“இலங்கை தமிழரின் பெருமைக்கும் – இருமாப்புக்கும் உரிய யாழ்ப்பாணம்” – தமிழரசுக்கட்சி தலைவர் சி.வி.கே !
யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தின் பெயர் மாற்றம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய துணை தூதுவர் சாய்முரளியைச் சந்தித்து தமிழரசுக் கட்சி சார்பில் கட்சிப் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றினை சமர்ப்பித்துள்ளார்.
இக்கடிதத்தில் “இலங்கைத் தமிழினத்தின் பெருமைக்கும் இறுமாப்புக்கும் உடையதான “யாழ்ப்பாணம்” என்ற பெயரை அகற்றியமை எம்மை அவமதித்ததற்கு சமமாகும். “யாழ்ப்பாணம்” என்பது விட்டுக் கொடுக்கப்பட முடியாத எம். இனத்தின் அடையாளம் ஆகும். எனவே இந்த விடயத்தை உடனடியாக மீளாய்வுக்கு உட்படுத்தி சீர்செய்யுமாறு வேண்டிக் கொள்கிறோம்” என சீ.வீ.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையம் திருவள்ளுவரின் பெயரில் மாற்றப்பட்டதும் – அதனை இந்திய பிரதமர் தமிழ்நாட்டில் தாமரையை மலர வைக்கும் நோக்குடன் தமிழை பெருமைப்படுத்துகிறோம் என ட்வீட் செய்திருந்தார்.
சி.வி.கே சிவஞானம், ஒருபடி மேலே போய் யாழ்ப்பாணத்தவர்களின் மேட்டுக்குடி அரசியலை, இலங்கை வாழ் ஏனைய தமிழர்களின் தலையில் கட்டிவிடும் வழமையான ஓர் செயலை தன் கடிதத்தின் மூலம் நகர்த்தியுள்ளார்.