07

07

எங்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் – தமிழகத்தில் இலங்கையர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

எங்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புங்கள் – தமிழகத்தில் இலங்கையர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு !

 

இலங்கையில் ஏற்பட்டிருந்த பொருளாதார நெருக்கடி காரணமாக கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும் என இலங்கை அகதிகள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கையளித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை தமிழர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இலங்கையிலிருந்து படகு வழியாக சட்ட விரோதமான முறையில் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைய தொடங்கினர்.

இது வரை 309 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியில் கடல் வழியாக அகதிகளாக தஞ்சமடைந்து மண்டபம் ஈழத்தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பொருளாதார நெருக்கடி காரணமாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்களை அகதிகளாக இந்திய அரசு இதுவரை பதிவு செய்யாத காரணத்தினால் இவர்களுக்கு இந்திய அரசால் வழங்கப்படும் எந்த விதமான நிவாரணம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் வருவாய் இன்றி தவித்த இலங்கை தமிழர்கள் ஐந்து குடும்பத்தினர் மீண்டும் சட்டவிரோதமாக கடல் வழியாக அண்மையில் இலங்கைக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் அகதிகளாக பதிவு செய்யாமல் உள்ள இலங்கை தமிழர்கள் 13 குடும்பத்தினரை படகு மூலம் அல்லது விமானம் மூலம் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்குமாறு இன்று (06) மாவட்ட ஆட்சியரை சந்தித்து பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் மனு கையளித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி இதுவரை 747 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றில் 14 வழக்குகளின் கீழ் 100 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ,  இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், செனல் 4 ஊடாக வெளியான விடயங்கள் மற்றும் அதற்குப் புறம்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வெளிப்படுத்தப்படும் உண்மைகளின் அடிப்படையில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், இந்த விசாரணைகள் புதிய கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி, நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்படி, இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, 12 சிவில் சாட்சிகள், 7 இராணுவத்தினர், 24 பொலிஸ் அதிகாரிகள், 3 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 48 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

பதவி விலகுகிறார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ  பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

லிபரல் கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிக பிரதமராக தொடர்வதாக அவர் அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச அளவில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் கனடா பிரதமர் ட்ரூடோ, உள்நாட்டிலும் பிரச்சினைகளை சந்தித்து வருகிறார்.

ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்று அவரது சொந்த கட்சியான லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

ட்ரூடோ மீண்டும் கனடா தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ட்ரூடோவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, வேறு ஒருவரை நியமிப்பது குறித்தும் ஆலோசித்து வந்தனர்.

மேலும், ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்து வந்த என்.டி.பி., கட்சியும் ஆதரவை விலக்கி கொண்டது.

மேலும், அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுத்தது.

இதேவேளை, வரவிருக்கும் அமெரிக்க நிர்வாகத்துடனான உறவுகள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகளை அவர் கையாள்வதை சுட்டிக்காட்டி, அவர் வெளியேற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

கட்சித் தலைவர் பதவியுடன், பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்வதாக அறிவித்த அவர், புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தானே பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்தார்.

வரும் 8ம் திகதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

டிஜிட்டல் இலங்கையின் புதிய பரிணாமம் – புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

டிஜிட்டல் இலங்கையின் புதிய பரிணாமம் – புலம்பெயர் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி !

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும்  நாடுகளில் உள்ள  இலங்கை தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்திற்கு அமைய இந்த திட்டம் இன்று  வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி, 07 தூதரகங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், ஜப்பான், கட்டார், குவைத் தூதரகங்கள், மிலானோ, டொறொன்டோ, மெல்பேர்ன் மற்றும் துபாய் ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்கள் ஊடாக அந்த நாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு மேற்படி ஆவணங்களை தாமதமின்றி பெற்றுக் கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் அனைத்து தூதரகங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்தார்.