April

April

காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது – அமெரிக்கா

காசா யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்னரே இஸ்ரேலிய இராணுவத்தின் ஐந்து படைப்பிரிவினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதி செய்துள்ளது.

எனினும் இதில் ஒரு படைப்பிரிவிற்கான  உதவிகளை குறைப்பதா இல்லையா என அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை என சிஎன்என் தெரிவித்துள்ளது.

ஏனைய நான்கு படைப்பிரிவுகளும் இந்த தவறுகளை திருத்திக்கொண்டுள்ளன என அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

நெட்சா யெகுடா படைப்பிரிவிற்கான  உதவிகளை நிறுத்துவதா இல்லையா என்பதை அமெரிக்கா இன்னமும் தீர்மானிக்கவில்லை.

2022 இல் முதிய பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு இந்த படைப்பிரிவே காரணம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நாங்கள் இஸ்ரேலிய படையினருடன் தொடர்ந்தும் கலந்தாலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம் அவர்கள் குறிப்பிட்ட படைப்பிரிவு குறித்து மேலதிக தகவல்களை தந்துள்ளனர் என இராஜாங்க திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து சம்பவங்களும் ஒக்டோர் 7 ம் திகதிக்கு முன்னர் இடம்பெற்றவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு – ஐவர் படுகாயம்!

லண்டனின் கிழக்கு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வாள் ஏந்திய நபர் ஒருவர் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள்உட்பட ஏழு பேரை தாக்கினார் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

36 வயது நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஹைனோல்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்த மன்பிரீட் சிங் என்பவர் சம்பவத்தை இவ்வாறு விபரித்துள்ளார்.

காலை ஏழு மணியளவில் நான் அலுவலகத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தேன் வீதியின் மறுப்பக்கத்தில் ஏதோ குழப்பநிலை காணப்படுவதை அவதானித்தேன் கையில் வாளுடன் காணப்பட்ட நபருடன் ஐந்து ஆறுபேர் இழுபறியில் ஈடுபட்டுள்ளதை பார்த்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை அவர்களில் ஒருவர் வாளால் குத்தப்பட்டார் ஏனையவர்கள் பொலிஸாரையும் அம்புலன்சையும் தொடர்புகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

பத்து நிமிடங்களின் பின்னர் பல பொலிஸ்கார்கள் அந்த பகுதிக்கு விரைந்தன அதன் பின்னர் நபர் ஒருவர் ஓடுவதை பார்த்தேன் அவர் அங்குள்ள வீடுகளிற்குள் நுழைய பார்த்தார் ஆனால் அவரால் முடியவில்லை அவ்வேளை அவர் மீது டேசரை பயன்படுத்தினார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரை பொலிஸார் பிடிப்பதையும் அவர் அதனை எதிர்ப்பதையும்பார்த்தேன் பத்து 15 நிமிடங்களி;ல் எல்லாம் முடிந்துவிட்டது அந்த நபர் ஆட்களை வெட்டினார் நால்வரை குத்தினார் என கேள்விப்பட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் – எரிக்சொல்ஹெய்ம்

இலங்கையில் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளார் என நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியின் போது அச்சமடைந்து ஓடாதவர் என்ற தனது சமூக ஊடக பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
18 மாதங்களிற்கு முன்னர் நாடு முன்னொருபோதும் இல்லாத மிக மோசமான நெருக்கடி நிலையில் சிக்குண்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மின்சார துண்டிப்பு காணப்பட்டது எரிபொருளிற்காக நீண்ட வரிசைகள் காணப்பட்டன -பணவீக்கம் மிகவேகமாக அதிகரித்துக்கொண்டிருந்தது அனேக வர்த்தகங்கள் வீழ்ச்சியடையும் நிலையில் காணப்பட்டன என தெரிவித்துள்ள அவர் மக்கள் ஜனாதிபதியை வீழ்த்தினார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது ஸ்திரதன்மை மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது பணவீக்கம் மிகவும் குறைவாக காணப்படுகின்றது மின்துண்டிப்பும எரிபொருளுக்கான வரிசைகளும் கடந்தகால விடயங்களாகிவிட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல இலங்கையர்களிற்கு இன்னமும் வாழ்க்கை கடினமாக உள்ளது பல பொருளாதார வலிகள் காணப்படுகின்றன ஆனால் இலங்கை தற்போது எதிர்காலத்தை நோக்கி சிந்திக்கலாம் எனவும் எரிக்சொல்ஹெய்ம் பதிவிட்டுள்ளார்.
நெருக்கடி தாக்கியவேளை தப்பியோடாதவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க எனவும் குறிப்பிட்டுள்ள எரிக்சொல்ஹெய்ம் இலங்கையில் எனது நீண்டகால நண்பர்கள் ரணில்விக்கிரமசிங்க அவரது மனைவி மைத்திரியுடன் சுவையான இரவு உணவை உண்டது மிகவும் சிறப்பான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

‘Ana Than’ யார் இந்த முகநூல் பொறுக்கி: பாரிஸ் முதல் யாழ் வரை பெண்களுக்கு எதிராக சமூக வலைத்தள வன்முறையும் – துஷ்பிரயோகங்களும்!

