03

03

வடக்கில் தொடரும் வாகன விபத்துக்கள் – யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்டசண்டிலிப்பாய் பாடசாலைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.

 

இந்த விபத்து சம்பவம் இன்று (03) பிற்பகல் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

கீரியான் தோட்டம், பண்டத்தரிப்பு, சில்லாலை என்ற முகவரியில் வசிக்கும்பத்மநாதன் வசீகரன் (வயது 20) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வீதியில் சென்ற மோட்டார் வாகனம்  ஒன்று திரும்புவதற்கு சமிக்ஞை காண்பித்தபோது, யாழ்ப்பாணத்தில் இருந்து சில்லாலை நோக்கி பயணித்த குறித்த இளைஞனது மோட்டார்சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த தொலைபேசி தொடர்பு இணைப்பு கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவரதுசடலம் தற்போது சங்கானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

பிரேத பரிசோதனைக்காக சடலமானது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

இதேவேளை இலங்கையின் வடக்கில் ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் தொடர்பில் ஏதேனும் ஒரு விபத்து மரணம் சரி பதிவாகும் துர்பாக்கிய சூழல் உருவாகியுள்ளது. ஒன்றில் பேருந்து விபத்து அல்லது புகையிரத கடவையை கடக்கும் போது விபத்து , அல்லது மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து என இது தொடர்கதையாகி வருவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கச்சத்தீவு  மீட்பு விவகாரத்தில் மத்திய அரசே முடிவு செய்யலாம்; நீதிமன்றம் தலையிட முடியாது.” – இந்திய நீதிமன்றம்

கச்சத்தீவு  மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சென்னை மீனவர்கள் நலன் சங்கம்  தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே, தலைமை நீதிபதி இதனை அறிவித்து வழக்கினை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

1974-இல் இந்தியா மற்றும் இலங்கைக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், கச்சத்தீவு இலங்கைக்கு  ஒப்படைக்கப்பட்டது.

குறித்த ஒப்பந்தத்தில் பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது என கூறப்பட்டுள்ளதாக  The Hindu செய்தி வௌியிட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வாக 1974 ஆம் ஆண்டின் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை இரத்து செய்து கச்சத்தீவை மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

எனினும், கச்சத்தீவு  மீட்பு விவகாரம் மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவு எனவும் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் இந்திய உயர்  நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான தீர்ப்பை தாமதப்படுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் நியூயோர்க்கில் உள்ள நீதிமன்றத்திடம் கோரிக்கை !

இலங்கை அரசாங்கத்திற்கும் ஹமில்டன் ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான வழக்கில், தாம் தலையிடலாம் என்ற அடிப்படையில், தீர்ப்பை தாமதப்படுத்துமாறு அமெரிக்க அரசாங்கம் நியூயோர்க்கில் உள்ள நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலகப் பொருளாதார ஊடக நிறுவனமான பைனான்சியல் டைம்ஸ் நியூயோர்க்கில் இருந்து இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம், திருப்பிச் செலுத்தாத 250 மில்லியன் டொலர் கடன் பத்திரங்களை மீட்பதற்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி, இலங்கைக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்க அரசாங்கத்தின் சாத்தியமான பங்கேற்பு பற்றி, வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிபதி டெனிஸ் கோட்டிற்கு, நியூயோர்க் தெற்கு மாவட்டத்தின் சட்டமா அதிபர் டேமியன் வில்லியம்ஸ், கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

முன்னதாக இறையாண்மை மற்றும் வணிக கடன் வழங்குநர்களுடன், இறையாண்மைக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வரை, தீர்ப்பை ஆறு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்குமாறு இலங்கையும் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தது.

2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை திவாலாகிவிட்டதாக அறிவித்த நிலையில், தமக்கான 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்த தவறிமைக்காக ஹமில்டன் ரிசர்வ் வங்கி வழக்கை தாக்கல் செய்தது.

இதேவேளை வழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து இலங்கையின் நிதி அமைச்சும் இதுவரை அறிக்கை எதனையும் வெளியிடவில்லை.

நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலையில் விகாரை அமைப்புக்கு எதிராக போராட்டம் !

