15

15

முல்லைத்தீவு – மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் அனுஸ்டிப்பு !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மந்துவில் படுகொலையின் 24 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுமக்களால் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

 

தாய்த்தமிழ் பேரவையின் நினைவேந்தல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நவநீதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மந்துவில் படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ,தாய்த்தமிழ் பேரவையின் ஸ்தாபகர் ச.சத்தியரூபன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

முல்லைத்தீவு மந்துவில் சந்திக்கு அருகாமையில் 1999 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படை நடத்திய குண்டு தாக்குதலில் 24 தமிழர்கள் கொல்லப்பட்டிருந்ததோடு 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மணிப்பூரில் தொடரும் கலவரம் – 175 பேர் கொலை – தீக்கிரையாக்கப்பட்ட 4000 வீடுகள்!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

மேலும், இந்த கலவரத்தில் 32 பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

4,786 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகவும், 386 மதக் கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் பொலியார் குறிப்பிட்டுள்ளனர்.

 

காணாமற்போன ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு வகையான 15,050 வெடிபொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

 

வன்முறையில் உயிரிழந்த 175 பேரில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

 

79 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளதாகவும், 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த சென்ற பொலிஸ் அதிகாரி கிளிநொச்சியில் சடலமாக மீட்பு!

கிளிநொச்சியில் கசிப்புக் கும்பலைத் துரத்திச் சென்ற நிலையில் காணாமல்போன பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்த சதுரங்க (வயது 28) எனும் பொலிஸ் உத்தியோகஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸ் குழு நேற்று முற்றுகையிட்டது. அதன்போது அங்கிருந்தவர்கள் காட்டு வழியே தப்பியோடியுள்ளனர்.

தப்பியோடியவர்களைப் பொலிஸார் துரத்திச் சென்ற வேளை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரைத் தேடும் பணியில் பொலிஸ் குழுக்கள் ஈடுபட்டிருந்த வேளை, புதுஐயன்குளம் பகுதியில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளின் பின்னரே  பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழந்தமைக்கான காரணத்தை வெளியிட முடியும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.