‘கல்விச் செயற்பாடுகளைத் சீர்குலைக்க வேண்டாம் – வேலை நிறுத்தத்தை நிறுத்துங்கள்’ அமைச்சர் உத்தரவு
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் விவகாரத்தில் அரசாங்கம் தீர்வை வழங்கும். எனவே வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து அறிக்கையொன்றைக் கோருவதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது. கல்வி அமைச்சு வெகு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு பிரச்சினைகளுக்கு தீர்வினை வழங்கும். எனவே எவ்வித வேலை நிறுத்தங்களும் இன்றி பல்கலைக்கழக நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்லுமாறு கோருகின்றோம். எந்தவொரு பிரச்சினைக்கும் வேலை நிறுத்தங்களுக்குச் செல்வதற்கு முன்பு எம்முடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
விரிவுரையாளர்களானாலும், மாணவர்களானாலும் எந்த சந்தர்ப்பத்திலும் எம்முடன் கலந்துரையாட முடியும். அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு யாருக்கும் எவ்வித தடைகளோ கட்டுப்பாடுகளோ இல்லை. கடந்த காலங்களில் பல்வேறு காரணிகளுக்காக வேலை நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதால் கல்வி கற்பதற்குரிய சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டுள்ளன. எனவே பல்கலைக்கழக கட்டமைப்பில் எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாமல், கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எமது தேவையாகும். அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் நாம் வழங்குவோம் என்றார் அமைச்சர் நளிந்த.
கலைப்பீடாதிபதி சி ரகுராம், தான் எடுத்த முடிவுக்கு எதிராக பேரவை முடிவெடுத்ததால் கொதிப்படைந்து போட்ட நாடகமே பதவி விலகல். பின்னர் தன்னுடைய சார்பு மாணவர்களைத் தூண்டிவிட்டு, மீண்டும் பதவிக்கு வர கோரிகை வைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தார். அதற்காக ஆசிரியர் சங்கத்தில் சி ரகுராமுக்கு ஆதரவாக நின்ற காமுகப் பேராசிரியர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்க, ஏனையவர்களும் வேறு வழியின்றி களத்தில் இறங்க வேண்டியதாயிற்று.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் மாணவிகள் மீது திணிக்கப்பட்டுள்ள பாலியல் லஞ்சம், அங்குள்ள பெண் விரிவுரையாளர்கள் எதிர்கொள்கின்ற பாலியல் லஞ்சம் மற்றும் மோசடிகள் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்றுக்கு கல்வி அமைச்சு உத்தரவிட வேண்டும். உயர்கல்வி வரை இலவசக் கல்வி. ஆனால் பட்டதாரி மாணவர்கள் பேராசிரியர்களின் பழிவாங்கல்களால் மாதக் கணக்கில் வகுப்புத் தடை போடப்படுகின்றனர். தற்போது மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ் சிவகஜனுக்கு எழுந்தமானமாக வகுப்புத் தடை வழங்கப்பட்டுள்ளது. முன்னர் சி ரகுராமின் செல்லப்பிள்ளையாக இருந்த எஸ் சிவகஜனுக்கும் கலைப்பீடாதிபதி ரகுராமிற்கும் இடையேயான முரண்பாடு, தற்போது போதைப் பொருளுக்கு எதிரானதாக காண்பிக்கப்பட்டு வருகின்றது.
அண்மைய யாழ் பல்கழலக்கழகப் போராட்டம் பெயரளவில் போதைப்பொருளுக்கு எதிரானது என கலைப்பீடாதிபதி ரகுராம் தரப்பால் சொல்லப்பட்டாலும், இப்போராட்டம் முற்றிலுமாக சி ரகுராமின் தனிப்பட்ட நலன்களை முன்நிறுத்தியும், கலைப்பீடாதிபதி ரகுராமிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைப் பழிவாங்கவுமே மேற்கொள்ளப்படுகின்றது. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர்களின் நலன்களை முன்நிறுத்தாமல், தனிப்பட்ட கலைப்பீடாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை நியாயப்படுத்தவே போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இவ்விடயத்தில் அரசு தனது உத்தரவை மிகத் தெளிவாக அறிவுறுத்தியுள்ளது. கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளால் கல்வி கற்றலுக்கான சந்தர்ப்பங்கள் இழக்கப்ட்டுள்ளது. இதனை இனிமேலும் தொடரமுடியாது என அமைச்சர் கோடிட்டு மிகத் தெளிவாகக் காட்டியுள்ளார். நாளை பேரவைக் கூட்டத்தில் இறுதியான முடிவெடுக்கப்படும் எனத் தெரிகின்றது.