திருகோணமலை நீதிவான் நீதிமன்றமத்தின் தடை உத்தரவை மீறி திருகோணமலை – பெரியகுளம் பகுதியில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சட்ட விரோதமான முறையில் திருகோணமலை பகுதியில் அமைக்கப்படவிருக்கும் விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த போராட்டம முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

இதேவேளை குறித்த போராட்டம் இன முறுகலை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு நிலாவெளி பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றிடம் கோரிக்கை முன்வைத்தனர்.

அதன் அடிப்படையில் இரு தரப்பிலும் தலா 7 பேர் வீதம் 14 பேருக்கு திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதிவான் அண்ணாத்துரை தர்ஷினி நேற்று தடை விதித்துள்ளார்.

இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விகாரை அமைப்பதற்கு ஆதரவாக செயற்படும் பௌத்த பிக்குகள் உள்ளிட்டோரும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“சிங்களவனை காட்டி தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” – சிவனேசதுரை சந்திரகாந்தன் 

“பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என தமிழ் மக்களை தமிழ்தேசிய அரசியல்வாதிகள் உசுப்பேற்றிக்கொண்டிருக்கிறார்கள்.” என கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

புனரமைக்கப்பட்ட களுவாஞ்சிகுடி கண்ணகை அம்மன் வீதியை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை(31) மாலை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையியே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

“அடுத்து வருகின்ற வரவு செலவுத் திட்டத்திலும், உலக வங்கி, மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய திட்டங்களிலும் அதிகளவு நிதி ஒதுக்கீடுகளை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதுவே நாம் அடைய நினைக்கும் இலக்காகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிக்கலான சூழ்நிலை இருந்தபோது எமது கட்சியை மட்டக்களப்பு மக்கள் மீட்டெடுத்தார்கள். அதன் பெறுமதியை நாம் அரசாங்கத்துடன் இணைந்து பல பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிலையில் மக்களுக்கு நாம் முன்வைத்த கோரிக்கைகயை நிறைவேற்றுவதில் பல தடைகள் உள்ளன. ஆனாலும் சற்றுக்காலம் தாழ்த்தியாவது அவற்றை நிறைவேற்றிக் கொடுப்போம் என நாம் நம்புகின்றோம். 1960 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பட்டிருப்பு பாலத்தை நாம் பார்வையிட்டோம். அப்பாலம் குண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட பாலமாகும். அதனை செப்பனிடுவதற்கு 1300 மில்லியன் ரூபாய் நிதி தேவையாகவுள்ளது.

 

1956 ஆம் ஆண்டு ஸ்ரீ சட்டம் கொண்டு வரப்பட்டது. ஸ்ரீ சட்டத்தின் பின்னர்தான் சீ.மூ.இராசமாணிக்கம் ஐயாவும் தமிழரசுக் கட்சியில் இணைந்து கொண்டார். ஒரு சிங்கள எழுத்துக்காகவேதான் அவர் அக்கட்சியில் இணைந்து கொண்டார். அதற்காக எமது தமிழ் தலைவர்கள் வாகனங்களில் ஸ்ரீ எழுத்தை நீக்கிவிட்டு அ எழுத்தை பொருத்திக் கொண்டு மட்டக்களப்புக்கு வந்தார்கள். பின்னர் பட்டிருப்புத் தொகுதியிலே சீ.மூ.இராசமாணிக்கம் ஐயா அவர்கள் நாடாளுமன்றத்திலே இருந்தார். தமிழரசுக் கட்சியின் நூற்றாண்டு வரலாறு தோற்றுப்போன வரலாறாகும். இரண்டு தலைமுறைகள் அழித்துவிட்ட வரலாறாகும். அழிந்துள்ள இந்த வரலாற்றிலேயேதான் நாம் நிற்கப்போகின்றோமா என சிந்திக்க வேண்டும்.

இராசமாணிக்கம் ஐயா பிறந்த இடம் மண்டூர் அவர் மண்டூருக்கு கட்டிக் கொடுத்த பாலம் எங்கே? அவரது காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் எங்கே? அவர் மக்களுக்காக செய்த பணி ஒன்றுமே இல்லை. மாறாக பாலம் கட்டினால் சிங்களவன் வருவான், ஏழை எழிய மக்களுக்கு சிங்களம் புகட்டக்கூடாது, என சாதாரண மக்களை உசுப்பேற்றி விட்டார்கள்.

