டதாக இலங்கைக்கு ஆயுர்வேதம் குறித்து கற்பதற்கு சென்ற சென் அன்ரூசை சேர்ந்த அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள் அவரை நாடுகடத்துவதற்கு விடுத்த வேண்டுகோளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனினும் இலங்கையின் மிகமோசமான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தான் தடுத்துவைக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய தயக்கம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த சட்ட மூலம் சமூக மத இன பிரிவினைகளை தூண்டுபவர்களை தடுத்து வைக்க அனுமதிக்கின்றது. இதேவேளை இலங்கை பிரிட்டிஸ் பெண் மணி பாதுகாப்பாக வெளியேறுவதற்கான உத்தரவாதத்தை வழங்கவேண்டும் என்பது தொடர்பில் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் வென்டி சம்பெர்ளின் பிரிட்டனின் வெளிவிவகார அலுவலக அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.

அவ்வாறான உத்தரவாதம் வழங்கப்படும் வரை தான் தனது மறைவிடத்திலிருந்து வெளியே வரமுடியாது என பிரேசர் தெரிவித்துள்ளார். நான் இங்கு இருக்கின்றேன் உயிர்பிழைத்து வாழ்கின்றேன் ஏதாவது மாற்றம் நிகழ்வதற்காக காத்திருக்கின்றேன் என பிரேசர் டெய்லிமெய்லிற்கு தெரிவித்துள்ளார்.

எனக்கு வேறு வழியில்லை நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்காவது உறங்கமுடியும் உணவு உண்ண முடியும் என்பதை உறுதி செய்கின்றேன். அவையே எனது முன்னுரிமைக்குரிய விடயங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இணையம் என்பது எனக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய விடயம் கடந்த ஒரு மாதகாலமாக அதனை பயன்படுத்த முடிந்தமை மிகப்பெரிய விடயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை வாழ்க்கை என நான் கருதவில்லை இது உயிர்வாழ்தல் முழு உலகமும் என்னை இலங்கையில் ஆட்சியில் உள்ள பைத்தியக்காரர்களின் கரங்களில் கைவிட்டுள்ளதாக கருதுகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலமானது கருத்து வெளியிடுதல், தகவல் அறியும் சுதந்திரங்கள் மீதான தாக்குதல்.” – சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம்

இலங்கையில் முன்வைக்கப்பட்டுள்ள உத்தேச நிகழ்நிலை காப்பு சட்டமூலமானது கருத்து வெளியிடுதல், தகவல் அறியும் சுதந்திரங்கள் மீதான தாக்குதல் என சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் (International Commission of Jurists) தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் தவறான பதிவுகளை கட்டுப்படுத்த வேண்டிய தேவை காணப்படுகின்ற போதிலும், இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் ஆழமான குறைபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக தவறி வரும் சூழலில், இவ்வாறானதொரு சட்டமூலம் தவறான முறையில் பயன்படுத்தப்படக்கூடிய வாய்ப்புகளை கொண்டிருப்பதாக சங்கம் கூறியுள்ளது.

அரசாங்கத்தின் நடத்தை மற்றும் கொள்கைகள் தொடர்பான மக்களின் விவாதத்தை நசுக்குவதற்கு இந்த சட்டமூலம் பயன்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும் சர்வதேச சட்டவல்லுநர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானில் உயிரிழந்த இலங்கை மாணவி – நகோயா சட்டத்தரணிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

இலங்கை யுவதி ஒருவர் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் உயிரிழந்தமை தொடர்பில், குடிவரவு சேவைகள் பணியக அதிகாரிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக குற்றம் சுமத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக ஜப்பானில் உள்ள நகோயா சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் உயிரிழந்த யுவதியின் குடும்பத்தினர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற 33 வயதான இலங்கை யுவதி 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உயிரிழந்தார்.

அவர் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியக தடுப்பில், சுமார் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.

