காஸா மீது இஸ்ரேலும் மேற்குலகமும் நடத்திய இனப்படுகொலைக்கு ஓய்வு! நிரந்தர சமாதானம் ?
இஸ்ரேல் யுத்த நிறுத்த உடன்பட்டுக்கு வந்துள்ளது என நேற்று அறிவிக்கப்பட்டது. ஆறு மாதங்களுக்கும் முன் வைக்கப்பட்ட உடன்படிக்கையை அப்போதே ஹமாஸ் ஏற்றுக்கொண்டிருந்தது. தன்னுடைய யுத்த வெற்றியில் அதீத நம்பிக்கை கொண்டிருந்த இஸ்ரேல் தற்போது வரை மிகமோசமான படுகொலைத்தாக்குதலை நடத்திய வண்ணமே இருந்தது.
ஜனவரி 20இல் அமெரிக்காவின் இப்போதைய ஜோ பைடனின் ஆட்சி முடிவுக்கு வரும் நிலையில் தன்னுடைய ஆட்சிக்காலத்தில், தன்னுடைய சாதனையாக இந்த யுத்த நிறுத்தத்தைக் காட்ட, ஜோ பைடன் இந்த யுத்த நிறுத்த உடன்பாட்டை முன் தள்ளியமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அதே சமயம் ஜனவரி 20இல் புதிய ஜனாதிபதியாகப் பதிவியேற்கவுள்ள டொனால் ட்ரம் தான் பதவிக்கு வந்ததும் யுத்தம் நிறைவுக்கு வரும் இல்லாவிட்டால் ஹமாஸை ஒரு வழி பண்ணுவேன் என்று தெரிவித்து இருந்தார்.
இவ்வாறு தான் வடகொரியத் தலைவர் பற்றியும் குறிப்பிட்ட டொனால் ட்ரம், சிங்கப்பூரில் அவரைச் சந்தித்து கட்டித்தழுவினார். இந்தப் பயம் இஸ்ரேல் நெத்தன்யாகுவிற்கு வந்திருக்கலாம். எது எப்படியானாலும் “நான் வரும் போதே சமாதானமும் சேர்ந்து வருகின்றது” என டொனால் ட்ரம் இந்த சமாதானத்திற்கு தானே காரணம் என தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார். அதிலும் ஓரளவு உண்மையுள்ளதாகவே சர்வதேச ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஓக்ரோபர் 7இல் இஸ்ரேலியர்கள் மீது படுகொலைத் தாக்குதலை நடாத்தி 1200 இஸ்ரேலியர்களைப் படுகொலை செய்ததன் மூலம் ஆரம்பமான இந்த இஸ்ரேலின் இன அழிப்புத் தாக்குதலில், கடந்த 15 மாதங்களில் 46,000 முதல் 64,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 800 வரையான இஸ்ரேலிய இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பின் நிகழ்ந்த மிகமோசமான யுத்தமாகவும், உலகில் இடம்பெற்ற மிக மோசமான யுத்தமாகவும் இது கருதப்படுகின்றது. மேலும் மேற்கு நாடுகளை மிக மோசமாக அம்பலப்படுத்திய மனித அழிவு இதுவாகக் கருதப்படுகின்றது.
ஹமாஸின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்து காஸாவை தரை மட்டமாக அழித்தபோதும் அச்சிறு நிலத்துண்டுக்குள் ஒழித்து வைக்கப்பட்ட இருநூறு பேர்வரையிலான கடத்திச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களில் ஒருவரைக் கூட இஸ்ரேலினாலோ, அதன் நட்பு மேற்குலகினாலோ உயிருடன் மீட்கமுடியவில்லை. இன்னமும் விடுவிக்கப்பட்டாத உயிரிழக்காத நூற்றுக்கும் மேற்பட்ட இக்கைதிகளை இஸ்ரேலுக்கு கொண்டுவருவதற்காக அக்கைதிகளின் உறவுகள் இஸ்ரேலிய அரசுக்கு தீவிர அழுத்தத்தைக் கொடுத்து வந்தனர். அத்தோடு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெத்தன்யாகுவிற்கு பிடியாணை பிறப்பித்ததும், சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் யுத்தக்குற்றங்கள் நடைபெறுவதற்கான் வாய்ப்புகள் இருப்பதை சுட்டிக்காட்டியதுவும் இந்த யுத்த நிறுத்தத்திற்கு நெத்தன்யாகு உடனபடுவதற்கான காரணங்களில் சிலவாகும்.
வரும் ஞாயிறு முதல் ஆரம்பிக்கும் யுத்த நிறுத்தம் மூன்று கட்டங்களாக நகரவுள்ளது. தாமதங்கள் ஏற்பட்டாலும் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் இது நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஹமாஸிடம் உள்ள ஒவ்வொரு கைதிக்கும் 100 பாலஸ்தீனக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்;, காஸாவிலிருந்து இஸ்ரோலிய இராணுவம் வெளியேற வேண்டும், காஸா மீளக்கட்டமைக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு விடயங்களின் அடிப்படையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த யுத்த நிறுத்தம் தொடர்பில் காஸாவை யார் ஆளுவது என்ற தொடர்பிலும் உடன்பாடுகள் எட்டப்பட வேண்டியிருக்கும். காஸாவை யார் ஆளுவார்கள் என்பது பற்றி வேறு யாரும் பேசத்தேவையில்லை என பாலஸ்தீனிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஹமாஸிற்கும் பிஎல்ஓ விற்கும் பிரச்சினை என்றால் அது எங்கள் தேசத்திற்குள் உள்ள பிரச்சினை. அதனை நாங்கள் பார்த்துக்கொள்வோம். யார் ஆள வேண்டும் அல்லது ஆளக்கூடாது என்பதை நீங்கள் யாரும் சொல்லத் தேவையில்லை என அவர் காட்டமான பதிலை அளித்துள்ளார்.