ஏன் பலாலியில் தான் விமான நிலையம் வரவேண்டும் ? யாழ்ப்பாணத்துக்கு வெளியே சிந்திக்க மாட்டார்களோ ?
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம் முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப் பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் குறிப்பிட்டனர். கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் எனவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
இந்நிலையில், காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என ஆளுநர் சுட்டிக்காட்டினார். தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு முதல்கட்டமாக வழங்கிய பின்னரே தற்போது தேவைப்படும் மேலதிக காணிகளுக்காக சுவீகரிப்பை ஆரம்பிக்கலாம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் விரிவாக்கத்தின்போது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
அதே சமயம் யாழ்ப்பாணம் வடமாகாணத்திலேயே சனத்தொகை அடர்த்தி உள்ள மாவட்டமாகவும் பலாலி ஒரு விவசாயத்துக்குகந்த பூமியாக உள்ளது. அதனால் விவசாய நிலங்களை இவ்வாறான விஸ்தரிப்புகளுக்குப் பயன்படுத்தாமல் எதிர்காலத்திலும் விமான நிலையத்தை விஸ்தரிக்கும் வகையில் சனத்தொகை அடர்த்தி குறைந்த வன்னி நிலப்பரப்பில் புதிய விமானத்தளத்திற்கான இடத்தை பார்ப்பது பொருத்தமானது எனச் சூழலியலாளர்கள் கருதுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை கிளி அறிவியல் நகருக்கு நகர்த்தியது போல பலாலி விமான நிலையத்தைக் கைவிட்டு வன்னி நிலப்பரப்பில் புத்தம் புதிய நவீன விமான நிலையத்தை அமைப்பதே பொருத்தமானதாக அமையும் என்கின்றனர் சூழலியலாளர்கள்.