தமிழ் சமூகத்தில் பொதுவெளியில் முன்னேறி வரும் பெண்களை சாதாரணர்களையும் கூட இலகுவாக விழுத்தித்தள்ளுவதற்காக ஆணகள் கையில் எடுக்கும் பாரிய ஆயுதம் தான் நிர்வாணம் சார்ந்த வசையாடல்கள். இதனை கலாநிதிகளும் கல்லாநிதிகளும் வேறுபாடின்றி செய்கின்றனர். அதனைச் செய்ய முடியாதவர்கள் இவ்வாறு செய்பவர்களுக்கு லைக் போட்டு சிற்றின்பம் காண்கின்றனர்.

‘Ana Than’, என்ற முகம்மூடிய முகநூல் நபரால் உருவாக்கப்பட்ட “பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி – சுண்ணாகம்” என்ற முகநூல் பக்கம் ஒன்று தேசம் நெட் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இம்மாதம் ஏப்ரல் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள குறித்த முகநூல் கணக்கில் திட்டமிட்ட வகையில் ஒரு பெண் மீதான தங்களுடைய வக்கிரத்தை கொட்டித் தீர்ப்பதற்காக அந்த கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதை தெளிவாக காண முடிகின்றது. நேரடியான கணக்கில் இருந்தே பிரச்சினையை வெளிப்படுத்த தைரியம் இல்லாத இந்த ஆண்கள் குழு ஒன்று போலி கணக்கில் இருந்து பெண் ஒருவரின் நிர்வாணத்தை தாக்கி தங்களை வீரர்களாக காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஆகப்பெரிய கொடுமை என்னவென்றால் அந்த பெண்ணை நிர்வாணம் சார்ந்து கொச்சைப்படுத்தும் குறித்த பேஸ்புக் கணக்கில் சுமார் 400 வரையானவர்கள் நட்பு பட்டியலில் உள்ளனர். Ana Than என்ற முகநூல் கணக்கிலுள்ளவர் குறித்த பெண் தொடர்பான நிர்வாண படங்களை அதிகம் பதிவேற்றி பகிர்ந்துள்ளார். இதே நேரம் தேசம் ஜெயபாலன் குறித்த முகநூல் பக்கத்தில் அதிகமான பதிவுகளை இட்ட குறித்த கணக்கில் பின்தொடர்பவர்களாக உள்ள Ana Than மற்றும் Thabesan Krishna ஆகியோருடன் தொடர்பு கொள்ள முற்பட்டும் பதில் ஏதும் கிடைக்கவில்லை.

Ana Than என்ற பெயரில் முகநூலைக் கொண்டுள்ள நபரே குறித்த பெண் பற்றிய மோசமான பதிவுகளை வெளியிட்டுள்ளார். இவர் தான் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதாகக் கூறி இட்ட பதிவுக்கு 93 பேர் லைக் இட்டுள்ளனர். குறித்த நபர் தான் சுண்ணாகத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இத்தகவல்கள் உண்மையா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் அனா தன் என்ற இந்நபர் குறித்த பெண்ணை நன்கு அறிந்தவராக உள்ளார். அப்பெண் மீது காதல் கொண்டது போல் வசனங்கள் பாடல்கள் என்பவற்றை பெப்ரவரி மார்ச் மாதத்தில் வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அதன் பின் ஏப்ரல் மாதம் முதல் அப்பெண் பற்றி தாறுமாறான பதிவுகளை வெளியிட்டு வருகின்றார். பாதிக்கப்பட்ட ஆண்கள் கட்சி சுண்ணாகம் என்ற முகநூல் பற்றிய விபரம் அந்நூல் திறக்கப்பட்டதும் இவருடைய முகநூல் தளத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது.

