இந்திய அரசால் நக்சல் வாதத்தை முழுமையாக ஒழிக்க முடியுமா?
அடுத்த ஆண்டு மார்ச்மாத த்திற்குள் இந்தியாவை நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றப்போவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சூளுரைத்துள்ளார். நக்சல்வாதிகள் உருவாவதற்கான காரணத்தை கண்டுகொள்ளாமல் அவர்களை ஒழிக்க முடியுமா என விடுதலைப் போராட்டங்களில் நேரடியாகவே ஈடுபட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். நக்சல் வாதிகளை சிறிது காலத்துக்கு ஒழிக்கலாம் அல்லது ஒழிக்கப்பட்டதான ஒரு மாயை ஏற்படும். ஆனால் அவர்கள் உருவாவதற்கான சூழல் தொடரும்வரை அவர்களை அழிக்க முடியாது என முன்னாள் ஈழப் போராளிகள் பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனவரி 20 சத்தீஸ்கரில் நக்சல்களின் முக்கிய தளபதியான ஜெய்ராம் ரெட்டி என்ற சலபதி, உட்பட 16 நக்சல்கள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரம் ஜனவரி 16 இலும் பிஜப்பூர் மாவட்டத்திலும் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
நக்சல்வாதம் என்பது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை ஆளும் அரசாங்கங்கள் தீர்க்க தவறும் போது ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் மூலம் மக்கள் ஜனநாயகப் புரட்சியை நடத்தி பொதுவுடமையை நிலை நாட்டுவதேயாகும்.
சத்தீஸ்கர், ஒரிசா, ஆந்திரா, மஹாராஸ்டிரா, ஜார்கண்ட், பீகார், உத்திரப் பிரதேசம், மற்றும் மேற்கு வங்கம் நக்ஸல்பாரி இயக்கத்தவர்களின் செயல்பாடுகள் காணப்பட்டாலும் ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் அதிகமாக காணப்படுகின்றன.
நடைமுறையிலிருக்கும் பாராளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொள்ளாத நக்சல்கள் ‘தேர்தல் பாதை, திருடர் பாதை’ என்று விமர்சிக்கின்றனர். மறுபுறம் ஆட்சியாளர்கள் கூட நக்சல்களின் நியாமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்க்காமல் அரச வன்முறையை ஏவி ஆயுத முனையில் நக்சல்களை கொன்றொழித்து அவர்களை மௌனமாக்குகின்றனர். ஆனால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் அப்படியே தான் இருக்கப்போகின்றன.