01

01

தொடர் எதிர்ப்பு – 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தொடர்பான சட்டக்கோவையை மீளப்பெற்றார் நீதியமைச்சர்!

பாலியல் செயற்பாட்டில் ஈடுபடும் வயதை 14ஆக குறைக்கும் வகையில் தண்டனை சட்டகோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான இரண்டாம் மதிப்பீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச சட்டமூலத்தை நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ மீளப்பெற்றுக்கொண்டார்.

 

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (01) இடம்பெற்ற அமர்வின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் செயற்பாட்டில் ஈடுபட்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

 

நீதியமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டமூலத்துக்கு அரசியல் மற்றும் சிவில் தரப்பு மத்தியில் கடும் விமர்சனமும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பல்வேறு தரப்பினர் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

 

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே ‘தண்டனைச் சட்டக் கோவையின் 364ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டு 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் நீதியமைச்சுக்கு அறிவித்திருந்தார்.

 

தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார்.

 

இந்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சட்டமூலத்தின் பாரதூரத்தன்மையை சுட்டிக்காட்டி சட்டமூலத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தியிருந்தார். இவ்வாறான பின்னணியில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை மீளப்பெற்றுக்கொண்டார்.

தாக்குதலின் பின் தாக்கப்பட்டவரின் கையையும் வெட்டி எடுத்துச்சென்ற கொடூரம் – யாழ்ப்பாணத்தில் வேகமெடுக்கும் வாள்வெட்டு கலாச்சாரம்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (31) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 

ஞாயிற்றுக்கிழமை (31) வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.

இதேவேளை அண்மையில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் வாள்வெட்டு சம்பவங்கள் சடுதியாக அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகின்றது. தீர்ப்பு நடவடிக்கைகளில் காணப்படும் தாமதமும் – வாள்வெட்டு குழுக்கள் மீதுள்ள பயமும் இது தொடர்பாக மக்கள் வாய்திறக்க முடியாத சூழலை உருவாக்கியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். கடந்த மாதம் வட்டுக்கோட்டையில் கடற்படை முகாமில் நடந்த வாள்வெட்டுத்தாக்குதலுக்கு இலக்காக இளம் குடும்பஸ்தர் பலியாகி இருந்த நிலையில் இன்று இந்த கொடூர சம்பவம் பதிவாகியுள்ளது.

கேரள கஞ்சாவுடன் சிக்கிய நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்கள் !

நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் கேரள கஞ்சாவுடன் நான்கு கலால் அதிகாரிகள் உட்பட 08 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 

45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதேவேளை, கைது செய்யப்பட்ட அதிகாரிகள் பயணித்த கலால் திணைக்களத்திற்குச் சொந்தமான வேன் ஒன்றும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

யுத்த நிறுத்தத்தை கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் பெஞ்சமின் நெட்டன்யாகு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

புதிய தேர்தலையும் யுத்த நிறுத்தத்தையும் கோரி இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான மக்கள் பெஞ்சமின் நெட்டன்யாகு அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 

காசாவில் ஹமாசின் பிடியில் உள்ள ஏனைய பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்களை அரசாங்கம் எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

ஜெரூசலேத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இராணுவத்திலிருந்து யூதஆண்களில் ஒரு பகுதியினருக்கு வழங்கப்பட்ட விதிவிலக்கிற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

 

காசாவில் பணயக்கைதிகளாக சிக்குண்டுள்ளவர்களை விடுதலை செய்வதற்காக யுத்த நிறுத்த உடன்படிக்கை அவசியம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெற்ற மிகப்பெரிய ஆர்;ப்பாட்டம் இதுவென இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பெஞ்சமின் நெட்டன்யாகு அரசாங்கம் முற்றாக தோல்வியடைந்துவிட்டது என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது நுரிட்ரொபின்சன் தெரிவித்துள்ளார்.