15

15

தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும் – எச்சரிக்கிறார் எம்.ஏ.சுமந்திரன் !

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்குவது பெரும்பான்மை தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” இந்த ஆண்டு தேர்தல்கள் ஆண்டு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இந்த ஆண்டிலே இந்தத் தேர்தல்கள் மூலமாக மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் என நாங்கள் பிரார்த்திப்போம்.

 

அது உண்மையான பாரிய மாற்றமாக இருக்க வேண்டும். ஆட்சி முறையிலும் நாட்டினுடைய சரித்திரத்திலும் உண்மையான மாற்றம் ஏற்பட வேண்டும்.

அரசியல் உரிமைகள் அனைவரினதும் கைகளுக்கும் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு மக்களும் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே தீர்மானிக்கின்ற அந்த ஆட்சி முறைமை மாற்றம் ஏற்பட வேண்டும். அதுதான் உண்மையான மக்கள் ஆட்சி. அப்படியான ஒரு மாற்றத்தை நாங்கள் கொண்டுவர வேண்டும்.

 

தேர்தல்கள் வருகின்றபோது பலவிதமான குழப்பங்கள் மக்கள் மத்தியில் ஏற்படுவதுண்டு. பல பல வித்தியாசமான சிந்தனைகள் எல்லாம் உட்புகுத்தப்படுவதுண்டு. ஆனால், ஊழலற்ற உண்மையாக மக்களை ஆட்சி செய்கின்ற மாற்றம் ஏற்படவேண்டும். எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய தலைவிதியை நிர்ணயிக்கத்தக்க வண்ணமாக ஆட்சி முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தல். இதனை இலாவகமாக நாம் கையாள வேண்டும். தமிழ்ப் பொது வேட்பாளர் ஜி.ஜி. பொன்னம்பலம் முதல் எம்.கே. சிவாஜிலிங்கம் வரை என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். தமிழ்ப் பொது வேட்பாளரைக் களமிறக்குவது சிங்களத் தரப்பில் இனவாதத்தைத் தூண்டும் செயற்பாடாகும்” இவ்வாறு எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தொடரும் கத்திக்குத்து பிரச்சினைகளால் பதற்றம் !

அவுஸ்திரேலியா சிட்னியின் புறநகர் வேக்லியில் உள்ள கிறிஸ்ட் தி குட் ஷெப்பர்ட் தேவாலயத்திற்குள் இன்று(15) மர்ம நபர் ஒருவர் ஆயர் மற்றும் பல வழிபாட்டாளர்களை கத்தியால் தாக்கியுள்ளார்.

 

தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​கறுப்பு உடையில் வந்த நபர் ஒருவரே இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளார்.

 

அதன்படி, பலர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

அதேவேளை, குறித்த தாக்குதலினால் யாருக்கும் பாரிய காயங்கள் ஏற்படவில்லை என்றும் அவசர சேவைகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இந்த தாக்குதல் சம்பவமானது, தேவாலயத்தின் சமூக ஊடகங்களில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மேலும், கடந்த சனிக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் அமைந்துள்ள மால் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் பொதுமக்களை சரமாரியாக கத்தி குத்தியதில் 6 பேர் வரை உயரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் போதை நிலையில் குழப்பத்தை ஏற்படுத்திய 07 இளைஞர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) போதையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு , யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற இசைநிகழ்வில் போதையில் , குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்டதாக கூறப்படும் வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் விசாரணைகளின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனையை மேற்கொண்ட பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை – இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான்

தமிழர்கள் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன் என கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே.மஸ்தான் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தமிழர் தரப்பில் பொது வேட்பாளரினை நியமிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

ஜனாதிபதி தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அக்டோபர் மாதம் முதலாம் இரண்டாம் கிழமைகளில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதன் காரணமாக இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

என்னை பொறுத்தவரை ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ் தரப்பிலான பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு வெற்றி அடைவார் என்றால் பரவாயில்லை. ஆனால் ஜனாதிபதி தேர்தலினை பொறுத்த வரை தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவரே வெற்றி பெறுவார்.

 

எங்களை பொறுத்தவரை நாங்கள் ஆதரிக்கின்ற ஜனாதிபதியை வெற்றி அடைய வைப்பதற்கான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.

 

மேலும் தமிழ் தரப்பில் பொது வேட்பாளர் என்ற விடயம் என்பது எந்த விதத்தில் சாத்தியம் அல்லது இதன் ஊடாக என்ன நன்மை கிடைக்கும் என்று எமக்குத் தெரியவில்லை.