தற்போது 2 தலைமுறைகள் கடந்து தற்போது என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் பொலிஸில்  சேரமுடியாது, சிங்களவர்களுடன் சேர்ந்து நிர்வாகம் செய்ய முடியாது, ஏனைய பணிகளைச் செய்யமுடியாது, போன்ற நிலமைகளை களுவாஞ்சிகுடி மக்கள் இன்னமும் நினைத்துப் பார்க்க முடியாமல் இருக்க முடியாது.

அழிந்து புதைக்கப்பட்ட எமது இளைஞர்களுக்குச் சொல்லும் கருத்து என்ன? அல்லது இந்த மக்களுக்கு நாம் கட்டும் வழி என்ன? இன்னமும் துவேசத்தனமாகப் பேசி இந்த மக்களை எந்த இடத்திற்குக் கொண்டு செல்லப்போகிறோம், அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக என்றால் ஒன்றும் இல்லை.

இதுதான் பாரம்பரிய மேட்டுக்குடி அரசியல் வரலாறாகும். ஏனெனில் அவர்கள் அவர்களது வாரிசுகளுக்காகத்தான் செயற்படுகின்றார்களே தவிர மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதற்கு உதாரணம் இந்த மண்ணிலேயே நிகழ்ந்திருக்கின்றது.

எந்தப் அப்பாவிப் பிள்ளைகளை உசுப்பேற்றி துப்பாக்கிகளைக் கொடுத்து மரணிக்க வைத்தார்களோ, எந்தப் பிள்ளைகளை சிங்களமும், ஆங்கிலுமும் கற்கக் கூடாது என உசுப்பேற்றினார்களோ அவர்களுடைய பிள்ளைகள் தற்போதிருக்கும் நிலமைகளை நினைத்துப் பார்த்தால் மக்களுக்கு விளங்கும் என நினைக்கின்றேன்.

சாமானிய மனிதர்களை வாழவைப்பதுதான் அரசியல் என“ அவர் இதன்போது தெரிவித்தார்.

கனடா அனுப்புவதாகக் கூறி வவுனியாவில் பண மோசடி – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் கைது !

கனடா அனுப்புவதாகக் கூறி வவுனியாவில் பண மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாகக் கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றிருந்தார்.

ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றிருந்ததுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் சங்கிலி ஒன்றையும் பெற்றுள்ளார்.

 

எனினும் கனடா அனுப்பாது மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரை வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த நபரை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இனமுரண்பாட்டை ஏற்படுத்தி ஆட்சிக்கு வரும் எண்ணத்தில் ஜனாதிபதி ரணில்…” – இரா. சாணக்கியன்

“தமிழ் மற்றும் சிங்கள மக்களிடையே இனமுரண்பாட்டை ஏற்படுத்தி ஆட்சிக்கு வரும் எண்ணத்தில் ஜனாதிபதி ரணில் செயற்படுகிறார். இதனால் தமிழ் மக்களுக்கு ஆபத்தான காலம் உருவாகலாம்.” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று(01)சமகால அரசியல், பொருளாதார நிலவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்கு உட்படுத்தி தாங்கள் ஆட்சிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி செயற்படுகின்றார். ஆட்சியைக் கைப்பற்றும் முதல்கட்டமாக வடக்கு கிழக்கிலே இடம்பெறும் சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது. அண்மையில் திருகோணமலையில் ஜனாதிபதியும் இந்தியாவும் செய்த சில ஒப்பந்தங்களைப் பற்றி சில ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இவ்வாறாக இந்த விடயங்களை அவதானிக்கும் போது முல்லைத்தீவு மாவட்டத்திலே குருந்தூர் மலையிலே மாபெரும் எதிர்ப்பு பேரணியிலேயே தமிழ் மக்கள் ஈடுபட்டனர். பிக்குமார் அவ்விடத்தில் முரண்பட்டனர். அதனைத் தொடர்ந்து திருகோணமலையில் ஆளுநருடைய அலுவலகத்துக்குள் அடாவடித்தனமாக பிக்குமார்கள் சென்றனர்.

அந்த விகாரை கட்டுவதை ஒரு பெரிய பூகம்பமாக தெற்கிலே பரபரப்பாக செய்திகள் பரப்பினர். இவ்வாறான சில விடயங்களில் இன முறுகலுக்கான ஆரம்ப நிலையை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.”எனத் தெரிவித்துள்ளார்.

