26

26

அஜர்பைஜான் – அர்மேனியா இடையோன போர் – அகதிகளாக அலையும் மக்கள் !

ஐரோப்பாவிலிருந்து ஆசிய கண்டம் வரை ஐக்கிய சோவியத் சோஷலிஸ குடியரசு எனும் பெயரில் ஒருங்கிணைந்த பல நாடுகளுடன் 1922ல் இருந்த வந்த கூட்டமைப்பு, 1991ல் 15 நாடுகளாக உடைந்தது. இவற்றில் அஜர்பைஜான் மற்றும் அர்மேனியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கருங்கடலுக்கும் கேஸ்பியன் கடலுக்குமிடையே உள்ள தெற்கு காகஸஸ் மலைப்பகுதியையொட்டி உள்ள நகோர்னோ-கராபாக் பிராந்தியத்திற்கு உரிமை கொண்டாடி போர் நடைபெற்று வருகிறது.

2020ல் 6 வாரங்களாக நடைபெற்ற மிக பெரிய போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் இப்பகுதியில் வசித்து வந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மக்களில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இப்பகுதியிலிருந்து அர்மேனியாவிற்குள் அகதிகளாக நுழைந்திருக்கின்றனர்.

கடந்த வாரம், இப்பகுதியை அஜர்பைஜான் கைப்பற்றியதிலிருந்து உயிருக்கு ஆபத்து ஏற்படும் அச்சத்தில் தங்கள் உடைமைகளை விட்டு விட்டு அர்மேனியாவிற்குள் நுழைந்திருக்கிறார்கள். அப்பகுதியில் காலங்காலமாக வசித்து வந்த அர்மேனியர்களை அஜர்பைஜான்வாசிகளாக மாற்ற போவதாக அஜர்பைஜான் எச்சரித்திருந்தது. இவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்து தர அர்மேனியா முன் வந்திருக்கிறது.

இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெருமளவானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

இலங்கையில் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்களில் பெருமளவானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்தே செயற்படுகின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அவர்களை இலங்கைக்கு கொண்டுவந்து சட்டநடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் குறிப்பாக துபாயில் வசிக்கின்றனர் தங்கள் சகாக்கள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களை கண்டுபிடிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியவேளை அவர்களை கண்டுபிடிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எத்தனை பேர் அங்குள்ளனர் என்ற  கேள்விக்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ளனர் எனினும் துல்லியமான எண்ணிக்கை தெரியாது என டிரான் அலெஸ்தெரிவித்துள்ளார்.

இலங்கையின் முதல் காலாண்டு பகுதியில் 35 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை – கிளிநொச்சியில் சம்பவம் !

கிளிநொச்சி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு (26) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி – கோணாவில் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது 28 வயதுடைய புஸ்பராசா தினேஸ் என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திலே சடலம்  உள்ள நிலையில் கிளிநொச்சி குற்றத் தடுப்பு காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குழுக்களுக்கு இடையேயான முரண்பாடே இச்சம்பவத்திற்கு காரணம் என  ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“உணவு வழங்காமல் உள ரீதியான சித்திரவதை- 5 கொன்கிரீட் ஆணிகளை விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர்.” – சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற பெண் வழங்கிய வாக்குமூலம் !

சவுதி அரேபியவிற்கு பணிப்பெண்ணாக சென்ற மாத்தளை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ”தான் பணிபுரிந்த வீட்டில் தன்னை 5 கொங்ரீட் ஆணிகளை விழுங்க வைத்தனர்” என வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மாத்தளை அல்கடுவ பிரதேசத்தில் உள்ள தோட்டப்பகுதியில் வசிக்கும் ஒரு பிள்ளைக்குத்  தாயான இருபத்தொரு வயதான தியாகசெல்வி என்பவரே இவ்வாறு முறைப்பாடு அளித்துள்ளார்.

குறித்த அவர் தெரிவித்துள்ளதாவது,

“ கடந்த ஜுன் மாதம் கொழும்பில் உள்ள தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டுப் பணிப்பெண் வேலைக்காக சவுதி சென்றேன். அங்கு நான் பணிபுரிந்து வந்த வீட்டில் உள்ளவர்கள் எனக்கு உணவு வழங்காமல் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்தனர்.

இதனையடுத்து எனது நிலை குறித்து வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் தெரிவித்திருந்தேன். இதனால் கோபமடைந்த வீட்டு உரிமையாளரும் அவரின் தாயாரும் ஒன்றாக சேர்ந்து என்னை கொடூரமான முறையில் தாக்கியதோடு, பின்னர் 5 கொன்கிரீட் ஆணிகளை விழுங்கும்படியும்  கட்டாயப்படுத்தினர்.

பின்னர், துணிகளை உலர்த்துவதற்கு பயன்படுத்தப்படும் வெள்ளை இரும்பினால் செய்யப்பட்ட ஸ்பிரிங் ஒன்றையும் விழுங்கவைத்தனர். இதன்போது குறித்த இரும்புத் துண்டு தனது தொண்டையில் சிக்கியது. சில நாட்களுக்குப் பின்னர் எனது வயிறு மற்றும் வாயில் இருந்து இரத்தம் வரத் தொடங்கியதையடுத்து குடியிருப்பாளர்கள் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்போது  என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் எனது  வயிற்றில் ஐந்து இரும்பு ஆணிகள் இருப்பதைக் கண்டு, எனக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளனர்.அதன் பின்னர் சவூதி வைத்தியசாலையொன்றில் உள்ள வைத்தியர் ஒருவரின் தலையீட்டின் மூலம் தூதரகத்தின் ஊடாக நான் இலங்கைக்கு  அழைத்து வரப்பட்டேன்.

பின்னர் கண்டி வைத்தியசாலையில் பரிசோதனை செய்து பார்த்த  போது எனது வயிற்றில் மேலும் இரண்டு ஆணிகள் இருப்பது எக்ஸ்ரே மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவர்களால் ஒரு ஆணி அகற்றப்பட்டதோடு  மற்றொரு இரும்பு ஆணி தனது வயிற்றின் பின்புறத்தில் தற்போதும் உள்ளது” இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

இதேவேளை  இச்சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு அறிவித்த போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை எனத் தெரிவித்த பெண்ணின் தாயார், கணவனை பிரிந்து குழந்தையுடன் தனியாக வாழும் தனது  மகள், குழந்தையின் எதிர்காலத்திற்காகவே  வெளிநாடு சென்றார் எனக் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விசேட விசாரணைகளை தற்போது முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனவிரக்தியால் 23 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை !

மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை (26) காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் டானுகா (வயது 23) என்ற யுவதியை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

இவரது தாயார் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், தந்தை இரண்டாவது திருமணம் செய்த நிலையில் சித்தியுடனே இவர் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ஆம் மாதம் அவரது மாமா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது 90வது நாள் சடங்கிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து மனவிரக்தியுடன் காணப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

“கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை.” – அமைச்சர் அலிசப்ரி

கனடா பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியுள்ளது என நியுயோர்க்கில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கனடா முறு்றமு் இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அலிசப்ரி  உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால்  அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை. சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர். ஆதாரங்கள் அற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம்  கனடா பிரதமருக்குள்ளது.

இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார். இலங்கையில்  இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.

கனடாவில் சீக்கிய செயற்பாட்டாளர் ஒருவர் கொல்லப்பட்டமையின் பின்னணியில் இந்திய அரசாங்கம் உள்ளது என்ற கனட பிரதமரின் குற்றச்சாட்டினால் இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலை உருவாகியுள்ள நிலையிலேயே இலங்கை வெளிவிவகார அமைச்சரின் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.