 

கடந்த காலங்களில் ஏதோவொரு பிரதான வேட்பாளர்கள் ஒருவரையே ஆதரித்துள்ளனர். அதுவே சரியானதாக அமையும் என நான் எண்ணுகின்றேன். ஒருமித்த கருத்துடன் ஒரு ஜனாதிபதி வேட்பாளரை போடுவதன் மூலம் வெற்றியை நோக்கி செல்வதாக இருந்தால் பரவாயில்லை ஆனால் அது சாத்தியமில்லை.

 

எனவே தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற முயற்சி ஏன் ஏற்பட்டுள்ளது என்பது புரியவில்லை.

 

மேலும் தமிழ் கட்சிகள் மற்றும் அரசியல் அனுபவம் வாய்ந்தவர்கள் புத்திஜீவிகள் என எல்லோரும் ஒன்றிணைந்து ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியம் இல்லை என்ற முடிவினை எடுப்பார்கள் என எண்ணுகின்றேன்.

‘நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்..” – இரா.சாணக்கியன்

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (14) பல்வேறு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு, இருதயபுரம் மற்றும் கறுவப்பன்கேனி பகுதியில் உளள இளைஞர் விளையாட்டுக் கழகம் ஒன்றினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பல்வேறுபட்ட விளையாட்டு நிகழ்வுகள் நேற்று மாலை இடம் பெற்றது.

இந்நிகழ்வில் தலையணை அடித்தல், மெதுவாக மோட்டார் சைக்கிள் ஓடுதல், கயிறு இழுத்தல், தேங்காய் துருவுதல், தொப்பி மாற்றுதல் போன்ற பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஆண்கள் பெண்கள் சிறுவர்களுக்கென இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்து கொண்டதுடன் விளையாட்டு கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்,
2024 ஆம் ஆண்டு சித்திரை மாதம் புதிய வருடம் பிறந்திருக்கின்றது இந்த புதிய வருடத்திலேயே எமது தமிழ் மக்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு நல்லதொரு எதிர்காலத்தை நாங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய அவா.

எங்களுடைய தமிழ் மக்களினுடைய அபிலாசைகளை நமது அரசியல் அபிலாசைகளை இந்த வருடத்தில் பூர்த்தியாக வேண்டும் என்பது நமது அனைவருடைய அவாவாக இருக்கின்றது அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டு தேர்தல்கள் நிறைந்த வருடங்களாக இருக்க கூடும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

இந்த காலப்பகுதியில் நமது மக்கள் ஒரே ஒரு விடயத்தை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு எமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த தேர்தலில் முடிவுகளை எடுக்க வேண்டும் 2024 ஆம் ஆண்டு இன்று நாம் சித்திரை புத்தாண்டை கொண்டாடுகிறோம் ஆனால் இன்னுமொரு மாதம் சென்றால் மே 18ஆம் தேதி 15 வருடங்களுக்கு முதல் எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியாக போகின்றது.

இந்த 15 வருடங்களாக நமது மக்களுக்கு நீதி இல்லாமல் நீதியை கோரிக் கண்டு நீதிக்காக ஏங்கிக் கொண்டு இருக்கின்ற சமூகமாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

அந்த வகையில் இந்த வருடத்தில் நாங்கள் எடுக்கின்ற தீர்மானங்கள் அரசியல் ரீதியாக எம்முடைய இனம் சார்ந்த நமது இனத்தை தலை நிமிர்ந்து வாழ வைக்க கடிய வகையில் நமது இனத்திற்கான நீதியை கேட்டு கிடைக்கக்கூடிய வகையான தீர்மானங்களை எமது மக்கள் எடுக்க வேண்டும்.

நேற்றைய தினம் பார்த்தேன் ஒரு அமைச்சர் கூறி இருந்தார் நிமல் சிறிபாலடி சில்வா என்கின்ற அமைச்சர் இருக்கின்றார் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இந்த நாட்டினுடைய ஜனாதிபதியாக இருந்திருந்தாலும் கூட அந்த அமைச்சர் அவருடைய அரசாங்கத்தின் அமைச்சராக இருந்திருப்பார் என்று கூறி இருக்கின்றார்.

தமிழ் மக்களாகிய நாங்கள் இந்த இடத்தில் இன்று நீதியினை கோறுகின்றோமே தவிர இந்த ஊழல் மோசடிகள் செய்யும் அமைச்சுப் பதவிகளையோ அல்லது ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அமைச்சர்களை எமது பக்கம் எடுப்பதோ ஒருபோதும் செய்யப் போவதில்லை.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய நாங்கள் எடுக்கும் அனைத்து தீர்மானங்களும் தமிழர்களுடைய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியதான தீர்மானமாக இருக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என தெரிவித்தார்