இந்நபருடைய முகநூல் தளத்தில் 3200 பேர் நட்பாக உள்ளனர். இவர்களில் பலரும் இவருடைய முகநூலைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பலநூறு பேர் மோசமான பதிவுகளைப் பார்த்துவிட்டு, அப்பெண்ணை அரை நிர்வாணக்கோலத்தில் அனா தன் எடிட் செய்த படங்களை போட அதற்கும் லைக் கொடுத்துள்ளனர். ராம் சன்ட் என்பவர் மட்டும் கண்டித்து ஒரு பதிவை இட்டதைப் பார்க்கக் கூடியதாக இருந்தது. இந்த நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான ஈழத் தமிழ் ஆண்களின் ஈனத்தனமும் பாலியல் வக்கிரமும் ஆண்களுக்கே அவமரியாதையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

இவர்களுக்கு தாய், சகோதரிகள், பெண் பிள்ளைகள் உறவு எதுவும் இல்லாமல் இவர்கள் வானத்தில் இருந்தா குதித்தார்கள் என்று கேள்வியை எழுப்புகின்றது. இந்த மனநோயாளிகளை யாரோ ஒரு அப்பாவிப் பெண் மணம் முடித்து தன் வாழ்க்கை அழிக்கப் போகின்றாளே என்ற அச்சம் என் போன்ற சகோதரர்களுக்கும் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களுக்கும் ஏற்படுகின்றது என்கிறார் இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சகோதரன்.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகம் உள்ள தாயகத்தில் ஈழத்துப் பெண்களின் நிலைமை இதுவென்றால். புலம்பெயர்ந்த ஈழத்து ஆண்கள் சிலர் ஈழத்தில் வாழும் சில ஆண்களிலும் பார்க்க மோசமான காட்டுமிராண்டிகளாக உள்ளனர். புலிகள் தொடர்பில் பேசியதற்காக அண்மையில் பிரான்ஸில் வைத்து “சுஜிகூல்” என்ற சமூக வலைதள பிரபலம் ஒருவரை தாக்கியதுடன் நின்று விடாது வேசி என்ற சொல்லில் தொடங்கி அந்த பெண் என்னென்ன தகாத வார்த்தைகளை பேசினாள் என்று தாக்கினோம் என கூறி விமர்சனங்கள் முன்வைத்தனரோ அதே வார்த்தைகளை ஏன் அதை விட அந்த பெண்ணின் பிறப்பு தொடங்கி அம்மா அப்பா அனைவரையும் சேர்த்து பேசி பழிவாங்கியதாக ஆர்கஸம் அடைந்து கொண்டனர் புலம்பெயர் தமிழ் தேசியவாதிகள்.

சுஜிகூல் விடுதலைப் புலிகளின் தலைவரை மதித்தே அவருடைய படத்தை தன்னுடைய அறையில் மாட்டியிருந்தார். ஆனால் சுஜிகூலைத் தாக்கிய அக்கா கடை உரிமையாளர் முரளி மற்றும் பதினைந்துவரையான ஈழத்து ஆண்கள் உட்பட முப்பதினாயிரம் வரையானோர் ரிக்ரொக்கில் அப்பெண்ணின் மாலை மயக்கத்தில் இருந்துள்ளனர். இந்த ஈழத்து ஆண்கள் சுஜிகூலை கொழும்பாள், வடக்கத்தையாள் என்றெல்லாம் பிரதேசவாதத்தை இழுத்து அவருடைய பெண்ணுடல் சார்ந்த வசையாடல்களைப் பொழிய சுஜிகூல் அவர்களுடைய வசையாடல் மொழியிலேயே பதிலடி கொடுத்தார். அந்த உரையாடல்களில் பாலியல் வக்கிரத்துடன் தாங்கள் பேசியவற்றை நீக்கிவிட்டு சுஜிகூலின் வசையாடலை மட்டும் பதிவிட்டு தங்களை ஆனையிறவுத் தாக்குதலில் இருந்து திரும்பிய மாவீரர்களாக படம் காட்டினர் லாச்சப்பல் அக்கா கடைச் சருகு புலிக் கும்பல்.

இவர்கள் புலிகளாகக் காட்டிக்கொண்டே இந்த வசையாடல்களைப் புரிந்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனை பாரிஸில் தெருவுக்கு இழுத்துவிட்டு ஆனையிறவுத் தாக்குதல் பாடலையும் போட்டு கேவலப்படுத்தியது அக்காகடை உரிமையாளர் முரளி தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட கும்பலே. இவர்கள் ரிக்ரொக்கில் தங்கள் மனைவிமார் காதலியுடன் சல்லாபிப்பது போல் ஆரம்பித்த விளையாட்டே லாச்சப்பலில் புலிகளின் தலைவரையும் சந்திக்கு இழுத்துவி;ட்டது. இச்சம்பவத்திற்குப் பின்னரும் ரிக்ரொக்கில் இந்த அந்தரங்கக் கூட்டம் வசையாடல்களை இன்றும் தொடர்கின்றது. இந்த ஆண்களே சுஜிகூல்களை உருவாக்கிக்கொண்டுள்ளனர்.

