நாற்றமெடுக்கும் யாழ்பாணம் – குப்பைகளை பொறுக்கும் இராணுவம் !
வலி கிழக்கு புத்தூர் பிரதேச சபைக்கு உட்பட்ட இராஜ பாதை வீதியில் மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை கொட்டித் தீர்க்கிறார்கள் என்ற முறைப்பாடு நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தாலும் கூட வலிகாமம் கிழக்கு பியதேச சபையினர் இது தொடர்பில் மாற்று ஏற்பாடுகள் எவையுமே இது வரையில் மேற்கொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில் குறித்த பாதை தொகுதியை துப்புரவு செய்யும் பொறுப்பை இராணுவத்தினர் கையிலெடுத்துள்ளதுடன் இந்த பகுதியில் குப்பை போட வேண்டாம், இராணுவத்தினர் இப்பகுதியை சுத்தமாக்க வைத்திருக்க விரும்புகின்றனர் என்ற காட்சிப்பதாகை பலருடைய கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த பதாகை யாழ்ப்பாண மக்களிடையேயும் – அரச அதிகாரிகளிடையேயும் – பிரதேச சபைகளிடமும் குப்பைகளை – கழிவுகளை முறையாக அகற்றுவது தொடர்பான ஓர் பொறிமுறை இல்லாமையை வெளிப்படுத்துகிறது.
தொடர்ச்சியாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் குப்பைகள் – கழிவுகளை அகற்றுவது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் தேசம்நெட்க்கு கிடைத்து வருவதையும் அவதானிக்க முடிகிறது. அண்மையில் யாழ்ப்பாணத்தின் மிகப்பெரிய மருத்துவ மாபியா கூடாரமாகவுள்ள நோர்தேர்ன் வைத்தியசாலை மலக்கழிவுகளுடன் கூடிய கழிவுத் தண்ணீர் பொதுப்பாதையில் திறந்து விடப்பட்டமை, மீசாலையில் நீர்ப்பாசன திணைக்கள அரச அதிகாரிகளின் கவனமின்மையால் மக்களின் காணிகளுக்குள் இரசாயன – கிருமி கொல்லிகளை உள்ளடக்கிய கழிவு நீர் மக்களின் காணிகளுக்குள் திறந்துவிடப்பட்டமை ஆகிய பிரச்சினைகள் தொடர்பில் தேசம்நெட் தனது அவதானத்தை செலுத்தியிருந்தது.
மேலும் யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கழிவு நீர் வாய்க்கால் தொகுதிகளும் பிளாஸ்டிக் குப்பைகளாலும் – Vida குப்பைகளாலும் நிறைந்து வழிகிறது. இதன் விளைவாகவே மழை அதிகரிக்கும் காலங்களில் யாழ்ப்பாண நகர்ப்புறத்தில் அத்தனை வெள்ளக்காடு ஏற்படுவதாக சூழலியல் செயற்பாட்டாளர்கள் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். நாம் பாவித்த தண்ணீர் போத்தல்களை கூட அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் போட முடியாமல் கழிவுநீர் ஓடும் வாய்க்காலுக்குள் வீசிவிடும் அளவிற்கு யாழ்ப்பாண தமிழ் மக்களிடையே சோம்பேறித்தனமும் – சமூக விரோத எண்ணமும் மேலோங்கி விட்டதாக சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் ஒருவர் தேசம்நெட்க்கு தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சனை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி வடக்கின் அத்தனை பகுதிகளிலும் நீடிக்கிறது. கடந்த காலங்களில் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வழிபாட்டுக்கு குவிந்த ஆயிரக்கணக்கான மக்களும் தாம் பயன்படுத்திய பொருட்களின் குப்பைகளை தெருக்களில் வீசியெறிந்தனர். இதனால் வழிபாட்டு இடமான வற்றாப்பளை அம்மன் ஆலயம் குப்பைக்காடாக மாறிப் போயிருந்தது. பின்னர் அப்பகுதி இராணுவத்தினரே குப்பைகளை அகற்றினர். இதே நிலைதான் யாழ்ப்பாணத்தின் வலி கிழக்கு பகுதியிலும் நடைபெறுகிறது.
அண்மையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், இராணுவ காணி ஆக்கிரமிப்பைத்தான் தமிழர்கள் எதிர்க்கிறார்களே தவிர இராணுவ வெளியேற்றத்தை தமிழ் மக்கள் விரும்பவில்லை என கூறியிருந்தார். குறிப்பாக இராணுவத்தினரின் நடமாட்டம் இருப்பதினாலேயே போதைப்பொருள் கடத்தல் தொடங்கி சட்டவிரோத செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்படுவதாகவும் ஆளுநர் வேதநாயகன் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஆளுநர் வேதநாயகனை சிங்கள ஒட்டுக்கழு என்ற வகையில் சமூக வலைத்தளங்களில் தமிழ்தேசிய வாதிகள் கருத்து வெளியிட்டிருந்தனர்.
அரச அதிகாரிகளும், பிரதேசசபைகளும் இனிவரும் காலங்களில் சரி முறையான கழிவகற்றல் பொறிமுறை ஒன்றை பேணுவார்களா? என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். உள்ளுராட்சி சபைத் தேர்தல் மிக நெருங்கி வருவதால் இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் முதலில் தங்கள் தங்கள் பிரதேசங்களில் சிரமதானத்தைச் செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடுவதே சாலச்சிறந்தது. தங்கள் பிரதேசங்களில் சிரமதானங்களில் ஈடுபடாதவர்களுக்கு அப்பிரதேசங்களின் வளர்ச்சிக்காக உழைக்காதவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டும்.