 

இந்த நிலையில் நாகோயாவில் உள்ள வழக்கு விசாரணைக்கான குடிமக்கள் குழு, இலங்கை யுவதியின் மரணத்திற்கு காரணமான தொழில்முறை அலட்சியத்திற்காக அந்த நேரத்தில் குறித்த குடிவரவு சேவைகள் பணியகத்தில் பணியாற்றிய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட முடியுமா என்பதை சட்டத்தரணிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.

எனினும் விசாரணைகளை மேற்கொண்ட சட்டவாதிகள், யுவதியின் மரணத்திற்கான காரணங்கள் அல்லது அவரது மரணத்திற்கு வழிவகுத்த காரணங்களை குறிப்பிட முடியவில்லை என அறிவித்துள்ளனர்.

இருந்த போதும் மரணமான யுவதியின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, ஸோய்ச்சி இபுசுகி (Shoichi Ibusuki), ”அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த குற்றத்தை மூடிமறைத்து அலட்சியம் செய்கின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.

ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி ஒரு மாணவியாக 2017ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றார். எனினும் வீசா காலம் முடிந்தும் அங்கு தங்கியிருந்தமைக்காக குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதி சரவணராஜா பதவி விலகிய விவகாரம் – ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள உத்தரவு !

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காவல்துறையினருக்கு அல்லது நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு நீதவான் ஒருபோதும் அறிவிக்காத காரணத்தினால் ஜனாதபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

எனவே, இந்த சம்பவத்திற்கான மூல காரணத்தை உடனடியாக ஆராயுமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருடன் சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இதற்கு முன்னர் மரண அச்சுறுத்தல்கள் தொடர்பில் நீதவான் முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி வெளிநாடு சென்ற நீதவான், தனது பதவி விலகல் கடிதத்தை செப்டெம்பர் 23ஆம் திகதி நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ளார் என ஜனாதிபதி செயலக தரப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ரீ.சரவணராஜாவுக்கு ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் நீதித்துறை மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையை இல்லாதாக்கியுள்ளது.”- மு. சந்திரகுமார்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தனக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறியுள்ள செய்தி இலங்கையின் நீதி துறைக்கு கழுவு முடியாத கறையாக  படிந்துள்ளது. நீதித்துறை  மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை உடைக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

குருருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து  உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளன.

குருந்தூர்மலை வழக்கில் நீதிபதி வழங்கிய கட்டளைகளை மாற்றியமைக்குமாறு தொடர்ச்சியாக அரச தரப்பால் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும். அண்மையில் தனக்கான (நீதிபதிக்கான) பொலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாகவும்  அவர் தெரிவித்துள்ள அவர் தான் நீதிபதி பதவியினை இராஜினாம் செய்துள்ளார்.

இந்த நிலைமை இலங்கை நீதித்துறைக்கு மிகப்பெரும் அவமானம் என்பதோடு, தமிழ் மக்கள் இலங்கையின் நீதித்துறை மீது முழுமையான நம்பிக்கை இழக்கும் நிலைமைக்கு இட்டுச் செல்லும் சம்பவமாகவும் காணப்படுகிறது.

எனவே, இவ்வாறான நிலைமைகள் இனியும் நாட்டில் இடம்பெறாத வகையில் நீதித்துறையின் சுயாதீனம்  பாதுகாக்கப்படுவதோடு, நீதிதுறை பணியாளர்களின் சுதந்திரமான பணிகளுக்கும் அச்சுறுத்தல் இல்லாத சூழல் உருவாக்கப்படல் வேண்டும். தவறின்  நாடு மேலும் மேலும் நெருக்கடியான சூழல் நிலைக்குள் தள்ளப்படுவதோடு, எக்காலத்தில் நிலையான சமாதானமும், இனங்களுக்களுக்கிடையே நல்லிணக்கமும் ஏற்படாது போய்விடும் என முன்னாள் நாடாளுடன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

“ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்  என்கிறார்கள். ஆனால் நாங்கள்  அவரை நம்புகின்றோம்.” – சி.வி விக்னேஸ்வரன்

“ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார்  என்கிறார்கள். ஆனால் நாங்கள்  அவரை நம்புகின்றோம்.” என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை (28) இடம்பெற்ற 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்கு 13வது திருத்தம் செயற்படுத்தப்பட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு மாகாண சபைகளிடமிருந்து மத்திக்குப் பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீள மாகாணத்துக்கு வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் ஜனாதிபதியுடன் பல சுற்றுச் சந்திப்புக்களை மேற்கொண்டோம்.

நாம் சந்திப்புகளில் ஈடுபட்டபோது ரணில் தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்ய மாட்டார் என சிலர் கூறினர். ஆனால், நாங்கள் சில விடயங்களை அவர் ஊடாக செய்விக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம்.

இறுதியாக இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் பறிக்கப்பட்ட மாகாண அதிகாரங்களை அவ்வாறு மீள வழங்குவது தொடர்பிலும் நியதிச் சட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் நிபுணர் குழு ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சம்மதித்தார்.

ஜனாதிபதி வெளிநாடு சென்ற நிலையில், இக்குழுவை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன் அவரின் பொறுப்பை செயற்படுத்துபவர்களும் குழுவை நியமிக்கவில்லை.

13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவும் கரிசனையாக உள்ள நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியாவும் தங்களாலான அழுத்தத்தை வழங்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிலையான அரசாங்கம் ஒன்றின் ஜனாதிபதியாக இல்லாத நிலையில் சில விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தென்னிலங்கையைச் சேர்ந்த சிலர் முட்டுக்கட்டை போடுகிறார்கள்.

அவ்வாறு முட்டுக்கட்டை போடுபவர்களுடன்  மாகாண அதிகாரங்களை மாகாணத்துக்கு வழங்குவது தொடர்பில் பேசியிருக்கிறோம். இனிமேலும் பேசவுள்ளோம்.

ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு செய்வாரா, செய்ய மாட்டாரா என்ற விவாதங்களை தாண்டி, தமிழ் மக்களின் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்வதற்காக பறிக்கப்பட்ட அதிகாரங்களையாவது அவர் மூலம் பெறுவதற்குரிய நடவடிக்கைகளை தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

“எரிபொருள்,எரிவாயு மற்றும் மின்சார விநியோக கட்டமைப்பில் தற்காலிக தீர்வு தான் எட்டப்பட்டுள்ளது.” – சம்பிக்க ரணவக்க

வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு அரசாங்கத்திடம் முறையான திட்டமிடல் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளதை அரசாங்கம் கவனத்திற் கொள்ள வேண்டும். என ஐக்கிய மக்கள் குடியரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

செப்டெம்பர் 27 ஆம் திகதி இலங்கைக்கு தீர்மானமிக்கது என்பதை ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்.வங்குரோத்து நிலையடைந்துள்ளதால் இந்த பாதையில் செல்லுங்கள் என சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழி காண்பித்துள்ளது.அரசாங்கமும் அந்த பாதையில் செல்கிறது.

ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை முழுமையாக அமுல்படுத்தினால் தான் நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட நீடிக்கப்பட்ட நிதியுதவி கிடைக்கப்பெறும்.முன்வைக்கப்பட்ட நிபந்தனைகளை இலங்கை முழுமையாக செயற்படுத்தவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள். ஆகவே இரண்டாம் தவணை நிதியுதவி கிடைப்பனவு கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கடன்கள் மற்றும் வட்டி செலுத்தல் 2022.04.12 ஆம் திகதியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளது.கடன் செலுத்த முடியாத காரணத்தால் இலங்கை வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என மத்திய வங்கி உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு உலக நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.ஆனால் நடைமுறையில் எந்த முன்னேற்றமும் இதுவரை ஏற்படவில்லை.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு இலங்கை எப்போது பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்தும் என பிரதான நிலை கடன் வழங்குநர்கள் காத்துக் கொண்டுள்ளார்கள். இதுவே உண்மை.

வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்தும் வழிமுறையை இலங்கை இதுவரை அறிவிக்கவில்லை அது பாரிய பிரச்சினைக்குரியது என நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச வருமானத்தை அதிகரிக்குமாறு நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.வருமானத்தை எவ்வாறு அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதை நாணய நிதியம் குறிப்பிடாது.அரசாங்கமே அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

குறுகிய காலத்துக்குள் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்ளாவிட்டால் அரச சேவையாளர்களுக்கான சம்பளம் வழங்கல்,இலவச கல்வி, இலவச மருத்துவம், நலன்புரி சேவைகள் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடு பாதிக்கப்படும்.சர்வதேச நாணய நிதியத்தி;ன் முதல் தவணை நிதியை பெற்றுக்கொண்டதன் பின்னர் எதிர்பார்க்கப்பட்ட 15 சதவீத அரச வருமான இலக்கை அரசாங்கம் அடையவில்லை.

எரிபொருள், எரிவாயு உட்பட மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைக்கப்பெறுகிறது,நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இவை தற்காலிக தீர்வே தவிர நிலையானதல்ல, நாடு வெகுவிரைவில் மீண்டும் நெருக்கடிக்குள்ளாகும் என்று நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தேசிய மட்டத்தில் பாரிய முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்றார்.

நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு விடுக்கப்பட்ட உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை கோரும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் !

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு ஏற்பட்டுள்ள உயிரச்சுறுத்தல் தொடர்பில் உடனடியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவை கோருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரத்ன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா தான் வகித்த பதவிகள் அனைத்தையும் துறந்து உயிரச்சுறுத்தல் மற்றும் அழுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதால் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.

உண்மையில், அவருக்கு உயிரச்சுறுத்தல் காணப்பட்டதா, அவ்வாறு காணப்பட்டால் அது யாரால் விடுக்கப்பட்டது, அதனுடன் தொடர்புடைய தரப்புக்கள் யாவை என்பன தொடர்பில் விரிவான விசாரணையை உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.

நீதித்துறையின் சுயாதீனத்திiயும், நன்மதிப்பையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தச் செயற்பாடு மிகவும் அவசியமாக உள்ளது.

ஆகவே குற்றப்புலனாய்வுப் பிரிவு இந்த விடயத்தில் தாமதமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எழுத்து மூலமான கோரிக்கையையும் அனுப்பி வைக்கவுள்ளது என்றார்.

“நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துவருகின்றோம்.” – ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் மற்றும் இவ்விடயம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆராய்ந்துவருவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவின் உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் மற்றும் ‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தல் விவகாரம் போன்றவற்றில் மிகமுக்கிய தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, உயிரச்சுறுத்தல்கள் மற்றும் மிகையான அழுத்தங்கள் காரணமாகத் தனது அனைத்துப் பதவிகளிலிருந்தும் இராஜினாமா செய்வதாகக் குறிப்பிட்டுப் பதவி விலகியிருப்பதுடன் நாட்டைவிட்டும் வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் அவரைத் தொடர்புகொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், நீதிபதி சரவணராஜாவின் இராஜினாமா கடிதம் மற்றும் அவர் கூறியதாக சமூகவலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் வெளியாகியுள்ள விடயங்கள் குறித்து ஆராய்ந்துவருவதாகத் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில் கொழும்பில் நேற்றைய தினம் (29) காலை சட்டத்தரணிகள் கூட்டிணைவின் சந்திப்பொன்றும், மாலை சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டமொன்றும் நடைபெற்றுள்ளது.

அதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை யாழ்ப்பாணத்திலும் சட்டத்தரணிகள் ஒன்றுகூடி இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.