இதே போலத்தான் புலிகளை பாஸிஸ்டுகள் என கூறியதற்காக பெண் சட்டத்தரணி ஒருவரை தேவடியா, அந்த மகளே இந்த மகளே என்றெல்லாம் கொட்டித்தீர்த்தார்கள் நமது புலிக்குட்டிகள்.

இது சாதாரணமான ஒரு விடயமாக கடந்து செல்ல முடியாதது. யாரோ ஒரு பெண் தானே என் கடந்து செல்வோமாயின் இது நாளை நம் வீட்டு பெண்களுக்கும் நடக்கும் அப்போது மட்டும் நியாயம் தேவை நீதி தேவை என வந்து விடுகின்றோம்.

சில மாதங்களுக்கு முன் யாழில் ஒரு ரவுடிக்கும்பல் ஒரு இளம் பெண் இன்னுமொருவரை காதலிக்கின்றார் என்று தெரிந்தும் அவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்தும் அவரைப் பலாத்காரப்படுத்தி காதலிக்க வைக்க முயன்றுள்ளனர். இறுதியில் அக்கும்பல் வன்முறையில் இறங்கி பொலிஸ் அழுத்தங்களை ஏற்படுத்தி அக்காதல் தம்பதியின் திருமணத்தை குழப்புவதற்கு முழு முயற்சியும் எடுத்தனர். இறுதியில் அப்பெண் பற்றி முகநூலில் வசையும் பாடினர். இத்தனைக்கும் அப்பெண்ணின் தந்தை ஒரு நீதிபதி, முற்போக்குத் தளத்தில் நன்கு அறியப்பட்ட சமூக செயற்பாட்டாளர். ஒரு ஆண் நினைத்தால் குறிப்பாக ஈழத்து ஆண், எதனையும் செய்யலாம் என்ற நிலையில் தான் ஈழத்துப் பெண்கள் தாயகத்திலும் புலத்திலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையுள்ளது.

மேலும் ஆண்கள் தங்களுக்குள் பிரச்சினைகள் வருகின்ற போது அவர்கள் மோதிக்கொள்வதை விடுத்து மறு தரப்பினரின் குடும்பப் பெண்களின் படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பாலியல் வக்கிரத்துடன் எழுதுவதை தினம் தினம் காண்கின்றோம். இதனை பாரிஸில் உள்ள லாக்குர்னே ஆலயத்தின் தலைவர் தற்போது சஜித் பிரேமதாஸாவின் கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளராக இருக்கும் குடுமி ஜெயா என்ற ஜெயந்திரன், முன்னர் புலிகளிடம் இருந்த லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் ஆர் ஜெயதேவன் அவருடைய சகபாடி ரரின் கொன்ஸ்ரன்ரைன் போன்றவர்களும் செய்து வருகின்றனர். இதற்கான பல ஆதாரங்கள் தேசம்நெற் இல் ஏற்கனவே வெளியிட்ப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மையில் தேசம் திரை காணொளி ஒன்றில் பேசியிருந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நளினி ரத்னராஜா இந்த நிலை பற்றி கூறிய போது “இது ஒருவிதமான உளவியல் நோய். தன்னை ஒரு பெண் நிராகரிக்கும் போது வேறு வழியின்றி உண்மையை ஏற்க மறுத்து அவள் தொடர்பான தூஷணங்கள் பேசுவது, சமூக வலைத்தளங்களில் தேவையற்ற பதிவுகளை இடுதல், குறித்த பெண்ணின் நிர்வாண படங்களை பதிவிடுதல் எல்லாமே அந்த உளவியல் நோயின் ஒரு வெளிப்பாடே – அதுவும் ஒருவிதமான இயலாமையின் வெளிப்பாடு தான். பாலின சமத்துவம் தொடர்பான கல்வி அடிப்படையில் இருந்து வழங்கப்படுதல் இந்த நிலமைகளை எதிர்கொள்ள உதவும்” என அவர் மேலும் குறித்த நேர்காணலில் தெரிவித்தார்.

