தக்கன பிழைக்கும், மாவை ஒரு அரசியல் விலங்கு !
இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 வயதில் காலமானார். இவர் ஜனவரி 28 இல் செவ்வாய்க்கிழமை வீட்டில் தவறி விழுந்தமையால் , தலையில் நரம்பு வெடிப்பு ஏற்ப்பட்டு யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 29 ஆம் திகதி புதன்கிழமை ஜனவரி இரவு 10 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
அன்னாரின் இறப்புச் செய்தி கேள்விப்பட்டதும் கட்சி பேதமின்றி என்பிபி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உட்பட்ட தமிழரசுக்கட்சியின் முன்னாள் மற்றும் இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியினரும் யாழ்ப்பாண வைத்தியசாலைக்கு உடனடியாக வருகை தந்திருந்தனர். மாவை சேனாதிராஜாவின் விருப்பத்திற்குரிய பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனும் அஞ்சலி செலுத்த ஓடி வந்திருந்தார்.
சோமசுந்தரம் சேனாதிராஜா 1942 ஒக்டோபர் 27 இல் மாவிட்டபுரத்தில் பிறந்தார். அதனாலேயே அவர் மாவை என்ற அடைமொழியோடு மாவை சேனாதிராஜா என அழைக்கப்பட்டு வந்தார். யாழ். வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர், இலங்கைப் பல்கலைக்க்ழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றுக்கொண்டார்.
மாவை தனது அரசியல் பயணத்தை 1960 களில் ஆரம்பித்தார். 1962 இல் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்த இவர் 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றியிருந்தார். சத்தியாக்கிரப் போராட்டங்களிலில் பங்குபற்றிய மாவை இலங்கை அரசாங்கங்களால் வெவ்வேறு காலகட்டங்களில் கைது செய்யப்பட்டு மொத்தமாக ஏழு ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார். இதுவே அரசியலில் அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். அவரை அரசியலில் தக்க வைத்ததும் இதுவே.
1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராகவும் செயற்பட்டார். 1989 இல் முதன்முதலில் யாழ்ப்பாணப் மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால் 1989 இல் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது அவரினுடைய இடத்திற்கு தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்றார். அதேமாதிரி மீண்டும் 1999 இல் நீலன் திருச்செல்வம் கொலைசெய்யப்பட்ட போது தேசியப் பட்டியல் மூலம் இரண்டாவது முறையாக பாராளுமன்றம் சென்றார். பெரும்பாலும் படுகொலைகளினால் வெற்றிடங்கள் வந்தபோது அதனூடாக மேலே வந்தவர் மாவை சேனாதிராஜா.
தொடர்ந்து 2000ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார். 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அக்கட்சி சார்பாக போட்டியிட்டு 2001,2004,2010 மற்றும் 2015 ஆகிய நான்கு தேர்தல்களிலும் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தூண்டுதலால் உருவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்தில் பின்னணியிலிருந்து செயற்பட்டிருந்தார். இதன்போது சம்பந்தர் – மாவை அணியோடு வி ஆனந்தசங்கரி மிகக் கடுமையாக முரண்பட்டார். வி ஆனந்தசங்கரி தமிழீழ விடுதலைப் புலிகளை ஏக பிரதிநிதிகள் என அங்கீகரிக்க மறுத்துவிட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இரா சம்பந்தனுக்குக் கிடைத்தது. அதனால் மாவையும் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். 2014இல் சேனாதிராஜா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து 10 வருடங்கள் தலைவராக செயற்பட்டு வந்தார்.
இதற்கிடையே 2024 பொதுத்தேர்தலின் பின்னர் மாவை தானாகவே தலைவர் பதவியிலிருந்து விலகி ஜனநாயக ரீதியாக தெரிவான சிறிதரன் சிவஞானத்தை தலைவராக செயற்பட கேட்டுக்கொண்டார்.
மாவையின் இராஜினாமாவை இலங்கை தமிழரசுக் கட்சியின் ஒரு அணியான சுமந்திரன் தரப்பு, மற்றைய அணியான சிறிதரன் தரப்பும், சிறிதரனும் மாவையையே தலைவராக தொடர கேட்டுக் கொண்டனர்.
இந்த விவகாரத்தில் தமிழரசுக் கட்சியினர் குழாயடிச் சண்டை போட்டதும் இந்த விவகாரம் ஊடகங்களில் தூற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஜனவரி 21, 2024 இல் திருகோணமலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் சிறிதரன் 184 வாக்குகளை எடுத்து அப்பதவிக்கு போட்டியிட்ட எம். ஏ. சுமந்திரனை தோற்கடித்து தமிழரசுக் கட்சிக்கு தலைவராகினார். ஆனால் அத்தெரிவானது முறையாக இடம்பெறவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மாவை 2024 டிசம்பர் 28 இல் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் பங்கேற்றவில்லை. அவருடைய தலைமைப் பதவிக்கு பதில் தலைமையாக சி. வி. கே. சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மாவை சேனாதிராஜாவுக்கு அரசியல் குழு தலைவர்பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. மாவை இலங்கை தமிழரசுக்கட்சி தலைவராக மட்டுமல்ல 2004 முதல் 2014 வரை பத்து வருடங்கள் பொதுச் செயலாளராகவும் இருந்துள்ளார். அந்த வகையில் ஒரு முழுநேர அரசியல்வாதியான மாவை யாழ்ப்பாண மேட்டுக்குடியை பிரதிநிதிவப்படுத்தியிருந்தார்.
அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சமீப நாட்களில் அவர் மாறி மாறி அரசியல் ரீதியாக வெளியிட்ட அறிக்கைகளும் தெரிவித்த கருத்துக்களும் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சைகளையும் தோற்றுவித்திருந்தன. குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டமை. மறுநாள் அதனை மறந்து சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக கூறியமை என குழப்பாகவே இருந்தார். பல சந்தர்ப்பங்களில் மாவையின் ஞாபகசக்தி தொடர்பிலும் சந்தேகம் எழுந்திருந்தது. எவ்வாறெனினும் மாவை சேனாதிராஜா ஈழத்தமிழர் அரசியல் தளத்தில் மணல் தடத்தைப் பதித்து சென்றுள்ளார்.
அவருடைய இறுதிச் சில மணி நேரங்களிலும் கூட கட்சிப் பதில் தலைவர் சிவிகெ சிவஞானம் மற்றும் பா உ பா சத்தியலிங்கம் ஆகியோர் அவரைச் சந்தித்ததாகவும் அவர்களிடையே அரசியல் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது. அதன் பின்னரேயே அவர் கீழேவீழ்ந்து காயப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.