இலங்கையை விட்டு வெளியேறும் முயற்சியில் சுமார் 5000 வைத்தியர்கள் !

சுமார் 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான முயற்சியில் இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் வைத்தியர் விஜயரத்ன சிங்கம் தர்ஷன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை (02) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் வைத்தியர்களில் 95 வீகிதத்துக்கு மேற்பட்டவர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.

இலங்கை பொருத்தவரையில் வைத்தியத்துறை சம்பந்தப்பட்ட பெரும்பான்மையினை நாங்கள் பிரதிபலிக்கின்றோம், இவ்வாறான ஒரு தொழிற்சங்கமாக இருக்கின்ற படிவால் நாங்கள் சுகாதாரத்துறை சம்பந்தமான பிரச்சினைகளில் அக்கறை செலுத்துவதும் அதில் ஏற்படுகின்ற சாதக பாதக நிலைமைகள் பற்றி ஆராய்வதிலும் அக்கறை செலுத்தி வருகின்றோம்.

அவ்வாறே இந்த மருந்து தட்டுப்பாடு சம்பந்தமாகவும், புத்திஜீவிகள் வெளியேற்றம் முக்கியமாக வைத்தியர்களுடைய வெளியேற்றம் தொடர்பாக கடந்த காலங்களில் நாங்கள் சுகாதாரத் துறைக்கும் அரசாங்கத்துக்கும் எங்களுடைய முன்மொழிவுகளை வழங்கி இருந்தோம்.

அது உத்தியோகபூர்வமான கூட்டங்களில் பரிசிலிக்கப்படுவதாக கூறப்பட்ட போதும் எந்தவிதமான முன்னேற்றமும் வெட்டப்படவில்லை, முதலாவதாக மருந்து மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்கள் தட்டுப்பாட்டினை உற்று நோக்குவமாக இருந்தால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இது நிலவி வருகின்றது.

அதுமட்டுமில்லாமல் தற்போது மருந்தின் தரம் இன்மை தன்மையும் ஆங்காங்கே நிலவி வருகின்றது.

அடுத்து புத்துஜீவிகள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்கு பிரதானமான நிலைமை நாட்டின் பொருளாதார நிலமையும், அதனால் ஏற்பட்ட வாழ்க்கைச் செலவினமும், மற்றும் எதிர்கால சந்ததியினரது ஸ்த்திரத்தன்மை என்பதும் இதில் பெருமளவு செல்வாக்குச் செலுத்துகின்றது.

கிட்டத்தட்ட சுகாதார அமைச்சர் தெரிவித்ததின்படி 850 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி இருக்கின்றார்கள் மேலும் ஐயாயிரம் வரையிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முயற்சிகளில் இருக்கின்ற மையும் எங்களுக்கு தெரிய வந்திருக்கின்றது.

இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற போது ஒரு ஆளணி பற்றாக்குறை ஏற்படப் போகிறது. இவ்வாறு ஆளணி பற்றாக்குறை ஏற்படுகின்ற போது ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்திள்குள் மட்டுப்படுத்த வேண்டிய நேரிடும்.

இவ்வாறு மட்டுப்படுத்துவதினால் சேவையை நாடிவரும் நோயாளிகள் அனைவருக்கும் சேவையினை வழங்க முடியாத நிலையும் ஏற்படலாம் இதனால் நோயாளிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்.

இவ்வாறு குறுகிய நேரத்துக்கு நோயாளிகளை பார்வையிடுவதால் தரமான சிகிச்சையினை வழங்க முடியாமல் போகலாம். இவ்வாறான பிரச்சினைகள் எங்களுடைய பிரதேசங்களில் வெகுவாக அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்ற ரீதியில் இவற்றை நாங்கள் முதலே ஆராய்ந்து அரசாங்கத்திற்கு அதன் முன்மொழிவுகளை சமர்ப்பித்திருக்கின்றோம்.