குறித்த பெண் சரியானவரோ? பிழையானவரோ? என்பது தேவையற்ற விவாதம். இங்கு தேவையான கேள்வி: இவர்கள் யார்..? யாரோ ஒரு பெண்ணை பொதுவெளியில் வைத்து நிர்வாணப்படுத்தவும் – அந்த பெண்ணுடைய தொலைபேசி இலக்கத்தை பகிரவும் – வீட்டு விலாசத்தை பகிரவும் – குடும்பத்தை பற்றி பொதுவெளியில் பேசவும் யார் இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தது. ஆண் என்பதைத்தவிர எவ்வித மனிதத்துவ விழுமியங்களுமற்ற இவர்கள் ஈழத்தமிழ் சமூகத்தின் தீவிரமாகப் பரவிவரும் ஒரு புற்றுநோய். ஈழத் தமிழ் பெண்க்ளை அவர்கள் தாயகத்தில் வாழ்ந்தாலென்ன புலத்தில் வாழ்ந்தாலென்ன இவ்வாறான ஈழத்து பாலியல் வக்கிரம் கொண்ட சில ஆயிரம் ஆண்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டியுள்ளது.

கெடுதல் செய்பவனை காட்டிலும் அதனை ஆமோதித்து அமைதியாக இருப்பவனே ஆபத்தானவன் என்பார்கள். குறித்த முகநூல் கணக்கில் நட்பு பட்டியலில் உள்ள 400க்கும் அதிகமான நண்பர்கள் தான் மிக்க மோசமானவர்கள். அதிலும் சிலர் நைஸ், முகவரி என்ன..? ஃபோன் நம்பர் என்ன என விசாரிப்பதும் அதற்கு லைக்ஸ் கிடைப்பதெல்லாம் அத்தனை வக்கிரமான நிலைக்கு தமிழ்ச்சமூகம் சென்று கொண்டிருப்பதையே காட்டுகிறது. குறித்த முகநூல் கணக்கை பின்பற்றும் முகநூல் கணக்குகளில் முற்போகாளர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், மற்றும் அம்மான் படையணி வடமாகாணம், வலி தெற்கு பிரதேசசபை, தோப்புக் காடு விளையாட்டு கழகம், நண்பர்கள் நற்பணி மன்றம், ஆணைக்கோட்டை யூனியன் விளையாட்டு கழகம், சுழிபுரம் கிழக்கு கண்ணகி அம்பாள் ஆலயம் ஆகிய முகநூல் கணக்குகள் நட்பு பட்டியலில் உள்ளன. என்ன அடிப்படையில் நண்பர்களாகினரோ தெரியாது . ஆனால் இந்த கணக்குகளில் இருந்து ஒருவர் கூட இந்த குறித்த பெண்ணுக்காக பேசத் தயாரில்லை.

யாரோ ஒரு பெண் தானே என் கடந்து விட முடியாது. ஏனெனில் இது தான் நாளை நமது வீட்டு பெண்களுக்கும் நடக்கும். யாரோ ஒரு ஆண் நினைத்தால் ஒரு பெண்ணை பொதுவெளியில் எத்தனை தரக்குறைவாகவும் பேசி விடலாம் என்ற தைரியத்தை குறித்த பதிவுக்கு லைக் போட்ட 400 வரையான முதெகெழும்பு அற்ற ஆண்களும் வழங்குகிறார்கள். இங்கு பெண் யார் என்பது பற்றிய விபரங்கள் தேவையற்றது. ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி ஒருவரை சமூக வலைத்தளங்களில் தரக்குறைவாக நிர்வாணம் சார்ந்த வசையாடல்களால் விவரிப்பது என்பது உங்களுடைய பக்குவப்படாத மனநிலையை அது காட்டுவதுடன் யார் யாருக்கு எதிராக அதை செய்தாலும் தவறு தான்.

அண்மைய காலங்களில் இலங்கையில் மேற்குறித்த பெண்ணுக்கு நடந்தது போன்றுதான சமூக வலைத்தளங்களில் நடக்கும் துஷ்பிரயோகங்கள் இலங்கையில் சடுதியாக அதிகரித்து வருவதையும் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு லட்சம் வரையான முறைப்பாடுகள் கடந்த ஆண்டு பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான இணைய சமூக வலைத்தள துஷ்பிரயோகம் தொடர்பில் பதிவாகியுள்ளதாக அறிய முடிகிறது.

இதே வேளை அண்மையில் இலங்கையின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்ட போது “சமூக வலைத்தளங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நிர்வாண புகைப்படங்கள் பதிவுகளை இடுவோருக்கு 5 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படுவதற்கான சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளார். மேலும் FACEBOOK சமூக ஊடகங்களில் தனி நபர் அவமதிப்பு, அவதூறு, பேக் ஐடி, நிர்வாண புகைப்படங்கள் பதிவேற்றப்படல், தேவையற்ற பிரச்சினைகளை கொடுப்பவர்கள் மீது 24 மணிநேரத்தில் புகார் செய்து அதற்கான நீதியும், தண்டனையும் பெற்றுக் கொள் புகார் ஒன்லைன் விண்ணப்பத்தை ஸ்ரீலங்கா பொலிஸார் மக்கள் பாவனைக்காக வழங்கியுள்ளமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது. http://www.telligp.police.lk என்ற இணைய முகவரியை அணுகி குறித்த பாதிப்பு தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என இலங்கை பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

காஸா போர் நிறுத்தம் – இஸ்­ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தொடர்பில் ஆராய்வதாக ஹமாஸ் இயக்கம்  அறிவிப்பு!

காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரி­மாற்றம் தொடர்­பான தமது முன்­மொ­ழி­வு­க­ளுக்கு இஸ்­ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்­துள்­ள­தா­கவும், இதை தாம் ஆராய்ந்­து ­வ­ரு­வ­தா­கவும் ஹமாஸ் இயக்கம்   தெரி­வித்­துள்­ளது.

ஹமாஸ் அர­சியல் பிரிவின் பிரதித் தலைவர் கலீல் அல்-­ஹேயா சனிக்கிழமை (27) விடுத்த அறிக்­கை­யொன்றில், ‘ஹமாஸ் இயக்­கத்தின் நிலைப்­பாடு தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் மத்­தி­யஸ்­தர்­க­ளுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி அனுப்­பிய முன்­மொ­ழி­வுக்கு ஸியோ­னிச ஆக்­கி­ர­மிப்­பா­ளர்­களின் உத்­தி­யோ­க­பூர்வ பதில் முன்­மொ­ழிவு இன்று இந்த இயக்­கத்­துக்கு கிடைத்­துள்­ளது. இந்த முன்­மொ­ழிவை ஹமாஸ் ஆரா­ய­வுள்­ளது. அதன் பின்னர் அது தனது பதிலை கைய­ளிக்கும்’ எனத் தெரி­வித்­துள்ளார்.

காஸா போர்­நி­றுத்தம் தொடர்­பான புதிய சுற்று பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­காக எகிப்­திய மத்­தி­யஸ்­தர்கள் வெள்­ளிக்­கி­ழமை இஸ்­ரேலை சென்­ற­டைந்த நிலையில், இஸ்­ரேலின் பதில் யோச­னைகள் ஹமா­ஸுக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளன.

எகிப்­திய மற்றும் இஸ்­ரே­லிய பிர­தி­நி­தி­களின் நோக்­கு­களின் இடை­வெ­ளியை குறைப்­பதில் அவ­தா­னிக்­கத்­தக்க முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது என எகிப்­திய புல­னாய்வுச் சேவை­யுடன் தொடர்­புள்­ள­தாகக் கூறப்­படும் அல் கஹேரா அலை­வ­ரிசை தெரி­வித்­துள்­ளது.

காஸாவின் ரஃபா நகரம் மீது சனிக்கிழமை இரவும் இஸ்­ரேலின் வான் தாக்­குதல் தொடர்ந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்­பான புதிய எதிர்­பார்ப்­புகள் ஏற்­பட்­டுள்­ளன.

ஒக்­டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் 34,388 பேர் கொல்­லப்­பட்­டுள்­ளனர் எனவும் 77,437 பேர் காய­ம­டைந்­துள்­ள­னர் எனவும் காஸா சுகா­­தார அமைச்சு  நேற்று தெரி­வித்­துள்­ளது.

ஒக்­டோபர் 7 ஆம் திகதி இஸ்­ரேலில் ஹமாஸ் நடத்­திய தாக்­கு­தல்­களில் சுமார் 1,200 பேர் கொல்­லப்­பட்ட பின்னர், கடத்­தப்­பட்ட 250 பேரில் இன்னும் 129 பேர் காஸாவில் உள்­ள­தாக இஸ்ரேல் நம்­பு­கி­றது.

கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த காலப்­ப­கு­தியில் 81 இஸ்­ரே­லி­யர்­களும் 24 வெளி­நாட்­ட­வர்­களும் விடு­விக்­கப்­பட்­ட­துடன், இஸ்­ரே­லிய சிறை­க­ளி­லி­ருந்து 71 பெண்கள், 169 சிறார்கள் உட்­பட  240 பலஸ்­தீ­னர்கள்  விடு­விக்­கப்­பட்­டனர்.

இதே­வேளை, பலஸ்­தீ­னத்தின் மேற்குக் கரை பிராந்­தி­யத்­தி­லுள்ள ஜெனின் நக­ருக்கு அருகில், பலஸ்­தீ­னர்கள் இருவர் இஸ்­ரே­லிய படை­யி­னரால் நேற்று சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளனர்.  இரா­ணுவ காவ­லரண் ஒன்றின்மீது தாக்­குதல் நடத்தியவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

லெபனானின் தென் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்த­வர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.

