இலங்கை யுவதி ஒருவர் 2021ஆம் ஆண்டு ஜப்பானில் உயிரிழந்தமை தொடர்பில், குடிவரவு சேவைகள் பணியக அதிகாரிகளுக்கு எதிராக இரண்டாவது முறையாக குற்றம் சுமத்த வேண்டாம் என தீர்மானித்துள்ளதாக ஜப்பானில் உள்ள நகோயா சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.
எனினும் உயிரிழந்த யுவதியின் குடும்பத்தினர், குறித்த அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.
ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி என்ற 33 வயதான இலங்கை யுவதி 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் உயிரிழந்தார்.
அவர் நாகோயா பிராந்திய குடிவரவு சேவைகள் பணியக தடுப்பில், சுமார் ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார்.
இந்த நிலையில் நாகோயாவில் உள்ள வழக்கு விசாரணைக்கான குடிமக்கள் குழு, இலங்கை யுவதியின் மரணத்திற்கு காரணமான தொழில்முறை அலட்சியத்திற்காக அந்த நேரத்தில் குறித்த குடிவரவு சேவைகள் பணியகத்தில் பணியாற்றிய பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது குற்றம் சாட்ட முடியுமா என்பதை சட்டத்தரணிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தது.
எனினும் விசாரணைகளை மேற்கொண்ட சட்டவாதிகள், யுவதியின் மரணத்திற்கான காரணங்கள் அல்லது அவரது மரணத்திற்கு வழிவகுத்த காரணங்களை குறிப்பிட முடியவில்லை என அறிவித்துள்ளனர்.
இருந்த போதும் மரணமான யுவதியின் குடும்பத்தினரை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி, ஸோய்ச்சி இபுசுகி (Shoichi Ibusuki), ”அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்த குற்றத்தை மூடிமறைத்து அலட்சியம் செய்கின்றனர்” என குற்றம் சுமத்தியுள்ளார்.
ரத்நாயக்க லியனகே விஷ்மா சந்தமாலி ஒரு மாணவியாக 2017ஆம் ஆண்டு ஜப்பானுக்கு சென்றார். எனினும் வீசா காலம் முடிந்தும் அங்கு தங்கியிருந்தமைக்காக குடிவரவு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.