மொக்கு மோடையா’ அர்ச்சுனாவா ? சிங்களவனா ?’
ஒரு கார் மட்டும் போகக் கூடிய வீதியில், மற்றுமொரு கார் ஏற்கனவே வந்துகொண்டிருக்கும் போது, பா உ அர்ச்சுனாவின் காரும் பிரதான வீதியிலிருந்து அதே வீதிக்குள் இறங்க, இரு சாரதிகளுக்குமிடையே ஏற்பட்ட தர்க்கம் சமூக வலைத்தளங்களில் பரவியது. தன்னுடைய காரை ஓட்டிவந்த அர்ச்சுனா எதிரே வந்தவருக்கு வழிவிட மறுத்து, காரை நிறுத்தினார். ஏற்கனவே அவ்வீதியில் பெருமளவு தூரத்தைக் கடந்திருந்த சிங்கள சாரதியும் தன்னாள் பின்னுக்கு நகர முடியாது என்று அடம் பிடித்தார்.
உலகெங்கும் உள்ள உபத்திரவம் பிடித்த விடாக்கொண்டனும் கொடாக்கண்டனும் ஆனா சாரதிகளுக்கு இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம். இலங்கை வாகனப் பயிற்சி பெறுபவர்களுக்கு, விபத்துக்களை ஏற்படுத்தும் சாரதிகளுக்கு, நிச்சயமாக இதனைப் போட்டுக் காட்ட வேண்டும். ஒரு சாரதி எப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதற்கும், இந்த மண்டைக் கொதிப்பில் போய் இவர்கள் எப்படி அப்பாவிகளைப் பலியாக்குகிறார்கள் என்பதற்கும் இதைவிடச் சிறந்த காணொலி கிடைக்காது.
இந்த இரண்டு தனிப்பட்ட விட்டுக்கொடுப்பற்ற சாரதிகளின் சண்டையில் தெறித்த வார்த்தைகள் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையையும் அத்தெருவில் கொண்டு வந்து இறக்கியது. இன்னுமொரு இனக்கலவரம் ஒன்று ஏற்படுமளவிற்கு, இன உணர்வுகளைத் தூண்டும் வகையில், வார்த்தைகள் தெறித்தது. காரை ஓராமாக்கி வழிவிடுவதற்கு இடமிருந்த போதும், பா உ அர்ச்சுனா நீளக்களுசானும், அடிக்கிற வெய்யிலுக்க் முழுக்கை சேட்டும் ரையும் கட்டி கூலிங் கிளாசும் போட்டுக்கொண்டு அசல் தெருப்பொறுக்கி மட்டத்துக்கு கீழிறங்கி தர்க்கத்தில் ஈடுபட்டார். ‘நான் பாராளுமன்ற உறுப்பினர், டொக்டர். நீ மோடையனா நான் மோடையனா ?’என்று மொண்டசெரி பள்ளிக்கூடப் பிள்ளைகள் லெவலில் தர்க்கம் நிகழ்ந்தது.
கம்பவாருதி தலையில் வைத்து தோய்வதற்கு, தனது தங்கையின் சிறுநீரைப் பெற்றுக் கொடுக்க முன்வந்த அர்ச்சுனா, இன்று ‘கையாட்டம் செய்கிறியோ?’ என்று ஆரம்பித்துவிட்டார். மறுபக்கத்தில் வந்தவரும் இவருக்கு சளைத்தவரில்லை. ‘இவர் தான் எங்கள் எதிர்ககட்சித் தலைவரின் கதிரையில் இருந்தவர். கஜேந்திரகுமார் வாகனத்தால் மோதியது, இது எங்கள் நாடு’ என்றெல்லாம் அளந்தார்.
இதுபற்றி தன்னுடைய யூரியூப்பில் பதிவிட்ட பா உ அர்ச்சுனா, இந்தப் பிரச்சினையை வைத்து இனவாத அரசியலைக் கக்கினார். இந்தக் கார் பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. கார் வைத்திருக்கும் இரண்டு திமிர் கொண்ட, அந்த வீதியைப் பயன்படுத்தும் மற்றையவர்களைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறையற்ற இரண்டு மனிதர்கள் தங்களுடைய ஈகோவுக்காக சமூகங்களை இழுத்து விடுகின்றனர். “நான் தமிழன். நான் எப்பிடி ரிவேர்ஸ் எடுக்கேலும். சிங்னவனின்ட இடத்தில போய் சிங்களவனையே மொக்குமொடையா, மொக்கு மாடு, பன்றி என்டெல்லாம் பேசினனான்” என்று அவித்து இன உணர்வுகளைத் தூண்டுகிறார் அர்ச்சுனா.
தமிழரசுக் கட்சி, கார் இல்லாத காலத்தில், தாங்கள் வைத்திருந்த கார்களுக்கு ‘சிறி’ எழுத்து வந்ததால் ‘சிறி எதிர்ப்புப் போராட்டம்’ செய்தது. போராட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டது, அப்பாவி இளைஞர்கள். கார் வைத்திருந்த எம்பி மார் எல்லாம் சிங்கள பேரினவாதிகளோடு கூடி விருந்துண்டனர். அதைத்தான் எழுபது ஆண்டுகளின் பின் அர்ச்சுனாவும் செய்கிறார். தன்னையொரு தமிழ் தேசிய உணர்வாளனாக சித்தரிக்கும் அர்ச்சுனா விடுதலைப் போராட்டம் உச்சம்பெற்றிருந்த போது புலிகளில் இணைந்து போராடப் போகவில்லை. தன்னை முன்னேற்றுவதற்காகப் படித்தார். இப்ப இவர் படித்தவர். பாராளுமன்ற உறுப்பினர். போராடியவர்கள் படிக்காதவர்கள். ஊனமுற்றவர்கள். இதே நச்சுச் சூழலை மீண்டும் கொண்டு வருவதற்கும் தன்னுடைய யூரியூப் சனலை ரென்டிங் ஆக்கவும் என்ன கேவலம் எல்லாம் செய்ய முடியுமா அதையெல்லாம் அர்ச்சுனா செய்கின்றார் போலவே தோன்றுகிறது.