சிட்னி தேவாலய தாக்குதல் – கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் உயிரிழக்க தயாராகயிருந்தனர் !

சிட்னியில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினர் சிட்னி தேவாலய தாக்குதலின் பின்னர் பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்டு பலரை கொலை செய்துவிட்டு உயிரிழக்க தயாராகயிருந்தனர் என  அவுஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது ஏழு பதின்மவயதினர் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் ஆறுபேர் சிட்னி தேவலாயத்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட இளைஞனின் சகாக்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களிற்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டமை உட்பட பல குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட பதின்மவயதினரில் நால்வர் தேவாலய கத்திக்குத்து இடம்பெற்ற சில நாட்களின்பின்னர் மறைகுறியாக்கப்பட்ட செய்தியிடல் செய்தியான சிக்னல் மூலம் உரையாடியுள்ளனர்.

நான் உயிரிழக்க விரும்புகின்றேன் நான் கொலை செய்ய விரும்புகின்றேன் நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன் என அவர்கள் தங்களுக்குள் தெரிவித்துள்ளனர்.

எப்படியும் நாங்கள் கொல்லப்போகின்றோம் பொறுமையாகயிருக்கவேண்டும் என 16 வயது இளைஞன் தெரிவித்துள்ளான்.

அவன் திட்டம் உயிருடன் பிடிபடுவதா இறப்பதா என மற்றுமொரு இளைஞன் கேள்வி எழுப்பியுள்ளான்.

நாங்கள் திட்டமிடப்போகின்றோம் தப்பிப்பதுதான் எங்கள் திட்டம் ஆனால் என்ன நடந்தாலும் அது அல்லாவின் வலிமை என அவன் தெரிவித்துள்ளான்.

அல்லாவின் படைவீரர்கள் என்ற பெயரை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்  த டெய்லி டெலிகிராவ் தெரிவித்துள்ளது.

இரண்டு இளைஞர்கள் துப்பாக்கிகளை கொள்வனவு செய்யதிட்டமிட்டனர் என காவல்துறையினர் குற்றம்சாட்டவுள்ளனர்.

இந்த இளைஞர்கள் தாங்கள் யாரை இலக்குவைக்கவேண்டும் என்பது குறித்தும் சிக்னலில் உரையாடியுள்ளனர்.

நான் யூதர்களை இலக்குவைக்க விரும்புகின்றேன் என 15 வயது இளைஞன் தெரிவித்துள்ளான்.

தமிழ் பொதுவேட்பாளர் மண் கவ்வுவார் ! கொன்சவேடிவ் கட்சி தொழிற்கட்சிக்கு வாக்களியாதீர்கள் !

அண்மையில் நடைபெறவுள்ள இங்கிலாந்தின் உள்ளூராட்சி தேர்தலில் மக்களின் தெரிவு எவ்வாறானதாக இருக்க வேண்டும்..? இங்கிலாந்தின் உள்ளூராட்சி தேர்தலில் பாலஸ்தீன் – இஸ்ரேல் போரின் தாக்கம் வெளிப்படுமா என்கின்ற விடயத்தில் தொடங்கி இலங்கையில் 2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் அதில் தமிழர்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக இருக்க வேண்டும் என்பது தொடர்பிலும் – பொதுவேட்பாளர் என்ற மாய விம்பம் தொடர்பிலும் – பொதுவேட்பாளரை நிறுத்துவதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் சமூக – அரசியல் செயற்பாட்டாளர் ஏ.ஆர்.சிறீதரனுடன் தேசம் ஜெயபாலன் கலந்துரையாடும் சமகால அரசியலை அடிப்படையாக கொண்ட பரபரப்பான நேர்காணல்…

இது தொடர்பான தேசம்திரை காணொளியை காண கீழே உள்ள லிங்கை கிளிக் நெய்யவும் !

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தமிழக மாணவி கைது !

அமெரிக்கா நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ளனர்.