இந்த நிலை நீடிக்காமல் அரசாங்கம் விரைந்து செயல்பட்டு நாட்டிலிருந்து வைத்தியர்கள் வெளியேறுவதை தடுப்பதற்குரிய வழிகளை மேற்கொண்டு எங்களுடைய வாழ்க்கைச் செலவை கொண்டு செல்லக்கூடிய வேதனை ஏற்றத்தை வழங்குவதன் மூலம் புத்திஜீபிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுப்பதுடன் மருந்து தட்டுப்பாடு நீக்குவதற்குரிய முன்மொழிவுகளின் ஊடாக மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து பாமர மக்களுக்கும் பயன் பெற்று வைத்தியர்களும் நாட்டில் நிலை கொண்டிருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான நோக்கமாகும் என தெரிவித்தார்.

“என்னுடன் கொண்டுள்ள அரசியல் பேதங்களை மறந்து வடக்கு கடற்றொழிலாளர்களின் துயரங்களை போக்க ஒன்றாகுங்கள்.” – தமிழ்தலைவர்களிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள் !

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத கடற்றொழில்களால் வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக வடமாகாண தமிழ் பேசும் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரின் கவனத்திற்கும் எடுத்துச் செல்ல வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அதேநேரம், என்னுடன் அரசியல் பேதங்களைக் கொண்டிருக்கும் தமிழ் அரசியல் வாதிகள் அவற்றை மறந்து வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் விடயத்தில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருந்தால் தமிழகப் பயணத்தில் நான் பங்கேற்பதற்கு தயராகவே உள்ளேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை கண்டித்தும், அவற்றை தடுத்து நிறுத்தக்கோரியும் யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளத்தினால் போராட்டம் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்னால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண கடற்றொழிலாளர்கள் இந்தியா மீனவர்களின் அத்துமீறல்கள், மற்றும் சட்டவிரோதமான இழுவைப்படகு உள்ளிட்ட மீன்பிடியால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயம் சம்பந்தமாக நான் தொடர்ச்சியான கரிசனைகளைச் செலுத்தி வருகின்றறேன். மேலும் குறித்த விவகாரத்தினை தீராப்பிரச்சினையாக நீடித்துச் செல்வதற்கு இடமளிப்பதற்கு நான் விரும்பவுமில்லை.

ஆகவே, உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகள், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்பனவற்றுக்கு அப்பால் வடமாகாணத்தில் உள்ள தமிழ் பேசும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விடயத்தில் பங்கேற்பைச் செய்ய வேண்டும். அவர்கள் அனைவருக்கும் தமிழகத்தின் பல்வேறு அரச மற்றும் அரசியல் தரப்பினருடன் தொடர்புகள் காணப்படுகின்றன. அந்த தொடர்புகளின் ஊடாக எமது கடற்றொழிலாளர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

வெறுமனே, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுகின்றார்கள், இலங்கை கடற்படை தாக்குகின்றது என்ற விடயத்தினை மையப்படுத்திய பிரசாரங்களுக்கு அப்பால் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாலும், இழுவைப்படகு உள்ளிட்ட சட்டவிரோதமான மீன்பிடி முறைகளை பின்பற்றுவதாலும் ஏற்படுகின்ற இழப்புக்கள், வளப்பறிப்புக்கள் சம்பந்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் அன்றாட மற்றும் எதிர்கால நிலைமைகள் ஆபத்துக்கு உள்ளாகியிருப்பதையும் எடுத்துரைக்க வேண்டியுள்ளது. ஆகவே, இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்பினரும் தமிழகத்துக்கு தெளிவு படுத்தல்களை மேற்கொண்டு இப்பிரச்சினைக்கான முற்றுப்புள்ளியைப் பெறுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அரசியல் பேதங்களை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே உள்ளேன். எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு முழுமையானதும் நிரந்தரமானதுமான தீர்வினைப் பெறுவத்கு எனது ஒத்துழைப்புக்களை அர்ப்பணிப்புடன் வழங்க தயாராகவே உள்ளேன்.

அதற்காக, வடக்கு தமிழ் பேசும் அரசியல் வாதிகள் கூட்டாக தமிழகத்துக்கு செல்வதற்கும், அவ்வாறு செல்கின்றபோது அரசியல் பேதங்களை மறந்து என்னையும் உள்ளீர்க்க விரும்பினால் நான் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளேன். மேலும், இந்த விடயத்தில் அனைத்து அரசியல் தரப்புக்களும் தாம் தமிழகத்துடன் கொண்டுள்ள நெருக்கமான உறவுகளை எமது கடற்றொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.