சொந்த மண்ணில் பாலஸ்தீனிய அரேபியர்கள் அகதிகளாக வாழும்நிலைக்கு இஸ்ரேல் யூதர்களால் ஆளாக்கப்படுகிறார்கள் என்ற கருத்தை வலுவாக முன்வைத்து அமெரிக்காவில் உள்ள பல பல்கலைக்கழகங்களின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

குறிப்பாக இஸ்ரேல் ராணுவம் காசா யுத்தத்தில் அப்பாவி பாலஸ்தீனியர்களை கொன்று குவிப்பதைக் கண்டித்து நியூயார்க் நகரின் கொலம்பியா பல்கலை மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது பிரின்ஸ்டன் பல்கலையில் நிகழ்ந்த சம்பவம் குறித்து பிரின்ஸ்டன் பல்கலை மாணவர் பத்திரிகையில் வெளிவந்த செய்தி:

பிரின்ஸ்டன் பல்கலை வளாகத்தின் முற்றத்தில் மாணவி அசிந்தியா சிவலிங்கன் மாணவர் ஹாசன் சையத் ஆகிய இருவரும் கூடாரமிட்டுக் கடந்த சில நாட்களாக பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பி வந்தனர். பின்னர் பல்கலையின் பிற மாணவர்கள் சில பேராசிரியர்கள் வெளிநபர்கள் உட்பட பலர் அவர்களுடன் இணைந்து பாலஸ்தீனை ஆதரித்தும்இ இஸ்ரேலை எதிர்த்தும் கோஷமிட்டனர்.

மேற்கொண்டு கூட்டங்கள் நடத்த அவர்கள் திட்டமிட்டு வந்தனர். இதனிடையில் கடந்த புதன்கிழமை அன்று பல்கலை வளாகத்தில் இவ்வாறு கூடாரம் இடுவது விதிமுறை மீறலென நிர்வாகம் எச்சரித்து மின்னஞ்சல் அனுப்பியது. இதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து அசிந்தியா சிவலிங்கன் ஹாசன் சையத் ஆகியஇருவரும் பல்கலையின் விடுதியில் தங்க தடை விதிக்கப்பட்டி ருப்பதாகப் பல்கலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இருவரும் பல்கலையைவிட்டு வெளியேற்றப் படவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்டமாணவி அசிந்தியா சிவலிங்கன் பிரின்ஸ்டன் பல்கலையில் சர்வதேச வளர்ச்சிக்கான பொது விவகாரத் துறையில் முதுநிலைப் பட்டம் படித்து வருகிறார்.

அநுர குமார திசாநாயக்கவுக்கு சுவீடனில் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு !

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இன்று சனிக்கிழமை (27) காலை சுவீடனின் ஸ்டாக்ஹோம் (STOCKHOLM) விமான நிலையத்தை சென்றடைந்தார்.
அங்கு அவருக்கு அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
அநுர குமார திசாநாயக்க நேற்று முன்தினம் வியாழக்கிழமை (25) இரவு இலங்கையிலிருந்து சுவீடனுக்கு பயணமானார்.
இந்நிலையில், சுவீடனில் இடம்பெறவுள்ள மக்கள் சந்திப்பு மற்றும் சினேகபூர்வமான சில ஒன்றுகூடல்களிலும் அவர் பங்கேற்கவுள்ளார்.
அதன்படி, இன்று சுவீடனில் NACKA AULAஇல் அந்நாட்டின் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு STOCKHOLM மக்கள் சந்திப்பை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் சுவீடன் குழுவினால் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளைமாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் !

அமெரிக்காவில் வெள்ளைமாளிகைக்கு அருகில் அமெரிக்க மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

அமெரிக்காவின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக மாணவர்கள் வோசிங்டனில் ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திற்கு அருகில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

காசா யுத்தத்தின் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காகவும் அமெரிக்க பல்கலைகழகங்கள் இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களில் தங்களுக்கு உள்ள தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுப்பதற்காகவும் வோசிங்டனை சேர்ந்த மாணவர்களும் பேராசிரியர்களும் செயற்பாட்டாளர்களும் அங்குகுழுமியுள்ளனர்.

அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழகங்களை போல ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழகத்திலும் மாணவர்கள் வளாகத்தில் கூடாரம் அமைத்து தங்கியிருந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

 

ஜோர்ஜ் வோசிங்டன் பல்கலைகழக மாணவர்களிற்கான எங்கள் ஆதரவை வெளிப்படுத்துவதற்காகவும் அமெரிக்காவின் ஏனைய பல்கலைகழக மாணவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்காகவும் நாங்கள் இங்குவந்திருக்கின்றோம் என அனா வெசெல்ஸ் என்ற மாணவி அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார்.

 

வெள்ளை மாளிகைக்கும்இராஜாங்க திணைக்களத்திற்கும் அருகில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

 

தலைநகரில் நாங்கள் எதனையாவது செய்யாவிட்டால் நாங்கள் எங்கள் தார்மீக கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை என்பதே அர்த்தம் என மாணவி வெசெல்ஸ் தெரிவித்துள்ளார்.